ஒலிம்பிக்ஸ் 2016
அமெரிக்காவில் இடைத் தேர்தல் நடந்து முடிந்தது. ஆனால் 2016-ல் ஒலிம்பிக்ஸ் நடக்க விருக்கும் இடத் தேர்வு சூடு பிடித்திருக்கிறது. சான் ஃபிரான்சிஸ்கோவிற்கு ஒலிம்பிக்ஸை கொண்டுவரும் முயற்சியைக் கைவிடுவதாக சமீபத்தில் மேயர் காவின் நியூசம் பலருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் செய்தியை வெளியிட்டார். NFL கால்பந்துக் குழுவான 49ers தங்கள் புது விளையாட்டு அரங்கை சான் ஃபிரான்சிஸ்கோவில் இருந்து 40 மைல் தொலைவில் உள்ள சாண்டா கிளாரா நகரில் அமைப்பதாக எடுத்த முடிவுதான் இதற்கு முக்கியக் காரணம் என்று சான் ஃபிரான் சிஸ்கோ 2016 ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு கூறியிருக்கிறது.

இது சான் ஃபிரான்சிஸ்கோ நகருக்கு வரும் தொடர்ச்சியான தோல்வி. ஒலிம்பிக்ஸ் போட்டிகளை 2012-ல் சான் ஃபிரான்சிஸ் கோவிற்குக் கொண்டு வர முயற்சி ஆரம்பித்தது. ஆனால் அந்த முயற்சியில் நியூ யார்க் நகரிடம் சான் ஃபிரான்சிஸ்கோ வாய்ப்பை இழந்தது. நியூ யார்க்கைத் தேர்ந்தெடுத்த U.S. ஒலிம்பிக் நிர்வாகக் குழு, இரண்டு வருடங்களுக்கு முன் அந்நகரை மிகப் பெருமையுடன் சர்வதேச ஒலிம்பிக் அமைப்பிற்குப் பரிந்துரைத்தது. ஆனால் இறுதியில் சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகக் குழு லண்டன் நகரை 2012 போட்டிகள் நடக்கும் இடமாகத் தேர்ந்தெடுத்தது.

நியூ யார்க் நகருக்கு வந்த பிரச்சினையும் விளையாட்டு அரங்கைப் பற்றியதுதான். முதலில் மன்ஹாட்டனில் நியூ யார்க் ஜெட்ஸ் கால்பந்தாட்டக் குழுவுடன் இணைந்து ஒரு அரங்கை அமைப்பதாக நியூ யார்க் நகர ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு தீர்மானித்து தனது விண்ணப்பத்தில் கூறியிருந்தது. சர்வ தேச ஒலிம்பிக் நிர்வாகக் குழு இடத்தேர்வு செய்யவிருக்கும் சில வாரங்களுக்கு முன் அந்த ஏற்பாட்டில் பிரச்சினை வரவே, உடனடியாக பேஸ்பால் குழுவான நியூ யார்க் மெட்ஸுடன் இணைந்து குவீன்ஸில் புதிய அரங்கை அமைப்பதாக மாற்று யோசனையை முன் வைத்தது. ஆனால் சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகக் குழுவின் நம்பிக்கையை நியூ யார்க் இழந்ததால் இடத் தேர்வில் தோல்வி அடைந்தது. அதனால் U.S. ஒலிம்பிக் நிர்வாகக் குழு 2016 ஒலிம்பிக்ஸ் நடத்த தான் முன் மொழியும் எந்த நகரிலும் அரங்கைப் பற்றிய பிரச்சினை மீண்டும் தலை தூக்கக் கூடாது என்று கவனமாக இருக்கிறது.

இந்நிலையில் அரங்கைப் பற்றிய பிரச்சினை வந்ததும் சான் ஃபிரான்சிஸ்கோ பின் வாங்கியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. சான் ஃபிரான்சிஸ்கோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு கடந்த சில வருடங்களாக 49ers குழுவுடன் இணைந்து செயல்பட்டு வந்திருக்கிறது. 49ers குழு புதிய அரங்கைக் கட்டப் பல வருடங்களாக முயற்சித்து வருகிறது. ஓதற்போது இருக்கும் இடமான காண்டில்ஸ்டிக் பாயிண்டில் புதிய அரங்கைக் கட்டுவதற்குச் சிலவு அதிகம். முக்கியமாக கார்களை நிறுத்தப் பல அடுக்குக்கள் கொண்ட கட்டிடம் ஒன்று கட்டத் தேவையாக இருக்கும். சாண்டா கிளாரா கார், பஸ், ரயில் என்று பல போக்குவரத்து வசதிகளுக்கும் உள்ள இடம். மேலும் 2012-ல் புதிய அரங்கம் தயாராக வேண்டும் என்பதும் எங்கள் குறிக்கோள்.ஔ என்று தனது முடிவிற்கான காரணங்களை 49ers குழு சுட்டிக் காட்டியிருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதமே, ஓபல தடங்கல்களைத் தாண்ட வேண்டி இருப்பதால் காண்டில்ஸ்டிக்கில் புதிய அரங்கம் கட்டுவது நிச்சயமான முடிவல்லஔ என்று 49ers சொந்தக்கார் ஜான் யார்க், சான் ஃபிரான்சிஸ்கோ மேயர் காவின் நியூசம்மிற்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

2006 மே மாதம், அமெரிக்க ஒலிம்பிக் நிர்வாகக் குழு ஹூஸ்டன், ஃபிலடெல்ஃபியா, சிகாகோ, லாஸ் ஏஞ்சலஸ், மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ நகர்களைச் சுற்றுப் பயணம் செய்தது. இந்த ஐந்து நகரங்களும் 2016 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம் தெரிவித் திருந்தன. 2012 ஒலிம்பிக்ஸ் நடத்தும் வாய்ப்பை இழந்த பிறகு, 2016 இடத்தேர்வில் நியூ யார்க் பங்கு பெறவில்லை. ஒவ்வொரு நகர ஏற்பாட்டுக் குழுவும் தங்கள் திட்டங்களை அமெரிக்க ஒலிம்பிக் நிர்வாகக் குழுவுக்கு விளக்கவும், அமெரிக்க ஒலிம்பிக் நிர்வாகக் குழு தனது எதிர்பார்ப்பையும், சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகக் குழுவின் எதிர் பார்ப்பையும் பரிமாறிக்கொள்ளவும் இந்தச் சுற்றுப் பயணம் உதவியது. ஜூலை மாதம் அமெரிக்க ஒலிம்பிக் நிர்வாகக் குழு சிகாகோ, லாஸ் ஏஞ்சலஸ், சான் ஃபிரான்சிஸ்கோ ஆகிய மூன்று நகரங்களையும் அடுத்த கட்டத்திற்குத் தேர்ந்தெடுத்தது.

2007 மார்ச் மாதத்தில் அமெரிக்க ஒலிம்பிக் நிர்வாகக் குழு தனது இறுதி முடிவை எடுக்கும். சான் ஃபிரான்சிஸ்கோ போட்டியில் இருந்து விலகினால் சிகாகோ, லாஸ் ஏஞ்சலஸ் இரண்டில் எந்த நகருக்கு வாய்ப்பு? லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அரங்கம் பற்றிய கவலை இல்லை. அங்கு ஒலிம்பிக்ஸ் இரண்டு முறை நடந்திருப்பதால் ஒலிம்பிக்ஸ் அரங்கம் தயாராகவே இருக்கிறது என்று சொல்லலாம். சிகாகோ வாஷிங்டன் பார்க்கில் புதிய அரங்கம் கட்டத் திட்டமிட்டுள்ளது. இரண்டில் எது அமெரிக்க ஒலிம்பிக் நிர்வாகக் குழுவின் கவனத்தை ஈர்க்கும்? அதைவிட முக்கியமாக சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகக் குழுவிற்கு எது பிடித்தமானதாக இருக்கும்? அதை மனதில் கொண்டுதான அமெரிக்க நிர்வாகக் குழு தனது முடிவை எடுக்கும்.

Gamesbids.com என்ற வலைத்தளத்தை நடத்திவரும் ராப் லிவிங்க்ஸ்டன் ஒலிம்பிக்ஸ் இடத்தேர்வு முறையைப் பல வருடங்களாக ஆராய்ச்சி செய்து வருகிறார். இவர் பல சர்வதேசப் பத்திரிகைகளில் இதைப் பற்றிக் கட்டுரைகள் எழுதுபவர். அவர் தனது கணிப்பின்படி ஓஒலிம்பிக் அரங்கம் இருப்பதால் லாஸ் ஏஞ்சலஸ் நிச்சயமாகத் தேர்ந்தெடுக்கப்படும் என்று முடிவெடுக்கக் கூடாதுஔ என்கிறார். அதற்கு உதாரணமாக 2012 இடத்தேர்வைச் சுட்டிக் காட்டுகிறார். லண்டன், மட்ரிட், மாஸ்கோ, நியூ யார்க், பாரிஸ் ஆகிய ஐந்து நகரங்களும் இறுதிச் சுற்று வரை தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தன. இதில் பாரிஸ் நகரில் அரங்கம் தயாராக இருந்தது. 1998-ல் உலகக் கால்பந்துப் போட்டி நடந்த அரங்கைப் பாரிஸ் பரிந்துரை செய்திருந்தது. ஆனாலும் 2012 ஒலிம்பிக்ஸ் நடத்தும் வாய்ப்பை லண்டன் தட்டிச் சென்றது.

சிகாகோவில் அரங்கம் தயாராக இல்லை என்றாலும், அதன் திட்டத்தின்படி அரங்கம் கட்ட ஏதொரு தடையும் இருப்பதாகத் தெரியவில்லை. கால்பந்துக் குழுவுடனோ, பேஸ்பால் குழுவுடனோ இணையாமல் தனியாக இந்த அரங்கைக் கட்ட சிகாகோ முடிவு செய்துள்ளது. ஆனால் அதன் திட்டங்களைப் பற்றிய விவரங்களை முழுமையாக இன்னும் வெளியிடவில்லை. அதன் வலைத்தளத்தில் (http://www.chicago 2016.org/index.asp) தனது முயற்சியை விளம்பரம் செய்வதோடு, சமீபத்தில் நடந்த மராத்தான் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகள் மூலமாகவும் தனது முயற்சிக்கு ஆதரவு தேடி வருகிறது.

சான் ஃபிரான்சிஸ்கோ போட்டியில் இருந்து முழுமையாக விலகிவிட்டதா என்பதும் ஒரு கேள்விக்குறி. தனது வலைத்தளத்தில் (http://www.sanfrancisco2016.org/index.html) அமெரிக்க ஒலிம்பிக் நிர்வாகக் குழுவிற்குச் சமர்ப்பித்த விண்ணப்பம், ஒலிம்பிக்ஸ் ஏற்பாட்டுத் திட்டங்கள் போன்ற பல சுவையான கோப்புகளை சமீபத்தில் ஏற்றியுள்ளது. அதில் ஒலிம்பிக் அரங்கிற்கான மாற்றுத் திட்டங்களை பட்டியல் இட்டிருக்கிறது. அமெரிக்க ஒலிம்பிக் நிர்வாகக் குழுவின் நிபந்தனையின் படி மார்ச் 2007-க்குள் ஒவ்வொரு நகரமும் குறைந்த பட்சம் 20 மில்லியன் டாலர்கள் நிதி திரட்ட வேண்டும். இப்பொழுதே 23 மில்லியன் டாலர்கள் திரட்டிவிட்டதாக சான் பிரான்சிஸ்கோ அறிவித்திருக்கிறது. மேலும் eBay, Yahoo! போன்ற சிலிக்கான் வாலி நிறுவனங்களை தனது ஆதரவாளர்களாகவும் பட்டியல் இட்டிருக்கிறது.

2016 ஒலிம்பிக்ஸ் நடத்தப் போட்டியிடும் மற்ற சர்வதேச நகரங்களையும் கவனிக்க வேண்டும். கிட்டத்தட்ட 20 நாடுகள் 2016 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம் தெரிவித் துள்ளன. அசர்பெய்ஜான், குவடார் என்று உலக வரைபடத்தில் எங்கே இருக்கின்றன என்று தேடும் நாடுகளில் இருந்து ஸ்பெயின் (மட்ரிட்), இத்தாலி (ரோம்), பிரசில் (ரியோ டி ஜெனிரோ), ரஷ்யா (செயின்ட் பீட்டர்ஸ் பர்க்) போன்ற நாடுகளும் போட்டியிடுகின்றன. ஆசியாவில் இருந்து ஜப்பான், இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளும் போட்டியில் குதித்துள்ளன. வட அமெரிக்காவில் கனடாவும் களத்தில் இறங்கியிருக்கிறது. ஆக, எப்போது நமக்கு முடிவு தெரியும்? அதற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. அக்டோ பர் 2009-ல்தான் சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகக் குழு தனது இறுதி முடிவை எடுக்கும்.

இந்தியாவிற்கு ஒலிம்பிக்ஸ் போகும் வாய்ப்புகள் குறைவு என்றாலும், இந்தியா வெற்றி பெற்று முதன் முறையாக இந்தப் போட்டிகளை நடத்தினால் நமக்குப் பெருமைதான். அதே சமயம் 1996-ல் அட்லாண்டா ஒலிம்பிக்ஸை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பைத் தவறவிட்ட அமெரிக்கவாழ் தமிழர்களுக்கு 2016-ல் அந்த வாய்ப்பு மீண்டும் கிட்டுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

சேசி

© TamilOnline.com