மின்னல் வேகச் சமையல்
சாதிப்பதற்குத் தேவை உழைப்பும், மனவுறுதியும், விடா முயற்சியும். மீண்டும் அதை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த இந்திரா. முப்பது நிமிடங்களில் 134 வகை உணவு வகைகளைச் செய்து ஆசியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸில் இடம்பிடித்துச் சாதனை படைத்திருக்கிறார் இவர்.

இயல்பிலேயே மிக வேகமாகச் சமைக்கும் திறன் கொண்டிருந்தவர் இந்திரா. கடற்படையில் வேலை பார்க்கும் கணவர் ரவிச்சந்திரன், பளுதூக்கும் போட்டியில் தேசிய அளவில் பதக்கம் பெற்றவர். அவர் அடிக்கடி இதனைச் சொல்லி இந்திராவைப் பாராட்ட, அதுவே இவருக்கு உந்துசக்தி ஆனது. குறைந்த நேரத்தில் அதிகமான உணவு வகைகள் செய்வது பற்றி ஆராய்ந்தார். அப்போதுதான், கேரளாவைச் சேர்ந்த 10 வயதுச் சிறுவன் ஒருவன், ஒரு மணி நேரத்தில் 174 உணவுகள் செய்து சாதனை செய்திருப்பது தெரியவந்தது. அதை எப்படி முறியடிக்கலாம் என்று கணவனும் மனைவியும் உட்கார்ந்து யோசித்ததன் விளைவு இந்தச் சமையல் சாதனை.

முதலில் அரை மணி நேரத்தில் 87 வகை உணவுகள் செய்யத் திட்டமிட்டார். ஆனால், 10 வயதுச் சிறுவனே அவ்வளவு செய்திருக்கும் போது நாம் அதிகம் செய்யவேண்டும் என்று தோன்றவே, இன்னமும் தீவிரமாக முயற்சிக்க ஆரம்பித்தார். அதன் விளைவுதான் முப்பது நிமிடங்களில் 134 வகை உணவுகள்.

இது குறித்து இந்திரா, "மூன்று மாதம் இதற்காகப் பயிற்சி எடுத்துக் கொண்டேன். எல்லா வார இறுதி நாள்களிலுமே கல்யாண வீடு மாதிரி சமையல் நடக்கும். என் கணவரும், குழந்தைகளும்தான் மிகவும் துணை செய்தார்கள். காய்கறி வாங்கி வந்து கழுவி நறுக்குவது என்று எல்லாவற்றிலும் உதவினார்கள். முதல் வாரத்தில், அரை மணி நேரத்தில் 35 வகை செய்தேன். அப்புறம் 80. இப்போது 134 வகை உணவு, சாதனையாக நிறைவேறியிருக்கிறது" என்கிறார்.

அடுத்து சமையலில் கின்னஸ் சாதனை நிகழ்த்துவது இவரது லட்சியமாம். நிறைவேற வாழ்த்துவோம்.

© TamilOnline.com