அரங்கேற்றம்: நந்திதா வெங்கடேஷ்
ஜூலை 11, 2021 அன்று, செல்வி நந்திதா வெங்கடேஷின் பரதநாட்டிய அரங்கேற்றம் (குரு புவனா வெங்கடேஷின் மகள்/சீடர், நிருத்யநிவேதன் ஸ்கூல் ஆஃப் டான்ஸ் கலை இயக்குனர், சான் ஹேசே, கலிஃபோர்னியா) கேம்ப்பெல்லில் உள்ள ஸ்டார்பிரைட் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தனிப்பட்ட பார்வையாளர்கள் மற்றும் உலகளவில் நேரலை ஒளிபரப்புப் பார்வையாளர்கள் இருந்தனர். நந்திதா அரங்கேற்றத்தைப் புஷ்பாஞ்சலியுடன் தொடங்கினார். தொடர்ந்தது விநாயகர்மீது கண்டசாப்பு தாளத்தில் அலாரிப்பு.

இதைத் தொடர்ந்து சரஸ்வதி கவுத்துவம் அருமையாக நிகழ்த்தப்பட்டது. கவுத்துவத்தில் அன்னத்தின் அசைவுகளைக் காண்பிக்கும் நுணுக்கத்தை வெளிப்படுத்தும் கரணங்களின் பயன்பாட்டைக் காணலாம். பின்னர், தோடி ராகத்தில் வேகமான ஜதீஸ்வரம் ஒன்றை நிகழ்த்தினார். இது பாரம்பரிய பந்தநல்லூர் பாணியை வெளிப்படுத்தியது. ராமநாடகக் கீர்த்தனையிலிருந்து எடுக்கப்பட்ட தனித்துவமான ராமர் சப்தம் நந்திதாவால் அபிநயிக்கப்பட்டது. நடராஜர் மீது அமைந்த நாட்டக்குறிஞ்சி ராகத்தில் "சுவாமி நான் உந்தன் அடிமை" வர்ணத்துக்கு பக்தி ரசத்தை அழகாகச் சித்திரித்தார். வர்ணத்திலுள்ள சஞ்சாரி பாவங்களுக்கான நந்திதாவின் அபிநயம் மிகுந்த முதிர்ச்சியுடன் காணப்பட்டது.



காமாட்சி தேவியின் அழகு, லாவண்யம் மற்றும் கருணை "கஞ்சதளாயதாட்சி' பாடலில் சிறப்பாக வெளிப்பட்டது. தொடர்ந்து தமிழ்க் கடவுள் முருகன்மீது அமைந்த "முருகனின் மறுபெயர் அழகு" பாடலை , நந்திதா தனது அரங்கேற்றத்திற்காகப் பாடியிருந்ததுடன் நடனமும் ஆடினார். ஒளவையாருக்கும் சிறுவனாகக் காட்சியளித்த முருகனுக்கும் இடையில் நடந்த உரையாடலுடன் அமைந்த இந்தப் பாடலுக்குத் தனது அபிநயத்தாலும் மயக்கினார். பாரதியாரின் "தீராத விளையாட்டுப் பிள்ளை" பாடலுக்கு கிருஷ்ணனின் குறும்புகள் கண்டோரைக் கவர்ந்தன. பூர்ணசந்திரிகா தில்லானாவுடன் அரங்கேற்றம் நிறைவுற்றது.

நந்திதாவின் தாய் குரு புவனா வெங்கடேஷின் விளக்கக் காட்சியுடன் அவரது சகோதரி ஹர்ஷிதா நிகழ்ச்சிக்கு உதவியிருந்தார்.

மேலும் விவரங்களுக்கு
வலைமனை: nrithyanivedhan.com
மின்னஞ்சல்: lalithkala_sj@yahoo.com

புகைப்படங்கள்: பிரசன்னா ரங்கநாதன்,
கேம்ப்பெல், கலிஃபோர்னியா

© TamilOnline.com