ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-18d)
முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து இதை வடிவமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்ட உத்தேசம்.

★★★★★


கேள்வி: நான் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க உள்ளேன். ஆரம்பிக்கும் முன்னமே என் யோசனையைப் பற்றி பொது ஆரம்பநிலை அனுபவமும் நிபுணத்துவமும் உடையவர்களிடமும், வருங்கால வாடிக்கையாளர்களிடமும் கலந்தாலோசிப்பது அத்தியாவசியம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் அப்படிச் செய்தால் யாராவது என் யோசனையைத் திருடி என்னுடனேயே போட்டிக்கு வந்து விடுவார்கள் என்று நான் தயங்குகிறேன். என் தயக்கம் சரியானதா? அல்லது, அதைத் தள்ளி வைத்துவிட்டுக் கலந்தாலோசிப்பதே நல்லதா? விளக்குங்களேன். (தொடர்கிறது...)

கதிரவனின் பதில்: கலந்தாலோசித்தே தீர வேண்டும் என்று சென்ற பகுதியில் ஆணித்தரமாகக் பதிலளித்து விளக்க ஆரம்பித்தேன். முதலில், ஏன் அப்படி அடித்துச் சொல்கிறேன் என்பதற்கான காரணங்களை மேலோட்டமாகப் பட்டியலிட்டோம்:
1. ஒரு டாலருக்குப் பத்து யோசனைகள். (முக்கியத்துவம் மிகக் குறைவு)
2. வளர்ச்சியில் (அல்லது தோல்வியில்) நேரும் யோசனை மாற்றங்கள்
3. கரப்பான் பூச்சிகள் (என்னடா இது என்கிறீர்களா, பொறுமை! பின்பு விளக்குகிறேன்!)
4. இறகுபோல் மெல்லிய யோசனை: ஊதினால் பறந்து விடுமோ?

இப்போது மேற்கண்ட காரணங்களை ஒவ்வொன்றாக விவரித்து வருகிறோம். முதலாவதாக, யோசனைகளின் மதிப்பு மலிவு, குழுவின் திறனுக்கும் வலிமைக்குமே மதிப்பதிகம் என்பதை விளக்கினோம்.

அடுத்து, ஆரம்பநிலை நிறுவனங்கள் பெரும்பாலும் தங்கள் போக்கில் சில யோசனை மாற்றங்களை அனுபவித்த பிறகுதான் வெற்றியடைகின்றன என்பதை விவரித்து வருகின்றோம். முதலில் ட்விட்டர் உதாரணத்தைக் கண்டோம். அடுத்து ஸ்லாக் நிறுவனத்தைப் பற்றி விவரித்து வருகிறோம். ஸ்டூவர்ட் பட்டர்ஃபீல்ட் என்பவர் ஒரு மின்விளையாட்டு நிறுவனத்தை ஆரம்பித்து அது படுதோல்வியை சந்தித்தது என்று கண்டோம்.

ஆனால் ஸ்டூவர்ட்டும் அவரது குழுவினரும் மனம் தளராமல் அந்த விளையாட்டு மென்பொருளை உருவாக்குவதற்காகத் தம்முள் ஒருவொருக்கொருவருடனும் குழுவுடனும் கருத்துப் பரிமாற்றத்துக்காக உருவாக்கிய ஸ்லாக் என்னும் மென்பொருள் மிகப் பயனுடையதாக இருப்பதை உணர்ந்து அதையே விற்றால் என்ன என்று யோசித்தனர்.

அதைத் தம்மைப்போன்ற மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்க ஆரம்பித்தனர். அது பெரும் வரவேற்பைப் பெறவே, மின்விளையாட்டு யோசனையைத் தூக்கி உடைப்பில் போட்டுவிட்டு கருத்துப் பரிமாற்ற மென்பொருள் விற்பனையில் முழுமனதுடன் ஆழ்ந்தனர். அப்புறம் என்ன, ஸ்லாக் பெருவெற்றி கண்டு பல பில்லியன்களுக்கு ஸேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்துக்கு விற்பனையாயிற்று.

நான் என்னுடைய அனுபவத்திலிருந்தே, எக்ஸோடஸ் நிறுவனம் மின்வலைத் தொடர்புத் துறையிலிருந்து, மின்வலைத் தகவல்மையத் துறைக்கு யோசனை மாற்றம் செய்ததை ஏற்கனவே விவரித்துள்ளேன்.

அண்ட்ராய்ட் (Android) ஒரு மிக சுவாரஸ்யமான யோசனை மாற்றம்! ஆன்டி ரூபின் (Andy Rubin) முதலில் அண்ட்ராய்ட் நுட்பத்தை கேமராக்கள் படங்களை எடுத்து மேகக்கணினிக்கு அனுப்ப உதவும் மென்பொருளாகத்தான் உருவாக்கினார். சில கேமராக்களும் அதைப் பயன்படுத்தின. ஆனால் திறன்பேசிகள் (smartphones), அதுவும் ஆப்பிள் ஐஃபோன் வந்ததும், நுகர்வோர் அவற்றையே பெருமளவில் படம் எடுக்கப் பயன்படுத்தினர். அதனால் டிஜிட்டல் காமிராக்கள் விற்பனை படுத்துவிட்டது! அதை உணர்ந்த ஆன்டி ரூபின், அண்ட்ராய்ட் மென்பொருளை திறன்பேசிகளுக்கான அடிப்படை இயக்கமுறை அமைப்பாக (operating system) யோசனை மாற்றம் செய்தார், அதன் பிறகு என்ன ஆயிற்று என்பது உங்களுக்கே தெரியுமே! கூகிள் அந்த நிறுவனத்தை வாங்கி, திறன்பேசி உருவாக்குபவர்களுக்கு இலவசமாக அளித்து, இப்போது உலகில் பல பில்லியன் திறன்பேசிகளை அண்ட்ராய்ட் இயக்குகிறது! அம்மாடியோவ்! எத்தனை பலம் வாய்ந்த யோசனை மாற்றம்!

ஓரிரு பெருநிறுவனங்களும் இந்த யோசனை மாற்றப் பட்டியலில் உள்ளன. நோக்கியா ஒரு காலத்தில் பேப்பர் மில் குழுமமாக இருந்தது! நின்டென்டோ ஆரம்பத்தில் விளையாட்டுச் சீட்டுக் கட்டுக்களை விற்றுக் கொண்டிருந்தது! அவ்வாறு தொழில்நுட்பமில்லாத துறைகளிலிருந்து, நுண்ணிய தொழில்நுட்பம் நிறைந்த மின்கருவித் (electronic) துறைக்கு எப்படி மாறிவிட்டன அந்த நிறுவனங்கள்! நம்பவே கடினமாக உள்ளது! ஆனால் அவை அப்படி மாறியிராவிட்டால் உலகம் முழுவதும் பல பில்லியன் கருவிகள் விற்கும் உன்னத நிலைக்கு வளர்ந்திருக்க இயலாது அல்லவா?

யோசனை மாற்றங்களைப் பற்றி இப்படிப் பற்பல ஆரம்பநிலை மற்றும் பெருநிறுவன உதாரணங்களைக் கூறிக்கொண்டே போகலாம், ஆனால் இத்தோடு நிறுத்திக்கொண்டு அதன் சாரம்சத்துக்கு வருவோம்: முன்னமே கூறியபடி பெரும்பாலான ஆரம்பநிலை நிறுவனங்கள் முதன்முதல் யோசனையை வைத்துக்கொண்டே இறுதிவரை பயணிப்பதில்லை, யோசனை மாற்றங்கள் செய்கின்றன என்பதுதான் சாரம்சம்.

அதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அப்படி வருங்காலத்தில் முதல் யோசனையை விட்டு வேறு யோசனைக்கு உங்கள் நிறுவனம் மாறுவதற்குப் பெருத்த வாய்ப்புள்ளது என்கிறபோது அந்த முதல் யோசனையைப் பொக்கிஷமாக மறைத்து வைத்துக் கொள்வது எதற்கு? அதில் ஒரு பயனுமில்லை. உங்களுக்குத்தான் ஆலோசனை கிடைக்காத நஷ்டம்.

அவ்வாறில்லாமல், அந்த யோசனையை அந்தத் துறை வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து, யோசனையில் உள்ள கோளாறுகள் என்ன, பலவீனங்களை எப்படித் தவிர்ப்பது, எவ்வாறு யோசனையை மேம்படுத்திக் கொள்வது என்பவற்றை உணர்ந்து முன்னோக்கிச் செயல்படுவதே நல்லது.

நீங்கள் கலந்தாலோசிக்கும் நிபுணர்கள் உங்கள் யோசனையைத் திருடிவிடுவார்கள் என்று பயப்படத் தேவையில்லை. அவ்வாறு நடப்பதேயில்லை என்று சொல்ல முடியாது என்றாலும் அது மிகமிக அபூர்வமான நிகழ்வு என்றுதான் கூறவேண்டும். அத்தகைய நிபுணர்கள் பெரும்பாலும் அவர்களுடைய வேலையிலோ அல்லது சொந்த யோசனையை வைத்து ஆரம்பித்த நிறுவனத்திலோ ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருப்பார்கள். உங்கள் யோசனையைத் திருடித்தான் அவர்கள் ஏதோ செய்யவேண்டும் என்பதில்லை.

அடுத்த பகுதிகளில், திருடவேண்டிய அளவுக்கு உங்கள் யோசனை அவ்வளவு அதிசய அபூர்வமுமில்லை, அப்படி எளிதாகத் திருடி உங்களைக் கவிழ்த்துவிட முடிந்தால் அந்த யோசனைக்கு மதிப்பும் இல்லை என்பதை விவரிப்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com