ஒரு துவையல் ஒரு சட்னி
கோஸ் கேரட் துவையல்

தேவையான பொருட்கள்
கேரட் - 1 கிண்ணம்
கோஸ் (நறுக்கியது) - ஒரு கிண்ணம்
உளுத்தம் பருப்பு - 4 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 6
புளி - சிறிதளவு
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
தேங்காய் (துருவியது) - 1/4 மூடி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்துமல்லி - சிறிதளவு

செய்முறை
கேரட்டையும் கோஸையும் பொடியாக நறுக்கவும். வாணலியில் 4 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய்வற்றலைப் பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கேரட்டையும் கோஸையும் தண்ணீர் விடாமல் வதக்கவும். தண்ணீர் விட்டு வதக்கினால், அரைக்கும்போது ரொம்ப மிருதுவாக அரைந்துவிடும்.

அரைத்த கோஸ், கேரட், புளி உப்பு, தேங்காய், பெருங்காயப் பொடியுடன் வறுத்த சாமான்கள், கொஞ்சம் கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை சேர்த்துக் கரகரவென்று அரைக்கவும். நிறைய கறிவேப்பிலை, கொத்துமல்லி போட்டால் துவையல் பச்சை நிறமாகவும், போடாவிட்டால் பொன்னிறமாகவும் இருக்கும். அதனால் கொஞ்சமாகப் போடலாம். இந்தத் துவையலை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். பொரித்த குழம்பு (மிளகூட்டல்) சப்பாத்தி, மோர் சாதம், பூரி கூடவும் தொட்டுக்கொள்ளச் சுவையாக இருக்கும். தேங்காயும் நிறைய வேண்டாம். ஆனால், நிறையத் தேங்காய் போட்டது போல் ருசியாயிருக்கும். கோஸ், கேரட், பட்டாணி முருங்கைகாய் சேர்த்துச் செய்த மிளகூட்டலுக்கு அருமையான சட்னி இது.

பார்வதி ராமன்,
ரிச்மாண்ட், வர்ஜீனியா

© TamilOnline.com