தென்றல் பேசுகிறது...
முதலில் நல்லதைச் சொல்வோம். கோவிட்-19 தொற்றின் மூன்றாவது அலை - அதுதான் தொடங்கிவிட்டதே - சென்ற அலையைவிடச் சற்றே தீவிரம் குறைந்ததாக இருக்கலாம். அதிலும், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பாதிப்பு குறைவாக இருக்கிறது. சரி, இப்போது மறுபக்கத்தைப் பார்க்கலாம். அமெரிக்காவில் கோவிடின் டெல்டா திரிந்தவுரு (Delta variant) தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சென்ற இரண்டு வாரங்களில் மட்டுமே 149% அதிகரித்திருக்கிறது! ஆகஸ்ட் 1-ம் தேதியன்று 79,763 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. உலக அளவில் இது மிகப்பெரிய எண்ணிக்கை. நாளுக்கு நாள் நோய்ப்பரவல் அதிகரித்து வரும் இந்த நிலையில் மீண்டும் முழுக் கதவடைப்பு வராவிட்டாலும் கட்டுப்பாடுகள் - முகக்கவசம் அணிவது உட்பட - வற்புறுத்தப்படும். தனிமனித சுதந்திரத்தின் பெயரால் வேக்ஸினையும், முகக்கவசத்தையும் எதிர்த்து, வீட்டுக்குள் அடங்கியிருக்க மறுப்பவர்கள், தங்களுக்கும் சமுதாயத்துக்கும் மிகப்பெரிய தீங்கு செய்கிறார்கள் என்பதை உணர்ந்தேயாக வேண்டும். மிகப்பெரிய அபாய காலங்கள், மிகப்பெரிய அளவில் சுயக்கட்டுப்பாட்டை நமக்குக் கற்பிக்கின்றன. சற்றொப்ப 590,000 பேர் அமெரிக்காவில் இந்தத் தொற்றால் உயிரிழந்துவிட்டனர் என்பதை எண்ணிப் பார்த்தால் நாம் வீண் பிடிவாதங்களை விட்டுவிடுவோம். விட்டாக வேண்டும்.

★★★★★


850 பில்லியன் டாலர் தொகையைச் சாலைகள், பாலங்கள், பெருவழித் தடங்கள், அகலப்பட்டை (broadband) மற்றும் நீராதாரங்களுக்குச் செலவிடும் உள்கட்டமைப்புக்கான இருகட்சி உடன்படிக்கை நிறைவேறினால் நாட்டுப் பொருளாதாரம் ஒரு பெரிய வளர்ச்சியைக் காணும் வாய்ப்பு ஏற்படும். வேலை வாய்ப்புகள் சட்டெனப் பெருகும். உற்பத்தி அதிகரிக்கும். பொருட்கள் விரைந்து இடம்பெயரும். பொதுஜனம் மீண்டும் வருமானத்தைப் பெறும். பணப்புழக்கம் மிகுதியாகும். "எல்லாம் சரி, கச்சாப் பொருட்களை இறக்குமதி செய்யாமல், வேலை செய்யப் போதிய தொழிலாளிகள் இல்லாமல் இவையெல்லாம் எப்படி நடக்கும் என்று கேட்கிறீர்களா?" யோசிக்க வேண்டிய கேள்விதான். அதைப்பற்றி இந்த இடத்தில் முன்னரே பேசியிருக்கிறோம். திருப்பிச் சொல்ல எதுவுமில்லை. செய்யத்தான் அரசுக்கு நிறைய இருக்கிறது.

★★★★★


சுக. பாவலன் சுகமான இசைக்குச் சொந்தக்காரர். வயலில் உழைக்கும் குடும்பத்தில் பிறந்து வயலின் இசையில் மேதைமை அடைந்தவர். பலமுறை அமெரிக்காவில் கச்சேரி செய்திருக்கிறார். அவரது வில் எழுப்பும் இசையைப் போலவே சுவையானது அவரது நேர்காணலும். தேசபக்தர்களும் எழுத்தாளர்களுமான சின்ன அண்ணாமலை, ஏ.கே. நவநீத கிருஷ்ணன் போன்றோர் பற்றிய கட்டுரைகளும், கதைகளும் இதழை அணி செய்கின்றன. 'ஆசைக்கு உச்சவரம்பு' போடவும் வழியுண்டு! உள்ளே நுழையுங்கள், எல்லாம் உங்களைக் கட்டிப் போடும்.

வாசகர்களுக்கு இந்திய சுதந்திர நாள், கிருஷ்ண ஜன்மாஷ்டமி, ஓணம், மொஹரம் பண்டிகை வாழ்த்துகள்!

தென்றல்
ஆகஸ்ட் 2021

© TamilOnline.com