கவாயித் தீவில் தமிழும், தவிலும்
காரைவிட்டு இறங்கியதுமே, நாசியைச் சுண்டி இழுக்கும் விபூதி, சந்தன வாசனை. தொடர்ந்து நடக்கையிலே கண்முன்னே வானளாவிய தென்னை மரங்கள், குலை சுமந்த பல நூறு வாழைகள், இருமருங்கும் படர்ந்த மல்லிகை, இருவாட்சிப் புதர்கள், பசுமை தோய்ந்த மலைகள், சலசலவென ஓடும் நீரோடை, பிரம்மாண்டமான ஆலமரங்கள். இது போதாதென்று காற்றில் மிதந்து, நம் காதில் விழும் தேவாரம், தவிலுடன் கூடிவரும் நாதஸ்வர இசை!

கைலாய மலைக்கே வந்து விட்டோமோ என மலைக்கையில், ஆங்காங்கு அழகான புடவைகளில் அமெரிக்கப் பெண்களும், சரிகை வேட்டி, அங்கவஸ்திரங்களுடன் அமெரிக்க ஆண்களும், பட்டுப் பாவாடை, தாவணியில் துள்ளித் திரியும் குழந்தைகளையும் கண்டதும், ''கைலாயமில்லை, பூவுலகில்தான் உள்ளோம். அதுவும் அமெரிக்காவிலேயேதான்'' என மெதுவாக நமக்கு நாமே சொல்லிக்கொள்கிறோம்.

எங்கு பார்த்தாலும் இளமை, இனிமை, பசுமையுடன் தோன்றும் இப்பூலோக கைலாசம் இருப்பது ஹவாயித் தீவுகளில் ஒன்றான கவாயித்தீவில் (Kauai, Hawaii, USA). ஒரு வார விடுமுறையில் கவாயி சென்ற எங்களை மெய்மறக்கச் செய்தது அங்கிருக்கும் 'இறைவன் கோயில்'.

கவாயித் தீவின் மிக வளமான 400 ஏக்கர் பூமியில் 1975-ல் குரு சிவாய சுப்ரமண்ய சுவாமியால் நிறுவப்பட்டது சைவ சித்தாந்த ஆதீனம். சத்குருவின் கனவில் தோன்றிச் சிவபெருமான் தான் அங்கிருப்பதைக் காட்ட, கனவில் இறைவன் அமர்ந்திருந்த பாறையை அந்நிலப்பரப்பில் கண்டுபிடித்து, இறைவன் கோவில் கட்டத் துவங்கினார் சத்குரு.

நிரந்தரமாக இருக்கப் போகும் கோவிலைக் கட்டி வருகையில், தாற்காலிக வழிபாட்டிற்கெனக் கட்டியிருக்கும் கோவிலின் அழகைச் சொல்லி மாளாது. கோவிலினுள் பிரம்மாண்டமான நடராசர், அவரை நோக்கிய வண்ணம் பிரம்மாண்டமான கருங்கல் நந்தி, உட்புறத்தில் இருபுறச் சுவர்களிலும், வெண்கலத்தில் செய்யப்பட்ட 63 நாயன்மார்களின் திருவுருவங்கள். இவைகளை நோக்கியவாறு அமர்ந்திருக்கும் சத்குரு சிவாய சுப்ரமண்ய சுவாமியின் வெண்கலத் திருவுருவம், மாவிலைத் தோரணங்கள், மலர் மாலைகள் இவை யனைத்தையும் தோற்கடிக்குமாறு நடராசரின் திருமுன் வைக்கப்பட்டிருக்கும் 700 பவுண்டு, 39 அங்குல உயரமுள்ள படிகச் சிவலிங்கம்!

நேரம் தவறாமல் பூசைகள் செய்கிறார் சைவமதம் தழுவிய அமெரிக்க குருக்கள். பூசைகளுக்கு இடையே தேன் தமிழ் தேவாரம், திருவாசகம் ஒலி நாடாவில்.

தற்காலிகக் கோவிலின் பின்புறம் மிகப் பெரும் கற்கோவில் உருவாகி வருகிறது. கோவிலின் ஒவ்வொரு கல்லும், சைவ ஆகம முறைப்படி இந்தியாவில் பெங்களூருக்கு அருகில் செதுக்கப்பட்டு, கவாயிக்கு வருகிறது. வந்து சேர்ந்துவிட்ட கல்லாலான 32 அங்குல அகலம் கொண்ட ஆலயமணி, பிரம்மாண்டமான சந்தனக் கதவுகள், நாதஒலி எழுப்பும் 13 அடி உயரம் கொண்ட கல்லில் செதுக்கப்பட்ட தட்சணாமூர்த்தி சிற்பம் இவையனைத்தும் வரவிருக்கும் கோவிலின் பிரும்மாண்டத்தை உணர்த்து கின்றன. கோவிலில் வேலை செய்யும் அனைவரும் தமிழகத்துச் சிற்பிகள். (அதிக விவரங்கள் அறிய: http://www.gurudeva.org).

இப்பெரும் நிலப்பரப்பில் காட்டுச் செடிகளை அழித்து அரை மைலுக்குச் சன்மார்க்கப் பாதை அமைத்துள்ளார். பாதையின் இருமருங்கிலும் நறுமண மலர்கள், வெற்றிலைக் கொடிகள். பூசைக்கென இமலாயத்திலிருந்து கொண்டு வந்து நடப்பட்டு, இன்று மரங்களாய் வளர்ந்து நிற்கும் ருத்திராட்ச மரங்கள், கொன்றை மரங்கள்.

நாங்கள் சென்றிருந்த நாளில் 'குரு பூர்ணிமா' பூஜையின் நிறைவுநாள். கனடாவிலிருந்து வந்திருந்த நாதஸ்வரக் கலைஞரும், தவில் கலைஞரும் தமிழர்கள். தமிழ்ப் பாடல்களை 3 மணி நேரம் வாசித்து மகிழ்வித்தனர். பூசைக்காக மலேசிய ஆதீனத்திலிருந்து வந்திருந்த குருக்களும், தம்பதியர் அனைவரும் தமிழர். நிறைவு நாளன்று அனைவருக்கும் பெருவிருந்து.

தமிழ்நாட்டு விருந்தோம்பல். அருமையான தமிழ்ச் சாப்பாடு - பாயசம், வடை, புளியோதரை, இருவித கூட்டுகள், துவையல், மூன்று வித இனிப்புகள் இத்யாதி... இத்யாதி... சமையல் செய்து, அன்புடன் பரிமாறியவர் கோவைத் தமிழர். அன்று சிறப்புரை ஆற்றிய 100 வயதான நியூயார்க் ஆதீனத்திலிருந்து வந்திருந்த சைவகுருவும் பொள்ளாச்சித் தமிழர்.

ஆக கவாயியிலும் தமிழின் இனிமையில் திக்குமுக்காடிய நாங்கள் பிரியா மனதுடன் புறப்பட்டோம்.

கவாயித் தீவின் பற்பல கடற்கரைகளையும், பள்ளத்தாக்குகளையும், மா, பலா, கொய்யாத் தோட்டங்களையும் காணவிரும்பிச் செல்லும் அனைவரும் "இறைவன்" கோவிலையும் முக்கியமாகக் காண வேண்டும்.

கொத்துக் கொத்தாகத் தொங்கிய மாங்காய்களைக் கொண்டு, ஓட்டல் அறையில் தொக்கு செய்தலும், கொய்யாப் பழத்தோப்புகளைக் கண்டு மெய்மறந்ததும், கவாயித் தீவில் நாங்கள் செய்த மற்ற சில விஷயங்கள். இருப்பினும், கண் நிறைய, மனம் நிறைய இறைவன் கோவிலின் அழகை நிரப்பிக் கொண்டு சான் ஓசே விமானநிலையத்தில் வந்து இறங்கியதே உண்மை!

மாலா பத்மநாபன்

© TamilOnline.com