ஓவியர் இளையராஜா
தமிழத்தின் தலைசிறந்த தத்ரூப ஓவியர்களுள் ஒருவரான இளையராஜா கோவிட் தொற்றால் காலமானார். 42 வயதான இளையராஜா, 19 ஏப்ரல் 1979ல், கும்பகோணம் அருகே செம்பியவரம்பல் கிராமத்தில் பிறந்தார். தந்தையார் தச்சுத் தொழில் செய்தவர். இளவயதிலேயே இளையராஜா ஓவிய ஆர்வம் மிக்கவராக இருந்தார். கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். பின்னர் சென்னை கவின்கலைகள் கல்லூரியில் பட்டம் பெற்றார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே பல ஓவியக் கண்காட்சிகளை நடத்திப் புகழ்பெற்றார். 2009ல் இவர் நடத்திய 'திராவிடப் பெண்கள் கண்காட்சி' இவருக்குப் பரவலான அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்தது.தொடர்ந்து வந்த ஓவிய வாய்ப்புகளைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டார். தமிழின் தத்ரூப ஓவியக் கலைஞர்களில் முதன்மையானவராகப் பரிணமித்தார். தமிழகம், புதுச்சேரி, பெங்களூரு, ஹைதராபாத், கல்கத்தா, டெல்லி, விசாகப்பட்டினம் என இந்தியாவிலும், சிங்கப்பூர், மலேசியா, லாஸ் ஏஞ்சலஸ், நியூ யார்க் என உலகின் பல இடங்களிலும் ஓவியக் கண்காட்சிகள் நடத்திப் புகழ்பெற்றார். சிறந்த ஓவியருக்கான தமிழ்நாடு அரசு விருது, லலித்கலா அகாதமி விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் இளையராஜா, ஓவியப் பயிற்சி முகாம் பலவற்றை நடத்தி இளைஞர்களை ஊக்குவித்தார். ஓவியம் குறித்துப் பல்வேறு கனவுகளை வைத்திருந்தார். (பார்க்க)

சகோதரி மகள் திருமணத்திற்காகச் சொந்த ஊருக்குச் சென்றவர், கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றிக் காலமானார். அவருக்கு மனைவியும் இரண்டு சிறு குழந்தைகளும் உள்ளனர்.

மனங்கவர்ந்த ஓவியருக்குத் தென்றலின் அஞ்சலி!

© TamilOnline.com