ஸ்ரீ அருணகிரிநாதர் - 2
சம்பந்தாண்டானின் சவால்
பிரபுட தேவராய மன்னனின் அவைப்புலவனாக இருந்தவன் சம்பந்தாண்டான். அருணகிரிக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புகழைக் கண்டும், மன்னர் அவர்மீது கொண்ட அன்பைக் கண்டும் பொறாமை கொண்டான். மன்னரின் அரவணைப்பிலிருந்து அருணகிரியைப் பிரித்து அண்ணாமலையிலிருந்து விரட்டுவதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

ஒருமுறை மன்னர் மிகவும் மனம் சோர்வுற்றிருந்தார். அவரை அணுகிய சம்பந்தாண்டான், அருணகிரி ஒரு போலித்துறவி, சிற்றின்ப வேட்கை மிக்கவராக இருந்தவர் என்றும், தற்போதும் ஏதோ ஒரு மர்மமான காரணத்திற்காகவே மன்னரோடு நட்புப் பாராட்டுகிறார் என்றும் கூறினான். ஆனால் மன்னர் அதை ஒப்புக் கொள்ளாமல் சம்பந்தாண்டானைக் கடிந்து கொண்டார். சினமுற்ற சம்பந்தாண்டான், சதித்தீட்டம் ஒன்றைத் தீட்டினான். மன்னர் முன்னிலையில் தான் பாடல்கள் பாடிக் காளி அன்னையை வரவழைப்பதாகவும், அதுபோல அருணகிரியும் பாடி முருகனை வரவழைத்துக் காட்டவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான். அப்போதுதான் அவரை உண்மையான முருக பக்தராக ஏற்றுக்கொள்ள முடியும் என்று கூறினான்.



ஒரே நேரத்தில் தேவி மற்றும் முருகனின் காட்சி கிடைக்க இருப்பதை எண்ணி மகிழ்ந்த மன்னர், பெருவிருப்புடன் அந்தத் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டார். அருணகிரியை வரவழைத்துச் சம்பந்தாண்டானின் சவாலைத் தெரிவித்தார். முதலில் இதனை ஏற்கத் தயங்கிய அருணகிரியார், பின்னர் ஒப்புக்கொண்டார். மறுநாளே போட்டி என்று தீர்மானிக்கப்பட்டது.

அன்று இரவு ஊரின் ஒதுக்குப்புறமாக இருந்த காளி கோவிலுக்குச் சென்று ரகசியமாகத் தேவி பூஜை செய்தான் சம்பந்தாண்டான். காட்சி தந்த அன்னையிடம், தான் மறுநாள் அழைக்கும்போது வருகை தந்து மன்னர் உட்பட அனைவருக்கும் காட்சி தரவேண்டும் என்று வேண்டிக் கொண்டான். ஆனால், அன்னையோ அதற்கு உடன்படவில்லை. எல்லோருக்கும் தன்னைக் காணும் தகுதி இருப்பதில்லை என்றும், மாசற்ற தவமும், மாறா பக்தியும் உடைய சில பக்தர்களுக்கு மட்டுமே தன்னால் காட்சி தரமுடியும் என்றும் சொல்லி, அனைவர் முன்னும் காட்சி தர மறுத்துவிட்டாள். சம்பந்தாண்டான் தன் பக்தனே தவிர, தனக்குக் கட்டளையிடும் எஜமானன் அல்ல என்றும் கடிந்து கூறினாள். மனச்சோர்வுற்ற சம்பந்தாண்டான், "அம்மா, நீ வராவிட்டாலும் பரவாயில்லை. அருணகிரி அழைக்கும்போது உன் மைந்தன் முருகனை வரவிடாமல் எப்படியாது தடுத்துவிடு. எனக்கு அது போதும். இதுநாள்வரை உன்னைப் பூஜித்த எனக்கு இந்த உதவியைக்கூடச் செய்யமாட்டாயா?" என்று கண்ணீருடன் வேண்டினான். மனமிரங்கிய அன்னை அவ்வாறே செய்வதாக அவனுக்கு வாக்குத் தந்தாள்.

முருகனின் திருக்காட்சி
மறுநாள் அவை கூடிற்று. மன்னர் முதலில் சம்பந்தாண்டானிடம் தேவியை வரவழைத்துக் காட்டும்படிக் கட்டளையிட்டார். சம்பந்தாண்டானோ, முதலில் அருணகிரிநாதர் பாடலைப் பாடி முருகனை வரவழைக்கட்டும். அதன் பின்னர் தான் செய்வதாகச் சொன்னான்.



அருணகிரியார் முருகனை மானசீகமாகத் துதித்தார். முருகன் வரவில்லை. பக்தியுடன் பாடினார். குமரன் வரவில்லை. உள்ளம் உருகத் தொழுதார், அழுதார். அப்போதும் அவன் வரவில்லை. அருணகிரி அயராது பாடியும் முருகன் வராதது கண்டு அவையோர் நகைத்தனர். மன்னர் திகைத்தார். சம்பந்தாண்டானோ வஞ்சகமாகச் சிரித்தான்.

முருகன் வராததற்கான காரணத்தை தனது ஞானதிருஷ்டி கொண்டு நோக்கினார் அருணகிரி. சம்பந்தாண்டானிடம் கொடுத்த வாக்கிற்கேற்ப அன்னை, தன் மைந்தன் முருகனைத் தன் மடிமீதமர்த்தி அவனை எங்கும் போகவிடாது இறுக்கமாகப் பிடித்தபடி அமர்ந்திருப்பது தெரிய வந்தது. உடனே அருணகிரியார் மயில்வாகனின் மயில் மீது விருத்தம் பாடத் தொடங்கினார்.

ஆதார பாதளம் பெயரஅடி பெயரமூ
தண்டமுக டதுபெயரவே
ஆடரவ முடிபெயர எண்டிசைகள் பெயரஎறி
கவுட்கிரி சரம்பெயரவே
வேதாள தாளங்க ளுக்கிசைய ஆடுவார்
மிக்கப் ரியப்படவிடா
விழிபவுரி கவுரிகண் டுளமகிழ விளையாடும்
விஸ்தார நிர்த்த மயிலாம்
மாதாநு பங்கியெனு மாலது சகோதாரி
மகீதரி கிராத குலிமா
மறைமுநி குமாரிசா ரங்கநந் தனிவந்த
வள்ளிமணி நூபுர மலர்ப்
பாதார விந்தசே கரனேய மலரும்உற்
பலகிரி அமர்ந்த பெருமாள்
படைநிருதர் கடகமுடை படநடவு பச்சைப்
பசுந்தோகை வாகை மயிலே

என்று தொடங்கி அவர் பாடவும், கைலாயத்தில் அகவு மயில் தன் அழகுத் தோகையை விரித்துக் களிநடனம் செய்து ஆடத் தொடங்கியது. அதன் ஒயிலான நடனம் கண்டு மனம் மயங்கிய தேவி, முருகன்மீது வைத்திருந்த தனது பிடியைச் சற்றே நழுவவிட, உடனே அருணகிரிக்கு உதவ அம்மயில் மீதேறி ஓடோடி வந்தான் முருகப் பெருமான்.



உடன் அருணகிரியார்,
அதலசேடனாராட அகிலமேரு மீதாட
அபினகாளி தானாட அவளொடன்(று)
அதிரவீசி வாதாடும் விடையிலேறுவார் ஆட
அருகு பூத வேதாளம் அவையாட

மதுர வாணி தானாட மலரில் வேதனாராட
மருவு வானுளோர் ஆட மதியாட
வனச மாமியார் ஆட நெடிய மாமனார் ஆட
மயிலும் ஆடி நீயாடி வரவேணும்

என்று பாட, முருகன் ஆடுமயில் மீது தானும் ஆடிக்கொண்டே எழுந்தருளி அருணகிரிக்கும், மன்னருக்கும் ஒரு தூணில் காட்சி தந்தான்.

மன்னர் மனம் மகிழ்ந்தார். அகம் தெளிந்தான். உளம் குளிர்ந்தான். அருணகிரியின் மாசற்ற தூய பக்தியை மெச்சி, அவரைப் போற்றித் துதித்தான்.

மீண்டும் ஒரு சதி
போட்டியில் தோற்ற சம்பந்தாண்டானோ மன்னர் மற்றும் அருணகிரி முகத்தில் விழிக்க வெட்கிச் சில காலம் தலைமறைவாக இருந்தான். அருணகிரிநாதர் போட்டியில் வென்றதால் அவர்மீது தீராச் சினமும் பொறாமையும் ஏற்பட்டது அவனுக்கு. அவரை எப்படியாவது அண்ணாமலையை விட்டு ஒழிக்க நினைத்துத் தக்க சமயம் எதிர்பார்த்துக் காத்திருந்தான்.



பாரிஜாத மலர் தேடி...
திடீரென மன்னருக்குக் கண் பார்வை பழுதுபட்டது. அவர்மீது அக்கறை கொண்டவன் போல் அவரை அணுகினான் சம்பந்தாண்டான். மன்னரின் பார்வை குணமாக ஓர் அரிய மருந்து இருக்கிறது என்றவன், தேவலோகத்தில் உள்ள பாரிஜாத மலரைக் கொண்டு வந்து, அதன் சாற்றைப் பழுதுபட்ட கண்மீது பூசினால் உடனடியாக இழந்த பார்வை திரும்பக் கிடைக்கும், இது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள உண்மை என்று கூறினான். சம்பந்தாண்டானுக்கு வேண்டிய சிலரும் அவனது கூற்றை ஆமோதித்தனர்.

எப்படியாவது கண்பார்வை கிடைத்தால் போதும் என்று எண்ணிய மன்னர் உடனடியாகப் பாரிஜாத மலரைக் கொண்டு வர ஏற்பாடு செய்யுமாறு சம்பந்தாண்டானை வேண்டிக் கொண்டார். ஆனால் சம்பந்தாண்டானோ அது தன்னால் ஆகாத செயல் என்றும், முருகனை வரவழைத்துக் காட்டிய அருணகிரியால் மட்டுமே முடியும் என்றும் வஞ்சகமாகக் கூறினான்.

மன்னர் அருணகிரிநாதரை அழைத்து, தன் கண் பார்வை கிடைக்க தேவலோகத்தில் உள்ள பாரிஜாத மலரைக் கொண்டு வருமாறு ஆணையிட்டார். அது சதி என அறிந்தும் ஏற்றுக்கொண்டார் அருணகிரிநாதர். தேவலோகத்திற்கு மானிடர்கள் மானுட உடலுடன் செல்ல இயலாது என்பதால், தனது உடலை மலையின் ஒருபுறத்தே கிடத்திவிட்டு, இறந்த ஒரு கிளியின் உடலில் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து, கிளி ரூபத்தில் தேவலோகம் சென்றார்.

மலைப்பகுதியில் அருணகிரியின் உடல் கிடப்பதை உளவாளிகள் மூலம் அறிந்து கொண்டான் சம்பந்தாண்டான். பாரிஜாத மலர் கொண்டுவரும் முயற்சியில் தோற்றுவிட்டதால் அருணகிரிநாதர் தற்கொலை செய்து கொண்டதாகவும், உடல் மலையின் ஒருபுறத்தே கிடக்கிறது என்றும் தன் ஆட்கள் மூலம் செய்தி பரப்பினான். மக்களும் அது கேட்டுப் பெரிதும் வருந்தினர். மலைக்குச் சென்று உயிரற்ற உடலைக் கண்டனர். மன்னரைச் சந்தித்த சம்பந்தாண்டான், அருணகிரிநாதர் ஞானி என்பதால், அவர் உடலை உடனே எரியூட்டிவிட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நாட்டுக்கும் மக்களுக்கும் பெருந்தீமை விளையும் என்றும் எச்சரித்தான். பின் மன்னரின் ஒப்புதலுடன் அருணகிரியாரின் உடலுக்கு எரியூட்டச் செய்தான்.



கிளியாக அருணகிரிநாதர்
சில நாட்களுக்குப் பின் பாரிஜாத மலருடன் தேவலோகத்திலிருந்து கிளி உருவில் வந்த அருணகிரிநாதர், தன் உடல் சாம்பலானது கண்டு அதிர்ந்தார். சம்பந்தாண்டானின் சூழ்ச்சியைப் புரிந்துகொண்டார். மன்னருக்குப் பார்வை கிடைக்கச் செய்தார். பின் தன்னுடைய உடல் இல்லாததால், கிளி ரூபத்திலேயே இருந்து முருகனின்மீது பல பாடல்களை இயற்றினார். அவ்வாறு அருணகிரியார் கிளி ரூபத்தில் பாடியதுதான், கேட்போர் 'நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்துருகும்' கந்தரனுபூதி ஆகும்.

இவ்வாறு கிளிரூபத்திலேயே பல தலங்களுக்கும் பறந்து சென்று, இறைவனைத் தொழுதவர், இறுதியில் திருத்தணிக்குச் சென்று, அங்கு முருகன் திருவுருமுன் தினந்தோறும் திருப்புகழை ஓதி, முக்தியடைந்தார். அவர் கிளி ரூபத்தில் அண்ணாமலைக் கோபுரத்தில் சிலகாலம் வசித்ததால் அந்தக் கோபுரத்திற்கு கிளிக்கோபுரம் என்னும் பெயர் வழங்கலாயிற்று. அவரது உடல் எரியூட்டப்பட்ட இடம் ஆலயத்தின் பின்பகுதியில் இன்றும் இருப்பதாக நம்பப்படுகிறது.

அருணகிரியின் பாடல் சிறப்புகள்
அண்ணாமலை அண்ணலையும், முருகனையும் ஏராளமான பாடல்களில் அருணகிரியார் புகழ்ந்து பாடியிருக்கிறார். அவர் பாடிய பாடல்களின் தொகுப்பு 'திருப்புகழ்' என்று அழைக்கப்படுகிறது. இசை நயமும் சந்தச் சிறப்பும் கொண்ட திருப்புகழ் ஒரு மகாமந்திரம். கருத்துச் செறிவும், சொல்லழகும் நிறைந்த இந்நூலில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆயிரக்கணக்கான இசைச் சந்தங்களிலே பாடிய முன்னோடி இவர் மட்டுமே. திருப்புகழ் தவிர, கந்தர் அந்தாதி (102 பாடல்கள்), கந்தர் அலங்காரம் (108 பாடல்கள்), கந்தர் அனுபூதி (52 பாடல்கள்) திருவகுப்பு, சேவல் விருத்தம், மயில் விருத்தம், வேல் விருத்தம், திருவெழு கூற்றிருக்கை போன்ற பலவும் அருணகிரிநாதரால் பாடப்பட்டவையே! தேவாரம், திருவாசகம்போல் திருப்புகழும் மந்திர நூலாகக் கருதப்படுகிறது. வள்ளிமலை சுவாமிகள், சாதுராம் சுவாமிகள், கிருபானந்த வாரியார் போன்றோர் திருப்புகழின் பெருமையை மக்களிடத்தே எடுத்துச் சென்ற பெருமைக்குரியவர்கள்.

'வாக்கிற்கு அருணகிரி', 'சந்தத் தமிழ் வித்தகர்' என்றெல்லாம் போற்றப்படும் அருணகிரிநாதரின் ஆராதனை நாள் மார்கழி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் நடைபெறுகிறது. ஒவ்வோர் ஆடி மாதமும் 14, 15, 16 தேதிகளில் அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் அருணகிரிநாதர் திருவிழா கொண்டாடப்படுகிறது. இரவில் அருணகிரிநாதர் வீதியுலா நடைபெறும். புரட்டாசி உத்திரத்தில் அருணகிரிநாதர் ஜயந்தி விழா எல்லா ஆன்மிகத் தலங்களிலும் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

நாத விந்து கலாதி நமோ நம
வேத மந்த்ர ஸ்வரூபா நமோ நம
ஞான பண்டித ஸ்வாமி நமோ நம!!


பா.சு.ரமணன்

© TamilOnline.com