தாகமும் தண்ணீரும் கேள்விகளும்
பாண்டவர் வனவாசத்தின் பன்னிரண்டாம் ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்களே இருந்தன. வனபர்வத்தின் இறுதிப் பகுதியான குண்டலாஹரண பர்வத்தைப் பார்த்தோம். இப்போது வனபர்வத்தின் கடைசி அத்தியாயமான ஆரணேய பர்வத்தை அடைந்திருக்கிறோம். (கவர்ந்து செல்லப்பட்ட) அரணிக்கட்டையை மீட்டுக்கொடுத்த பர்வம் என்பது இதன் பொருள். அரணிக்கட்டை என்பது தீ கடையும் கோலைக் குறிக்கும் அரணிக்கல் எனப்படும் Flint Stone (சிக்கிமுக்கிக் கல்) இன்றளவும் gas-lighter, cigarette-lighter போன்றவற்றில் பயன்படுகிறது பழங்காலத்தில் தீயை உண்டாக்குவது சிரமமான வேலை. இப்படிப்பட்ட இரண்டு கட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து ஒன்றைக் கயிற்றால் சுற்றி, கடைந்து தீயை உண்டாக்குவார்கள். அன்றாடம் தீயை உண்டாக்கி அக்கினிஹோத்திரம் கொடுக்கும் அந்தணர்கள் இந்தக் கட்டைகளை எப்போதும் கூடவே வைத்திருப்பார்கள்.

இந்திரன் கர்ணனிடத்தில் அவனுடைய கவச-குண்டலங்களை, தன்னுடைய வாசவி சக்திக்காக மாற்றிக்கொண்ட போது, பாண்டவர்கள் துவைத வனத்தில் இருந்தார்கள். அவர்களுடைய வனவாச காலத்தின் பெரும்பகுதி காம்யக வனத்திலும் துவைத வனத்திலுமாகக் கழிந்தது. வனவாசம் முடிய இன்னும் சில நாட்கள் இருந்த சமயத்தில் ஓர் அந்தணன் பாண்டவர்களிடத்தில் ஓடிவந்தான். 'என்னுடைய அரணிக்கட்டை, ஒரு மானின் கொம்பில் சிக்கிக்கொண்டது. அந்த மான் ஓடிவிட்டது. ஆகவே என்னால், என்னுடைய முக்கியக் கடமையான அக்கினிஹோத்திரத்தைச் செய்யமுடியவில்லை. நீங்கள்தான் அதை மீட்டுத் தரவேண்டும்' என்று வேண்டிக்கொண்டான்.

உடனே யுதிஷ்டிரர் தன் நான்கு தம்பிகளையும் அழைத்து, நிலைமையை விளக்கி, அந்த அந்தணருக்கு அவருடைய அரணிக்கட்டையை மீட்டுத் தரவேண்டியது நம்முடைய கடமை என்றார். யுதிஷ்டிரனுக்கு அஜாதசத்ரு என்றும் பெயர் உண்டு. யுதிஷ்டிரன் என்றால் 'யுத்தத்தில் ஸ்திரமாக இருப்பவன்' என்று பொருள். அ-ஜாத-சத்ரு என்றால், 'இவனுக்குப் பகைவன் இன்னமும் பிறக்கவில்லை' என்று பொருள்.

மானின் கொம்பில் அந்த அரணிக்கட்டை சிக்கிக்கொண்டிருந்தது. ஐந்து சகோதரர்களும் அரணிக்கட்டையோடு ஓடிப்போன மானைத் தேடிக்கொண்டு சென்றனர். உண்மையில் யுதிஷ்டிரனுடைய தந்தையான தர்மராஜன் (யமன்) மான்வடிவில் வந்திருந்தான். தப்பிச்சென்ற அந்த மானைப் பாண்டவர்கள் ஐவரும் சற்றுத் தொலைவில் கண்டனர். அதுவோ ஓடிக்கொண்டே இருக்கிறது. ஐவரும் அதைத் துரத்தினார்கள். மான் பிடிபடவில்லை. அதன் மீது அம்புகளை எய்தார்கள். ஒரு பயனும் இல்லை. ஒன்றுகூட மான்மீது படவில்லை. நாளெல்லாம் மானைத் துரத்தியோடிய ஐவரும் களைப்படைந்தனர். ஐவருக்கும் தாகம் ஏற்பட்டது. தருமபுத்திரன் நகுலனைப் பார்த்து, 'தம்பி, பக்கத்தில் உள்ள மரத்தின்மேல் ஏறி, அருகில் எங்காவது தண்ணீர்த்தடம் ஏதாவது இருக்கிறதா என்று பார்' என்றான். மரத்தின்மீது ஏறிப் பார்த்த நகுலன், 'அண்ணா! சற்றுத் தொலைவில் ஒரு குளமும் அதைச் சுற்றிலும் ஏராளமான மரங்களும் நீர்ப்பறவைகளும் தென்படுகின்றன' என்றான். 'நல்லது. நீ போய் அம்பறாத்தூணியில் நீர்முகந்துகொண்டு வா' என்றார் தர்மர். அவருடைய சொற்படி நகுலனும் நீர் முகந்து வருவதற்காகச் சென்றான்.

நகுலன் குளத்தை அடைந்தான். குளத்தில் முழங்காலளவு நீரில் இறங்கி, கைகளால் நீரை முகந்து குடிக்க முயன்றான். அப்போது ஓர் அசரீரி ஒலித்தது. இதைப் பேசியது யக்ஷன் வடிவத்தில் இருந்த யமதர்மராஜன். 'நகுலா! இந்தக் குளம் எனக்குச் சொந்தமானது. எனவே, நான் கேட்கும் கேள்விகளுக்கு முதலில் விடையளித்தால் மட்டுமே நீ நீரைப் பருகலாம்' என்றான் அருகிலிருந்த ஒரு மரத்தில் கொக்கு வடிவில் குந்தியிருந்த யமதர்மன். 'ஒரு கொக்குக்கு இந்தக் குளம் சொந்தமானதா' என்று நினைத்த நகுலன், அந்தக் குரலை அலட்சியம் செய்து குளத்தில் இறங்கி நீரை முகந்து குடித்தான். மறுவினாடியே மூர்ச்சையடைந்து விழுந்தான். சற்றுத் தொலைவில் காத்திருந்த மற்ற நால்வரும், 'சென்ற நகுலன், நெடுநேரமாகியும் திரும்பவில்லையே' என்று யோசித்துக்கொண்டிருந்தார்கள்.

தருமபுத்திரன் அடுத்ததாக சஹதேவனை அனுப்பினான். அவனுக்கும் இதே அனுபவம்தான். அடுத்ததாக அர்ஜுனனை அனுப்பினான். அதே குரல் கேட்டது. 'என் கேள்விக்கு பதில் சொல்லாமல் நீ இந்த நீரைப் பருகமுடியாது' என்றது அந்தக் குரல். தம்பியரைக் காணாமல் கவலையும் துயரும் அடைந்திருந்த அர்ஜுனன் 'உனக்குத் துணிவிருந்தால் என் எதிரில் வா. என்னுடைய பாணங்களால் பிளக்கப்பட்டால் நீ இப்படியெல்லாம் பேசமாட்டாய்' என்று பதில் சொன்ன அர்ஜுனனும் நீரைப் பருகி மயங்கி விழுந்தான். தர்மருக்குக் கவலை மேலிட்டது. நீர் எடுத்துவரச் சென்ற மூன்று தம்பியரும் திரும்பவில்லை. அடுத்ததாக பீமன் சென்றான். அந்தக் குரல் பீமனையும் தடுத்தது. தன் வலிமையில் பெருமைநிறைந்த அவன், அந்தக் குரலை அலட்சியம் செய்தான். நீரைப் பருகி மயங்கி விழுந்தான்.

இப்போது தர்மபுத்திரருக்குக் கவலை மேலிட்டது. தானே சென்று பார்ப்பதற்காக எழுந்தார். கண்ட காட்சி அவரைத் துணுக்குற வைத்தது. வில் வித்தையில் தேர்ந்தவனும், காண்டீவத்தை ஏந்தியவனுமான அர்ஜுனனும், பகன். கிர்மீரன் முதலான பல அரக்கர்களைக் கொன்றவனான பீமனும், அழகே வடிவெடுத்த நகுல-சகதேவர்களும் குளக்கரையில் விழுந்திருந்தனர். அவரால் தான் பார்ப்பதை நம்பமுடியவில்லை. 'தம்பியர் நால்வரும், உடலில் ஒரு காயமும் இல்லாமல் வீழ்ந்து கிடக்கின்றனர். இவர்களை பூதங்கள் கொன்றிருக்குமோ அல்லது துரியோதனன் கொன்றிருப்பானோ என்றெல்லாம் சிந்தித்தபடி சற்று நேரம் குளக் கரையில் நின்றார். பின்னர், தாகம் பொறுக்க முடியாமல் குளத்தில் இறங்கினார். அசரீரி மீண்டும் தடுத்தது. 'என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லாமலும், என் பேச்சை மீறியும் இவர்கள் நீர் பருக முயன்றதால் நான்தான் உன் தம்பியரை யமலோகத்துக்கு அனுப்பி வைத்தேன்' என்றது அருகிலிருந்த கிளையில் குந்தியிருந்த கொக்கு.

'பலத்திலும் ஆயுதப் பயிற்சியிலும் நிகரில்லாத என் தம்பியரை ஒரு கொக்கு கொல்வதா! இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. நீ யார் என்பதை முதலில் சொல்' என்றான் தர்மன். 'நான் இந்த நீர்நிலையில் வாழும் பறவை இல்லை. நான் ஒரு யட்சன்' என்று தருமனுக்கு பதில் கிடைத்தது. அவனெதிரில் பயங்கரமான கண்களையும் நெடியதும் பருத்ததுமான மேனியும் கொண்ட ஒரு யட்சன் நின்றுகொண்டிருந்தான். மலை போன்ற அவனுடைய சரீரமே அச்சத்தை ஏற்படுத்தியது. தர்மபுத்திரனிடத்திலும் தன்னுடைய நிபந்தனைகளை அந்த யட்சன் சொன்னான். தாகமாக இருந்தாலும், அவனுக்குக் கட்டுப்பட்ட தர்மபுத்திரர், 'உன் கேள்விகளைக் கேள். எனக்குத் தெரிந்த வரையில் பதில் சொல்கிறேன்' என்றார். எவன் சூரியனை உதிக்கச் செய்கிறான்? சூரியனின் இரண்டு புறங்களிலும் சஞ்சரிப்பது யார்? எவன் அவனை மறையச் செய்கிறான்?' என்று யட்சன் தன் கேள்விகளைத் தொடங்கினான். 'பிரம்மம் சூரியனை உதிக்கச் செய்கிறது. தேவர்கள் சூரியனின் இரண்டு பக்கங்களிலும் இருக்கின்றனர். சூரியனை தருமம் மறையச் செய்கிறது' என்று தருமபுத்திரன் பதில் சொன்னான். இப்படி மிகவும் கடினமான 126 கேள்விகளை யட்சன் கேட்டான். பாரதத்தில் 'யக்ஷப் பிரசன்னம்' எனப்படும் இந்தப் பகுதி மிகவும் பிரபலமானது.

இந்தக் கேள்விகள் பாரதத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் வெண்பா வடிவத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. "யட்சன் - யுதிட்டிரன் வினா - விடை வெண்பா 70 விளக்கத்துடன்: Yatchan - Yudhisthiran Vina Vidai Venba 70 Vilakathudan (Tamil Edition)" என்று எழுபது வெண்பாக்களாக நதிராசா என்பவரால் செய்யப்பட்டிருக்கும் இந்தக் கேள்வி பதில்கள், அமேசானில் கிடைக்கின்றன.. இந்தியாவில் இதன் விலை ரூ.70.

இந்த 126 கேள்விகளில் 'கண்ணை மூடாமல் உறங்குவது எது?' 'மீன்'. 'புல்லினும் அடர்த்தியானதும் அற்பமானதும் எது?' போன்ற கேள்விகளும் இருக்கின்றன. இந்தக் கேள்விக்கு மட்டும் தர்மபுத்திரனுடைய பதிலை வெண்பா வடிவில் பாருங்கள்:

காற்கும் விரைவெது? காண்புற்கும் மிக்கதெது?
ஆற்றல் அமைந்தமனம் ஆம்விரைகாற்(கு) - ஏற்றமே.
ஏற்றமிலாப் புல்லினும் ஏல்கவலை மிக்கிருக்கும்
போற்றுறக் காணும் புவி.


காற்றுக்கும் விரைவு - மனம் புல்லுக்கும் மிக்கிருப்பது - கவலை. காற்கு = கால் + கு. கால் = காற்று. புற்கு = புல் + கு > புல்லுக்கு. (கால்-காற்று)

(நதிராசா, செம்மை. யட்சன் - யுதிட்டிரன் வினா - விடை வெண்பா 70 விளக்கத்துடன்: Yatchan - Yudhisthiran Vina Vidai Venba 70 Vilakathudan (Tamil Edition) . Kindle Edition.)

தர்மபுத்திரன் நாட்டை இழந்திருக்கிறான்; காட்டில் 12 வருடகாலம் வசித்துவிட்டான்; இப்போது மிகக் கடினமான அக்ஞாத வாசம் தொடங்கப் போகிறது. போதாக்குறைக்கு இப்போது நான்கு தம்பியரையும் இழந்து, தன்னந்தனியனாய் நிற்கிறான். இந்த நிலையிலும் 'புல்லைவிட மிகுதியானதும், அற்பமானதும், கவலைதான்' என்று பதில் சொல்கிறான் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். 'காற்கும் விரைவெது' என்றால், கால் (காற்றைவிட) வேகமானது எது? என்பது ஒரு கேள்வி. இதற்கு விடை, 'மனம்.' 'உலகில் மிக ஆச்சரியமானது எது?' 'பூமியைக் காட்டிலும் கனமானது எது, ஆகாயத்தைக் காட்டிலும் உயர்வானது எது, என்றெல்லாம் கேள்விகள் வருகின்றன. எல்லாவற்றுக்கும் சரியான விடையைத் தருமன் சொன்னதும் அதில் மகிழ்ந்த யட்சன், 'உனக்கு என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டான். அவனிடத்தில் தருமன் கேட்ட முதல் வரம் 'அந்தணனுடைய அரணிக்கட்டை கிடைக்க வேண்டும்' என்பதே. 'இன்று காலையில் நான்தான் அதை மான்வடிவில் வந்த எடுத்துவந்தேன். இந்தா, எடுத்துக்கொள்' என்று யட்சன் அதைக் கொடுத்தான். 'அளவற்ற பலம் பொருந்தியவர்களான என் தம்பியரைக் கொல்ல யாராலும் முடியாது. அப்படி இருக்கும்போது இவர்கள் நால்வரையும் ரத்தக் காயமில்லாமல் வீழ்த்திய நீங்கள் ஒரு யட்சனாக இருக்க முடியாது. அர்ஜுனனையும் பீமனையும் ஒரு யட்சனால் வீழ்த்த முடியாது. நீங்கள் யார்?' என்று கேட்டான் தர்மன். 'நான்தான் உன்னுடைய தந்தையாகிய யமன்' என்று யட்சன் வடிவிலிருந்த யமன் பதில் சொன்னான்.

'தர்மா! வீழ்ந்திருக்கும் உன் தம்பியரில் ஒரே ஒருவரை மட்டும் எழுப்புகிறேன். யாரை எழுப்பட்டும்' என்று யமன் கேட்டான். 'நகுலனை எழுப்புங்கள்' என்று சற்றும் தயக்கமில்லாமல் பதில் சொன்னன் தருமன்.

இதைக் கேட்ட யமனுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. 'யுதிஷ்டிரா! நீயோ யுத்தத்தின் விளிம்பில் இருக்கிறாய். யுத்தத்துக்குப் பெரிதும் தேவையான அர்ஜுனனையோ பீமனையே எழுப்பச் சொல்லாமல், நகுலனை எழுப்பச் சொன்னது ஏன்?' என்று கேட்டான். நான் குந்தியின் மூத்த மகன். மாத்ரி என்னுடைய இன்னொரு தாயாக இருந்தவர். குந்தியின் மூத்த மகனான நான் பிழைத்திருக்கும்போது, எங்களுடைய இன்னொரு தாயான மாத்ரியின் மூத்த மகனைத்தானே எழுப்பவேண்டும்?' என்று தம் தம்பியருக்குள் எள்ளளவும் பேதம் பாராட்டாதவரான தருமபுத்திரருடைய பதிலில் ஆச்சரியப்பட்டுப் போன யமன், வீழ்ந்துகிடந்த நால்வரையுமே எழுப்பினான்.

'உங்களுக்கு வேண்டிய வரங்களைக் கேள்' என்று யமதர்மராஜன் சொன்னான். 'நாங்கள் மறைந்து வாழவேண்டிய அக்ஞாதவாச காலம் இதோ தொடங்கப் போகிறது. ஒருவராலும் கண்டுபிடிக்காதபடி நாங்கள் வாழவேண்டும்' என்று கேட்டுக்கொண்டான் தருமன். 'அப்படியே நடக்கும்' என்று ஆசிர்வதித்தான் யமன். 'இன்னும் எதையேனும் விரும்பினால் அதையும் கேள்' என்றான் யமன். 'பெருமானே! என் மனம் எப்போதும் தானம், தருமம், சத்தியம் இவற்றில் நிலைத்திருக்க வேண்டும்' என்றான் தருமன். 'அப்படியே இருப்பாய்' என்று வரம் தந்தான் யமன்.

பாண்டவர்கள் மீண்டும் துவைத வனத்துக்குத் திரும்பி அங்கே சில நாட்கள் வாழ்ந்தனர். அடுத்ததாக 'யார் கண்ணிலும் படாமல் மறைந்து வாழவேண்டிய' அக்ஞாதவாச காலம் தொடங்குகிறது. ராமர் காடு சென்றதற்கும் இவர்கள் ஐவரும், பாஞ்சாலியோடு காட்டுக்குப் போனததற்கும் உள்ள வேற்றுமைகளை ஏற்கெனவே பார்த்திருக்கறோம். ராமன், லக்ஷ்மணன், சீதை என்று மூன்றே பேர்தான் காட்டுக்கு வந்தார்கள். பாண்டவர்களைச் சுற்றி இங்கே ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது. போதாக்குறைக்கு அவர்கள் மூவரும் நடந்தே நாட்டின் எல்லாக் காட்டுப் பகுதிகளிலும் போனார்கள். இவர்களோ தேர்களோடு வந்திருக்கிறார்கள். இப்போது, கூட வந்திருப்பவர்களை பத்திரமான இடங்களுக்குத் திருப்பியனுப்ப வேண்டும். ஒரு பெருங்கூட்டம் பிரிந்து போகும்போது, 'பாண்டவர்கள் எங்கே' என்ற கேள்வி எழுந்தால் பதில் சொல்லத் தேவையான விவரங்கள் அவர்களிடத்தில் இருக்கக்கூடாது. ஓட்டுவதற்கு வசதியாக இருந்தாலும், வாகனம் 'நிறுத்துவதற்கு' சிரமமானது. தேர்களை யாரிடமாவது அனுப்பி வைக்க வேண்டும். இன்னும் ஒரு வருடகாலத்துக்கு இவர்கள் நடந்துதான் எங்கேயும் போகமுடியும். இந்த logistics எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும். கையிலுள்ள ஆயுதங்களோடு எந்த நகரத்துக்குப் போனாலும், பனைமரம் அளவுக்குப் பெரிய காண்டீவத்தையும் பீமனுடைய மஹாபெரிய கதாயுதத்தையும் பார்த்தாலே இது அர்ஜுனன், இது பீமன் என்று யாரும் அடையாளம் தெரிந்துகொள்வார்கள். கையிலே வேலைப் பிடித்திருப்பவன்தான் தருமன் என்பதைச் சொல்லவே வேண்டாம். ஆயுதங்களை மறைத்துவைக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் எப்படிச் சமாளித்தார்கள்? அடுத்துப் பார்ப்போம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com