யார் பிள்ளை?
அன்புள்ள சிநேகிதியே
நான் இக்கட்டான நிலையில் இருக்கிறேன். போன வருடம் இங்கே வந்தேன். இன்னும் இந்தியா திரும்ப முடியவில்லை. நான் ஒரு சீனியர் சிட்டிசன் இல்லத்தில் தங்கியிருந்தேன். எனக்கு ஒரு அருமைத் தோழி. எங்கள் சுபாவம் வேறு. நான் வெளிப்படையாகப் பேசுவேன். மனிதர்களை நிறையப் பிடிக்கும். என்னுடைய தோழி அதிகம் பேசமாட்டாள். மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாது. என் கணவரும் அவள் கணவரும் ஒன்றாக ரயில்வேயில் வேலை பார்த்து ஒரே சமயம் ஓய்வு பெற்றார்கள். ஒரே வித்தியாசம், எங்களுக்கு உடனே பையன் பிறந்துவிட்டான். அவளுக்குப் பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் மகன் பிறந்தான். முதல் தடவையாக வெளிப்படையாகப் பாசத்தைக் காண்பித்துப் பெருமைப்பட்ட போதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உணர்ச்சிகளை வெளியே காட்டிக்கொள்ள மாட்டாள். யோகம், தியானம், பொதுநல சேவை எல்லாம் பிடிக்கும். We got along very well.

துரதிருஷ்டவசமாக, அவளது கணவர் பணி ஓய்வு ஆனவுடன் இறந்துவிட்டார். பையன் இங்கே படித்து முடித்து வேலையில் இருந்தான். அவனுக்கு ஒரு அபார்ட்மெண்ட் இருந்தது. அதில் தங்கிக்கொண்டு இருந்தாள். வட இந்தியாவில் அவளுக்கு ஒரு குரு இருந்தார். ஆகவே அடிக்கடி அந்த ஆசிரமத்துக்குப் போய் மாதக்கணக்கில் தங்கிவிடுவாள். அங்கே ஓர் ஏழைப் பையனைச் சந்தித்தாள். அவன் ஒரு நேபாளி என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை. கணவர், மகன் என்று இரண்டு பேரையும் மிகவும் miss செய்திருக்கிறாள் என்று நினைக்கிறேன். ஆனால், அதிகம் எதையும் வெளியே சொல்லிக்கொள்ள மாட்டாளே! இதற்கிடையில் அவள் மகன் தனக்கு விருப்பப்பட்ட பெண்ணை (இந்தியாவைச் சேர்ந்தவளல்ல) தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்துகொண்டான். அந்தப் பெண் இந்தியத் திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஏதோ 'விசா' பிரச்சனையால் அவளால் இந்தியாவுக்கு வரமுடியவில்லை. இது ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால்.

இதற்கிடையில் நானும் என் கணவரை இழந்தேன். தனியாக இருக்கப் பிடிக்காமல் சீனியர் சிட்டிசன் இல்லத்தில் சேர்ந்தேன். நான் நன்றாகத்தான் இருந்தேன். அவளுடன் கூட இருந்த நேபாளிப் பையன் கல்லூரி மேல்படிப்புக்குப் போய், அப்புறம் நல்ல வேலையில் சேர்ந்து, இவள் பார்த்து வைத்த தமிழ்ப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். அவன் வேலை வேறு இடத்தில் இருந்ததால் இவள் தனியாக இருந்தாள். நான் அவளை மிகவும் வற்புறுத்தி நான் இருக்கும் ஹோமில் சேர வைத்தேன். இன்னும் அதிக ஆன்மீகம் ஆகிவிட்டாள். தன் பையனைப்பற்றி அவ்வளவாகப் பேசுவதில்லை.

நான் நான்கு வருடம் முன்பு இங்கே வந்தபோது, என்னுடன் வருமாறு கூப்பிட்டேன். ஏதோ காரணம் சொல்லிவிட்டாள். பையனைப்பற்றி வருத்தமாகவும் பேசவில்லை. நான் அந்தச் சமயம் இங்கு வந்தபோது அவனைச் சந்தித்தேன். இரண்டு குழந்தைகள். ரொம்ப பிஸியாக இருந்தான். அம்மாவிற்கு ஏதேனும் பணம் அனுப்புகிறானா என்று சூசகமாகக் கேட்டுப் பார்த்தேன். "அம்மாவைக் கேட்டேன். வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்" என்று பதில் சொன்னான். இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்துப் பிறந்ததால் இந்தியாவுக்குப் போக முடியவில்லை என்று தன் கஷ்டங்களைப் பகிர்ந்துகொண்டான். அம்மா தன் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வரமாட்டேன் என்று சொன்னதையும் சொன்னான். அவன் மனைவியைப் பார்க்க முடியவில்லை. வெளியே எங்கோ போயிருந்தாள். எங்களுக்கு நேரம் ஆகிவிட்டதால் கிளம்பி விட்டோம்.

என் பேத்தி டான்ஸ் நிகழ்ச்சிக்காக நான் 2019 அக்டோபரில் இங்கே வந்தவள், இங்கேயே தங்கிவிட்டேன். வந்த புதிதில் அவனைக் கூப்பிட்டேன். 2020 கோடையில் இந்தியா போகப் போவதாகச் சொன்னான். அதற்கப்புறம்தான் எல்லாருக்கும் தெரியுமே! இதற்கு நடுவில், போன அக்டோபரில், என் தோழி தூக்கத்திலேயே போய்விட்டாள். இவனால் போக முடியவில்லை. அவள் வளர்த்த பையன் இறுதி மரியாதை செய்தான் என்று கேள்விப்பட்டேன். அவனுடனும் பேசினேன். அவன் அழுது கதறினான். ஒரு அனாதையான தன்னை எப்படி ஆசையாக வளர்த்தாள் என்று விவரித்தான். எனக்கே குழப்பம் பிள்ளை யார் என்று!

இரண்டு மாதத்திற்கு முன்பு இங்கே இருக்கும் பையன் போன் செய்தான். மிகவும் கோபமாகப் பேசினான். என்னுடைய தம்பி பெரிய அட்வகேட். அவருடைய அட்ரஸ் கேட்டான். அவருடன் பேச உதவி செய்யுமாறு கேட்டான். அவனுடைய அம்மா தன்னுடைய அபார்ட்மென்ட்டை அந்த ஏழைப் பையனுக்கு எழுதி வைத்துவிட்டாள் என்று கேள்விப்பட்டிருக்கிறான். அந்தப் பையனைக் கூப்பிட்டு குதறி எடுத்திருக்கிறான். முதலில் அந்த அப்பார்ட்மென்ட் நல்ல விலைக்குப் போகும் என்று இவன் எதிர்பார்க்கவில்லை. பிறகு அந்த ஏரியாவில் விலை மிகவும் கூடியிருக்கிறது என்று தெரிந்ததும், அந்தப் பத்திரம் யாரிடம் இருக்கிறது என்று விசாரித்திருக்கிறான். அவனுக்கு அதிர்ச்சியாகி விட்டது. இப்போது உடனே கிளம்பிப் போகவும் வழியில்லை. என்னைக் கூப்பிட்டு அந்தப் பையனை மிகவும் திட்டினான். தன் அம்மாவின் சொத்துக்கு ஆசைப்பட்டு எழுதி வாங்கிக்கொண்டான் என்றெல்லாம் கத்தினான். என் தோழி அப்படியெல்லாம் ஏமாறுபவள் அல்ல. எல்லாவற்றையும் யோசித்து முடிவெடுப்பவள். அவளது கடைசிக் காலத்தில் நான் பக்கத்தில் இல்லையே என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது.

இங்கே இருக்கும் அந்த மகன், பல வருடங்களாகத் தன் அம்மாவை நடத்திய விதம் எனக்குப் புரிபடவில்லை. பிடிக்கவும் இல்லை. நானும் பையனைப் பெற்றிருக்கிறேன். அவனுடையதும் கலப்புத் திருமணம்தான். ஆனால் நல்லபடியாகத்தான் என்னை அவர்கள் இருவரும் நடத்துகிறார்கள். நான் என் தம்பி நம்பரைக் கொடுக்காமல் இருந்தேன். ஒன்று, இந்தப் பையன், தெரிந்தவர்கள் என்று Lawyer Fee கொடுக்காமல் இருப்பானோ என்ற சந்தேகம். இரண்டாவது, என் தம்பி வாதத்தில் மிகவும் திறமைசாலி. ஒருவேளை அந்த ஏழைப் பையனுக்கு எதுவும் கிடைக்காமல் போனால், என் தோழியின் ஆத்மா சமாதானமாகுமா? எனக்கு அந்த உயிலில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. என்னையும் அறியாமலே என் மனது அந்த ஏழைப்பையனை ஆதரிக்கிறது. சொந்த, பெற்ற பிள்ளைக்குத்தானே சொத்து போகவேண்டும்! இந்தப் பையன் இதற்குள் இரண்டு, மூன்று தடவை கூப்பிட்டு வற்புறுத்தி டெலிபோன் நம்பரை வாங்கிக்கொண்டு விட்டான். இதுதான் நிலைமை. உங்கள் கருத்து?

இப்படிக்கு,
.................


அன்புள்ள சிநேகிதியே
உங்களால் முடிந்தவரை எல்லா விபரத்தையும் சொல்லி இருக்கிறீர்கள். ஆனாலும் நிறையப் புலப்படாத, ஆய்வு செய்ய வேண்டியவை இருக்கின்றன. அதனால் எனக்குத் தெளிவாகக் கருத்துச் சொல்ல இயலாது. இதில் நீங்கள் செய்ய வேண்டியதும் ஒன்றும் இல்லை.

நீங்கள் எழுதியதில் மிகவும் தெளிவாக ஒன்று தெரிகிறது. ஒரு தாய். பாசத்தை ஒரே பையனிடம் கொட்டி இருக்கிறாள். ஆனால், எப்படி வெளியில் தெரிவித்தார் என்பது தெரியாது. உணர்ச்சிகளை உள்ளேயே அடக்கி வைத்திருக்கிறார். அங்கே, எரிமலை வெடித்ததா.. கடலலை பொங்கியதா என்று யாருக்கும் தெரியாது. மனம் சன்மார்க்கப் பாதையில் சென்றிருக்கும். கடைசிக் காலத்தில் தன்னைப் பார்த்துக்கொண்ட, தன் எதிர்பார்ப்புகளுக்கு இதமாக இருந்த அந்தப் பையனுக்கும், தான் பெற்ற பையனுக்கும் வித்தியாசம் மழுங்கிப் போயிருக்கலாம். 'Out of sight - out of mind' என்பதுபோல. அந்தத் தொப்புள் கொடி உறவும் அறுந்து போயிருக்கலாம். அவர் எழுதிவைத்த அந்த உயிலின் 'லீகல் இம்ப்ளிகேஷன்ஸ்' எனக்குத் தெரியாது.

உங்கள் சிநேகிதியின் சொந்த மகனுக்கு வக்காலத்து வாங்காமல், அந்த ஏழைப்பையனை நீங்கள் சப்போர்ட் செய்வது உங்களது அருமையான விசாலப் பண்பைக் காட்டுகிறது. இதில் இக்கட்டான நிலைமை என்று எதுவும் எனக்கு தெரியவில்லை. இங்கே இருக்கும் பையனுக்கும், உங்கள் தம்பிக்கும் ஒரு வியாபார உறவுதான். என்ன நடக்குமோ, அது நடக்கும்.

வாழ்த்துக்கள்
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்
Personal Queries: drcv.listens2u@gmail.com

© TamilOnline.com