த.நா.சேனாபதி
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பல திறக்குகளிலும் வெற்றிமுத்திரை பதித்தவர் தண்டலம் நாராயண சாஸ்திரி சேனாபதி என்னும். த.நா. சேனாபதி இவர், பிப்ரவரி 02, 1914 அன்று சென்னையில், நாராயண சாஸ்திரி - ராஜம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருத மொழிகளில் வல்லுநர். 'போஜ சரித்திரம்' என்ற நாடகத்தை எழுதி மேடையேற்றிப் பாராட்டுதல்களைப் பெற்றவர். சிறந்த தேசபக்தர். 'மகத மன்னர்கள்', 'ஆதிசங்கரரின் காலம்' போன்ற நூல்களைத் தந்தவர். பரிதிமாற் கலைஞரும், பம்மல் சம்பந்த முதலியாரும் தண்டலம் நாராயண சாஸ்திரியின் நெருங்கிய நண்பர்கள். இலக்கியப் பரம்பரையில் தோன்றியதால் சேனாபதிக்கும் இளவயதிலேயே இலக்கிய ஆர்வம் சுடர் விட்டது. தமிழ், ஆங்கிலம் பயின்றிருந்த சேனாபதி ஹிந்தி, சம்ஸ்கிருத மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். ஏழு வயது மூத்தவரான சகோதரர் குமாரசாமி, சேனாபதிக்கு துணையிருந்தார். வங்கமொழி கற்றுக்கொண்ட குமாரசாமி, அதனைத் தன் தம்பிக்கும் போதித்தார். இந்நிலையில் திடீரெனத் தந்தை மறைந்தார். குடும்பத்தை வறுமை சூழ்ந்தது. குமாரசாமியின் முயற்சிகளால் மெல்ல மெல்ல மீண்டது.

சென்னை முத்தியாலுபேட்டை உயர்நிலைப் பள்ளியில் பயின்ற சேனாபதிக்கு பள்ளி ஆசிரியர்கள் மூலம் நூல்கள் பல அறிமுகமாகின. வாசிப்பார்வம் தளிர்த்தது. வாசிக்க வாசிக்க எழுத்தின் சூட்சுமம் கைவந்தது. எதை, எப்படி எழுத வேண்டும் என்ற நுணுக்கங்கள் புரிந்தன. சென்னைப் பல்கலையில் சேர்ந்து இளங்கலை பயின்றார். பல்கலைக்கழகம் புதிய வாசல்களைத் திறந்துவிட்டது. எழுத்தார்வம் உந்த ஆனந்த விகடனுக்குச் சிறுகதை ஒன்றை எழுதி அனுப்பினார். 'அகஸ்தியர் வந்தால்' என்ற அந்தச் சிறுகதை 1933ல், சேனாபதியின் 19ம் வயதில் வெளியானது. சகோதர் குமாரசாமியும் உற்சாகப்படுத்தவே தொடர்ந்து சிறுகதைகளை எழுதினார். விகடனும் 'குழந்தை மனம், 'சத்யவாதி' போன்ற இவரது சிறுகதைகளை வெளியிட்டது. கலைமகளிலும் இவரது சிறுகதைகள் தொடர்ந்து வெளியாகின. தொடர்ந்து கல்வி பயின்று B.O.L., M.A. பட்டங்களைப் பெற்றார் சேனாபதி. தமிழ் இலக்கியம் பயின்று 'வித்துவான்' பட்டம் பெற்றார். ஒரிய மொழியும் கற்றுக்கொண்டார்.



தமிழில் நிறைய மொழிபெயர்ப்பு நாவல்கள் வர ஆரம்பித்த காலகட்டம் அது. கா.ஸ்ரீ.ஸ்ரீ., கு.ப. ராஜகோபாலன், த.நா. குமாரசாமி போன்றோர் பங்கிம் சந்திரர், சரத்சந்திரர், ரவீந்திரநாத் தாகூர், வி.எஸ். காண்டேகர், பிரேம்சந்த் போன்றோரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டனர். கலைமகள், ஆனந்தவிகடன் போன்ற இதழ்கள் இந்தப் படைப்புகளுக்கு ஆதரவளித்தன. சேனாபதிக்கும் மொழிபெயர்ப்பில் ஆர்வம் வந்தது. வங்கமொழியை நன்கு அறிந்திருந்ததால் தாகூரின் படைப்புகளை மொழிபெயர்க்க ஆரம்பித்தார். கலமைகள் ஆசிரியராக இருந்த கி.வா.ஜ., சேனாபதியின் திறமை அறிந்து ஊக்குவித்தார். சேனாபதியின் சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு எனப் பல படைப்புகள் தொடர்ந்து அதில் வெளியாகின. 'மாயை', 'பாதகாஹரணம்', 'குற்றமுள்ள நெஞ்சு', 'அண்ணாமலைக் கோபுரம்', 'செவிலித்தாய்', 'பிரேமதூதன்', 'சிசுலோகம்', 'பழிக்குப் பழி', 'யார் திருடன்', 'ஏமாந்தவர் யார்?', 'மாயை', 'பஸ் சொன்ன கதை' போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த சிறுகதைகளாகும். ஆன்மீகப் பிரயாணக் கட்டுரைகள் சிலவற்றையும் கலைமகள் இதழில் எழுதியுள்ளார்.

தாகூரின் படைப்புகள் பலவற்றை ஏற்கனவே குமாரசாமி மொழிபெயர்த்திருந்தார். தாகூரைத் தமிழில் வழங்கும் முயற்சியில் த.நா. குமாரசுவாமிக்கு அடுத்தபடியாகக் குறிப்பிடத்தக்கவரானார் சேனாபதி. இருவரும் இணைந்தும் தனித்தனியாகவும் தாகூரின் படைப்புகளைத் தமிழுக்குத் தந்தனர். தாகூர் மட்டுமல்லாமல் சரத்சந்திரர், விபூதி பூஷண் பந்த்யோபாத்யாய, தாராசங்கர் பானர்ஜி, ஸௌரீந்திர மோஹன் முகோபாத்யாய, ஏ.எஸ். பஞ்சாபகேச ஐயர் எனப் பலரது நூல்களையும் தமிழுக்குக் கொணர்ந்தார் சேனாபதி. இந்நிலையில் அன்னி பெசன்ட்டின் தியாசஃபிகல் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு இவரைத் தேடிவந்தது. பிற்காலத்தில் 'வானொலி அண்ணா' எனப் புகழ்பெற்ற 'கூத்தபிரான்' உள்ளிட்ட பலர் அங்கே இவரிடம் பயின்றனர்.

த.நா.சேனாபதியின் படைப்புகள்
சிறுகதைத் தொகுப்பு: குழந்தை மனம், சுரங்க வழி
நாவல்கள்: சகோதர பாசம்
குழந்தை இலக்கியப் படைப்புகள்: சிறுத்தை வேட்டை, ராஜா விக்கிரமாதித்தன், மந்திரவாதி, குரங்கு சொன்ன யுக்தி
நாடகங்கள்: கர்ம பலன், மாலினி
கட்டுரைத் தொகுப்புகள்: குரு கோவிந்தர், ஏசுநாதர், ரவீந்திரர், ஞானதேவர், கவியும் மொழியும் எனப் பல.
மொழிபெயர்ப்புகள்: தாகூர் படைப்புகள்: நாலு அத்தியாயம், மகாமாயா, போஸ்ட் மாஸ்டர், காரும் கதிரும், மானபங்கம், மூவர், மனிதனின் சமயம், ரவீந்திரர் குழந்தை இலக்கியம், ரவீந்திரரின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள், தாகூர் கடிதங்கள், ரவீந்திரர் வாழ்வும் வாக்கும், ரவீந்திரர் கட்டுரைத் திரட்டு, கல்லின் வேட்கை, (த.நா. குமாரசாமியுடன் இணைந்து மொழிபெயர்த்தது), தாகூரின் கட்டுரைகள்: முதல் தொகுதி மற்றும் பல
பிற படைப்புகள்: இலட்சிய இந்து ஓட்டல் (மூலம்: விபூதி பூஷண் பந்த்யோபாத்யாய), கமலா (மூலம்: சரத்சந்திரர்), வனவாசி (மூலம்: விபூதி பூஷண் பந்த்யோபாத்யாய) வேலை கிடைத்து (மூலம்: எல். பஸ்லுல் ஹக்), கோகுலச் செல்வன் (மூலம்: ஏ.எஸ். பஞ்சாபகேச ஐயர்) கட்டை பிரம்மச்சாரி (மூலம்: சுபோத்வசு), லட்சியப்பெண் மாலினி (மூலம்: ஸௌரீந்திர மோஹன் முகோபாத்யாய), வங்க இலக்கியம் ஒரு கண்ணோட்டம் (மூலம்: சரோஜ் பந்த்யோபாத்யாயா), மறைந்த மோதிரம் (மூலம்: ஏ.எஸ். பஞ்சாபகேச ஐயர்), தற்கொலைக் கழகம் (ஆங்கில மூலம்: ஸ்டீவன்சன்), மனிதப்பறவை (கிரேக்க புராணக் கதைகளின் தொகுப்பு), யுத்த கீதம், வன தேவதை, மகாவீரர், தற்கால வங்கக்கதைகள் மற்றும் பல.


இந்நிலையில், 1947 நவம்பரில், கலைமகளின் சார்பாகத் தொடங்கப்பட்ட 'மஞ்சரி' இதழில் துணையாசிரியராகச் சேர்ந்து பணியாற்றச் சேனாபதிக்குக் கி.வா.ஜ. அழைப்பு விடுத்தார். சேனாபதி, 1948ல் அதன் துணை ஆசிரியரானார். தி.ஜ. ரங்கநாதன் அப்போது மஞ்சரியின் ஆசிரியர். இருவரும் இணைந்து தமிழ் இலக்கியத்திற்கு மொழிபெயர்ப்பு அணிகலன் பலவற்றைப் பூட்டினர். சேனாபதி, 'அநாமதேயம்', 'ஸேனா' போன்ற புனைபெயர்களிலும், பெயரே இல்லாமலும் பல படைப்புகளை மஞ்சரி இதழில் எழுதினார். சுமார் 30க்கும் மேற்பட்ட நாவல்கள், 200க்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு நூல்களைத் தந்துள்ளார் சேனாபதி.*

வங்கமொழி இலக்கியத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் மிகச்சிறந்த இணைப்புப் பாலமாக இருந்தார் சேனாபதி. வங்க இலக்கியப் படைப்பாளிகள், காலந்தோறும் அங்கு ஏற்பட்ட மாற்றங்கள், சிறந்த வங்கமொழிப் படைப்புகள் பற்றிய சரோஜ் பந்த்யோபாத்யாயாவின் 'வங்க இலக்கியம் ஒரு கண்ணோட்டம்' என்ற கட்டுரையை மிகச் சிறப்பாகத் தமிழ்ப்படுத்தி பாராட்டுகளைப் பெற்றார். சாகித்ய அகாதமியும், நேஷனல் புக் டிரஸ்டும் இவரது பன்மொழித் திறமையை நன்கு பயன்படுத்திக்கொண்டன. சாகித்ய அகாதமிக்காகத் தாகூரின் நூல்களைத் தமிழில் தரும் பொறுப்பை சேனாபதி ஏற்றிருந்தார்.



சேனாபதியின் மொழிபெயர்ப்பு மிக எளிமையானது. "மொழிபெயர்ப்பாளர் மூல ஆசிரியரின் படைப்பை உள்வாங்கி வெளிப்படுத்த வேண்டும். அதே சமயம் அதை வாசிக்கும் வாசகர்களின் மனதில் பதியும் வண்ணம் எளிமையான சித்திரிப்பில் இருக்க வேண்டும்" என்பதே சேனாபதியின் கொள்கை. சேனாபதி பற்றி, "த.நா. குமாரசுவாமியின் மொழிநடை வடமொழியும், சங்க இலக்கிய நடையும் கலந்ததாக இருக்கும். சேனாபதியின் மொழி நடை எளிமையாகச் சரளமாக இருக்கும். இவருடைய மொழிபெயர்ப்புகளில் மூலத்தைப் பற்றியோ மூலத்தின் தாக்கமோ ஒன்றும் தெரிந்துகொள்ள முடியாது. தாகூரைப் போலத் தோற்றமுடையவர். எவ்வளவு எளிய மனிதரோ அவ்வளவு எளிய மொழிநடை, பணிவு, அடக்கம். கட்டுப்பாடுடன் வாழ்ந்தவர். ஒழுக்கத்தை உயர்வாகப் போற்றியவர். மனைவி உடல்நிலை சரியில்லாத நிலையில் அவருக்காகவே வாழ்ந்தவர்" என்று புகழ்ந்துரைக்கிறார் அக்காலத்தின் பிரபல எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான கா.ஸ்ரீ.ஸ்ரீ.

தமிழிலிருந்தும் பிற மொழிகளுக்குச் சில படைப்புகளைக் கொண்டு சேர்த்துள்ளார் சேனாபதி. குறிப்பாக, திருக்குறள், சிலப்பதிகாரப் பகுதிகளை வங்கமொழியில் பெயர்த்துள்ளதையும், கண்ணப்ப நாயனார் வரலாற்றை வங்கமொழியில் தந்துள்ளதையும் சொல்லலாம். 1973ல் மஞ்சரி இதழின் முதன்மை ஆசிரியரானார் சேனாபதி. அவ்விதழை மேலும் சிறப்பாக வளர்த்தெடுத்தார். பிறமொழிப் பத்திரிகைகளிலிருந்து சிறந்த இலக்கியப் படைப்புகளை, சிந்தனைகளைத் தேர்ந்தெடுத்து, மிகச்சிறப்பாக மொழிபெயர்த்து வெளியிட்டார். 'மாயாவிநோதினி', 'ஊர்வசி', 'மதுமஞ்சரி' 'விடுதலை', 'கண்கொடு' போன்ற தாகூரின் சிறுகதைகள் சேனாபதியின் மொழிபெயர்ப்பில் மஞ்சரியில் வெளியானவையே. 'சந்திரகுப்தன்', 'வீரசிவாஜி', 'அஞ்சனக்கோட்டை' போன்ற வரலாற்றுக் கதைகளையும், சரத்சந்திரரின் 'பச்சாதாபம்', 'யார் தவறு' எனும் தாராசங்கர் பானர்ஜியின் வங்க நாவலின் சுருக்கத்தையும் மஞ்சரியில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

வாழ்வாங்கு வாழ்ந்து இலக்கியச் சேவை புரிந்த சேனாபதி முதுமையால் காலமானார். தமிழ் இலக்கியத்திற்கும் மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்கும் த.நா. சேனாபதி ஆற்றியுள்ள பணி என்றும் நினைந்து போற்றத்தக்கது.

அரவிந்த்

© TamilOnline.com