ஜூன் 2021: வாசகர்கடிதம்
மே மாதத் தென்றல் இதழில் முடிவைத்தானேந்தல் கிராமத்தில் பிறந்த முனைவர் அ.போ. இருங்கோவேள் அவர்களின் நேர்காணல் படித்தேன். நகரசபை பள்ளியில் படித்ததும் அன்னபூரணி பாட்டி, சொக்கலிங்க தாத்தா வழியே கற்ற தேவாரம், திருவாசகத்துடன் எப்போதும் திருநீற்றுடன் இருக்கவேண்டும் என்ற அறிவுரையை ஏற்று இன்றளவும் பின்பற்றிவருவதும் நெஞ்சைத் தொட்டன. நேர்காணல் மிகவும் சிறப்பாக இருந்தது. உம்மாச்சி தாத்தா தந்த தங்கக்காசும் மிகுந்த மகிழ்ச்சியான விஷயம்.

சுதந்திரம் கிடைக்கப் போராடியவர்கள் அத்தனை பேரையும் நாம் அறியவில்லை. வாஞ்சி போன்றவர்களைப் பற்றி மட்டும் கொஞ்சம் தெரியும். தேசப்பற்று மிக்க பன்முகக் கலைஞர், தேசியத்தையும் தமிழையும் இணைத்துச் செயல்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் டி.எஸ். சொக்கலிங்கம் பற்றிய விவரங்கள் அற்புதம். இது எத்தனை பேர் எத்தனை விதத்தில், எவ்வளவு இன்னல்களை அடைந்து நமக்குச் சுதந்திரம் வாங்கித் தந்துள்ளார்கள் என்பதை நினைவூட்டுகின்றது. அவருடைய 'பலே பாண்டியன்' சிறுகதையும் நன்றாக இருந்தது.

'இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்' என்ற மருங்கர் எழுதிய சிறுகதையும், 'அரை விலைக்கு ஓர் அறை' எனச் சிரிக்கச் சிரிக்க எழுத்தில் வடித்த சுரேஷ் கிருஷ்ணமூர்த்தியின் கதையும் மிகவும் நன்றாக இருந்தன. 'அன்புள்ள சிநேகிதியே' தரும் அறிவுரைகள் பொதுநலமாக, சிறப்பாக உள்ளன. தென்றலுக்கு எங்கள் நன்றி.

சசிரேகா சம்பத்குமார்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

© TamilOnline.com