மழைநீரில் சில பவளமல்லிகைகள்
1.
நேற்றுப் பெய்த
மழையின் அடையாளமாய்
தெருவானது
நீர் நிறைந்து கிடக்கின்றது.
யார் வீட்டுத் தோட்டத்தில்
மலர்ந்த பவளமல்லிகையோ
நீரில் ஆங்காங்கே...

நூலறுந்த
பட்டம் ஒன்றும்
நீரில் கிடக்கிறது.

நடக்க முடியாவிட்டால் என்ன
அனைத்துக் காட்சிகளையும்
சாளரம் வழியே
கண்டு கொண்டிருக்கிறான்.

2.
கண்களுக்கெட்டிய
கருமேகங்களைக்
கண்கொட்டாமல்
பார்த்துக் கொண்டிருக்கிறான்.
கலைந்து செல்லும் மேகங்கள்
குறித்தெல்லாம்
கவலைப்படத் தெரியாதவனாக...

3.
தூரதேசப் பறவைகளிடம்
கேட்பதற்கு ஒன்றுமில்லை.
கற்றுக்கொள்வதற்கு
அதிகம்
இருப்பதாகவே தோன்றுகிறது.

4.
பொங்கி ஓடுகின்ற
புதுப்புனல் போல
எறும்புகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

5.
ரயில்களின் இயக்கம்
உங்களுக்கு இரைச்சலாக...
அவனுக்கு இசையாக...
விருப்பு வெறுப்புகளை
வரையறை செய்யமுடியவில்லை.

6.
எல்லா
நீச்சல் வித்தைகளையும்
கற்றவன்
ஆறில்லாத ஊரில்
என்ன செய்துவிடமுடியும்.

7.
தோட்டக்காரனுக்குப்
பழங்கள் மீது கண்
திருடனுக்குத்
தோட்டக்காரன் மீது.

8.
நீண்ட
சர்ப்பமொன்று
பயணத்தின் போது
குறுக்கிடுவதாகக்
கனாக் காண்கிறேன்.
தூக்கம் தொலைத்த
இரவுகளின் பட்டியலில்
இன்றைய இரவும்
சேர்ந்து கொள்கிறது.

9.
மாற்றம் ஒன்றே
மாறாதது.
எல்லாம்
மாறிவிட்டது என்கிறான்.
இக்கரைக்கு
அக்கரை பச்சையென்று
கூறிவிட்டு நகர்ந்து விடுகிறேன்.

10.
அருவியை
அருவியாகப்
பார்த்துச் செல்கிறேன்.
நீங்கள்
நீர்வீழ்ச்சியாகப்
பார்த்துச் செல்கிறீர்கள்.

ப. சுடலைமணி,
கோவை, தமிழ் நாடு

© TamilOnline.com