ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-18b)
முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து இதை வடிவமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்ட உத்தேசம்.

★★★★★


கேள்வி: நான் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க உள்ளேன். ஆரம்பிக்கும் முன்னமே என் யோசனையைப் பற்றி பொது ஆரம்பநிலை அனுபவமும் நிபுணத்துவமும் உடையவர்களிடமும், வருங்கால வாடிக்கையாளர்களிடமும் கலந்தாலோசிப்பது அத்தியாவசியம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் அப்படிச் செய்தால் யாராவது என் யோசனையைத் திருடி என்னுடனேயே போட்டிக்கு வந்து விடுவார்கள் என்று நான் தயங்குகிறேன். என் தயக்கம் சரியானதா? அல்லது, அதைத் தள்ளி வைத்துவிட்டுக் கலந்தாலோசிப்பதே நல்லதா? விளக்குங்களேன். (தொடர்கிறது...)

கதிரவனின் பதில்: கலந்தாலோசித்தே தீர வேண்டும் என்று சென்ற பகுதியில் ஆணித்தரமாகக் பதிலளித்து விளக்க ஆரம்பித்தேன். முதலில், ஏன் அப்படி அடித்துச் சொல்கிறேன் என்பதற்கான காரணங்களை மேலோட்டமாகப் பட்டியலிட்டோம்:

1. ஒரு டாலருக்குப் பத்து யோசனைகள்: முக்கியத்துவம் மிகக் குறைவு)
2. வளர்ச்சியில் (அல்லது தோல்வியில்) நேரும் யோசனை மாற்றங்கள்
3. கரப்பான் பூச்சிகள் (என்னடா இது என்கிறீர்களா, பொறுமை! பின்பு விளக்குகிறேன்!)
4. இறகுபோல் மெல்லிய யோசனை: ஊதினால் பறந்து விடுமோ?

இப்போது மேற்கண்ட காரணங்களை ஒவ்வொன்றாக விவரித்து வருகிறோம். முதலாவதாக,

யோசனைகளின் மதிப்பு மலிவு, குழுவின் திறனுக்கும் வலிமைக்குமே மதிப்பு அதிகம் என்பதை விளக்கி வருகிறோம். அந்த ரீதியில் முதலாவதாக என் அனுபவத்திலிருந்து எக்ஸோடஸ் குழுவைப் பற்றிக் கண்டோம்.

அடுத்தபடி என் அனுபவத்திலிருந்தே இன்னோர் உதாரணத்தையும் காண்போம்! நான் நெட்ஸ்கேலர்/ஸிட்ரிக்ஸ் நிறுவனத்தை விட்டு விலகியபோது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், யுட்யூப் போன்ற கானொளி இணைய தளங்களும் மின்வலை மூலமாக காணொளி ஓடைகளாகவும் (streaming video), கேட்டால் கொடுக்கும் காணொளிகளாகவும் (on-demand video) நுகர்வோருக்கு புது ஊடகமாக (consumers' new media) அளித்து வந்தனர். அத்தகைய புது ஊடகம் வெகு வேகமாக வளர்ந்து வந்தது.

அதைப்பற்றிச் சிலருடன் கலந்தாலோசித்த போது அந்தப் போக்கு ஒரு புது நிறுவனத்துக்கு வாய்ப்பளிக்கக் கூடும் என்ற கருத்து பலமாக எழுந்தது. அதைப்பற்றி அப்போது ஒரு நிறுவனம் ஆரம்பிக்கும் ஆர்வமிருந்த சிலருடன் சேர்ந்து, அந்தத் துறையின் நிபுணர்களைக் கலந்தாலோசித்த போது பொதுவாக அத்தகைய மின்வலைக் காணொளியை வேண்டிய அளவில் ஒரு கணினியிலிருந்து அளிக்க முடியவில்லை என்பது தெரியவந்தது. அந்த நிறுவனர் குழு, ஒரு சேவைக் கணினியிலிருந்து பத்து மடங்கு அதிக அளவு மின்வலைக் காணொளி அனுப்ப முடியக்கூடிய மென்பொருளை உருவாக்க முடியும் என்று கணித்து நிறுவனத்தை ஆரம்பித்தோம்.

நாங்கள் முதலில் நினைத்த யோசனை வேறு; கலந்தாலோசனையின் பிறகு வடிவமைத்த யோசனை வேறு. முதல் யோசனை சரியாக வெற்றி கண்டிராது என்பதைக் கலந்தாலோசனக்குப் பிற்பாடுதான் உணர்ந்தோம். அத்தகைய உரையாடல்களில்தான் மின்வலைக் காணொளிக்கு அது முக்கியமான தேவை என்பதையும் உணர்ந்து அதைச் சார்ந்து ஆன்க்கீனா நிறுவனத்தை ஆரம்பித்தோம்.

கலந்தாலோசித்தல் கதை அங்கு நின்றுவிடவில்லை! நிறுவனத்தை ஆரம்பித்த பின்பும் பலரிடமும் கலந்தாலோசித்துக் கொண்டுதான் இருந்தோம். அதனால் முதலில் நெட்ஃப்ளிக்ஸ், டிஸ்னி போன்ற காணொளி உருவாக்கும் நிறுவனங்களுக்கு விற்கவேண்டும் என்று ஆரம்பித்த பிரயத்தனம் வீணாகும் என்பதை உணர்ந்து கொண்டோம். ஏனெனில் அத்தகையவர்கள் தாங்களே காணொளிகளை வினியோகிப்பதில்லை, ஊடக வினியோக வலைகள் (content delivery networks - CDNs) மூலந்தான் வினியோகிக்கிறார்கள் என்று அறிந்து கொண்டோம். அடுத்து அந்த வலைகளுக்கு விற்கலாம் என்று யோசித்து, அதைப்பற்றிக் கலந்தாலோசித்ததில் அவ்வலைகள் வெளியாரிடமிருந்து சேவை மென்பொருட்களை வாங்குவதில்லை என்றும் அறிந்துகொண்டோம்.

இவ்வாறு பலரிடமும் கலநதாலோசித்ததால்தான், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், மின்வலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் மற்றும் ஆப்பிள் நிறுவனக் கடைகள் போன்ற நுகர்வோருக்கு வெகு அருகில் இருக்கும் இடங்களில்தான் எங்கள் சேவை மென்பொருளுக்கு மிக அதிகத் தேவை என்பதை அறிந்து அதன்படிச் செயலாற்றி, அதனால் ஜூனிப்பர் நிறுவனத்துடன் உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டு, பல வணிக ரீதியில் சரியான பல காரியங்களைச் செய்யமுடிந்தது.

அவ்வாறு பலருடன் பலமுறை தொடர்ந்து கலந்து ஆலோசித்திரா விட்டால், நாங்கள் முதலில் நினைத்த யோசனையையே மிக அதிக காலம் முயன்றிருப்போம். அந்தத் தவறை உணர வெகுகாலம் ஆகியிருக்கும். அந்த வழியில் உழன்று, எங்கள் முயற்சி, மூலதனம் எல்லாவற்றையும் வீணடித்திருப்போம். மொத்த முயற்சியும் தோல்வியில் முடிந்திருக்கவும் கூடும்.

கலந்தாலோசித்து, சரியான அணுகுமுறை வெற்றியளித்ததால், ஜூனிப்பர் நிறுவனம் தனக்கு அந்த விற்பொருள் மிக அத்தியாவசியமானது என்று முடிவுக்கு வந்து ஆன்க்கீனா நிறுவனத்தையே வாங்கிவிட்டது! அப்போது, ஆன்க்கீனாவில் மூலதனமிட்டவர்கள் இருவரிடம் நான் அவர்கள் எவ்வாறு மூலதனமிடுவதாக முடிவு செய்தனர் என்று விசாரித்தேன்.

அவர்கள் கூறியது சற்று ஆச்சர்யமளித்தது! அவர்கள் ஆன்க்கீனா ஆரம்ப யோசனையின் மேல் ஓரளவுதான் நம்பிக்கை வைத்ததாகவும் அதைப்பற்றி அவ்வளவாக கவலைப் படவில்லை என்றும்,

எங்கள் குழுவின் அனுபவத்தையும் திறனையும் நம்பியே மூலதனமிட்டோம் என்றும் கூறினர். அந்தக் குழு சரியான யோசனையைப் கூடிய சீக்கிரம் காலப் போக்கில் கணித்துவிடும் என்ற நம்பிக்கைதான் என்றும் தெரிவித்தனர்! அவர்கள் நம்பிக்கை வீண்போகவில்லை என்பது எங்களுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளித்தது.

எனவே, எக்ஸொடஸ் மற்றும் ஆன்க்கீனா போன்ற உதாரணங்கள் பலவற்றைச் சொல்லிக்கொண்டே போகலாம். பெரும்பாலும், ஆரம்பநிலை நிறுவனங்கள் என்றாலே, மூலதனமிடுபவர்கள் யோசனைக்கு அதிக மதிப்பளிப்பதில்லை, குழுவுக்குதான் அதிக மதிப்பளிக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. அதனால்தான், நிச்சயமாகக் கலந்தாலோசித்தே தீரவேண்டும் என்ற என் கருத்துக்குக் விளக்கமாக, யோசனைகள் டாலருக்குப் பத்து என்பதைப் பட்டியலில் முதல் காரணமாகக் குறிப்பிட்டேன்.

அடுத்த பகுதியில், அடுத்த காரணத்தை விளக்குவோம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com