மார்பகப் புற்றுநோய் சில உண்மைகள்
இந்த ஆண்டில் மட்டும் இரண்டு மில்லியன் அமெரிக்கப் பெண் களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம் என்கிறது ஒரு கணக்கெடுப்பு. தற்காலத்தின் மேம்பட்ட மருத்துவ முறை களால் இந்த நோயினால் ஏற்படும் இறப்புகள் வெகுவாகக் குறைந்துள்ளன. அமெரிக்கர்களை விடக் குறைவாகவே ஆசியர்களை இந்த நோய் தாக்கினாலும், ஆரம்ப காலத்திலேயே கண்டுபிடித்தால் முற்றிலும் குணப்படுத்தக் கூடியது மார்பகப் புற்றுநோய். இதைப்பற்றிய விவரங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

மாற்ற முடியாத நோய்க்குறிகள்

பெண்கள்: ஆண்களை விடவும் பெண்களை அதிகம் தாக்குகிறது.

வயது: 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களையே இந்நோய் அதிகம் தாக்குகிறது.

மரபணுக்கள்: BRCA1, BRCA2 என்று சொல்லப்படும் மரபணுக்கள் உடையவருக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

குடும்ப வரலாறு: தந்தை அல்லது தாய் வழியில் குடும்பத்தினருக்கு மார்பக அல்லது ovarian புற்றுநோய் முன்னர் இருந்திருப்பது.

மாதவிடாய் தொடர்பான காரணங்கள்: குறைந்த வயதில் பருவமடைதல் (early Puberty) அல்லது மாதவிடாய் அதிக வயதிற்குப் பின் நிற்றல் (late Menopause).

மாற்றக்கூடிய நோய்க்குறிகள்

குழந்தைப்பேறு இல்லாத நிலை (Nulliparity).

மிகவும் தாமதமாக (30 வயதுக்கு மேல்) முதல் குழந்தை பெற்றுக் கொள்ளுதல்.

Estrogen மாத்திரைகள் உட்கொள்ளுதல்: இதில் HRT என்று சொல்லப்படும் மாத்திரைகள் மாதவிடாய் நின்று போன பின் அளிக்கப்படுகின்றன. இவற்றை 5 ஆண்டுகளுக்கு மேல் உபயோகித்தால் புற்றுநோய் வருவது அதிகரிக்கலாம். கருத்தடை மாத்திரைகள் (OCP) பத்து ஆண்டுகளுக்கு மேல் உபயோகித்தால் புற்றுநோய் வருவது அதிகரிக்கலாம். இந்த அபாயம் மற்ற நோய்க் குறிகள் கொண்டவரை அதிகமாகத் தாக்கும்.

குடிப்பழக்கம் மார்பகப் புற்றுநோய் வருவதை அதிகரிக்கிறது.

தாய்ப்பால் கொடுப்பது மார்பகப் புற்றுநோய் வருவதைக் குறைக்கிறது.

மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகள்

மார்பகத்தில் கட்டி

மார்பகத்தில் இருந்து திரவம் அல்லது இரத்தம் கசிதல்

கைகளுக்கு அடியில் (அக்குள் பகுதி) கட்டி

மார்பகத்தில் சிவப்பாக இருத்தல்

மார்பகத்திலோ காம்புப் (நிப்பிள்) பகுதியிலோ அரிப்பு ஏற்படுதல்

காம்புப் பகுதி உள்ளிழுக்கப்படுதல் (Retraction of Nipple).

புற்றுநோய் பரவி அதனால் ஏற்படும் அறிகுறிகள்

மேற்கூறிய அறிகுறிகள் யாவுமே நோய் முற்றிய பிறகு தாமதமாக ஏற்படுவன. தற்கால அறிவியல் முன்னேற்றத்தில் இந்த நோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடித்து விடலாம்.

இருபது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் மார்பகத்தை மாதம் ஒரு முறை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சரியான முறையில் சுய பரிசோதனை செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும்.

சுய பரிசோதனை செய்யும் முறை

சமமான படுக்கையில் படுத்துக் கொள்ளவும்.

இடது மார்பகத்தை வலது கையினாலும் வலது மார்பகத்தை இடது கையினாலும் பரிசோதிக்க வேண்டும்.

பரிசோதிக்கும் பக்கத்தில் கரத்தைத் தலைக்குமேல் தூக்கி வைத்திருக்க வேண்டும்.

அடுத்த பக்க உள்ளங்கையின் விரல் நுனிகளால் மார்பகத்தை அங்குலம் அங்குலமாக இடைவெளி விடாது தடவிப் பரிசோதிக்க வேண்டும்.

இதே முறையை மற்றொரு பக்கத்திலும் செய்ய வேண்டும்.

இந்தப் பரிசோதனையில் கட்டி போல ஏதேனும் தட்டுப்பட்டால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.

20-30 வயதினர் 3 வருடத்திற்கு ஒரு முறையேனும் மருத்துவரிடம் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்டு தோறும் மருத்துவரால் தங்கள் மார்பகங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

மேமோகிராம் (Mammogram)

நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வருடத்திற்கு ஒரு முறை மேமோகிராம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்தப் பரிசோதனையைக் கண்டிப்பாகச் செய்து கொள்ள வேண்டும். இந்த X-ray முறையில் மிகவும் ஆரம்பக்காலத்தில் கண்ணுக்கும் கரங்களுக்கும் தெரிவதற்கு முன்னரே நோயின் அறிகுறிகளைக் கண்டுபிடிக்கலாம். மேமோகிராம் மூலம் நோய்க்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டால் மேற்கொண்டு Ultrasound அல்லது Biopsy தேவைப்படலாம்.

Biopsy என்று சொல்லப்படும் திசுப் பரிசோதனையின் மூலமே புற்றுநோய் உள்ளதா இல்லையா என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியும்.

புற்றுநோயின் வகைகள் பலவாகும். நோயின் வகை மற்றும் காலகட்டத்தையும் பொறுத்து குணப்படுத்தும் முறையும் மாறுபடலாம். அறுவை சிகிச்சை, Chemotherapy மற்றும் Radiotherapy மூலமாக இந்த நோய் தீர்க்கப்படலாம்.

முற்றிலும் குணப்படுத்தக் கூடிய ஆரம்பக் காலகட்டப் புற்றுநோயை அறியாமையின் காரணமாய் பரவச் செய்யாமல் தடுக்க முயற்சிப்போம்.

மேலும் விவரங்களை www.cancer.org என்ற வலைத்தளத்தில் காணலாம்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com