கி. ராஜநாராயணன்
எழுத்தாளர்களின் எழுத்தாளர், எழுத்துலக பீஷ்மர், கரிசல் காட்டு இலக்கியங்களின் முன்னத்தி ஏர், தமிழகத்தின் சிறந்த கதைசொல்லி என்றெல்லாம் கொண்டாடப்பட்டும் கி. ராஜநாராயணன் (99) காலமானார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த இடைசெவல் கிராமத்தில் 1923ல் பிறந்தார். ஸ்ரீகிருஷ்ணராஜ நாராயண பெருமாள் ராமானுஜம் என்பது இவரது இயற்பெயர். ஏழாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்றார். பின்னர் விவசாயத்தில் ஈடுபட்டார். புத்தகங்களை வாசிக்கும் காலத்தில் மனிதர்களை வாசித்தார். அந்த வாசிப்பே இவரை எழுத்தாளர் ஆக்கியது.

40 வயதிற்குப் பின்னர் எழுத வந்தார். கி.ரா., கரிசல் காட்டு மக்களின் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் உயிர்ப்போடு சித்திரித்தார். இவரது முதல் சிறுகதை 'மாயமான்' 1958ல் சரஸ்வதி இதழில் வெளியாகிக் கூரிய கவனம் பெற்றது. தொடர்ந்து எழுதினார். மண்ணின் மைந்தர்களைத் தனது உயிரோட்டமுள்ள எழுத்துக்களில் சாசுவதமாக்கினார். எழுத்து, இவரை புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராக உயர்த்தியது.

'கோபல்லபுரத்து மக்கள்' நாவலுக்காக 1991ல் சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. தொடர்ந்து தமிழக அரசின் உ.வே.சா. விருது, கனடா இலக்கியத் தோட்ட விருது உட்படப் பல்வேறு விருதுகள் இவரைத் தேடிவந்தன. கதவு, கிடை, கண்ணீர், கரிசல் கதைகள், கோபல்ல கிராமம், அந்தமான் நாயக்கர், அண்டரெண்டப் பட்சி போன்றவை இவரது படைப்புகளில் முக்கியமானவை. 'அண்டரெண்டப் பட்சி' கி.ரா.வின் கையெழுத்திலேயே வெளியான சிறப்பைப் பெற்றது. இவர் உருவாக்கிய 'கரிசல் வட்டார அகராதி' ஒரு முக்கியமான சாதனையாகும். விவசாய சங்கப் போராட்டங்களில் கைதாகிச் சிறை சென்றிருக்கிறார். இவரது 'கிடை' நாவல் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. தேர்ந்த இசை ரசிகரும் கூட. (கி.ரா.வைப் பற்றி மேலும் வாசிக்க)

வாழ்நாளின் இறுதிவரை எழுதிக் கொண்டிருந்தார் கி.ரா.

கி. ராஜநாராயணனுக்குத் தென்றலின் அஞ்சலிகள்!

© TamilOnline.com