ஸ்ரீ அருணகிரிநாதர்
தமிழ்க் கடவுளாகவும், குன்றுதோறும் அமர்ந்து குறைதீர்க்கும் குகனாகவும் விளங்குபவன் முருகப்பெருமான். அம்முருகனையே தந்தையாகவும், குருவாகவும், கடவுளாகவும் போற்றி வழிபட்டு உய்ந்த அடியார்கள் எண்ணற்றோர். அம் முருகனடியார்களுள் தலைசிறந்தவராகத் திகழ்பவர் அருணகிரிநாதர். முருகப்பெருமான் பிரணவத்தின் பொருளைத் தந்தைக்கு உபதேசம் செய்து சுவாமிநாதன் ஆனான். அவ்வாறு முருகனிடமிருந்து நேரடியாக உபதேசம் பெற்றோர் மூவர் மட்டுமே! முதலாமவர் அகத்தியர், இரண்டாமவர் அருணகிரிநாதர், மூன்றாமவர் பாம்பன் சுவாமிகள். மகான்கள், ஞானிகள் பலர் முருகனைத் தொழுதிருக்கலாம். அவர்தம் காட்சியினையும் பெற்றிருக்கலாம். அடியார்களாகவும், அருளாளர்களாகவும் இருந்திருக்கலாம். ஆனால் நேரடி உபதேசம் பெற்றது இம்மூவர் மட்டுமே!

பிறப்பு
"வாக்கிற்கு அருணகிரி" என்று போற்றப்படும் அருணகிரிநாதர் பதினைந்தாம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் வணிகர் குலத்தில் பிறந்தார். தந்தை திருவெண்காடர், தாயார் முத்தம்மை. அருணகிரிக்கு ஆதி என்றொரு மூத்த சகோதரி இருந்தார். அருணகிரியின் தந்தை சிறுவயதிலேயே துறவு பூண்டு சென்று விட்டார். அதனால் அவரை அன்போடு வளர்த்து வந்தாள் அன்னை முத்தம்மை. அருணகிரிக்கு இளவயதிலேயே நல்ல அறிவாற்றலும், அரிய நினைவாற்றலும், கவித்திறனும் இருந்தன. அவர் திண்ணைப் பள்ளியில் படித்துவரும் காலத்தில் திடீரெனத் தாயார் முத்தம்மை காலமானார். தந்தை, தாய் இருவரையும் இழந்து வருந்திய அருணகிரியைத் தாய்போல் இருந்து அவரது சகோதரி ஆதி வளர்த்து வந்தார்.

இளமைப்பருவம்
தமிழின்மீது ஈடுபாடு கொண்டு அதிலிருந்த இலக்கிய, இலக்கணங்களைச் சிறப்புடன் கற்றுத் தேர்ந்தார் அருணகிரி. அதே சமயம் வடமொழியின் மீதும் ஆர்வம் அதிகரித்தது. எனவே ஆசிரியர் ஒருவரிடம் அதனையும் நன்கு பயின்றார். ஆனால் இளமை மிடுக்காலும், செல்வச் செருக்கினாலும், தீய நண்பர்களின் தொடர்பாலும் பரத்தையரை நாடிச்செல்ல ஆரம்பித்தார்.

சுட்ட சொல்
கண்டிக்க யாருமில்லை. சகோதரியின் அறிவுரை காதில் ஏறவில்லை. நாளடைவில் உடல்நலம் சீர்குலைந்தது. நோய் தாக்கியது. நோய் முற்றிய நிலையிலும் காம வேட்கை தணியவில்லை. பரத்தையர் இவரை ஒதுக்கினர். இவரைத் தவிர்ப்பதற்காக மிக அதிகப் பொருள் கேட்டனர். செல்வம் குன்றியதால் அருணகிரியாரின் கையில் பணமில்லை.

இளமை வேட்கையால் தவித்த அவர், பரத்தையரிடம் செல்வதற்காக சகோதரியிடம் பொருள் கேட்டார். வறுமையின் பிடியில் இருந்த சகோதரியோ நொந்துபோய், தன்னிடம் பணமில்லை என்றும் 'நானும் ஒரு பெண்தான்' என்றும் கூறினார். அந்தச் சொல் தீயாய் அருணகிரியின் உள்ளத்தைச் சுட்டது. ஆசை விட்டது. அகம் தெளிந்தது. உடல் தளர்ந்தது. ஆனாலும் குற்றச்செயல் முள்ளாய் மனதை உறுத்த, செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தமாக உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணினார்.



தரிசனம்
அகம் நைந்து அண்ணாமலையை நாடினார். அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஒரு கோபுரத்தின் மேலேறிக் கீழே குதித்தார். அப்போது இவரது முன்வினைப் பயனால் முதியவர் ரூபத்தில் அங்கே தோன்றிய முருகன். அருணகிரியைத் தன் கையில் தாங்கினார். உடல் நோயினை நீக்கினார். மனவருத்தம் போக்கினார். மயில்வாகனனாய்க் காட்சிதந்து அருணகிரியை நோக்கினார்.

முருகனின் காட்சி கண்டு அகம் மகிழ்ந்த அருணகிரி, அவனது ஞான ஒளி கண்டு மலைத்தார். அவனைத் துதிக்கும் வழியறியாமல் திகைத்தார். ஆனந்தத்தில் கண் நனைத்தார்.

அருணகிரியின் நிலை கண்டு இரங்கிய முருகப் பெருமான் தம் வேலால் அருணகிரியார் நாவிலே 'சரவணபவ' என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்தார். ஞானோபதேசம் அளித்தார். அருணகிரி மனம் களித்தார். ஆனந்த அருள் வெள்ளத்தில் குளித்தார்.

பின் அருணகிரியின் தாயார் பெயரான 'முத்து' என்பதையே முதல் வாக்கியமாகக் கொண்டு தம்மைப் பாடும்படி 'முத்தைத் தரு' என முதற் சொல்லை எடுத்துக் கொடுத்தார் முருகப்பெருமான்.

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்....


என்னும் முதல் திருப்புகழ் அங்கு பொங்கி எழுந்தது.

ஞானத்தவம்
அதுமுதல் பரவசநிலையில் திளைத்தார் அருணகிரி. திருவண்ணாமலை ஆலயத்தின் கம்பத்து இளையனார் சந்நிதியில் அமர்ந்து மோனத்தவத்தில் ஆழ்ந்தார். தவத்திலிருந்து மீண்ட வேளைகளில் சந்தப் பாடல்களை மனமுருகிப் பாடினார். விரைவிலேயே அருணகிரிக்கு ஞானம் கைவரப் பெற்றது. உடல் பொன்போல் ஒளி வீசிற்று. ஆசுகவியாய் முருகன்மீது எண்ணற்ற பாடல்களைப் பொழிந்தார். அவரைத் தரிசிக்க பக்தர் கூட்டம் பெருகியது. ஆனாலும் அருணகிரி எல்லோரையும் தவிர்த்து எப்போதும் தவத்திலேயே ஆழ்ந்திருந்தார். இடையிலே ஒற்றை ஆடை தவிர்த்து வேறேதும் அணியாதவராய், பசித்தபோது மட்டும் ஒரு கவளம் உணவு உட்கொண்டு வாழ்க்கை நடத்தினார். இதனால் அருணகிரியின் பெருமை நாடெங்கும் பரவியது.

வாதம் - விவாதம்
அக்காலத்தில் வில்லிபுத்தூரார் என்னும் தமிழ்ப்புலவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தீவிரத் தமிழ்ப்பற்று கொண்டவர். மற்ற புலவர்களை வாதுக்கு அழைப்பார். போட்டி நடக்கும்போது வில்லிபுத்தூரார் தம்முடைய கையில் நீளமான ஒரு துரட்டி ஒன்றைப் பிடித்திருப்பார். அதன் ஒரு நுனியில் காதை அறுக்கக்கூடிய சிறிய அரிவாள் கட்டிவைக்கப்பட்டு இருக்கும். அதை எதிராளியின் காதின்மீது வைத்துக்கொண்டு கேள்வி கேட்பார். பதிலில் ஏதேனும் தவறு இருந்தால் சற்றும் தயங்காமல் உடன் துரட்டியை இழுத்துக் காதை அறுத்துவிடுவார்.

வில்லிபுத்தூராரிடம் காது அறுபட்ட பல புலவர்கள் அருணகிரிநாதரைச் சந்தித்து விஷயத்தைத் தெரிவித்தனர். வில்லிபுத்தூரார் நல்லவர்தான் என்றாலும் அவரது இச்செய்கை தவறானது என்பதை அவருக்கு உணர்த்த விரும்பினார். அருணகிரியைப் பற்றி வில்லிபுத்தூரார் நன்கறிந்திருந்தார் என்றாலும் தமிழ்ச்செருக்கால் அவரையும் தன்னோடு வாதுக்கழைத்தார். அருணகிரி உடன்பட்டார்.

போட்டி தொடங்கியது. துரட்டியோடு போட்டிக்குத் தயாராக அமர்ந்திருந்தார் வில்லி. அதைக் கண்ட அருணகிரியார், சமமான இருவருக்கு இடையே நடக்கும் போட்டி என்பதால் தமக்கும் அது போல் ஒரு துரட்டி வேண்டுமென்றும், தாம் கேட்கும் கேள்விகளுக்கு வில்லிபுத்தூரார் சரியான பதில் கூறாவிட்டால் அவர் காதும் அறுக்கப்படும் என்றும் ஒரு நிபந்தனையைக் கூறினார். இதுவரை யாரும் வில்லிபுத்துராரிடம் அவ்வாறு பேசியதில்லை. அதனால் சற்றே துணுக்குற்றார் வில்லி. இருந்தாலும் தம் புலமை மீதிருந்த நம்பிக்கையால் அதற்கு உடன்பட்டார்.

உடனே 'ஏகாக்ஷரச் செய்யுள்' என்ற அமைப்பில் ஒரு பாடலைப் பாட ஆரம்பித்தார் அருணகிரியார்.

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே


என்றொரு பாடலைச் சொன்னார் அருணகிரி. கேட்டு அப்படியே திகைத்துப் போய்விட்டார் வில்லி. பாடலும் புரியவில்லை, பொருளும் தெரியவில்லை. அப்படியே விதிர்விதிர்த்துப் போய் அமர்ந்துவிட்டார். பின் அருணகிரிநாதரிடம் தோல்வியை ஒப்புக்கொண்டவர், நிபந்தனைப்படித் தம் காதை அறுக்குமாறு வேண்டிக் கொண்டார்.

ஆனால் அருணகிரியார் அதற்கு ஒப்பவில்லை. வில்லியின் காதைக் கொய்வது தமது நோக்கமல்ல என்றும், புலவர்களின் காதை அறுத்து அவமதித்து அவர்களுக்குக் கொடுமை செய்வதை இனி வில்லிபுத்தூரார் நிறுத்தவேண்டும் என்பதே தமது நோக்கம் என்றும் கூறினார்.

வில்லிபுத்தூரார் தவறை உணர்ந்தார். மனம் திருந்தினார். தாம் இனி அவ்வாறு செய்யமாட்டேன் என்றும், பிறரை விமர்சிப்பதை விடுத்து இனிப் புதிய செய்யுள் வகைகளில் கவனம் செலுத்துவேன் என்றும் கூறி அருணகிரியாரிடம் மன்னிப்பு வேண்டினார். பின்னாளில் அவர் இயற்றியதே 'வில்லிபுத்தூரார் மகாபாரதம்'.



பாடலும் பொருளும்
வில்லிபுத்தூராரும் மற்ற புலவர்களும் அருணகிரிநாதரிடம் அப்பாடலுக்குப் பொருள் வேண்ட, அதனை விளக்கினார் அருணகிரியார்.

திதத்தத்தத் தித்தத் - 'திதத்தத்தத் தித்தத்' என்னும் தாளங்களைக் கொண்ட
திதி - திருநடனத்தால் காக்கின்ற
தாதை - சிவனும்
தாத - பிரம்மனும்
துத்தி - படம் கொண்ட
தத்தி - பாம்பினுடைய
தா - இடத்தையும்
தித - நிலைபெற்று
தத்து - ததும்புகின்ற
அத்தி - சமுத்திரத்தைப் பாயாக உடைய
ததி - தயிரானது
தித்தித்ததே - தித்திக்கின்றதென்று
து - உண்ட கண்ணனும்
துதித்து - துதி செய்து வணங்குகின்ற
இதத்து - பேரின்ப சொரூபியான
ஆதி - முதல்வனே
தத்தத்து - தந்தத்தையுடைய
அத்தி - ஐராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை - கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத - தலைவனே (தொண்டனே)
தீதே - தீமையே
துதை - நெருங்கிய
தாது - சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து - மரணத்தோடும்
உதி - பிறப்போடும்
தத்தும் - பல தத்துக்களோடும்
அத்து - இசைவுற்றதுமான
அத்தி - எலும்புகளை மூடிய
தித்தி - பையாகிய இவ்வுடல்
தீ - தீயினால்
தீ - தகிக்கப்படுகின்ற
திதி - அந்நாளிலே
துதி - உன்னைத் துதிக்கும்
தீ - புத்தி
தொத்தது - உனக்கே அடிமை செய்ய வேண்டும்

என்பதே பொருள் என்று விளக்கினார் அருணகிரியார்.

இப்பாடல் கந்தர் அந்தாதியில் 54வது பாடலாக உள்ளது. அந்தாதி வகையில் யமகம் என்னும் வகையைச் சேர்ந்தது. ஒரு பாடலின் இறுதியில் வரும் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியன அடுத்த பாடலின் முதலாக வருவது அந்தாதி. அதாவது அந்தம் ஆதியாக வருவது அந்தாதி. அந்த வகையில், கந்தனின் அருளைப் பெறும் வகையில், அவனருளால் பாடப்பட்ட கந்தர் அந்தாதியில் மிகச் சிறப்பான பல பாடல்கள் உள்ளன.

அருளுபதேசமும் அட்டமா சித்திகளும்
தமிழ்த்தொண்டும் தவத்தொண்டும் செய்துவந்த அருணகிரியார் தமிழகத்தின் பல இடங்களுக்கும் சென்று பாடல்கள் புனைந்து முருகக் கடவுளை வழிபட்டு வந்தார். பின்னர் முருகன் அவரை 'சும்மா இரு சொல்லற' என்று சொல்ல, அவன் வாக்கிற்கேற்ப பல ஆண்டுக்காலம் தவம் புரிந்தார். அதுகண்டு மகிழ்ந்த முருகன் அவரை விராலிமலைக்கு அழைத்தான். இறைவனின் ஆணைக்கேற்ப விராலிமலை சென்று வழிபட்ட அருணகிரிக்கு, வள்ளி, தெய்வானையுடன் காட்சி அளித்த குமரன், அவருக்கு அட்டமா சித்திகளையும் அளித்ததுடன், நினைத்த நேரத்தில் நினைத்த உருக்கொள்ளும் வரத்தையும் தந்தான்.

முருகனின் கருணையில் திளைத்த அருணகிரி பாமாலைகள் புனைந்தார். திருப்புத்தூர், குன்றக்குடி, பிள்ளையார்பட்டி, மதுரை, இராமேஸ்வரம், சுவாமிமலை, திருவையாறு தலங்களுக்குச் சென்று இறைவனை வணங்கினார். திருச்செங்கோட்டிற்குச் சென்றவர் முருகன் அழகில் மயங்கி 'கந்தரலங்காரம்' படைத்தார். வயலூர் சென்று வள்ளலை வழிபட்டார். திருத்தல யாத்திரைகள் மேற்கொண்டு திருப்புகழ் பாடிய பின் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார்.

அருணையில் அருணகிரி
அங்கே விஜயநகர மன்னர் பரம்பரையில் வந்த பிரபுட தேவராயன் ஆட்சி செய்துவந்தான். சிவபக்தி மிக்க அவனின் அன்புக்குப் பாத்திரமானார் அருணகிரியார். அவரைத் தமது குலகுருவாக மதிக்கத் தொடங்கினான் மன்னன். இது மன்னனின் அவைப்புலவனாக இருந்த சம்பந்தாண்டானுக்குப் பொறுக்கவில்லை. தேவி உபாசகனான அவன், முருக பக்தனான அருணகிரி புகழ் பெறுவதை விரும்பவில்லை. முருக உபாசகர் என்றும், வில்லிபுத்தூராரின் கல்விச் செருக்கை அடக்கிய பாவலர் என்றும், ஞானப்புலவர் என்றும் பலவாறாக அருணகிரிநாதர் புகழப்படுவது, அவனுக்குச் சினத்தை ஏற்படுத்தியது. அருணகிரியை எப்படியாவது அவமானப்படுத்த வேண்டும், மன்னரின் அரவணைப்பிலிருந்து அவரைப் பிரித்து அண்ணாமலையிலிருந்து விரட்டிவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டான். அதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

அதற்கான வேளையும் வந்தது...

(தொடரும்)

பா.சு. ரமணன்

© TamilOnline.com