கத்தியால் அறுக்கப்பட்ட கவசம்
பாண்டவர் வனவாசத்தின் பன்னிரண்டாம் ஆண்டு ஏறத்தாழ முடிவடையும் காலம் வந்துவிட்டது. அர்ஜுனன் தேவலோகத்தில் இருந்தபோது, தர்மபுத்திரனுக்கு இந்திரன் தந்த வாக்குறுதியின்படி கர்ணனுடைய பலத்தைக் குறைப்பதற்காக அவனுடைய கவச குண்டலங்களை யாசித்துப் பெறுவதற்காக அந்தணன் வடிவத்தில் கர்ணனை அணுகப் போகிறான். அவன் நிச்சயித்த விஷயம் சூரிய பகவானுக்குத் தெரிந்துவிட்டது. எனவே, தன் மகன் கர்ணனை எச்சரிக்க அவனுடைய கனவில் தோன்றினான். நாம் முன்னாலேயே சொன்னதைப்போல, சூரிய வழிபாட்டை இயல்பாகவே கைக்கொண்டு பின்பற்றிவந்த கர்ணனுக்கு, சூரியன்தான் தன்னுடைய தகப்பன் என்பது இதுவரையில் தெரியாது. பின்னால் உத்தியோக பர்வத்தில் குந்தி அவனைச் சந்திக்க வரும்வரையில் இந்த உண்மை அவனுக்குத் தெரியப்போவதும் இல்லை.

ஓர் இரவில் கர்ணன் தூங்கிக்கொண்டிருந்தபோது, சூரியன் அவனுடைய கனவில் தோன்றினான். அந்தக் கனவில், 'கர்ணா, நான் சொல்வதைக் கூர்ந்து கவனி. பாண்டவர்களுக்கு நன்மைசெய்யக் கருதிய இந்திரன், உன்னுடைய கவச குண்டலங்களை யாசித்துப் பெறுவதற்காக உன்னிடத்தில் வரப்போகிறான். நீ அந்தணர்கள் விரும்புகின்ற எப்பொருளையும் மறுக்கமாட்டேன் என்று சபதம் செய்திருப்பதால் அவன் அந்தண வேடத்தில் வரப்போகிறான். இந்தக் கவச-குண்டலங்கள் அமிர்தத்ததால் செய்யப்பட்டவை. உன்னுடைய ஆயுளுக்கு அவசியமானவை. இவற்றை நீ கொடுக்காதே. என்னுடைய சொல்லை மீறி இவற்றை நீ கொடுப்பாயானால், உன்னுடைய ஆயுளுக்குக் குறைவேற்படும். நீ இவற்றை இழந்தால் உனக்கு மரணம் நிச்சயம். உன்னுடைய உயிருக்குப் பாதுகாப்பான இவற்றை நீ தானம் செய்துவிடாதே. ஏதேனும் இனிமையான சொற்களைச் சொல்லி மறுத்துவிடு. இவை கொடுக்கத்தக்க பொருட்கள் அல்ல என்பதை உனக்குத் தெரிவிக்கவே வந்தேன்' என்று சொன்னான். கர்ணன், 'ஐயா, நீர் யார்? என்ன காரணத்தினால் என்மீது கருணைகொண்டு இந்த வார்த்தைகளை எனக்குச் சொல்ல வந்தீர்கள்?' என்று கேட்டான். 'நான் சூரியன். உன்மேல் கொண்ட அன்பால் இதைச் சொன்னேன்' என்று கூறினான். இப்போதும், 'நான் உன் தந்தை' என்ற உண்மையைச் சொல்லவில்லை.

'அந்தணர்கள் வந்து எதைக் கேட்டாலும் மறுக்கமாட்டேன் என்று விரதம் பூண்டிருக்கிறேன். அந்தண வேடத்தில் வரும் இந்திரன் கேட்பதை மறுத்தால் என்னுடைய புகழுக்குக் கேடு விளையும். எனவே நீங்கள் சொல்வதைக் கேட்க முடியாத நிலையிலிருக்கிறேன்,' என்று மறுத்தான் கர்ணன். 'கர்ணா! உன் உயிருக்குத் தீமை விளைத்துக்கொண்டு உனக்குப் புகழைத் தேடுகிறாய். மனிதனுக்கு உயிர்தான் முக்கியம். உயிரை மீறிய புகழ் என்று எதுவும் இல்லை. நான் சொல்வதைக் கேள்' என்றான் சூரியன். கர்ணன் அவன் சொல்வதைக் கேட்கத் தயாராக இல்லை. 'என்போன்றவர்களுக்கு, உயிரைக் காட்டிலும் புகழே விரும்பத்தக்கது' என்று திரும்பத் திரும்பச் சொன்னான். இப்படி ஐந்தாறு முறை கர்ணன் மறுத்தபின்னர், சூரியன் கடைசியாக, 'நீ நினைப்பதுபோல இந்தக் கவச குண்டலங்களை, உன்னிடம் யாசிக்கும் இந்திரனுக்குக் கொடுத்துதான் தீரவேண்டும் என்றால், உன்னுடைய வெற்றியின் பொருட்டு, அவனிடத்தில் உள்ள சக்தி ஆயுதத்தைக் கேள். அது உனக்கு நன்மையைத் தரவல்லது. அதைக் கொடுத்தால்தான் கவச குண்டலங்களைத் தரமுடியும். இல்லாவிட்டால் கொடுக்க மாட்டேன் என்றாவது மறு' என்று சூரியன் சொன்னான்.

இந்த உரையாடல் முடிந்ததும் கர்ணன் கண்விழித்தான். தனக்கு ஏற்பட்ட கனவை நினைத்துப் பார்த்தான். பொழுது புலர்ந்தது. பகல் வேளையில் இந்திரன் அந்தணக் கோலத்தில் வந்தான். அவனை வரவேற்று உபசரித்த கர்ணன், 'தங்கள் வரவு நல்வரவாகுக' என்றான். அந்த அந்தணரை, ஆசனம் இட்டு அமர வைத்தான். 'ஐயனே! தங்களுக்கு என்ன வேண்டும்? நிறைந்த செல்வங்கள் வேண்டுமா? ஏராளமான நிலங்கள் வேண்டுமா? விளைச்சல் நிறைந்த கிராமங்கள் வேண்டுமா? எதுகேட்டாலும் தருகிறேன்' என்றான். 'நான் இவற்றையெல்லாம் நாடி வரவில்லை; எனக்கு உன் கவசகுண்டலங்கள் வேண்டும். அவற்றைப் பெறுவதற்காக வந்திருக்கிறேன்' என்றான் அந்தணக் கோலத்தில் வந்திருந்த இந்திரன். கர்ணன் சிரித்துக்கொண்டே, 'ஐயா, நீர் யார் என்பதை அறிவேன். இவை என் உடலோடு ஒட்டிப் பிறந்தவை. அம்ருதத்தால் உண்டானவை. இவற்றைக் கேட்டால் எப்படித் தரமுடியும்? மேலும் இவற்றை என்னிடத்தில் நீங்கள் யாசித்துப் பெற்றால் எல்லோரும் உங்களைப் பார்த்து நகைப்பார்கள். இவற்றுக்கு பதிலாக வேறு எதையேனும் கொடுத்துவிட்டு இவற்றைப் பெற்றுக்கொள்ளும். இல்லாவிட்டால் தரமாட்டேன்' என்றான்.

வியாச பாரதம் இதை இப்படிச் சொல்கிறது: "தேவரே! குண்டலங்களையும் கவசத்தையும் உமக்குக் கொடுப்பேனாகில், பகைவர்களால் கொல்லத்தக்க தன்மையை அடைவேன். இந்திரரே! நீரும் எல்லோராலும் நகைக்கத்தக்க நிலைமையை அடைவீர். சக்ரரே! ஆகையால், இவைகளுக்குப் பிரதியாக வேறொன்றைக் கொடுத்துக் குண்டலங்களையும் உத்தமமான கவசத்தையும் என்னிடத்தினின்று இஷ்டப்படி பெற்றுக்கொள்ளும். அப்படி இல்லாவிட்டால் நான் கொடுக்கமாட்டேன்' என்று சொன்னான்." (கும்பகோணம் பதிப்பு வனபர்வம், குண்டலாஹரண பர்வம், அத். 311, பக். 1144)

இந்தப் பகுதியை BORI பதிப்பை மொழிபெயர்த்திருக்கும் பிபேக் தேப்ராய் பின்வருமாறு மொழிபெயர்க்கிறார்: "O lord! O lord of the gods! I know who you are. O Shakra! It is not proper for me to give you a boon that will be in vain. You are the lord of the gods himself and it is you who should give me a boon, since you are the lord of all other beings and the creator of all beings. O god! If I give you my earrings and armour, I will be liable to be killed. O Shakra! You will become an object of ridicule. O Shakra! Therefore, take my earrings and supreme armour, if you so wish. But take them in exchange. Otherwise, I will not give them."
- Bibek Debroy. The Mahabharata (p. 583). Penguin Books Ltd. Kindle Edition.

ஒன்றுக்குப் பதிலாக இன்னொன்றைப் பெற்றுக்கொண்டு கொடுப்பதற்குப் பெயர் தானமும் இல்லை, அப்படிப் பெறப்பட்டது யாசகமும் இல்லை. இதை இந்த இடத்தில் கவனிக்க வேண்டும். இங்கே நடைபெற்றது பண்டமாற்று, யாசகமன்று. (இங்கே கூறப்படும் வாசவன், ஸக்ரன் என்பன இந்திரனின் வேறு பெயர்கள்.)

கர்ணன் இவ்வாறு 'மாற்றாக ஏதேனும் வேண்டும்' என்று கேட்டபோதே, இந்திரன், 'இவனைச் சூரியன் எச்சரித்திருக்கிறான்' என்பதை ஊகித்துவிட்டான். 'என்னுடைய வஜ்ராயுதத்தைத் தவிர வேறு எதைக்கேட்டாலும் தருகிறேன்' என்று பதில் சொன்னான். இந்திரன் இப்படி மறுத்த வஜ்ராயுதத்தை, அர்ஜுனன் கேட்காமலேயே அவனுக்குக் கொடுத்திருந்தான்; அதை அர்ஜுனர் நிவாதகவசர்களைக் கொன்ற யுத்தத்தில் பயன்படுத்தியிருந்தான் என்பதை இந்த இடத்தில் நினைவுகொள்ள வேண்டும். 'எனக்கு உங்களுடைய சக்தி ஆயுதம் வேண்டும்' என்று கேட்டான் கர்ணன். இந்திரன் சிரித்துக்கொண்டான். நீ எதற்காக இதைக் கேட்கிறாய் என்று எனக்குத் தெரியும். இதைக்கொண்டு நான் நூற்றுக்கணக்கான அரக்கர்களைக் கொன்றிருக்கிறேன். ஆனால், நீ யாருக்காக இதைக் கேட்கிறாயோ, அவனை நாராயணர் பாதுகாத்துக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்தே கொடுக்கிறேன். ஆனால், இதை நீ ஒருமுறை பயன்படுத்தியதும் இது என்னிடத்தில் திரும்ப வந்துவிடும்' என்றான் இந்திரன்.

வியாச பாரதம் இதை இவ்வாறு சொல்கிறது: "இந்திரன், 'யுத்தத்தில் பலசாலியும், கர்ஜிக்கின்றவனுமான ஒரு சத்துருவைக் கொல்லுவாய். நீ எவனொருவனை யுத்தம் செய்து கொல்லவேண்டுமென்று வேண்டுகிறாயோ அந்தச் சூரன் மகாத்மாவினால் காப்பாற்றப்படுகிறான். வேதங்களைக் கற்றறிந்தவர்கள் எவனை யக்ஞவராகன் என்றும் பிறரால் ஜயிக்கப்படாதவன் என்றும் நாராயணன் என்றும் சிந்திக்கப்பட முடியாதவனென்றும் சொல்லுகிறார்களோ அந்த க்ருஷ்ணனால் அந்த வீரன் காக்கப்படுகிறான்' என்று சொன்னான்." (மேற்படி அத்தியாயம், பக். 1145)

இந்தப் பகுதியைக் கிஸாரிமோஹன் கங்கூலி பின்வருமாறு மொழிபெயர்க்கிறார்: Vasava thus spake unto Karna, 'Do thou give me thy ear-rings, and the coat of mail born with thy body, and in return take this dart on these terms! When I encounter the Daitya in battle, this dart that is incapable of being baffled, hurled by my hand, destroyeth enemies by hundreds, and cometh back to my hand after achieving its purpose. In thy hand, however, this dart, O son of Suta, will slay only one powerful enemy of thine. And having achieved that feat, it will, roaring and blazing, return to me!' Thereat Karna said, 'I desire to slay in fierce fight even one enemy of mine, who roareth fiercely and is hot as fire, and of whom I am in fear!' At this, Indra said, 'Thou shall slay such a roaring and powerful foe in battle. But that one whom thou seekest to slay, is protected by an illustrious personage. Even He whom persons versed in the Vedas call 'the invincible Boar,' and 'the incomprehensible Narayana,' even that Krishna himself, is protecting him!' (Book 3, Section CCCVIII (308)) தமிழில் 311ம் அத்தியாயமான இது ஆங்கிலத்தில் 308ம் அத்தியாயம் என்பதை கவனிக்கவும்.

ஆனால், இந்திரன் கர்ணனுடைய கவச-குண்டலங்களை இப்படிப் பெற்றதால்தான் அர்ஜுனனால் கர்ணனைக் கொல்ல முடிந்தது என்ற எண்ணம் மிகத் தவறான ஒன்று. குண்டலம் என்பது ஒரு தாயத்து மாதிரியானது. அதனால் காப்பாக விளங்க முடியும். எந்த ஆயுதத்தையும் தடுக்க முடியாது என்பது நிதர்சனம். கவசமோ என்றால் அதனால் மறைக்கப்பட்ட பகுதியைக் காக்க முடியும். அதிகபட்சமாக, மார்பைப் பாதுகாக்கலாம். ஆனால் பதினேழாம் நாள் யுத்தத்தில் அர்ஜுனன் தன்னுடைய அஞ்சலிகம் என்ற அம்பு குறிவைத்ததோ, கர்ணனுடைய கழுத்துக்கு! இந்தக் கவசம் இருந்திருந்தால்கூட அதனால் கழுத்துத் துண்டிக்கப்படுவதைத் தடுத்திருக்க முடியாது என்பது தெளிவு. யாசித்தலை நோக்கமாகக் கொண்டு தொடங்கிய இந்தப் பண்டமாற்று நடந்தது அர்ஜுனனுக்குத் தெரியாதது மட்டுமல்ல; இதனால் எந்தப் பயனும் விளையவில்லை என்பதுதான் உண்மை.

ஆனால் வாசவனுடைய 'சக்தி' எனப்படும் இந்த வாசவி சக்தியைக் கொடுக்கும்போது இந்திரன் ஒரு நிபந்தனையை விதிக்கிறான். வியாச மூலம் சொல்கிறது: "வேறு ஆயுதங்கள் இருக்கும்பொழுது, உயிருக்கு ஸந்தேகம் வராமலிருக்கையில், வீணாக இந்தச் சக்தியை அஜாக்ரதையாகப் பிரயோகித்தால் இது உன்மீதே விழும்." (அத். 311, பக். 1146) இதைக் கர்ணனும் ஏற்றுக்கொண்டு 'உயிருக்கு ஆபத்து என்ற சந்தேகம் ஏற்பட்டாலொழிய இதைப் பிரயோகிக்க மாட்டேன்' என்று உறுதியளிக்கிறான்.

அடுத்ததாக இந்திரனைப் பார்த்து, 'ஐயனே, என் கவச குண்டலங்களை அறுத்து எடுப்பதால் என் உடலில் அருவருப்பான தழும்புகள் ஏற்படாதிருக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டான். 'தழும்புகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறேன்' என்று இந்திரனும் சம்மதித்தான். கர்ணன் அப்படி அறுத்துக்கொடுத்ததை கிஸாரி மோகன் கங்கூலி இவ்வாறு மொழிபெயர்க்கிறார்:

எல்லோரும் நினைப்பது போல கர்ணன் என்ற பெயருக்கும் 'கர்ணம்' எனப்படும் காதுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதைக் கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பும் சொல்கிறது. கும்பகோணம் பதிப்பின் ஆதி பர்வத்தில் உள்ள ஒரு அடிக்குறிப்பு, இந்தப் பெயர்க் காரணத்தை இவ்வாறு விளக்குகிறது: "க்ருணு, க்ரதீ என்கிற இரண்டு பகுதிகளும் 'சேதிப்பது' என்ற பொருளுள்ளவை. அவற்றிலிருந்து கர்ணன், வைகர்த்தனன் என்ற பெயர்கள் முறையே வந்தன." (ஆதி பர்வம், தொகுதி 1, பக். 444) வைகர்த்தனன் என்பதும் கர்ணனுடைய பெயர்தான். விகர்த்தனன் என்பது சூரியனுடைய பெயர் என்பதால் கர்ணனுக்கு வைகர்த்தனன் என்று பெயர் என்றும் சொல்வார்கள். ஆனால், 'தன் உடலைக் கத்தியால் அறுத்தவன்' என்பதனால்தான் இந்தப் பெயர் என்று கும்பகோணம் பதிப்பு தெளிவாகவே விளக்குகிறது.

கர்ணன் ஒரு 'கூர்மையான கத்தியை எடுத்து தன் குண்டலங்களைச் சேதித்தான்; கவசத்தை அறுத்து எடுத்தான் என்பது கும்பகோணம் பதிப்பிலும் போரி பதிப்பிலும் சொல்லப்படுகிறது.

யாசகமாகத் தொடங்கிப் பண்டமாற்றாக முடிந்த ஒரு 'வியாபாரம்' இப்படித்தான் நடந்து முடிந்தது. அடுத்தது பாண்டவர்களுடைய அக்ஞாதவாசமான பதின்மூன்றாம் ஆண்டு தொடங்கப் போகிறது. அதன் தொடக்கமாக நிகழ்ந்த 'யட்சப் பிரசன்ன'த்தைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அடுத்ததாக அதைப் பார்ப்போம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com