அனு நடராஜனுக்கு சில ஆலோசனைகள்...
பள்ளிகள் முன்னேற்றத்திற்கு:

பொதுப் பள்ளி நிர்வாகம் மாநில அரசைச் சார்ந்தது என்பதையறிவோம். இருப்பினும், வரிச் சலுகைகள் போன்ற வற்றின் மூலம் பள்ளிகளைத் தத்தெடுப்பதற்குப் பெரிய நிறுவனங்களைக் கவர முயற்சிக்கலாம். இவ்வாறான நிறுவனங்கள், உதவித் தொகை போன்ற திட்டங்கள் மூலம் சிறந்த மாணவர்களை ஊக்குவிக் கலாம். இத்தகைய திட்டங்களால் ஃபிரிமான்ட் பள்ளிகளின் தரத்தை உயர்த்தலாம்.

நகரின் பாதுகாப்பு, மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு:

200,000க்கு மேல் மக்கள் தொகையுள்ள நம் நகரில் காவலர்கள்-மக்கள் விகிதாசாரம் 1.1 : 1000 (ஒன்றிற்கு ஆயிரம்) என்ற நிலையில் உள்ளது. ஆள் சேர்ப்பும், ஊக்கமும் மிக அவசியம். தொண்டூழிய முறையில் காவலர்கள் சேர்ப்பதற்கும் நகர நிர்வாகம் முயற்சிக்கலாம்.

சுற்றுப்புற பாதுகாப்பிற்கு:

காவல்துறை ஃபிரிமான்ட் நகரவாசிகளுடனான உறவை பலப்படுத்த முயல வேண்டும். ரோந்து போவதை அதிகப்படுத்த வேண்டும். அண்மையில் வீட்டு எச்சரிக்கை மணி ஒலித்தால் (house alarm) உடனே விரைந்து செயல்படப் போவதில்லை என்னும் ஃபிரிமான்ட் காவல் துறையின் முடிவு கவலையளிப்பதாக இருக்கிறது. ஒன்றிரண்டு எச்சரிக்கை மணிகள் அனாவசியமாக எழுப்பப்பட்டாலும், உண்மையான குரலுக்கு உதவ விரையாமல் இருந்து விட்டால் விபரீத விளைவுகள் ஏற்படக்கூடும்.

நகர வலைத்தளம் மேம்பட:

நகரமன்ற நிகழ்வுகள் பற்றிய இன்றைய, முந்தைய பதிவுகளுடன் ஃபிரிமான்ட் நகர வலைத்தளம் மிகக் கவனமாக அமைக்கப் பெற்றிருக்கின்றது. சிறுதொழிலுக்கான உரிமம், வேலையிழந்தோருக்கான விண்ணப்பம், வலைத்தளம் மூலம் பதிவு, போன்ற பல அம்சங்களைச் சேர்த்து இதை மேலும் பயனுள்ளதாக்கலாம்.

நகர மையம் அழகு பெற:

சிறிதும் பெரிதுமான கடைகள், உயர்தர வர்த்தக மையங்களைக் கவரும் சூழலை உருவாக்கி நகர மையத்தை அழகாக உருமாற்ற வேண்டும். பெரிய கடைகளில் பொருள் வாங்கும் மகிழ்ச்சியான அனுபவத்தை ஏற்படுத்த வேண்டும்.

இந்திய சமுதாயத்தினருக்கு:

நம் மக்கள் சமூக உணர்வுடன் பல நல்ல காரியங்களில் ஈடுபடுகின்றனர். ஆயினும், எல்லாவற்றையும் அரசியலாக்கி விடுகின்றனர். வருடா வருடம் இங்கு நடக்கும் இந்தியச் சுதந்திர தின விழாவே இதற்குச் சான்று. அனு அவர்கள் இது போன்ற நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி, கட்டுக்கோப்புடன் இவை இயங்க உதவ வேண்டும். இந்தியாவிலிருந்தும், ஏனைய இடங்களிலிருந்தும் பெரிய தலைகளை வரவழைப்பதை விட்டு, நகர மற்றும் சமுதாய வளர்ச்சிக்கு இவர்களுக்காகும் செலவை நன்கொடையாக அளிக்கலாம்.

வேணு சுப்ரமணியம்,
ஃபிரிமான்ட் நகரவாசி

© TamilOnline.com