சேக்கிழார் அடிப்பொடி தி.ந. ராமச்சந்திரன்
சைவ சித்தாந்த அறிஞர், பெரிய புராணத்தின் பெருமையைப் பரப்பியவர், சிறந்த தமிழறிஞர் 'சேக்கிழார் அடிப்பொடி' தி.ந. ராமச்சந்திரன் (88) காலமானார். தில்லைஸ்தானம் நடராஜன் ராமச்சந்திரன் என்னும் தி.ந. ராமச்சந்திரன், ஆகஸ்ட் 18, 1934 அன்று நடராஜன் – காமாட்சியம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். வழக்குரைஞராகப் பணி செய்தார். திருலோக சீதாராமுடன் 'சிவாஜி' இதழில் பணியாற்றினார். பாரதியியல் அறிஞர். பாரதியின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். சேக்கிழார்மீது கொண்ட பெரும்பற்றால் 'சேக்கிழார் அடிப்பொடி' ஆனார். 'பெரியபுராணம்' குறித்தும் 'சைவ சித்தாந்தம்' குறித்தும் தமிழிலும், ஆங்கிலத்திலும் பல கட்டுரைகளை, நூல்களை எழுதியிருக்கிறார். பல்லாயிரக்கணக்கான நூல்கள் கொண்ட ஓர் அற்புத நூலகத்தைத் தன் வீட்டில் வைத்திருந்தார்.

தருமபுர ஆதீனம் வழங்கிய 'சைவ சித்தாந்த கலாநிதி', யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வழங்கிய டி.லிட். பட்டம் உள்படப் பல்வேறு சிறப்புகளும் விருதுகளும் பெற்றவர். வாழ்நாள் முழுவதும் சிவனையும், சேக்கிழாரையும், பெரிய புராணத்தையும், நாயன்மார்களையும் சிந்தித்து வணங்கி வாழ்ந்தவர். (விரிவான நேர்காணல் வாசிக்க)

முதுபெரும் அறிஞருக்குத் தென்றலின் அஞ்சலி!

© TamilOnline.com