அரிசி வடகம்
தேவையான பொருட்கள்

பச்சரிசி - 3 ஆழாக்கு
ஜவ்வரிசி - 1/2 ஆழாக்கு
எலுமிச்சம் பழம் - 1
உப்பு - கால் கரண்டி
பச்சை மிளகாய் - 10

செய்முறை

பச்சரிசி, ஜவ்வரிசி இரண்டையும் சுமார் 4 மணி நேரம் ஊற வைத்து, களைந்து, கிரைண்டரில் வழவழப்பாக அரைத்து எடுக்கவும்.

இதற்கிடையில் உப்பு, மிளகாய் இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும். மிளகாய் நன்றாக மசியட்டும்.

கிரைண்டரில் அரைத்த அரிசி விழுதை, தோசை மாவுப் பதத்துக்குத் தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் இதைப் போட்டு நிதானமாக அடுப்பை எரியவிடவும்.

நிதானமாகக் கிளறவும். கொஞ்சம்கூட விடாமல் பக்குவமாக மேலிருந்து கீழே, கீழிருந்து மேலே என்று கிளறவும். சுமார் 10 நிமிடங்கள் கிளறியவுடன் மாவு நன்றாக வெந்து சேர்ந்துவரும்.

மாவை கீழே இறக்கி கனமான மூடியால் மூடவும்.

ஒரு மணிநேரம் கழித்து உப்பு, மிளகாய் விழுது, எலுமிச்சம் பழச்சாறு இவற்றை விட்டுக் கையால் நன்றாகப் பிசையவும்.

சிறு உருண்டைகளாக உருட்டி நாடா அச்சில் போட்டு பிளாஸ்டிக் விரிப்பில் பிழியவும்.

மாவு கையில் ஒட்டாமல் இருக்கத் தண்ணீர் தொட்டு கொள்ளவும்.

மூன்று நாள் நல்லவெயிலில் காய்ந்தபின் எடுத்து உலர்ந்த டப்பாவில் சேகரிக்கவும்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com