நீலகண்ட பிரம்மச்சாரி
பகுதி - 7
ரங்கூன் மத்திய சிறைச்சாலையில் இருந்து, 1930 ஜூன் 30ம் நாளன்று விடுதலை செய்யப்பட்டார் நீலகண்ட பிரம்மச்சாரி. அப்போது அவருக்கு வயது 41. தேச விடுதலை வீரரராக, புரட்சிக்காரராக, எப்போதும் மன எழுச்சி மிகுந்தவராகச் சிறைக்குள் சென்றவர், வெளிவரும்போது தன்னுள் தன்னைக் கண்டுகொள்ள முயலும் ஒரு விவேகியாக, ஞான நாட்டம் உடையவராக மாறியிருந்தார்.

எழுத்தாளர் நீலகண்டன்
ரங்கூனிலிருந்து புறப்பட்டுச் சென்னைக்கு வந்து சேர்ந்தார் நீலகண்டர். எப்போதும் தீவிர எண்ணத்தைக் காட்டும் அவரது முகம் சாந்தம் தவழும் முகமாக மாறியிருந்தது. சிவந்த கண்கள், கருணையும் கனிவும் கொண்டதாய் ஆகியிருந்தது. பேச்சில் நிதானம் வந்திருந்தது. கோபமும் சீற்றமும் குறைந்து அன்பும், கனிவும், இரக்கமும் எப்போதும் தவழ்ந்தன. தனது நண்பரும், அப்போது 'தி இந்து', ஆங்கில வார இதழின் நிர்வாகியாக இருந்தவருமான கஸ்தூரி சீனிவாசனைச் சந்தித்தார். பத்திரிகைத் துறையில் தனக்கு இருந்த அனுபவத்தைக் கொண்டு, தனக்கு அங்கு ஏதாவதொரு வேலை தரும்படிக் கேட்டார். நீலகண்டனின் எழுத்துத் திறமைபற்றி முன்பே நன்கு அறிந்தவர் சீனிவாசன். ஆகவே, அவர் நீலகண்டரை ஹிந்துவுக்குத் தொடர்ந்து கட்டுரைகள் எழுதுமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி ஒன்பது சீக்கிய குருமார்களைப் பற்றி எழுத ஆரம்பித்தார் நீலகண்டர். ஆகஸ்ட் 3, 1930 அன்று, 'குருநானக்' பற்றிய முதல் கட்டுரை வெளியானது. தொடர்ந்து 'குரு நானக்கின் மதக்கொள்கை' பற்றி அடுத்த வாரம் எழுதினார். 'குரு கோவிந்த் சிங்' பற்றிய இறுதிக் கட்டுரை அக்டோபர் 12, 1930 அன்று வெளிவந்தது. 'என்.பி.' (N.B. - Neelakanda Brahmachari) என்ற புனைபெயரில் அவற்றை எழுதினார். சீனிவாசன், அவர் தொடர்ந்து எழுத ஊக்கமளித்தார். 'Woolen Handicraft in India', 'Cleopatra, The Snake of the River Nile' போன்ற கட்டுரைகளை எழுதினார். கிளியோபாட்ரா கட்டுரைதான் ஹிந்து இதழில் அவர் எழுதிய கடைசிக் கட்டுரை.

தட்சிண பினாகினி



இந்நிலையில் சுதேசமித்திரன் இதழில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அதில் 'சி.நீ.' (சி.நீ. = சிவராமகிருஷ்ணன் நீலகண்டன்) என்ற பெயரிலும், 'ஸ்ரீமான் என்.கே அய்யர்' என்ற பெயரிலும் தொடர் கட்டுரைகள் எழுதினார். 'லோடிகான் - ஓர் பட்டாணி வீரன்', 'கருணாகரத் தொண்டைமான்', 'ராஜா ரணமல்', 'பல்லவர் அரசு', 'கரிகால சோழர்', 'ராணி ராஜியா பீகம்', 'ராணி ருத்திராம்பாள்', 'அசோகச் சக்கரவர்த்தி', 'பாணிப்பட்டு யுத்தம்', 'கண்டி யுத்தம்', 'நகரக் கோட்டையின் கொள்ளை', 'சமயவரத்துச் சண்டை', 'கிருஷணகுமாரி' எனப் பல கட்டுரைகளை அவ்விதழில் எழுதினார்.

பிரம்மத்தைத் தேடி
1930 தொடங்கி பத்திரிகையாளராக, எழுத்தாளராக முயற்சிகளைத் தொடர்ந்தார் நீலகண்டர். ஆனாலும் நாளடைவில் இதில் அவருக்குச் சலிப்பு ஏற்பட்டது. எப்போதும் ஏகாந்தத்தில் திளைக்க விரும்பினார். இறைவனை நோக்கிய தனது பயணத்தில் இதுபோன்ற பணிகள் இடையூறுகளே என்று கருதினார். ஆகவே, ஒருநாள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல், உடுத்திய ஆடையுடன், ஒரு பரிவ்ராஜகராக, பிரம்மத்தைத் தேடும் பிரம்மசாரியாக, ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கினார். கிடைத்தால் உணவு, இல்லாவிட்டால் பட்டினி என்று நடந்தார். எப்போதும் 'ஓம்' என்ற மந்திரத்தை உச்சரித்து அதிலேயே திளைத்திருந்தார். சுடர்விடும் கண்கள், நீண்ட தாடி, முகத்தில் தேஜஸ் என்ற அவரது தோற்றத்தால் பலர் ஈர்க்கப்பட்டனர். வந்து வணங்கினர். பற்றற்ற சந்யாசியாகப் பயணம் தொடர்ந்தது.

அரவிந்தரின் முன்னுரை



ஹோஷங்காபாத்திற்கு அருகிலுள்ள ஒரு சிறிய பகுதியின் ராணி ஒருவர், தனது பயணம் ஒன்றில் நீலகண்டரைக் கண்டார். நீலகண்டரின் தோற்றத்தால் ஈர்க்கப்பட்ட அவர், தனது பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் பூசகராகப் பணியாற்றுமாறு நீலகண்டரை வேண்டிக் கொண்டார். வலியவந்த அழைப்பு என்பதால் நீலகண்டர் அதனை ஏற்றுக் கொண்டார். ஆலயத்துக்கு அருகில் சிறு குடில் ஒன்றை அமைத்து அதில் தங்கினார். புதிய சுவாமிகள் ஒருவர் அப்பகுதிக்கு வந்திருப்பதை அறிந்த மக்கள் பலரும் தினந்தோறும் அவரை நாடி வந்து வணங்க ஆரம்பித்தனர். ராணியும் இவரை மிகவும் மதித்து குருவாகக் கருதி அன்பு செலுத்தினார். இப்படிப் பலர் வரத் தொடங்கியது தனிமைத் தவத்திற்கு இடையூறாக இருந்ததால் அங்கிருந்தும் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறினார் நீலகண்டர்.

நந்தி மலையில்...
பல இடங்களிலும் சுற்றித் திரிந்தவர், மைசூரில் உள்ள 'நந்தி மலை' என்று அழைக்கப்படும் மலையின் அடிவாரச் சிற்றூரை அடைந்தார். அருகே சென்னகிரி மலை இருந்தது. அது மிகவும் செங்குத்தான மலை என்பதால் யாரும் அங்கே செல்வதில்லை. அந்த இடமும் அதன் தனிமையும் நீலகண்டருக்கு மிகவும் பிடித்துப்போனது. அங்கு 'தக்ஷிண பினாகினி' என்னும் புனிதநதி ஓடிக் கொண்டிருந்தது. அருகே பாழடைந்த மண்டபம் ஒன்று இருந்தது. அதைச் சுத்தம் செய்து அதிலேயே தங்கிக் கொண்டார். அந்த மண்டபத்துக்கு அருகில் பெரிய புற்று ஒன்று இருந்தது. ஒருநாள் அதனை அகற்றிப் பார்த்தபோது அதில் சிவலிங்கம் இருப்பது தெரியவந்தது. அதனைச் சீர்செய்து, மண்டபத்தில் பிரதிஷ்டை செய்தார். அதற்கு 'ஓம்காரேஸ்வரர்' என்று பெயர் சூட்டினார். அருகே இருந்த சுனையிலிருந்து நீர் கொண்டுவந்து தினந்தோறும் அதற்கு அபிஷேகம், பூஜை செய்தார். மலை, காடுகளில் கிடைத்த கனிகளை உண்டு தவ வாழ்வைத் தொடர்ந்தார். அதுவரை தேசியவாதியாக, பத்திரிகையாளராக இருந்த அவர், தன்னிறைவு கொண்ட தபஸ்வியாக நந்திமலையில் பரிணமித்தார். அப்போது அவருக்கு வயது 44.

சகோதரருக்குக் கடிதம்



மனிதப் புனிதர்
மலைமீது ஒரு மகான் தங்கியிருப்பதை அறிந்த கிராமத்து மக்கள் வந்து வணங்க ஆரம்பித்தனர். அவர்களுக்கு அபிஷேகம் செய்த புனித நீரைப் பிரசாதமாக வழங்கினார் நீலகண்டர். அவர் கை பட்ட நீர் பலரது நோய்களுக்கு மருந்தானது. சிவராத்திரி மற்றும் துர்காஷ்டமி நாட்களில் யாகங்களைச் செய்தார். சிவராத்திரி யாகத்திற்கு விபூதியையும், துர்கா அஷ்டமி யாகத்திற்குக் குங்குமத்தையும் பிரசாதமாக அளித்தார். அது பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியது. பலரது நோய்கள் அந்தப் பிரசாதங்களால் நீங்கின. பயன்பெற்ற மக்கள் அவரை அவதார புருஷராக, மனிதப் புனிதராகக் கருதி வணங்க ஆரம்பித்தனர். தங்களது உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கூறி, அங்கு வந்து வழிபடக் கூறினர். நாளடைவில் குதிரை வண்டி, மாட்டு வண்டி கட்டிக்கொண்டு அவரைத் தேடி வருவோரின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போனது.

தனித்த, அமைதியான வாழ்க்கையே நீலகண்டரின் விருப்பம். ஆனால், நடப்பதோ அதற்கு நேர்மாறாக இருந்தது. "இதற்காகத்தான் நான் இங்கு வந்தேனா, இதுதான் நான் பயிலும் ஆத்ம வித்யை, பிரம்ம வித்யையின் சாதனா வழிமுறையா?" என்று தனக்குள் தானே கேட்டுக்கொண்டார். மக்களின் அன்புத் தொல்லைகளிலிருந்து விலகி நிற்க விரும்பி, மலையின் மீதேறி மனிதர்கள் நடமாட்டமே இல்லாத அடர்ந்த காட்டுக்குள் சென்றார். அங்கு ஒரு குகையில் தங்கி தனது தியானத்தைத் தொடர்ந்தார்.

நந்தி மலையில் ஓம்காரேஸ்வரர் கோவில்



சத்குரு ஓம்கார்
தனித்திருந்து செய்த தியானத்தின் விளைவால் உள்ளொளி பெருகியது. மெய்ப்பொருள் விளங்கியது. தன்னுள் இருப்பதும், தன்னைத் தேடிவரும் மக்களிடம் இருப்பதும், எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதும் அந்தப் பரிபூரண பரப்பிரம்மமே என்ற உண்மை புலப்பட்டது. இந்நிலையில் ஒருநாள் மலை மேல் காட்டுத்தீ ஏற்படவே அங்கிருந்து கீழிறங்கி, முன்பு வசித்த மண்டபத்துக்கே வந்தார். மக்கள் மீண்டும் அவரைத் தேடி வந்து வழிபட்டனர். தான் கற்றதையும் பெற்றதையும் தன்னை நாடி வரும் தகுதியுள்ள அன்பர்களுக்கு போதித்தார் நீலகண்டர். சதா 'ஓம்' என்ற பிரணவத்தையே உச்சரித்து வந்ததால் அவரை 'ஓம்கார் சுவாமி' என்றும், 'சத்குரு ஓம்கார்' என்றும் அழைத்தனர். 'நீலகண்டன்' என்ற பெயர் மறைந்து 'சத்குரு ஓம்கார்' என்ற பெயரே நிலைத்தது.

ஓம்கார் ஆசிரமம்
அவரது ஆசிரமத்தை மக்கள் 'ஓம்கார் ஆசிரமம்' என்று அழைத்தனர். அவருக்கு வேண்டிய அரிசி, பாத்திரங்களை அவர்கள் கொண்டுவந்து கொடுத்தனர். இறைவனுக்கு நிவேதனம் செய்தபின் சுவாமி ஓம்கார். சிறிதளவு மட்டுமே தனக்கு உணவாக வைத்துக்கொண்டு, எஞ்சியதைப் பிரசாதமாகக் கொடுத்துவிடுவார்.

சுனை



புரட்சிக்காரராக இருந்தபோதும் சரி, கைதியாகச் சிறையில் இருந்தபோதும் சரி, எளிமையான வாழ்வே அவரது அடையாளமாக இருந்தது. அது இப்போதும் தொடர்ந்தது. ஒரு சிறிய மண்டபம்தான் அவரது ஆசிரமம். வெளியே நீளமான வராந்தா. உள்ளே சிறிய கருவறையில் நந்தியும் சிவனும். மின்விளக்கு கிடையாது. இரண்டு ஹரிக்கேன் விளக்குகளையும் பேட்டரி விளக்கையுமே இரவில் அவர் பயன்படுத்தினார். அவர் தங்குமிடம் அந்த வராந்தாதான். கட்டில், நாற்காலி எதுவும் கிடையாது. தரையில்தான் படுத்துத் தூங்கவேண்டும். விருந்தினர் வந்தாலும் அதே நிலைமைதான். நிரந்தரச் சீடர்கள் யாருமில்லை. சிலர் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அங்கே தங்கி தரிசித்துச் செல்வார்கள். அவர்களும் வராந்தாவில்தான் தங்க வைக்கப்பட்டனர். அனைவருக்கும் தன் கையாலேயே சமைத்துப் பரிமாறினார் சுவாமிகள்.

வாழைப்பழத்தையே பெரும்பாலும் உணவாக எடுத்துக்கொண்டார். சில சமயம் பால், காஃபி அருந்துவார், வருவோருக்கும் கொடுப்பார். வாரத்தில் ஒருநாள் மட்டும் காய்கறி கலந்த கிச்சடி அல்லது பொங்கல் செய்து சாப்பிடுவார். உணவுத் தேவை என்பதும் அவருக்கு மிக மிகக் குறைவாகவே இருந்தது.

உதவிகள்
அதுபோல அவரது தனிப்பட்ட தேவைகளும் மிகக் குறைவே. யாராவது அவருக்கு உதவி வேண்டுமா என்று கேட்டால், "எனக்குத் தேவைகள் உள்ளனதான். ஆனால், ஆசைகள் இல்லை" என்று கூறி மறுத்து விடுவார். அங்கு வருபவர்கள் தரும் சிறு பொருளைக்கூட அவர் கிராமப்புற மக்களின் வாழ்க்கைக்கே செலவிட்டார். ஏழைகளுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தார். குறிப்பாக சிறுவர், சிறுமிகளுக்கு புத்தகம், சிலேட்டு, பென்சில் போன்றவற்றை வாங்கிக் கொடுத்தார். சிவராத்திரி போன்ற விழா நாட்களில் குழந்தைகள், பெரியோருக்கு ஆடை வாங்கிக் கொடுப்பார்.

சுவாமி ஓம்கார் ஆசிரமம்



காந்தியுடன் ஒரு சந்திப்பு
1936ல் மகாத்மா காந்தி மைசூர் வந்திருந்தார். நந்தி மலையில் அவர் தங்கியிருந்தார். அவருடன் வல்லபபாய் படேல், ஜே.சி. குமரப்பா, மகாதேவ தேசாய் உள்ளிட்டோர் வந்திருந்தனர். தன் நண்பர் ஒருவர் மூலம், சுவாமி ஓம்கார், அருகில் சென்னகிரி மலையில் தங்கியிருப்பதை அறிந்த குமரப்பா, அவரைக் காணச் சென்றார். ஓம்காரைச் சந்தித்து ஆசி பெற்றார். மறுநாள் சர்தார் வல்லபாய் படேல், மகாதேவ தேசாய் ஆகியோரையும் அழைத்துச் சென்றார். அவர்கள் உரையாடல் தேசம், விடுதலை என்பவற்றைத் தாண்டி ஆன்மிக விடுதலை பற்றியதாகவே இருந்தது.

காந்தியிடம் இந்தச் சந்திப்பு பற்றிச் சொல்லப்பட்டது. சத்குரு ஓம்காரைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த காந்தி, நேரடியாக அவரைச் சந்தித்து உரையாட விரும்பினார். ஆனால், ஓம்கார் இருந்த மலையுச்சிக்கு வயதான காந்தியால் போகமுடியாத நிலை. அதனால், தனது செயலாளர் மகாதேவ தேசாய் மூலம் தன்னை வந்து சந்திக்குமாறு ஓம்காருக்கு அழைப்பு விடுத்தார் காந்தி. மே 30, 1936ல் அந்த அரிய சந்திப்பு நிகழ்ந்தது. அவர்களது உரையாடல் அரசியல் தவிர்த்து ஆன்மிகம் சார்ந்ததாகவே இருந்தது. 'ஆன்ம சாதனை' என்பது பற்றியே காந்தியும், ஓம்காரும் உரையாடினர். சுமார் இரண்டு மணி நேரத்துக்குமேல் அந்தச் சந்திப்பு நீடித்தது. சந்திப்பின் இறுதியில் தன்னிடம் விடைபெற்ற ஓம்காரிடம், தனது வார்தா ஆசிரமத்திற்கு வருமாறு வேண்டுகோள் விடுத்தார் காந்தி.

ஆன்மிகப் பயணங்கள்
அன்பர்களின் வேண்டுகோளை ஏற்று 1936 முதல் அவ்வப்போது சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கினார் ஓம்கார். மக்களைச் சந்தித்து அவர்களுக்கு வாழ்க்கை உண்மைகளைப் போதித்தார். 'அன்பு ஒன்றே நிரந்தரமானது. அது ஒன்றே அனைவரையும் பிணைக்க வல்லது' என்பதை எடுத்துரைத்தார். 1966வரை அவரது பயணங்கள் தொடர்ந்தன. பின்னர் உடல்நலிவுற்றதால் பயணங்களை நிறுத்திக்கொண்டு ஆசிரமத்துக்குத் தன்னை நாடி வருபவர்களுக்கு மட்டும் நல்வழி காட்ட ஆரம்பித்தார்.

சுவாமி ஓம்கார் சமாதி



மீண்டும் புத்தகங்கள்
தனது சிறை அனுபவங்களை 'Confessions' என்ற பெயரில் நூலாக எழுதியிருந்தார் நீலகண்டர். அதனை முதன்முறை சிறையிலிருந்து வெளிவந்ததும் 1920ல், ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்து அவரிடம் கையளித்திருந்தார். ஸ்ரீ அரவிந்தர் அதற்குச் சிறு முன்னுரையை எழுதித் தந்திருந்தார். ஆனால், நீலகண்டனாக எழுதியிருந்த அதனை, 'சுவாமி ஓம்கார்' ஆகப் பரிணாமம் பெற்ற நிலையில் வெளியிட விரும்பவில்லை. அதிலிருந்து சில கட்டுரைகளை மட்டும் 'Le Fraile' என்ற புனைபெயரில் 'வேதாந்த கேசரி'யில் எழுதினார். அவற்றை எல்லாம் தொகுத்து வெளியிடுமாறு அவரது அன்பர்கள் வேண்டிக் கொண்டபோதும், உள்ளுணர்வு அனுமதிக்காததால் அதனை அவர் அச்சிடவில்லை. தொடர்ந்து 'Upadesh' (உபதேஷ்) என்ற தலைப்பில் அவர் எழுதிய நூல், 1946ல் பெங்களூரில், ஒரு சிவராத்திரி தினத்தில் வெளியிடப்பட்டது. இது ஆன்மிக சாதனை, தவம், தியானம், அவற்றின் வழிமுறைகள் பற்றிச் சீடர்களுடன் ஓம்கார் உரையாடியதன் தொகுப்பாகும். மூன்றாவது நூல் 'Talks' (தேர்ந்தெடுத்த சொற்பொழிவுகள்). இது 1970ல் பெங்களூரில், சுவாமி ஓம்காரின் சீடர், மைசூர் கவர்னர் தர்ம வீரா அவர்களின் முன்னுரையுடன் வெளியானது. பின்னர் இந்த நூல்கள் தொகுக்கப்பட்டு ஒரே நூலாக, 'Confessions, Upadesh and TALKS' என்ற தலைப்பில் வெளியானது. தொடர்ந்து ஆர்கனைஸர் (Organiser) போன்ற ஆங்கில இதழ்களில் 'தர்மம்', 'சத்தியம்' ஆகியவை பற்றிப் பல கட்டுரைகளை எழுதினார் அவர். அவை தவிர்த்து பல்வேறு புனைபெயர்களில் ஆன்மிகம் மற்றும் தத்துவம் குறித்தும் பல இதழ்களுக்கு எழுதினார். அக்கட்டுரைகள் மூலம் அவரது ஆன்மிக அறிவும் மேதைமையும் வெளிப்பட்டது. அவரைப் பற்றியும், அவரது பண்டைய வாழ்க்கை பற்றியும், அவரது ஆன்மிக சாதனைகள் பற்றியும் பல கட்டுரைகள் தெலுங்கு மற்றும் ஹிந்தி இதழ்களில் வெளியாகின. பலர் அவரைத் தேடிவந்து சீடர்கள் ஆகினர். அதில் படிக்காத பாமரர் முதல், மைசூர் உயர்நீதிமன்ற நீதிபதி நிட்டூர் ஸ்ரீநிவாசராவ் வரை பலரும் அடக்கம்.

சிபாரிசு வேண்டாம்
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி நடந்து கொண்டிருந்த சமயத்தில், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தாமிரப் பட்டயம் வழங்கிக் கௌரவிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதையறிந்த சுவாமி ஓம்காரின் தம்பி லக்ஷ்மி நாராயண சாஸ்திரி, நீலகண்ட பிரம்மச்சாரி என்னும் சுவாமி ஓம்காரின் வாழ்க்கை குறித்து காமராஜருக்குத் தெரியப்படுத்தினார்.

இதையறிந்த சுவாமி ஓம்கார் மனம் புண்பட்டார். அதுகுறித்துத் தனது தம்பிக்கு எழுதிய கண்டனக் கடிதத்தில், "நீ ஸ்ரீ காமராஜிடம் சென்று என்னைப்பற்றி சிபாரிசு செய்திருப்பதை மிகவும் அவமானம் உண்டாக்குவதாகக் கருதுகிறேன். எனக்கு எவருடைய சிபாரிசும் தேவையில்லை. என் பேரும் செய்கைகளும் இந்நாட்டுச் சரித்திரத்தில் ஒரு முக்கிய பாகமாக ஏற்கனவே அமைந்திருக்கிறது. உன் சிபாரிசு அதன்முன் அல்பமானது. நீ உன் சொந்தக் காரியங்களைப் பார்த்துக் கொள்ளவும். என்னைப்பற்றி எந்தவிதமான சிபாரிசுகளும் செய்ய வேண்டிய அவசியமில்லை. இனி அப்படி ஏதேனும் செய்வாயானால் உன்னிடம் கடிதப் போக்குவரத்தை நிறுத்திவிடுவேன். இதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளவும்..." என்று கடுமையாக எச்சரித்து எழுதினார்.



சுவாமி ஓம்கார் உபதேசங்கள்
"வாழ்க்கை என்பது எதையும் தேடுவதல்ல. வாழ்க்கை என்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடு."
"வெற்றி உங்களுக்கு ஒருபோதும் நிலையான மகிழ்ச்சியைத் தர முடியாது. ஏனென்றால் வெற்றி என்பது முடிவற்றது. வெற்றியைப் பின்தொடர்வதும் முடிவற்றது."
"மகிழ்ச்சி என்பது இருப்பின் ஒரு குறிக்கோள். மற்ற அனைத்தும் அந்த முடிவுக்கானவையே."
"ஆன்ம வித்தை என்பது உங்களை நீங்களே உள்ளுக்குள் உணர்ந்து யாரென்று அறிவதுதான்."

மறைவு
1977ல் சிவராத்திரி விழாவுக்குத் தயாராகிக்கொண்டிருந்தார் சுவாமி. ஒருநாள் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடலின் இடது பாகம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டது. முன்போல் செயல்பட முடியாமல் ஆனது. உடல்நலம் தேறி அடுத்த ஆண்டு சிவராத்திரி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடலாம் என்றனர் பக்தர்கள். ஆனால், அது நிறைவேறவில்லை. மார்ச் 4, 1978 அன்று, அவரது ஆசிரமத்தில், அந்தச் சிறிய வராந்தாவிலேயே அவரது இறுதிமூச்சு அடங்கியது. அப்போது அவருக்கு வயது 89.

அவரது உடல் அந்த மலைப் பகுதியிலேயே தகனம் செய்யப்பட்டது. அங்கு ஒரு சிறு அடையாளச் சின்னமும் (நினைவுக் கல்) அமைக்கப்பட்டது.

வாழ்வின் சரிபாதி ஆண்டுகளைப் சுதந்திரப் போராட்டத்திலும், மீதி ஆண்டுகளை ஆன்மிக வாழ்க்கையிலும் செலவிட்டு மறைந்த நீலகண்ட பிரம்மச்சாரி என்னும் சுவாமி ஓம்கார், தேசப்பற்றுள்ள ஒவ்வோர் இளைஞனும் நினைவில் வைத்திருக்க வேண்டிய மாமனிதர்.

(நிறைவுற்றது)

பா.சு. ரமணன்

© TamilOnline.com