ஓவியர் கேதாரம் விஸ்வநாதன்
கோவிட்-19 தீநுண்மியை (வைரஸ்) அழிக்கும் உக்ர நரசிம்மர், யானை மீதேறி சமர் செய்யும் ஐயனார், அகோர வீரபத்திரர், கருடாழ்வார், பின்னர் நமக்கு மருந்தளித்துக் காக்கவரும் தன்வந்திரி பகவான், வெற்றிவேல் முருகன், வினை தீர்க்கும் விநாயகர், நந்தி, சிவபெருமான், வரமருளும் துர்கை என்று பார்க்கப் பார்க்க நம்மைப் பரவசப்படுத்துகின்றன இவரது ஓவியங்கள். இன்னும் திருக்குறள் ஓவியங்கள், வன உயிர்களைக் காக்கச் சொல்லும் விழிப்புணர்வு ஓவியங்கள் என்று விதவிதமான ஓவியங்கள் மூலம் நம் கவனத்தை ஈர்க்கிறார் கேதாரம் விஸ்வநாதன். டெல்லி இந்திராகாந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் செட் & டிசைன் பிரிவில் இணை இயக்குநராகப் பணிபுரியும் விஸ்வநாதன் பல்வேறு விருதுகளை வென்றவர். பல கண்காட்சிகளில் பரிசுகள் பெற்றவர். பல கலைவிழாக்களில் சிறப்பான பங்களித்திருக்கிறார். இவரோடு பேசியபடி கலைப்பாதையில் சற்றே நடப்போம் வாருங்கள்...

★★★★★


கே: ஓவிய ஆர்வம் ஏற்பட்டது எப்போது?
ப: பாரம்பரிய ஓவியக் குடும்பம் எங்களுடையது. தென்றலில் நீங்கள் நேர்காணல் செய்திருக்கும் பத்மபூஷண் வைத்தியநாத ஸ்தபதி எங்கள் உறவினர். எங்கள் முன்னோர்களில் பலரும் சிறந்த ஸ்தபதிகளாகவும், ஓவியர்களாகவும், கைவினைக் கலைஞர்களாகவும் இருந்திருக்கின்றனர். என் தந்தை கேதாரம் அவர்களும் சிறந்த ஓவியர். கும்பகோணம் ஓவியப்பள்ளியில் படித்தவர். பள்ளியில் அவருடன் படித்த கோபாலன், பிற்காலத்தில் புகழ்பெற்ற ஓவியரான 'கோபுலு'. அப்பாவுக்கு ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர் வேலை கிடைத்து. குடும்பச் சூழலால் ஓவியப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு வேலைக்குச் சேர்ந்தார். கோவில் சார்ந்த ஓவியங்கள் வரைவதில் மிகத் தேர்ந்தவர். நுணுக்கமான நகை வேலைப்பாடுகளுடன் ஓவியம் வரையக் கூடியவர்.

நலந்தரும் தன்வந்திரி பகவான்



அம்மா அலமேலு ரங்கோலி மிக அழகாகப் போடுவார். அதை ஊரே வந்து வேடிக்கை பார்க்கும். அம்மாவுக்கு உதவியாக நான் வண்ணம் தூவுவேன். கைவினைப் பொருட்கள், மண்வினைப் பொருள் (pottery) செய்வதில் திறமையானவர், மினியேச்சர்களைச் சிறப்பாகச் செய்வார். நுணுக்கமான வேலைப்பாட்டுடன் (நகைகளில் இருப்பதுபோல்) செய்யக்கூடிய திறமை அவரிடம் இருந்தது. அம்மா செய்வதைப் பார்த்து எனக்கும் இவற்றில் ஆர்வம் வந்தது. நானும் அதேபோல் வரையவும், மினியேச்சர்களைச் செய்யவும் ஆரம்பித்தேன். குறிப்பாக, அம்மாவின் பூத்தையல் (எம்பிராய்டரி) வேலை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அதைப் பார்த்துத்தான் எனக்குப் பெயிண்டிங்கில் ஆர்வம் வந்தது என்று சொல்லவேண்டும்.

கே: ஆரம்பகாலக் கலை முயற்சிகள் என்னென்ன?
ப: நான் 1964ம் வருடம், கும்பகோணம் அருகே சுவாமிலையில் பிறந்தேன். பள்ளிப்படிப்பு தாராசுரத்தில். சிறுவயது முதலே எனக்குக் கைவினைப் பொருட்கள் தயாரிப்பதில் அதிக ஈடுபாடு இருந்தது. குறிப்பாகச் 'சப்பர வண்டி' செய்து அதை நண்பர்களுக்குக் கொடுக்க எனக்கு மிகவும் பிடிக்கும். களிமண்ணால் சக்கரம் செய்து, அதைச் சுட்டு 100, 200 சக்கரங்கள் செய்வேன். சின்னத் தீப்பெட்டியில் கலர் பேப்பர் ஒட்டி, அலங்கரித்து, தெரு நண்பர்களுக்குக் கொடுப்பேன். கும்பகோணத்தில் எல்லாக் கோவில்களிலும் கொலு வைப்பார்கள். அதற்கான கைவினைப் பொருட்களை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்திருக்கிறேன்.

கோவிட் நாட்காட்டி வெளியீடு



பச்சைக் காளி, பவளக் காளி கலர் செய்து கொடுப்பேன். அதன் மூலமாக ஓவியம் வரைய நிறைய வாய்ப்புகள் வந்தன. அதுபோலப் பள்ளியில் எந்த விழா நடந்தாலும் நான்தான் டெகரேட் செய்வேன். எனது ஓவிய ஆசிரியர் என் திறமையை அறிந்து ஊக்குவித்தார். என் அண்ணன், அப்பா, அம்மா அனைவருமே என்னை ஊக்குவித்தனர்.

எனக்கு நன்றாகத் தைக்கத் தெரியும். டிசைனிங்கும் தெரியும். தீபாவளியின்போது புதிது புதிதாக ஆடைகளை வடிவமைப்பேன். எனது டிசைனை திருப்பூர் உள்படப் பல ஊர்களிலிருந்து வந்து வாங்கிப் போவார்கள். சினிமா ஸ்லைடுகள் நிறையச் செய்தேன். குடந்தையின் எல்லா தியேட்டர்களிலும் அவை காண்பிக்கப்பட்டன. போஸ்டர் டிசைன் செய்வேன். அவை நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், ரெடிமேட் ஷோரூம்கள் எனப் பலரும் பயன்படுத்தினர். இது போக விசிட்டிங் கார்ட், லெட்டர் பேட், லேபிள் என்று சிறு வயதிலேயே நிறையச் செய்திருக்கிறேன்.

அண்ணன் கே. சங்கரன் சிறந்த ஓவியர். அவர் கும்பகோணம் ஓவியப் பள்ளியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். என்னுள் இருக்கும் ஓவியனை அறிந்து, ஊக்குவித்து ஆளாக்கியவர்களில் அவரும் ஒருவர். ஓவியப் பள்ளியில் சேர்ந்து பயில அவர்தான் ஆலோசனை சொன்னார். பிற்காலத்தில் அவர் சென்னை ஓவியக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

விஸ்வநாதன் (சென்னை, 1986)



கே: ஓவியக் கல்லூரி அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்கள்...
ப: நான் தேர்ந்த ஓவியனாக ஆக வேண்டும் என்பதில் அண்ணா மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார். ஓவிய நுணுக்கங்கள் ஏராளமாகச் சொல்லிக் கொடுப்பார். பள்ளிப் போட்டிகளில் பரிசு பெற்றிருக்கிறேன். ஒவ்வோர் ஆண்டுமே தேர்வுகளில் நான் முதல் மாணவனாக வந்தேன். அங்கு படித்து முடித்தபின் சென்னை ஓவியக் கல்லூரியில் படித்தேன்.

புதிது புதிதாகக் கற்பதற்கு இந்தக் கல்லூரி நல்லதொரு வாய்ப்பைக் கொடுத்தது. திரு கங்காதரன், திரு ரெங்கராஜ், திரு பி.என். ராமசாமி போன்ற ஆசிரியர்கள் மிகுந்த அக்கறையோடு ஊக்குவித்தார்கள். கல்லூரியில் அதிகமாக நீர்வண்ணம், கோட்டோவியம், கிராஃபிக்ஸ், தைலவண்ணம் ஆகியவற்றில் தீட்டினேன். டெக்ஸ்டைல் பிரிவில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. எனது ஐடியாக்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு புதிதாகப் பல டிசைன்களை உருவாக்கினோம். எனக்கு அதனால் ஸ்காலர்ஷிப்பும் கிடைத்தது. கோயில் சார்ந்த ஓவியங்களை நிறைய வரைந்தேன்.

ரசிகர்களுடன் ஓவியர்



பட்டீஸ்வரத்தில் எல்லா மியூரல்களும் நான் ஒருவன் செய்ததுதான். சுமார் 1000 ஓவியங்களாவது இருக்கும். அதில் எனக்கு மிகுந்த பெருமை உண்டு. இந்திய வண்ணங்களைப் பயன்படுத்தினேன். தாராசுரம் கோவில் சிற்பங்களை ஓவியமாகத் தீட்டியிருக்கிறேன். சிறு வயதில் அக்கம் பக்கம் எல்லா கிராமங்களுக்கும் சென்று கோயில்களை, சிற்பங்களைப் பார்த்து வருவோம். குடந்தையில் படித்தபோது எனது ஓவியங்கள் மிகவும் பேசப்பட்டன. என் அண்ணனின் நீர்வண்ணப் (வாட்டர் கலர்) பாணி எனக்கு மிகவும் பிடிக்கும். அதைப் பின்பற்றி நிறைய ஓவியங்களைத் தீட்டியிருக்கிறேன்.

கே: ஒரு ஓவியராக நீங்கள் வாழ்க்கையைத் தொடங்கியது பற்றி...
ப: சென்னையில் படிக்கும்போது எனக்கு வளாக வேலைவாய்ப்பு (கேம்பஸ் ப்ளேஸ்மெண்ட்) கிடைத்தது. வடபழனியில் உள்ள 'மோஷன் கிராஃபிக்ஸ்' நிறுவனத்தில் வேலை. அது ஒரு 2D அனிமேஷன் நிறுவனம். பல மாணவர்கள் அங்கு வேலை செய்தனர். எனக்குப் பின்னணி ஓவியம் வரையும் வேலை. எனது உயரதிகாரி திரு உமேஷ். மிக நேர்த்தியாக ஓவிய வாழ்க்கையைத் தொடங்கினோம். சூரியனையே பார்த்ததில்லை என்னுமளவுக்கு இரவும் பகலும் வேலை செய்வேன். என் ஓவியத் திறன் மேம்படுவதற்காகக் கிடைத்த மேடை அது என்று சொல்லலாம்.

அந்த நிறுவனம் பஞ்சதந்திரக் கதைகளையும், How to learn cricket by Sunil Gavaskar என்ற 2D அனிமேஷன் தொடரையும் தொலைக்காட்சிக்காகத் தயாரித்தது. என்னுடைய பின்னணி வேலை ஒவ்வொரு எபிஸோடிலும் இடம் பெற்றது. அண்ணன் என்னைப் பாராட்டினார். 'விக்ரம்', 'புன்னகை மன்னன்' போன்ற படங்களுக்கும், டி.வி. விளம்பரங்களுக்கும் டைட்டில் special effects செய்து கொடுத்தேன்.

தந்தையார் திரு கேதாரம்



இது போக சனி, ஞாயிறுகளில் textile design, Logo Design, Spary work எனப் பல விளம்பர நிறுவனங்களில் பகுதிநேரம் வேலை செய்தேன். அதனால் குடும்பத்துக்குப் பண உதவி செய்ய முடிந்தது. சென்னையில் வாழ்ந்த அந்தக் காலம் எனது வசந்த காலம் என்றுதான் சொல்லவேண்டும். பின்னர் அந்த நிறுவனம் மூடப்பட்டது. அடுத்துக் கிடைத்த வாய்ப்புதான் டெல்லி IGNOU பணி.

கே: டில்லி வாழ்க்கை அனுபவங்களைப் பற்றிச் சொல்லுங்கள்...
ப: டெல்லி வாழ்க்கை மிகப் புதுமையாக இருந்தது. என்னை ஜூனியர் கிராஃபிக் ஆர்டிஸ்டாகத் தேர்ந்தெடுத்தார்கள். எனக்கு மொழிப் பிரச்சனை பெரிய சவாலாக இருந்தது. மெல்ல மெல்ல எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன். எனது திறமை மற்றும் அனுபவத்தைப் பார்த்து சீனியர் டிசைனராகப் பதவி உயர்த்தினார்கள். பள்ளிகள் மற்றும் விளம்பர நிறுவனங்களுக்கு டிசைன் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து Deputy Director (Graphic and Set). தற்போது Joint Director (I/C) Dept மற்றும் Animation & Graphic Dept. Incharge ஆகப் பணியாற்றி வருகின்றேன்.

இந்த இடைப்பட்ட காலத்தில் டெல்லி NCERTயில் குழந்தைகளுக்கான தொலைக்காட்சித் தொடரில் நிறைய Cutout, Animation, Muppet, Puppet, Back Ground, Set Design செய்துள்ளேன். அந்தக் காலத்தில் (1989-90) அவை மிகப் பிரமாதமாகப் பேசப்பட்டன. குழந்தைகளுக்கான தொலைக்காட்சித் தொடரில் டாக்டர் பெகி மோகன் வாய்ப்பளித்தார். அதுபோல DD News, DD Sports, Star TV, Zee TV, Aajtak News, India TV, India News, TV 99 போன்ற சேனல்களுக்கு எனது மனைவி கம்பெனியின் உதவியால் Set Design செய்து கொடுத்திருக்கிறேன். குறிப்பாக, UGC-CEC, NFCRT, NIOS, IGNCA போன்ற எல்லா கல்விச் சேனல்களிலும் எனது டிசைன், பேக்ரவுண்ட் பங்களிப்பு இருக்கிறது.

தீநுண்மியுடன் போரிடும் அய்யனார் (நாட்காட்டியில்), அய்யனார் குதிரைகள்



அது போல IGNOUவில், பலவகை Event Design செய்து கொடுத்துள்ளேன். எல்லா கோர்ஸ் மெட்டீரியல் கவர் டிசைன், பட்டமளிப்பு டிசைன், EMPC - Audio Video Programme, Animation and Graphic Design என்று பலவற்றைச் செய்துள்ளேன். இன்றும் செய்து வருகிறேன்.

கே: திருக்குறளை மையமாக வைத்து ஓவியங்களை வரைந்திருக்கிறீர்கள், அது குறித்துச் சொல்லுங்கள்.
ப: சிறு வயதில் இருந்தே திருக்குறள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு குறட்பாவையும் அழகான ஓவியமாக வரைய வேண்டும் என்ற ஆவல் எனக்கு இருந்தது. எனது நண்பர் திரு ராமமூர்த்தி எனது ஆர்வத்தைக் கண்டு, குறள் தொடர்பாக நிறையப் புத்தகங்களை வாங்கி அனுப்பினார். அதுவே என்னைக் குறள் பற்றி நிறைய வரையத் தூண்டியது. 1330 குறட்பாக்களுக்கும் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறேன். அது வருங்காலத் தலைமுறைக்கு மிகவும் உதவியாக, உந்துசக்தியாக இருக்கும் என்ற நம்பிக்கையில்.

அழிந்துவரும் கடல்வாழ் உயிரினம் - விழிப்புணர்வு ஓவியம்



கே: உங்களைக் கவர்ந்த ஓவியர்கள் யார் யார்?
ப: என் அண்ணன் கே. சங்கரன் என்னைக் கவர்ந்தவர். ஓவியமேதை ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள் மிகவும் பிடிக்கும். அதுபோல என்னை மெருகேற்றிய ஓவியர்கள் ஜாமினி ராய், அம்ரிதா ஷெர்-கில், நீர்வண்ண ஓவியர் பால்ராஜ், அருள்ராஜ் போன்றோரின் ஓவியங்கள் பிடிக்கும். ஆர்.கே. லக்ஷ்மண், கோபுலு, சில்பி இவர்களை மிகவும் பிடிக்கும்.

ஓவியங்களும் தெய்வங்களும்
கோவிட்-19 பிரச்சனைகள் காரணமாக, லாக் டவுன் காரணமாக எங்கள் அலுவலகத்தில் விடுமுறை அறிவித்தார்கள். எனக்கு அதிக நேரம் கிடைத்தது. அந்த நேரத்தில், 30 வருடங்களுக்குப் பிறகு, தீவிரமாக பெயிண்டிங் செய்ய ஆரம்பித்தேன். அந்தப் படங்கள் மூலம் கொரோனா பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினேன். தற்போது எனது ஓவியங்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன்.

பொதுவாக ஐயனாரைக் காவல் தெய்வம் என்பார்கள். நம்மைக் காப்பவை நமது தெய்வங்கள், அதுவும் காவல் தெய்வங்கள். அதற்காகவே அவற்றை ஊரின் எல்லையில் அமைத்தார்கள். அந்த எண்ணத்தில், ஐயனார் கொரோனாவுக்கு எதிராகப் போரிட்டு வெல்வது போல சுமார் 40, 50 ஓவியங்கள் வரைந்தேன். அதற்கு நிறையப் பாராட்டுக்கள், விருதுகள் கிடைத்தன. தொடர்ந்து குதிரை, யானை, நரசிம்மர், முருகன், வீரபத்திரர் போன்றோரும் கொரோனாவுடன் போரிட்டு வெல்வதாக வரைந்தேன். அதுபோல மக்கள் எல்லாருக்கும் கொரோனா எதிர்ப்புச் சக்தி கிடைக்கட்டும் என்று 'தன்வந்திரி பகவான்' படம் வரைந்தேன். என்னென்ன உணவு முறைகள் எப்படியிருக்க வேண்டும் என்பதையும் ஓவியங்களின் மூலம் சொன்னேன்.

இந்த விடுமுறைக் காலம்தான் என்னை மீண்டும் ஓவியத்தில் அதிகம் ஈடுபட வைத்தது. அதற்கு முன்பாக, 1989-95 காலத்தில் HIV, சாலை பாதுகாப்பு, விழிப்புணர்வு என்று நிறைய வரைந்தேன். பரிசுகள், பாராட்டுக்கள் பெற்றேன்.
கேதாரம் விஸ்வநாதன்


கே: ஓவியத்திற்கு நவீன தொழில்நுட்பம் எந்த அளவு உதவியாக இருக்கின்றன?
ப: நவீன தொழில்நுட்பம் மிக மிக அவசியம். இந்த நவநாகரீக காலத்தில் எல்லாருக்கும் உடனே ரிசல்ட் தேவைப்படுகிறது. அதற்கு நவீனத் தொழில்நுட்பம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. புதிதாக நிறைய மென்பொருள்கள் வந்துவிட்டன. அவற்றைப் பயன்படுத்துவது காலத்தின் கட்டாயம் என்று சொல்லலாம். அது ஒரு தனித்த அடையாளத்தையும் ஒருவருக்குப் பெற்றுத் தரும்.

ஜனாதிபதி மாளிகையில் அரங்க அமைப்பு



தொழில்நுட்பத்தோடு போட்டி போடுவது ஒரு சவால்தான். அது நல்ல ஆரோக்கியமான வளர்ச்சியைக் கொடுக்கும். அடுத்த பரிமாண வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாகவும் இருக்கும். நமக்குப் பழமை அவசியம். அதே சமயம் புதுமையும் தேவை. இரண்டுமே இரண்டு கண்கள் போன்றவை. நவீன தொழில்நுட்பந்தான் இன்றைக்கு டி.வி., மீடியா, சினிமா, விளம்பரங்கள் போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்துகிறது. அதன் உதவியோடும் கற்பனை வளத்தோடும் சாத்தியமானவைதான் ஜூமான்ஜி, ஜங்கிள் புக், அவதார், ஜுராசிக் பார்க் போன்ற படங்கள்.

கே: உங்கள் ஓவிய வாழ்வில் நிகழ்ந்த மறக்க முடியாத சம்பவங்கள், சுவையான நிகழ்வுகள் பற்றிச் சொல்ல முடியுமா?
ப: NIOS ஸ்டூடியோவுக்காக மிக நேர்த்தியாக டிஜிடல் பெயிண்டிங் செய்தேன். அதில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அப்துல்கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்தபோது, திரு பொன்ராஜ் அவர்களது அழைப்பின் பேரில் சென்று, அங்கு மல்டி மீடியா ஸ்டூடியோவுக்கு செட் டிசைன் செய்து கொடுத்தேன். அதைக் கலாம் அவர்கள் மனமுவந்து பாராட்டினார். இன்றுவரை அந்த அரங்கில்தான் எல்லாத் தலைவர்களும் சந்தித்து உரையாடுகிறார்கள். அதேபோல் பாரதப் பிரதமர் திரு. மோடி அவர்களுக்கு மன் கி பாத் (Mann ki baat) நிகழ்ச்சிக்கான அரங்க அமைப்பு செய்து கொடுத்தேன். அதுவும் மிகவும் பாராட்டப்பட்டது. இதெல்லாம் என்னால் மறக்கமுடியாது.

திருக்குறள் ஓவியம்



கே: போட்டோகிராஃபிக்கு அதிக முக்கியத்துவம் வந்துவிட்ட இந்த நாளில், ஓவியத்திற்கு நல்ல எதிர்காலம் உள்ளதா?
ப: புகைப்படம் என்பது ஒரு தனி உலகம். ஓவியம் என்பது வேறொரு தனி உலகம். வெள்ளம் வந்து ஆற்றுத் தண்ணீரை அடித்துச் செல்வதில்லை. அதுபோலத்தான் நுண்கலையான ஓவியமும். அது என்றும் நிலைத்திருக்கும். காலத்தால் அழியாது. ஓவியத்திற்கு என்றுமே தனி மதிப்பு உண்டு. அதில் அந்த ஓவியன் தன்னை முழுமனதுடன் ஐக்கியப்படுத்திக் கொள்வான். எது தேவை, எது தேவையில்லை என்பதை ஓவியத்தில் காட்டுவான். சொல்ல வேண்டிய கருத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்வது ஓவியம். இன்றைய நவீன காலக்கட்டத்திற்கு புகைப்படமும் அவசியம். அது காலத்தின் தேவை. ஆனால், அதனை ஓவியத்தோடு ஒப்பிட முடியாது. ஊர்க்குருவி ஒருபோதும் பருந்தாகாது. ஓவியத்திற்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.

என் அண்ணன்
அண்ணன் திரு கே. சங்கரன் கும்பகோணம் ஓவியப் பள்ளி மற்றும் சென்னை ஓவியக் கல்லூரி இரண்டிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். அவருடன் அந்தக் காலத்தில் பணியாற்றியவர்கள் தான் சந்தானராஜ் உள்ளிட்ட பலர். கும்பகோணம் மற்றும் சென்னை ஓவியக் கல்லூரி மூலம் நிறைய மாணவர்களை அவர் உருவாக்கினார். அக்காலத்தில் சென்னை ஓவியக் கல்லூரியின் குறிப்பிடத் தகுந்த ஆசிரியர்களுள் அவர் ஒருவர். அவரது மாணவர்கள் இன்று உலகம் பூராவும் பரவியிருக்கிறார்கள். தனது ஓவியங்களுக்காக நிறைய விருதுகளைப் பெற்றவர். எனது ஒவியப் பட்டங்கள் எல்லாம் அவருக்குத்தான் சமர்ப்பணம். அவரது தம்பி என்று சொல்லிக் கொள்வதில் நான் மிகுந்த பெருமை அடைகிறேன்.
கேதாரம் விஸ்வநாதன்


கே: இளம் ஓவியர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?
ப: அறிவுரை என்பதைவிட எனது வேண்டுகோள் என்று சொல்லலாம். நீங்கள் Life Study, Landscape, Still Life, History of Arts என்று புதிது புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டும். இவை உங்கள் எதிர்காலத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். அதுபோல எதையும் கூர்ந்து, உன்னிப்பாகப் பார்க்கப் பழக வேண்டும். அப்போதுதான் ஓவியம் தத்ரூபமாக வரும். ஓவியம் வரைய வயது ஒரு தடையே இல்லை. ஆர்வமும், முயற்சியும், பயிற்சியும்தான் முக்கியம்.

மேலும், கையால் மட்டுமே இந்த நவீன காலத்தில் வரைந்து கொண்டிருக்க முடியாது. புதிய மென்பொருள்கள், Maya 3DS Max, Photoshop, CorelDRAW, InDesign, 4K Cinema, Toonz Animation போன்றவற்றை அறிந்திருப்பதும் அவற்றில் நல்ல பயிற்சி பெற்றிருப்பதும் அவசியம். இவற்றில் நல்ல பயிற்சியும் அனுபவமும் வேலைவாய்ப்புக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

இரட்டைப் பிள்ளையார்



கே: உங்கள் குடும்பம் பற்றி.
ப: என் தாத்தா-பாட்டி கேதார்நாத் சென்று வேண்டிக்கொண்ட பிறகு பிறந்ததால் என் தந்தையார் பெயர் கேதாரம். அதுபோல காசிக்குச் சென்று வேண்டிக்கொண்டு பிறந்ததால் எனக்கு விஸ்வநாதன் என்று பெயர். எனது இரண்டு தங்கைகளும் அம்மா அலமேலுவைப் போலவே ரங்கோலிக் கலைஞர்கள். எனது தம்பி கே. சூர்யகுமார் ஒரு சிறந்த Animator and Graphic Artist. சென்னையில் பணிபுரிகிறார். எனது அக்காவின் குழந்தைகள் அனைவருமே ஓவியக் கல்லூரியில் பயின்றவர்கள்.

எனது மனைவி வி. மாலதி சொந்தமாக ஸ்டூடியோ வைத்திருக்கிறார். அதன்மூலம் ஓவியம், டிசைனிங், டிஜிடல் வொர்க்ஸ், ஆர்ட் வொர்க், பெயிண்டிங், மல்டி மீடியா டிசைனிங், ஈவென்ட் மேனேஜ்மென்ட், செட் டிசைன் என்று பல பணிகளைச் செய்கிறார்.

மனைவி மாலதியுடன்



எனது பெரிய பெண் ஸ்ரியா +2 படிக்கிறார். அவர் வரைந்த கொரோனா தொடர்பான ஓவியத்திற்கு 'Wacom tablet all in one model' போட்டியில் பரிசு கிடைத்தது. இந்தியா முழுவதிலுமிருந்து 480 பேர் பங்கேற்ற அந்தப் போட்டியில் என் மகளுக்குச் சிறந்த ஓவியத்துக்கான பரிசு கிடைத்தது.

சின்னவள் தனிஷா பத்தாம் வகுப்பு படிக்கிறார். டெக்னிகல் டிராயிங் கற்று வருகிறார். நன்கு வரைவார். இருவருமே கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி இரண்டும் கற்கிறார்கள். பத்மபூஷண் டாக்டர் யாமினி கிருஷ்ணமூர்த்தியின் பள்ளியில் பரதநாட்டியம் கற்கிறார்கள். எங்கள் குடும்பமே கலைஞர்கள் குடும்பம்தான் என்று சொல்லிக் கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்..

வேற்றுமையில் ஒற்றுமை - கோவிட் தந்தது!



கே: எதிர்காலத் திட்டங்கள் என்ன?
ப: ஒரு நல்ல ஓவியனாக வேண்டும். என் ஓவியங்கள் மூலம் மக்கள் மனதில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். இந்திய சிற்பம் மற்றும் ஓவியக் கலையின் பெருமையை ஓவியங்கள் மூலம் பலரையும் அறியச் செய்யவேண்டும். நமது பண்டைய பாரம்பரியம், கட்டடக்கலை, ஓவிய, சிற்பக் கலைகளை உலகுக்கும் அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்ல விரும்புகிறேன்.

உரையாடல்: அரவிந்த்

பங்கேற்ற போட்டிகள், கண்காட்சிகள்
ரவீந்திரநாத் தாகூர் கண்காட்சி - 2014
சர்வதேசக் கலை விழா, ஜெய்ப்பூர் - 2018
எல்.கே.ஏ. சர்வதேச கலா மேளா - 2018
CWAI உலகக் கல்விக் கண்காட்சி
9வது அகில இந்திய டிஜிட்டல் கலைக் கண்காட்சி (AIFACS, புது தில்லி. 2019)
92ம் ஆண்டு அகில இந்திய கலைக் கண்காட்சி (AIFACS, 2019)
ஷேர் ஆர்ட் ஷேர் ஸ்மைல்ஸ் போட்டி
தேசிய கலா மேளா - 2020
சர்வதேச ஆன்லைன் ஓவியப் போட்டி 2020 - (பிந்தாஸ் ஆர்ட் கேம்ப் - 2020)
சர்வதேச ஆன்லைன் ஓவியப் போட்டி - கொரோனா -19. (பிந்தாஸ் ஆர்ட் கேம்ப் - 2020)
லலித் கலா அகாடமி - இருவர் கண்காட்சி
என்.எஸ்.டி. சர்வதேச நாடக விழா
மற்றும் பல.


பிற பங்களிப்புகள்
ஒலிம்பிக் ஓவியம், 2011 (தொலைகாட்சிக்காக)
ஒலிம்பிக் ஓவியம், லண்டன், டி.டி. நியூஸ்
காமன்வெல்த் விளையாட்டு ஓவியம் (2006 & 2010)
யு.ஜி.சி-சி., இ.சி ஸ்டுடியோ - டிஜிட்டல் பெயிண்டிங்
டிவி 99 - முழு வடிவமைப்பு
சஹாரா டிவி - வடிவமைப்பு, செய்தி அறை
இந்தியா நியூஸ் - வடிவமைப்பு, செய்தி அறை
உலக ஜப்பான் கண்காட்சி ஓவியம் மற்றும் புத்தக வடிவமைப்பு, தேசிய அருங்காட்சியகம்
ஐ.ஜி.என்.சி.ஏ.க்கான காஷ்மீர் விழா, மீடியா சென்டர் ஸ்டூடியோ
இளைஞர் காமன்வெல்த் விளையாட்டு ஓவியம், புனே
மற்றும் பல.

© TamilOnline.com