பவ ஔஷதீஸ்வரர் ஆலயம், திருத்துறைப்பூண்டி
தமிழ்நாட்டில் திருவாரூரில் இருந்து 30 கி.மீ. தூரத்தில், திருத்துறைப்பூண்டி நகரின் மையத்தில் இவ்வாலயம் உள்ளது. சென்னையிலிருந்து பேருந்து, ரயில், கார் வசதிகள் உண்டு.

இறைவன் திருநாமம் பவ ஔஷதீஸ்வரர் என்னும் பிறவி மருந்தீஸ்வரர். இறைவியின் நாமம் பிரகந்நாயகி, பெரியநாயகி, தீர்த்தவல்லி. தலவிருட்சம் வில்வமரம். தீர்த்தம் பிரம்ம தீர்த்தம். ஒன்பது ரிஷிகளும் ஈசனைத் தொழுத இடம் இது. பிறவி எடுத்த அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் துன்பம் வருகிறது, அதிலிருந்து விடுபட பவ ஔஷதீஸ்வரரை வழிபடுவது சிறப்பு. இங்கு அஸ்வினி நட்சத்திர தேவதைகளும், மருத்துவ தேவதைகளும் தினமும் வந்து வழிபடுவதாக ஐதீகம். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தம் வாழ்நாளில் ஒருமுறையாவது இத்தலத்திற்கு வந்து சிவனை வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது அப்படி வருபவர்கள் தன்வந்திரி, சனி பகவான் ஹோமம், செவ்வாய் வழிபாடு செய்தால் நோயற்ற வாழ்வு பெறுவர் என்பது ஐதீகம்.

கஜசம்ஹார மூர்த்தி



ஜல்லிகை என்பவள் அரக்க குலத்தில் பிறந்த சிறந்த சிவபக்தை. அவள் கணவன் மனிதரை உண்ணும் அரக்கனான விருபாட்சன். அந்தணச் சிறுவன் ஒருவன் தன் தந்தைக்குச் சிராத்தம் செய்ய கங்கைக்குச் சென்று கொண்டிருந்தான். விருபாட்சன் அவனை விழுங்க முயன்றான். ஜல்லிகை 'அந்தணர்களை விழுங்காதே' என்று கணவனைத் தடுத்தாள். அவள் சிவனை வணங்கி, "என் கணவன் நல்லவனல்லன். இருந்தாலும் அவனின்றி நான் வாழமுடியாது. அவனது அரக்க குணத்தை மாற்றிவிடு, இல்லையேல் எனக்கு இவ்வுலகை விட்டு விடுதலை கொடு" என வேண்டிக்கொண்டாள். அம்பாள் அருளால் விருபாட்சன் புத்துயிர் பெற்றான். தன் வயிற்றில் இருந்த அந்தணச் சிறுவனை எழுப்பினாள். "அம்மா, நான் என் வழியில் சென்று கொண்டிருந்தபோது இவன் என்னை விழுங்கினான். விதி முடிந்த என்னைப் பிழைக்கச் செய்த காரணம் என்ன?" என்று கேட்டான் அந்தச் சிறுவன். அதற்கு அம்பாள், "எவன் தந்தை இறந்த பின்னும் அவருக்கு ஆண்டுதோறும் தவறாமல் சிராத்தம் செய்கிறானோ அவனுக்கு என்னருள் உண்டு. அவன் தந்தைக்கும் சொர்க்கத்தில் இடமளிப்பேன்" என்று வரமளித்தார். பின் ஜல்லிகையிடம் "எவளொருத்தி எத்தனை துன்பம் வரினும் இன்முகத்தோடு கணவனுக்குச் சேவை செய்கிறாளோ அவளுக்கு மாங்கல்ய பலம் அருள்வேன்" என்றாள்.

இறைவன், இறைவி இருவரும் இத்தலத்தில் பிறவிப் பெரும்பிணிக்கு மாமருந்தாக எழுந்தருளி உள்ளனர். இங்கே கஜமுகாசுரனைக் கொன்ற கஜசம்ஹார மூர்த்தி திருவுருமும் உள்ளது.



கோவில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவன் மேற்கு நோக்கியும் இறைவி கிழக்கு நோக்கியும் தனித்தனிச் சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். கோவிலுக்கு முன்புறம் பிரம்ம தீர்த்தம் உள்ளது. வரசித்தி விநாயகர், தீர்த்தவிட்டல விநாயகர், நாரத விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன் சன்னிதிகள் உள்ளன. தியாகராஜர், மரகதலிங்கத்தையும் உள்ளே காணலாம்.

கோவிலில் சித்திரைத் திருவிழா, நவராத்திரி, சிவராத்திரி விழா போன்றவை சிறப்பாக நடைபெறுகின்றன. குழந்தை பிறக்க, விவாகத்தடை நீங்க, கல்வியில் சிறக்க இறைவனைப் பிரார்த்தனை, அபிஷேகம் செய்து, இறைவன் இறைவிக்கு வஸ்திரம் அணிவிக்கின்றனர். அமாவாசை, பௌர்ணமியில் இறைவனை வணங்கினால் அச்சங்கள் நீங்குகின்றன.

ஆலயம் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும். அன்னை பிரகந்நாயகி, பவ ஔஷதீஸ்வரர் இவர்களின் வரமும் ஆசியும் பக்தர்களின் பிறவிப்பிணிகளுக்கு அருமருந்தாகின்றது.

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com