பத்ம விருதுகள்
இந்திய அரசின் குடிமைசார் விருதுகளில் உயர்ந்தவையான பத்ம விருதுகள் 2021ம் ஆண்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. பத்மஸ்ரீ விருதை 102 பேரும், பத்மவிபூஷண் 7 பேரும், பத்மபூஷண் 10 பேரும் பெறுகின்றனர். இவர்களில் 16 பேருக்கு இறப்புக்குப் பின் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது பெறுவோரில் 29 பேர் பெண்கள். ஒருவர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர். 10 வெளிநாட்டவர் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் இவ்விருது பெறுகின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் இவ்வாண்டு விருதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

பிரபல பின்னணிப் பாடகி கே.எஸ். சித்ரா (கேரளா சார்பாக) பத்மபூஷண் பெறுகிறார். பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கும், அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப விஞ்ஞானி நரீந்தர் சிங் கபானிக்கும் பத்மவிபூஷண் (இருவருக்கும் மறைவுக்குப்பின்) வழங்கப்படுகிறது.

மகளிர் கூடைப்பந்து வீராங்கனை அனிதா பால்துரை, பட்டிமன்றப் பேச்சாளர், பேரா. சாலமன் பாப்பையா, வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம், இசைக்கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ, மறைந்த ஓவியர் அம்புலிமாமா சங்கர், சாதனை விவசாயி கோவை பாப்பம்மாள், ஐந்து ரூபாய் டாக்டர் என்று புகழப்பெற்ற மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன், தொழில் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தொழில்நிறுவனர் பி. சுப்பிரமணியன் (மறைவுக்குப் பின்) ஆகியோர் தமிழகத்திலிருந்து பத்மஸ்ரீ பெறுகின்றனர்.

காரைக்காலைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியரும், பொம்மலாட்டக் கலைஞருமான கேசவசாமியும் பத்மஸ்ரீ விருது பெறுகிறார்.

விருதும் கேடயமும் கொண்ட இப்பரிசு வரும் மார்ச்/ஏப்ரல் மாதங்களில் ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்பட இருக்கிறது.

விருது பெற்றவர்களுக்குத் தென்றலின் வாழ்த்துக்கள்!

© TamilOnline.com