டொமினிக் ஜீவா
ஈழத்தின் இலக்கிய முகமாக அறியப்பட்டவரும், 'மல்லிகை' இலக்கிய இதழை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வந்தவருமான டொமினிக் ஜீவா (94) காலமானார். 1927 ஜூன் 27ம் நாள் இலங்கையில் பிறந்தார். ஒடுக்குமுறையின் காரணமாக ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே கல்வி பயின்றார். இயல்பிலேயே புத்திக்கூர்மை கொண்டிருந்த டொமினிக், வாசிப்பினால் அறிவை மேம்படுத்திக் கொண்டார். ஆரம்பித்தில் திராவிட இயக்க அபிமானியாக இருந்தவர் பின்னர் பொதுவுடைமைச் சிந்தனையால் ஈர்க்கப்பட்டார். தந்தைக்கு உதவியாக முடிதிருத்தும் தொழிலில் ஈடுபட்டார். நாளடைவில் அந்தக் கடையையே தனது வாசகசாலையாக ஆக்கி அதன்மூலம் தனது எழுதுப்பணியைத் தொடர்ந்தார். பொதுவுடைமை இயக்கவாதி ஜீவானந்தம் அவர்கள்மீது கொண்ட மதிப்பால் 'டொமினிக்' என்ற இயற்பெயர் 'டொமினிக் ஜீவா' ஆனது.

தனி ஒருவராக 'மல்லிகை' என்ற இலக்கிய இதழை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தினார். 'மல்லிகைப் பந்தல்' என்ற பதிப்பகத்தையும் ஆரம்பித்து நல்ல நூல்களை வெளியிட்டு வந்தார். 'மல்லிகை' இதுவரை 401 இதழ்கள் வெளிவந்திருப்பது ஓர் இலக்கிய சாதனையாகும். 'மல்லிகை ஜீவா' என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.

'சாலையின் திருப்பம்', 'வாழ்வின் தரிசனங்கள்', 'தண்ணீரும் கண்ணீரும்', 'பாதுகை', 'டொமினிக் ஜீவா சிறுகதைகள்' போன்றவை இவரது சிறுகதைத் தொகுப்புகள். 'அச்சுத்தாளினூடாக ஓர் அனுபவப் பயணம்', 'நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்', 'முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்', 'அனுபவ முத்திரைகள்', 'எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்' போன்றவை இவரது குறிப்பிடத் தகுந்த கட்டுரைத் தொகுப்புகள். இலங்கையின் சாகித்ய மண்டல விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளா் இவா்தான். இவரது இலக்கியச் சாதனையைக் கௌரவிக்கும் பொருட்டு, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இவருக்கு, 2013ல் 'இயல்' விருது வழங்கிச் சிறப்பித்தது.

மூப்பின் காரணமாக டொமினிக் ஜீவா காலமானார்.

© TamilOnline.com