பழக்கமான பாதை
கடந்த 3 மாதங்களில் மூன்று புலம்பெயர்ந்த இந்தியக் குடும்பங்களுடன் பேச நேர்ந்தது. ஏறத்தாழ மூவரும் ஒருமித்துச் சொன்னது "குழந்தைகள் தமக்கென்று ஒரு அடையாளம் இல்லாமல் போய்விடுவார்களோ என்ற கவலையால், இன்னும் இரண்டு வருடங்களுக்குள்--அதாவது குழந்தைக்கு 5-7 வயதுக்குள்--இந்தியாவுக்குத் திரும்பி வந்துவிடப் போகிறோம்."

இந்தியாவிலோ திரும்பிய இடமெல்லாம் 'Call center', அதன் சமூக, வாழ்வியல் தாக்கம் பற்றிய விவாதங்கள். 'மேற்கத்திய கலாசார மோகம்' பற்றிய காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் - 'சீரழியும்' இளைய தலைமுறை பற்றிய குமுறல்கள்.

அனைவரும் எனக்குப் பழக்கமான உலகம் வேண்டும்; அதுவே நல்ல உலகம், பாதுகாப்பான உலகம் என்ற மாயமானைத் தேடிப் போவதாக எனக்குப்படுகிறது. மாற்றம் அதனளவில் நல்லதோ தீயதோ அல்ல. மாறிவரும் உலகில், விட்டொழிக்க வேண்டியவை எவை, விடாப்பிடியாகக் கடைப் பிடிக்கவேண்டியவை எவை, மாற்றிக் கொள்ள வேண்டியவை எவை என்ற கேள்வியை அடிப்படையில் ஆராய்ந்து அவரவர் தமது நிலைக்கேற்ப ஒரு முடிவெடுக்க வேண்டும். 'Formula-based thinking' உதவாது.

காலத்திற்கேற்ப மாறினாலும், தமது தனித்தன்மை துலங்க சரியாக நடைபோட்டு வரும் இரண்டு பத்திரிக்கை உலக ஜாம்பவான்கள் சமீபத்தில் புதிய சாதனைகளைப் படைத்தன. ஒன்று, இந்து நாளேடு ஒரு மில்லியன் பிரதிகளைத் தாண்டியது; இரண்டாவது 'ஆனந்த விகடன்' விற்பனையில் முதலிடத்தைப் பிடித்தது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் பிறந்த நாளில் தமிழகத்தில் அடிபடும் சொற்றொடர்தான் இங்கே பொருத்தமானது: 'வாழ்த்த வயதில்லை; வணங்குகிறோம்'.

போர் விமானங்களைத் தாங்கும் திறனுடையது எங்களது சமாதானப் பேருந்து என்று இந்திய, பாகிஸ்தான் மக்களும், பதவியிலுள்ளோரும் செயலாற்றியுள்ளனர். சமாதான முயற்சிகள், உள்ளிருக்கும் மற்றும் வெளியில் இருக்கும் எதிரிகளிடமிருந்து வந்து கொண்டிருக்கும் குழப்படிகளைத் தாண்டி, தடையின்றி முன்னேற வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு எங்களது அலுவலகத்து மின்னஞ்சல் வேலை செய்யவில்லை. கிட்டத்தட்ட அடிதடி ரகளைதான்; முன்னெப்போதையும் விட அழுத்தமாக மின்னஞ்சல் தினசரி வாழ்வின் பிடித்த பிடியைப் புரிந்து கொள்ள முடிந்தது.

மீண்டும் சந்திப்போம்
பி. அசோகன்
மே 2005

© TamilOnline.com