நீலகண்ட பிரம்மச்சாரி (பகுதி-5)
புனைபெயர்களில் புரட்சியாளர்கள்
நீலகண்ட பிரம்மச்சாரியின் புரட்சி நடவடிக்கைகள் தொடர்ந்தன. ஊர் ஊராகச் சென்று கூட்டம் நடத்துவதும், ரகசிய சங்கத்திற்கு ஆட்களைத் திரட்டுவதுமாக அவர் பணி தொடர்ந்தது. அதே சமயம். பிரிட்டிஷ் உளவாளிகளின் தொல்லைகளைத் தவிர்ப்பதற்காகச் சங்க உறுப்பினர்கள் அனைவரும் புனைபெயர்கள் மற்றும் சங்கேதச் சொற்கள் மூலமே தொடர்புகொள்வது என்று முடிவு செய்தனர். நீலகண்டன் 'நாராயணன் துபே' ஆனார். மட்டுமல்லாமல், 'கோவிந்த நாராயணன்', கோவிந்த துபே', 'நாராயண கோவிந்த துபே', 'நீலகண்ட தத்தா' என வேறு சில புனைபெயர்களிலும் அவர் செயல்பட்டார். சங்கரகிருஷ்ணன் 'ஹரி' என்ற புனைபெயரைக் கைக்கொண்டார். மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை 'கோவிந்தன்' என்ற பெயரில் உலவி வந்தார். இப்படி ரகசிய வேலைகளைத் தொடர்ந்தனர்.

முரண்பாடு
கிடைத்த ஓய்வு நேரத்தில் 'ஜப்பானின் வரலாறு', 'சனாதன தர்மம்' என்று இரண்டு நூல்களை எழுதியிருந்தார் நீலகண்ட பிரம்மச்சாரி. 'சனாதன தர்மம்' சிறு சிறு கட்டுரைகளாக ஏற்கனவே 'தர்மம்' இதழில் வெளியாகியிருந்தது. அவற்றையெல்லாம் தொகுத்து நூலாக அச்சிட்டு வெளியிட அவர் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், நிதிப் பற்றாக்குறை காரணமாக அம்முயற்சி தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இதனைப் பேச்சுவாக்கில் வாஞ்சியிடம் தெரிவித்தார். வாஞ்சி, தர்மராஜ ஐயரிடமிருந்து பணத்தைப் பெற்று அதனை நீலகண்டனிடம் கையளித்தார். அச்சிட அது போதுமான தொகையல்ல என்றாலும் நீலகண்டன் அதனைப் பெற்றுக்கொண்டார். சென்னைக்குச் சென்று, புகழ்பெற்ற கார்டியன் அச்சகத்தில் 'ஜப்பான் சரித்திரம்' நூலை அச்சுக்குக் கொடுத்தார். தொகை போதுமானதாக இல்லை என்பதால் அது அச்சேறவில்லை. அடுத்த சந்திப்பில் நூல்பற்றிக் கேட்டார் வாஞ்சி. நீலகண்டன் காரணத்தைக் கூறினார். ஆனால், வாஞ்சி அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அடுத்தமுறை வரும்போது புத்தகங்களுடன்தான் வரவேண்டும் என்று திட்டவட்டமாக வாஞ்சி சொன்னார். ஆனால், அது நடக்கவில்லை.

உறுப்பினர்களில் சிலர், புத்தகம் அச்சிட அளிக்கப்பட்ட தொகையைச் சங்க நடவடிக்கைகளுக்கோ அல்லது வேறேதேனும் வழியிலோ நீலகண்டன் செலவிட்டிருக்கலாம் என்று கருதினர். அது குறித்தும், சங்கத்தின் மேல் நடவடிக்கைகள் குறித்தும் வாஞ்சி புதுச்சேரிக்குச் சென்று, நீலகண்டனையும், மறைந்து வாழும் மாடசாமிப் பிள்ளையையும் சந்தித்து உரையாடி வருவது நல்லது என்று தெரிவித்தனர்.

ஆஷ் கொலைக்குத் திட்டம்
அந்தக் காலகட்டத்தில் ஆஷ், குற்றால அருவியில் வெள்ளையர்கள் நீராட வேண்டும் என்பதற்காக, இந்தியர்கள் அங்கு வந்து நீராடக்கூடாது என்று உத்தரவிட்டார். ஏற்கனவே சிதம்பரம் பிள்ளைக்குக் கடுங்காவல் தண்டனை கிடைக்கக் காரணமாக இருந்தவரும், சுப்பிரமணிய சிவத்தைச் சிறையில் தள்ளிக் கொடுமை செய்தவருமான ஆஷ் மீது கடுங்கோபத்தில் இருந்தனர் பாரதமாதா சங்கத்தினர். இந்த அறிவிப்பால் மேலும் சினமடைந்தனர். 'ஆஷைத் தொலைக்காவிட்டால் அவன் நம்மைப் போன்றவர்களைத் தேடிப் பிடித்து அழிப்பது நிச்சயம்' என்பது மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை போன்றோரின் கருத்தாக இருந்தது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆஷை ஒழித்துக் கட்டுவது என்று முடிவு செய்த அவர்கள், ஆஷின் அன்றாட நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடிவு செய்தனர். மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

வாஞ்சி-வ.வே.சு. ஐயர் சந்திப்பு
நீலகண்ட பிரம்மச்சாரியையும், மாடசாமிப் பிள்ளையையும் சந்திப்பதற்காக, ஒருமாத விடுமுறை எடுத்துக்கொண்டு, ஜனவரி 9, 1911 அன்று புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார் வாஞ்சி. உடன் சங்கரகிருஷ்ணனும் வந்திருந்தார். ஆனால், அவர்கள் வந்த நேரத்தில் நீலகண்டன் ஊரில் இல்லை. சகோதரி வாலாம்பாளின் திருமணத்துக்காக மூத்த அண்ணன் என்ற முறையில் சொந்த ஊரான எருக்கூருக்கு நீலகண்டன் சென்றிருந்தார். அதனால் வந்தவர்கள் மாடசாமிப் பிள்ளையைச் சந்தித்தனர். அவர்மூலம் வ.வே.சு. ஐயரைச் சந்திக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது.

ஐயர் தீரர். ஒருவரைப் பார்த்தவுடனேயே அவரைப்பற்றி எடைபோடும் திறன் மிக்கவர். வங்கப் பிரிவினைக்குக் காரணமாக இருந்த வில்லியம் ஹட் கர்சன் வில்லியைக் கொல்ல மதன்லால் திங்க்ராவைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி அளித்த அனுபவம் மிக்கவர். துடிப்பும் வேகமும் கொண்டிருந்த இளைஞன் வாஞ்சி, ஐயரை வெகுவாகக் கவர்ந்தான். ஐயர், ஏற்கனவே, இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக 'தர்மாலயம்' என்ற பெயரில் ஓர் இல்லம் அமைத்து குத்துச்சண்டை, குஸ்தி, சிலம்பம் போன்ற பயிற்சிகளைக் கற்பித்து வந்தார். கூடவே தேச விடுதலைப் பிரசங்கங்களும், ரகசியப் புரட்சி நடவடிக்கைகளும் அங்கு நடந்து வந்தன.

அந்த இல்லத்தில் வாஞ்சியைத் தங்கச்செய்த ஐயர், தேச விடுதலை தொடர்பாக பாரத வீரர்கள் செய்யவேண்டிய பணிகளைப் பற்றி எடுத்துரைத்தார். ஆங்கிலேயர்களுக்கு உயிர்ப்பயம் காட்டி அச்சுறுத்துவதும் அவர்களைக் கொல்வதுமே அவர்களை இந்தியாவை விட்டு வெளியேற்றுவதற்கான ஒரே வழி என்பது ஐயரின் உறுதியான கருத்து. அதனை வாஞ்சியின் மனதில் ஆழப் பதித்தார்.

வாஞ்சிநாதன் (அமர்ந்திருப்பவர்)



ஐயரின் போதனைகள்
பண விஷயத்தில் ஏற்கனவே நீலகண்டன்மீது கருத்து வேறுபாடு கொண்டிருந்த வாஞ்சி, அனுபவமும், ஆளுமையும் மிக்க வ.வே.சு. ஐயரால் ஈர்க்கப்பட்டார். நீலகண்டனைவிட ஐயர் மிகச்சிறந்த தலைவராகப் பட்டார். நீலகண்டனின் தலைமையில் செயல்படுவதை விடுத்து, இனி, வ.வே.சு. ஐயரின் தலைமையில் செயல்படுவதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தார். திருநெல்வேலியில் ஆஷ் செய்துவரும் அக்கிரமங்கள் குறித்து விரிவாக ஐயரிடம் எடுத்துரைத்த வாஞ்சி, ஆஷைக் கொல்லவேண்டும் என்ற எண்ணம் தங்களைப் போன்ற பாரதமாதா சங்கத்தினர் சிலருக்கு இருப்பதைத் தெரிவித்தார். ஏற்கனவே இதற்கான முயற்சியில் மாடசாமிப் பிள்ளை, மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை போன்றோர் ஈடுபட்டிருப்பதைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

எப்போதும் காவலர்களின் பாதுகாப்பில் இருக்கும் ஆஷ் போன்றவர்களைக் கொல்வது அவ்வளவு எளிதல்ல என்று எடுத்துரைத்த வ.வே.சு. ஐயர், காவலர்கள் அருகிலில்லாத நேரத்தில்தான் அது சாத்தியம் என்று விளக்கினார். மேலும் அதற்கு என்னென்ன செய்யவேண்டும், எந்த விதங்களில் ஒருவர் தயாராக இருக்க வேண்டும், ஒருவேளை மாட்டிக்கொள்ள நேர்ந்தால் என்ன செய்வது என்று எல்லாவற்றையும் விளக்கமாக வாஞ்சிக்குப் போதித்தார்.

சுமார் ஒருமாத காலம் புதுச்சேரியில் தங்கியிருந்த வாஞ்சி, சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார்.

பயிற்சியும் முயற்சியும்
அலுவலகத்திற்குச் சென்று தனது விடுப்பை மேலும் இரண்டு மாத காலத்திற்கு நீட்டித்தார் வாஞ்சி. சங்கரகிருஷ்ணன், தர்மராஜய்யர் போன்றோரைச் சந்தித்து புதுச்சேரியில் நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றி எடுத்துரைத்தார். சில நாட்கள் செங்கோட்டையில் இருந்தவர், பின் தனது நண்பர்களிடமும், உறவினர்களிடமும் பரோடாவிற்கு ஒரு பயிற்சிக்குச் செல்வதாகத் தெரிவித்து விடைபெற்றார். யாருக்கும் தெரியாமல் ரகசியமாகப் புறப்பட்டு புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார்.

வாஞ்சியையை வரவேற்றுத் தனது பயிற்சி நிலையமான 'தர்மாலயம்' இல்லத்தில் தங்கவைத்தார் வ.வே.சு. ஐயர். ஹரிஹர சர்மா போன்ற இளைஞர்கள் வாஞ்சிக்கு அங்கே உறுதுணையாக இருந்தனர். தினந்தோறும் விடியற்காலையில் வாஞ்சியை 'கரடிக்குப்பம்' என்ற மனித நடமாட்டமற்ற பகுதிக்கு அழைத்துச் சென்று, துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தார் ஐயர். மூன்று மாதப் பயிற்சிக்குப் பின் மேடம் காமாவிடமிருந்து பெற்ற ரிவால்வரை வாஞ்சிக்கு அளித்து விடை கொடுத்தார் ஐயர். கூடவே தேச விடுதலை உணர்வைத் தூண்டும், 'அபிநவ பாரத சமாஜத்தில் சேர்ந்துகொள்ளப் பிரமாணம்', 'ஆரியர்களுக்கு ஓர் ஆப்த வாக்கியம்' போன்ற, பிரிட்டிஷாருக்கு எதிராக விநியோகிக்க வேண்டிய துண்டுப் பிரசுரங்களையும், ரகசியப் புத்தகங்களையும் வாஞ்சியிடம் கையளித்தார்.

ஆஷை ஒழித்தே தீருவது என்ற வைராக்கியத்துடன் திருநெல்வேலிக்குப் புறப்பட்டுச் சென்றார் வாஞ்சி. 1911ம் வருடம், மே மாதத்தில் தனது வேலையை ராஜினாமா செய்தார். தொடர்ந்து பாரதமாதா சங்கத்தினர் சார்பாகச் சில ரகசியக் கூட்டங்களை நடத்தினார். அந்த நிகழ்வு ஒன்றில் ஆஷைக் கொல்வதற்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். எப்படி, எங்கே, எப்போது கொல்வது போன்ற திட்டங்கள் வகுக்கப்பட்டன.

புதுச்சேரியிலிருந்து வாரணாசிக்கு...
அதே சமயம், சொந்த ஊருக்குச் சென்றிருந்த நீலகண்ட பிரம்மச்சாரி புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். புதுவை நண்பர்கள் மூலம் நடந்த யாவற்றையும் அறிந்து கொண்டார். தனிமனித உயிர்க் கொலையை விரும்பாத நீலகண்டன், விஷயம் கைமீறிப் போனதை உணர்ந்தார். புதுச்சேரியில் இருப்பது உசிதமாக இராது என்று நினைத்தார். நிலைமை சரியான பிறகு திரும்பி வரலாம் என்ற எண்ணத்தில் தனது தந்தையின் நண்பர் வாழ்ந்த வாரணாசிக்குச் செல்லத் திட்டமிட்டார். புறப்படும் முன் பாரதியாரைச் சந்தித்து அதுபற்றி விளக்கியவர், பாரதியையும் தன்னுடன் காசிக்கு வந்துவிடுமாறு வேண்டிக் கொண்டார். ஆனால், செல்லம்மாளின் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் பாரதி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. மே மாத இறுதியில் காசிக்குப் புறப்பட்டுச் சென்றார் நீலகண்டன்.

ஆஷ் கொலை
1911 ஜூன் மாதம் 17ம் தேதி.
கொடைக்கானலில் படித்துவரும் தனது மகன் மற்றும் மகளைப் பார்ப்பதற்காக மனைவியுடன் ரயிலில் புறப்பட்டார் கலெக்டர் ஆஷ். திருநெல்வேலி சந்திப்பிலிருந்து காலை 9.30 மணிக்கு அந்த ரயில் புறப்பட்டது. ரயில் புறப்பட்டதும் வேகமாக ஓடிவந்து இரண்டாம் வகுப்பில் ஏறிக்கொண்டனர் வாஞ்சியும், சங்கரகிருஷ்ணனும். மணியாச்சி ஜங்ஷனுக்கு சுமார் 10.35 அளவில் வந்து சேர்ந்தது அந்த ரயில். தூத்துக்குடியில் இருந்து வரும் போட் மெயில் க்ராஸிங்கிற்காக ரயில் அங்கே நிறுத்தப்படுவது வழக்கம். கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்பவர்கள், இந்த ரயிலில் இருந்து இறங்கி போட் மெயிலில் ஏறிக்கொள்வர்.

முதலாம் வகுப்பில் பயணம் செய்த ஆஷும் இம்மாதிரி இறங்கி ரயில் மாற வேண்டியவர்தான். ஆனால், மெயில் நடைமேடைக்கு வந்த பிறகு மாறிக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் வண்டியில் அமர்ந்திருந்தார். அவர் கொண்டுவந்த பொருட்கள் எல்லாம் வண்டியில் இருந்து இறக்கப்பட்டு, போட் மெயிலில் ஏற்றுவதற்குத் தயாராக இருந்தன. ரயிலின் முதல்வகுப்புப் பெட்டியில் ஆஷையும் அவரது மனைவியையும் தவிர வேறு யாருமில்லை. மனைவியுடன் ஏதோ சுவாரஸ்யமாய்ப் பேசிக் கொண்டிருந்தார் ஆஷ். மனைவி ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது பச்சை ஆடை அணிந்த ஓர் ஒல்லியான இளைஞர், திடீரென அந்த முதல்வகுப்புப் பெட்டியில் ஏறினார். அவரது கையில் துப்பாக்கி. அது ஆஷைக் குறிபார்த்தது. அதைக் கண்ட ஆஷ், உரத்த குரலில் கத்தியவாறே தொப்பியைக் கழற்றி அந்த இளைஞர்மீது வீசினார். அது குறிதவறிப் பிளாட்பாரத்தில் போய் விழுந்தது. அது விழவும் அந்த இளைஞரின் துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட குண்டு ஆஷ்மீது பாயவும் சரியாக இருந்தது. அந்த இளைஞரைப் பிடிக்க முயன்ற ஆஷ் வண்டியிலேயே சரிந்து விழுந்தார். அந்த இளைஞர் உடனடியாகக் குதித்து பிளாட்பாரத்தின் மறுமுனையை நோக்கி ஓடினார்.

வ.வெ.சு. ஐயர்



சத்தம் கேட்டுப் பலரும் அந்த ரயில்பெட்டி அருகே கூடினார். அதே சமயம் போட் மெயிலும் அங்கு வந்து சேர்ந்தது. அந்த இடமே களேபரமானது. உரத்துக் கூக்குரலிட்டவாறே சிலர் அந்த இளைஞரைத் துரத்திக்கொண்டு ஓடினர். அவர்களைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய அந்த இளைஞர், பிளாட்பாரத்தின் மறுமுனையில் இருந்த கழிவறைக்குள் புகுந்தார். சில நிமிடங்களில் உள்ளேயிருந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டது. தன்னையே சுட்டுக்கொண்டு வீரமரணம் எய்திய அந்த இளைஞர் 'வீர வாஞ்சி' ஆனார். உடன் வந்திருந்த சங்கரகிருஷ்ணன் இந்தக் களேபரத்தில் அங்கிருந்து தப்பித்துப் போய்விட்டார்.

ஆஷ் அதே ரயில்பெட்டியில் மருத்துவச் சிகிச்சைக்காக திருநெல்வேலிக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். தந்திகள் பறந்தன. 'ஆஷ் கொலை', 'திருநெல்வேலி மோசக் கொலை', 'இளைஞன் வெறிச்செயல்' என்றெல்லாம் செய்திகள் பரவின.

இறந்தது 'வாஞ்சி' என்பதை அவரது சட்டைப்பையைச் சோதனை செய்ததில் கிடைத்த கடிதம் மூலம் காவல்துறையினர் அறிய வந்தனர்.

அந்தக் கடிதத்தை ஆதாரமாக வைத்து விசாரணையைத் துவக்கியது காவல்துறை. செங்கோட்டைக்குச் சென்று வாஞ்சியின் வீட்டைக் கண்டறிந்து விசாரணை மேற்கொண்டது. சோதனையில் 'இந்தியா' இதழ்கள் சில, ரகசியக் குறிப்புகள் எழுதப்பட்ட கடிதங்கள் சில கண்டெடுக்கப்பட்டன. அந்தக் கடிதத்தில் இருந்த சிலரது பெயர்கள் மூலம் அவர்களது வீடுகளிலும் சோதனை நிகழ்த்தப்பட்டது. சோதனையில் மேலும் பல ரகசியக் கடிதங்களும், 'தர்மம்', 'இந்தியா', 'சூரியோதயம்' போன்ற இதழ்களின் பிரதிகளும், 'பரங்கிநாசினி' என்ற அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்ட, அபிநவ பாரத சங்கத்தில் சேர்ந்துகொள்ளக் கோரும் பிரமாணப் பத்திரமும், துண்டுப் பிரசுரங்களும் கிடைத்தன. தொடர் விசாரணைகள் அனைத்துமே புதுச்சேரியை நோக்கிக் கை காட்டின. மேலும், ஆஷைக் கொல்ல வாஞ்சி பயன்படுத்திய துப்பாக்கி பிரெஞ்சுத் தயாரிப்பு என்பதும் தெரியவந்தது. ஆகவே, புதுச்சேரியில் வாழும் சுதேசிகளில் சிலருக்கும் ஆஷ் கொலைக்கும் சம்பந்தம் உள்ளது என்று காவல்துறை முடிவு செய்தது. ஆனால், புதுச்சேரியில் பாரதியார், அரவிந்தர், வ.வே.சு. ஐயர் எனப் பல சுதேசிகள் அச்சமயம் இருந்ததால் அவர்களில் இதனுடன் தொடர்புள்ளவர் யார் என்று அறிய, கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியது.

கொல்லப்பட்டது ஒரு மாவட்டத்தின் கலெக்டர் என்பதால் எல்லா ஆட்சியாளர்களும் எச்சரிக்கப்பட்டனர். இந்தியா முழுவதிலும் ஆங்காங்கே இப்படித் தங்களுக்கு எதிராக அணி திரள்வார்களோ என்று பிரிட்டிஷார் சந்தேகித்தனர். கிடைத்த கடிதங்கள், ரகசியக் குறிப்புகள், பத்திரிகைகள், துண்டுப் பிரசுரங்கள் அனைத்துமே அவர்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தின. இவர்களை வழிநடத்துபவர் யாரென்று அறியக் கடும் விசாரணை மேற்கொண்டனர். கைதான சிலர் தாங்கள் நீலகண்ட பிரம்மச்சாரியின் பேச்சால் ஈர்க்கப்பட்டே பாரதமாதா சங்கத்தில் இணைந்ததாக வாக்குமூலம் அளித்தனர். கைதானவர்களைத் தனித்தனியாக மேலும் தீவிரமாக விசாரித்ததில் பலரும் குறிப்பிட்ட பெயர் 'நீலகண்ட பிரம்மச்சாரி' என்பதாகவே இருந்தது. நீலகண்டன், 'மான்தோல் வேண்டும்' என்று வாஞ்சிநாதனுக்கு எழுதியிருந்த கடிதமும் அகப்பட்டது. அதைச் சங்கேத வார்த்தையாக நினைத்த காவல்துறை, நீலகண்டன்தான் ஆஷ் கொலைக்கு வித்திட்டவர் என்று முடிவுசெய்தது. அவரையே முதன்மைக் குற்றவாளியாக அறிவித்து, அவரைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு என்று இந்தியா முழுதிலும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தது.

காசியில் இருந்த நீலகண்ட பிரம்மச்சாரியின் கண்களிலும் அந்தப் பத்திரிகை விளம்பரம் அகப்பட்டது. அதிர்ந்து போனார் அவர். தொடர்பே இல்லாமல் தன்னைக் குற்றவாளியாக அறிவித்திருப்பது கண்டு மனம் குமைந்தார் அடுத்து என்ன செய்வது என்பதைத் தனது தலைவர்களிடம் விவாதிக்க விரும்பி கல்கத்தா புறப்பட்டுச் சென்றார். சுரேந்திரநாத் பானர்ஜியைக் கண்டு தான் செய்யவேண்டியது என்ன என்பது குறித்து விவாதித்தார்.

நீலகண்டன்முன் மூன்று முடிவுகள் இருந்தன.
1. வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வது.
2. உள்நாட்டிலேயே தலைமறைவாக இருந்துகொண்டு புரட்சி வேலைகளைத் தொடர்வது.
3. ஆஷ் கொலையில் தனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாததால் காவல்துறையினரிடம் சரணடைந்து, நீதிமன்றம் மூலம் விடுதலை பெறுவது.

இவற்றில் முதல் இரண்டையும் அவர் மனம் ஏற்கவில்லை. முதல் வழியை ஏற்றுக்கொண்டால் அவர் சிறைவாசத்திலிருந்து தப்பிக்கலாம். ஆனால், தேச விடுதலை உணர்வை மறந்துவிட வேண்டியிருக்கும். இரண்டாம் வழியை மேற்கொண்டால் வெகுகாலம் மாறுவேடங்களில் ஒளிந்து வாழவேண்டும். அஞ்சி அஞ்சி நீண்டநாட்களுக்குப் புரட்சி சேவை செய்யமுடியாது. என்றேனும் ஒருநாள் 'இவர்தான் நீலகண்ட பிரம்மச்சாரி' என்று அடையாளம் காணப்பட்டு அகப்பட்டுக்கொள்ள நேரும். ஆகவே, மூன்றாவது வழியே அவருக்கு உசிதமானதாகத் தோன்றியது. அதன்படி ஜூலை 7 அன்று கல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் சரணடைந்தார் நீலகண்ட பிரம்மச்சாரி. ஜூலை 11 அன்று அவர் பலத்த பாதுகாப்புடன் திருநெல்வேலிக்கு அழைத்துவரப்பட்டார். நீதிபதி தம்பு என்பவரிடம் தனது வாக்குமூலத்தை அளித்தார். வாக்குமூலத்தில் பாரத மாதா சங்கம் மூலம் செயல்பட்டதை ஒப்புக் கொண்டார். என்றாலும் ஆஷ் கொலைக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்தார்.

ஆனால், காவல்துறை தனது விசாரணை அறிக்கையில், ஆஷ் கொலைக்கு பாரத மாதா சங்கம் என்ற ரகசிய இயக்கமே காரணம் என்றும், அதன் தலைவராகச் செயல்பட்ட, புதுச்சேரியில் வாழ்ந்த நீலகண்ட பிரம்மச்சாரியே முதன்மைக் குற்றவாளி என்றும் அறிவித்தது. அவருடன் சேர்த்து, 2. சங்கர கிருஷ்ணய்யர், 3. மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை, 4. முத்துக்குமாரசாமிப் பிள்ளை, 5. சுப்பையா பிள்ளை, 6. ஜெகநாத ஐயங்கார், 7. ஹரிஹர ஐயர், 8. பாப்புப் பிள்ளை என்கிற ராமசாமிப் பிள்ளை, 9. தேசிகாச்சாரி, 10. வேம்பு ஐயர் என்கிற மகாதேவ ஐயர் 11. சாவடி அருணாசலம் பிள்ளை, 12. அழகப்ப பிள்ளை 13. வந்தேமாதரம் சுப்பிரமணிய ஐயர் போன்றோர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே இளைஞர்கள். 25 வயதுக்குட்பட்டவர்கள். நீலகண்ட பிரம்மச்சாரியின் வயது 21. சங்கரகிருஷ்ணனுக்கோ 22. மற்றவர்களும் கிட்டத்தட்ட அதே வயதினர்தாம்.

வழக்கு விசாரணைக்கும், போலிஸ் கெடுபிடிகளுக்கும் அஞ்சி செங்கோட்டை தர்மராஜய்யர், புனலூர் வெங்கடேஸ்வர ஐயர் இருவரும் தற்கொலை செய்துகொண்டனர். வழக்கில் தொடர்புடைய கே.வி. ஆறுமுகம் பிள்ளை, ஒட்டப்பிடாரம் சோமசுந்தரம் பிள்ளை, சுந்தரபாண்டியபுரம் ராமசாமி ஐயர் மூவரும் அப்ரூவராக, அரசுத் தரப்பு சாட்சிகளாக மாறினர். மற்றொரு முக்கியக் குற்றவாளியான மாடசாமிப் பிள்ளை தலைமறைவானார். (அவர் என்ன ஆனார் என்பதை இறுதிவரை யாராலும் கண்டுபிடிக்க இயலவில்லை) ஆகவே, இந்த 13 பேரையுமே முக்கியக் குற்றவாளிகளாக அடையாளம் காட்டியது காவல்துறை. பிச்சுமணி ஐயர் என்பவரும் பின்னர் கைது செய்யப்பட்டு குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார். தீவிர விசாரணை நடந்தது. பின்னர் இவ்வழக்கின்மீது தீர்ப்பளித்த நீதிபதி தம்பு, வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டார்.

'திருநெல்வேலிச் சதி வழக்கு' என்று அழைக்கப்பட்ட இந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சர் அர்னால்ட் ஒயிட், ஐலிங், சங்கரன் நாயர் ஆகியோர் அடங்கிய தனிப்பிரிவு விசாரித்தது. 1911 செப்டம்பரில் தொடங்கிய இவ்வழக்கின் விசாரணை, பிப்ரவரி 2, 1912 அன்று முடிவுக்கு வந்தது. பிப்ரவரி 15 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீலகண்டனுக்கான தண்டனை குறித்து கீழ்க்கண்டவாறு தீர்ப்பில் குறித்திருந்தனர் நீதிபதிகள்:
"நீலகண்டர் என்ற பிரம்மச்சாரிதான் (முதல் குற்றம் சாட்டப்பட்டவர்) இந்தச் சதியின் சூத்திரதாரியாகவும் சதிகாரர்களை வழிநடத்திச் சென்றவராகவும் உள்ளார். இவர் மட்டும் இல்லையென்றால் இவரால் தவறாக வழிநடத்திச் சென்றவர்கள் இப்பொழுது குற்றவாளிக் கூண்டிலே நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. ஆகவே நீலகண்டருக்கு ஏழு வருடக் கடுங்காவல் தண்டனை விதிக்கிறோம்."

சங்கர கிருஷ்ணனுக்கு நான்காண்டு கடுங்காவல் தண்டனை கிடைத்தது. மற்ற சிலர் விடுதலை செய்யப்பட்டனர். சிலருக்கு மூன்றாண்டு, இரண்டாண்டு, ஓராண்டு என்று தண்டனை விதிக்கப்பட்டது.

இப்படிக் கடுங்காவல் விதிக்கப்பட்ட நீலகண்ட பிரம்மச்சாரி கோயம்புத்தூர் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டார். அவரைக் கண்டு காவல்துறை அஞ்சியது, அவர் இருந்த சிறை வளாகத்தின் 21 அறைகளையுமே முழுக்கக் காலி செய்து நடு அறையில் அவரை அடைத்தது என்பதையெல்லாம் முன்னரே பார்த்திருக்கிறோம். அதன் பின் என்ன நடந்தது என்பதை அடுத்துப் பார்ப்போம்.

(தொடரும்)

பா.சு.ரமணன்

© TamilOnline.com