நல்லது செய்யப்போய்....
அன்புள்ள சிநேகிதியே,
சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். இந்த கோவிட் சமயத்தில் யாருக்காவது உதவி செய்யவேண்டும் என்ற என் விருப்பத்தை இந்தியாவில் உள்ள என் உறவினருக்குத் தெரிவித்தேன். அவர்களுக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் இரண்டு பெண்கள். பெரியவள் கல்லூரிக்குப் போகிறாள். சிறியவள் 9ம் வகுப்பு. ஆன்லைன் படிப்பு. கம்யூட்டர், ஸ்மார்ட் ஃபோன் வசதிகள் தேவையாக இருக்கின்றன. அந்தத் தந்தைக்கு வேலை போய்விட்டது. மிகவும் கஷ்டப்படுகிறார்கள். உடனே நான் நெகிழ்ந்துபோய்ப் பணம் அனுப்பினேன். அந்தக் குடும்பத்துக்கு முதலில் படிப்புக்கு வேண்டிய உதவி செய்ததோடு மாதாமாதம் பணம் அனுப்பி வந்தேன். அவ்வப்போது அந்தக் குடும்பத்துடன் தொடர்புகொண்டு, அந்த அம்மா, பெண்களுடன் பேசி ஆறுதல் வார்த்தை சொல்லிக் கொண்டிருப்பேன். அந்தப் பெரிய பெண் மேல்படிப்புக்கும் நான் உத்தரவாதம் கொடுத்தேன். நான் அப்படிச் செய்துகொண்டிருக்கும்போது என் கணவர் என்னை ஒருமாதிரி கேலியாகத்தான் பார்ப்பார். எனக்குக் கோபம் வரும்.

இரண்டு வாரத்துக்கு முன்பு என்னுடைய உறவினர் எனக்கு ஃபோன் செய்தார். நான் உதவி செய்துகொண்டிருந்த அந்தப் பெண்மணி, இவர் வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். என் உறவினர் கோவிட் சமயத்தில் பெற்றோருடன் இருக்க ஆசைப்பட்டு பல மாதங்களாக ஆந்திராவிற்குக் குடிபெயர்ந்திருக்கிறார். அவ்வப்போது வீட்டைச் சுத்தம் செய்ய, அந்த வேலைக்காரப் பெண்மணியிடம் சொல்லி, சாவியைக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். சமீபத்தில் ஒரு முக்கிய வேலை நிர்ப்பந்தமாக திடீரென்று சென்னைக்கு வந்திருக்கிறார். ஃப்ளைட் ஏறும்போது, தான் வரப்போவதைக் குறித்துச் சொல்லப் பார்த்திருக்கிறார், முடியவில்லை. சரி, நேரே வீட்டுக்குப் போய்ப் பார்க்கலாம் என்று நினைத்தார்.

அங்கு போனால் வீட்டு வாசலில் வாழைமரம் கட்டியிருகிறது. மேளச்சத்தம். குழப்பத்துடன் உள்ளே நுழைந்தால் அங்கே நிறையப் பெண்கள் கூட்டம். பாதிப்பேருக்கு முகமூடி இல்லை. அவளுடைய இரண்டாவது பெண் வயதுக்கு வந்துவிட்ட வைபவம் நடந்துகொண்டிருக்கிறது. இவருக்கு பயங்கர அதிர்ச்சி. அந்த அம்மாள் வெலவெலத்துப் போனாலும் காட்டிக் கொள்ளாததுபோல அவரை வரவேற்றாள். இவர் ஒன்றும் பேசாமல் தன்னுடைய அறைக்குச் சென்று கதவைச் சாத்திக் கொண்டுவிட்டார். அங்கிருந்து பக்கத்து வீட்டுக்காரர்களுடன் தொடர்பு கொண்டார். அவர்கள், இந்தப் பெண்கள் அங்கே அடிக்கடி வந்து தங்குவதாகச் சொன்னார்களாம்.

எல்லா ஆரவாரமும் முடிந்து அந்த அம்மாள் இவரிடம் மன்னிப்புக் கேட்டார்களாம். 'திடீரென்று நடந்த விஷயம். சத்திரம் ஏதும் கிடைக்கவில்லை. நீங்களும் ஃபோனில் கிடைக்கவில்லை' என்றெல்லாம் கதைப்பு. என் நண்பர் கோபத்தை வெளிக்காட்டாமல், அவர்களிடம் எல்லா விவரத்தையும் பொறுமையாகக் கேட்டிருக்கிறார். அவர்களும், இவர் மன்னித்துவிட்டார், பழைய சகஜ நிலை என்ற எண்ணத்தில், எல்லாவற்றையும் சந்தோஷமாகப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்தப் பெண்ணிற்கு வாங்கிய பட்டுப்புடவை, நகைகள், அலங்காரம், வீடியோ என்று நிறையச் செலவு செய்திருக்கிறார்கள். அந்தக் கல்லூரி படிக்கும் பெண்ணிற்கும், கல்யாணம் ஏற்பாடு செய்யப் போகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

என்னிடம் எவ்வளவு பணம் அனுப்பினீர்கள் என்று கேட்டபோது நான் சொன்னவுடன் அதிர்ச்சி அடைந்து போனார். இதேபோல இன்னும் ஒரு குடும்பமும் அவர்களுக்கு உதவி செய்திருக்கிறதாம். இவரிடமும் நிறைய 'அட்வான்ஸ்' என்ற பெயரில் வாங்கியிருக்கிறார்களாம். அவர் சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நன்றாகப் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் மூன்று குடும்பங்களும் உதவி செய்யச் செய்ய, அரசாங்கத்திடமிருந்தும் பணம் வாங்கிக்கொண்டு, இவர்கள் இப்படி ஆடம்பரச் செலவு செய்து, நம்மை முட்டாளாக்கிவிட்டார்களே என்று எனக்கு ஒரே கோபம். இன்னும் ஒரு ஜோக். அந்த அம்மா இவரிடமே கொஞ்சம் கடன் வேறு கேட்டார்களாம். அரசாங்கத்தையும் கோவிடையும் திட்டித் தீர்த்தார்களாம். "அழைத்ததில் பாதிப்பேர் வரவில்லை. எதிர்பார்த்த 'மொய்ப்பணம்' வரவில்லை" என்று குறைப்பட்டாராம்.

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இனிமேல் மாதப்பணம் அனுப்புவதை நிறுத்திவிடப் போகிறேன். இருக்கிற பாச உறவுகளைப் பிரிந்துவிட்டு, இந்தக் குளிரிலும், பனியிலும் வேலைக்குப் போய்க் கொண்டு, ஒவ்வொரு டாலராகக் கணக்குப் பார்த்து, சேமித்து, குழந்தைகளின் எதிர்காலத்தையே நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நலிந்தவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணமே இதுபோன்ற அனுபவங்களால் கசப்பான அனுபவமாகி விடுகிறது. என் உறவினரின் ஃபோனுக்குப் பின்னர் நான் அந்தக் குடும்பத்துடன் தொடர்பு கொள்ளவில்லை. அந்தப் பெரிய பெண் 'வாட்ஸப்' மூலம் தொடர்புகொண்டு, "அம்மா கேட்கச் சொன்னார்கள். வீட்டில் நிலைமை கஷ்டமாக இருக்கிறது" என்று தொடர்ந்து செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறாள்.

நான் என்ன செய்வது?

இப்படிக்கு,
.................


அன்புள்ள சிநேகிதியே,
உங்கள் ஏமாற்றத்தை உணர்கிறேன். கசப்புணர்ச்சிகளையும் நினைத்துப் பார்க்கிறேன். கல்வியின் முக்கியத்துவம், அதோடு இணைந்திருக்கும் பொருளாதார, சமூக உணர்ச்சி - இதெல்லாம் அந்தக் குடும்பத்தின் கருத்துக்கு எட்டவில்லை. படிப்பறிவு இல்லாத அந்தத் தாய்க்கு இருக்கும் பெண் கல்லூரிவரை எட்டி விட்டாள். அதிலே நிச்சயம் முன்னேற்றம் தெரிகிறது. ஆனால், இந்த வயதில், காதல், கல்யாணம், நகை, உடைமைகள் என்ற ஆர்வமும் வளரும்போது, அளவுக்கு மீறிப் பிறரிடம் சலுகைகள் எதிர்பார்க்கும் தன்மையும் கூடிவிடுகிறது. நம் வாழ்க்கையில் சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் கொடுக்கும் - இல்லை, கொடுக்க விரும்பாத - முக்கியத்துவம் அவர்களுக்குப் பெரிதாகப் படுகிறது. நம் நிலையில் நாம் இருக்கும் வீடு, வைத்திருக்கும் கார்கள், நம் தொழில், நம் குழந்தைகள் படிக்கும் கல்லூரி இவற்றை வைத்து நம் சமூக அந்தஸ்தை வெளிப்படுத்துகிறோம். ஏழ்மையில் இருப்பவர்களுக்கு, தங்களுடைய முன்னேற்றத்தைக் காட்டிக்கொள்ள இந்தச் சடங்குகள், சம்பிரதாயங்கள் மிகவும் பிரதானம்.

நானும் உங்களைப்போலப் பல சந்தர்ப்பங்களில் மருத்துவம், கல்வி என்று கையேந்தியவர்களுக்குக் கொடுத்து, பிறகு அது வேறு வகையில் செலவிடப்படுவதைப் பார்த்திருக்கிறேன். அந்தப் பெண்ணை (கல்லூரி) கூப்பிட்டு, இனிமேல் டியூஷன் ஃபீஸ் எல்லாம் நேரே கல்லூரிக்கே அனுப்பப் போவதாகச் சொல்வது நல்லதாகப் படுகிறது. நீங்கள் அவர்களிடம் நேரடியாகக் கேள்வி கேட்பதால் எந்த லாபமும் இருக்காது என்பது என்னுடைய கணிப்பு. மன்னிப்புக் கேட்பார்கள். பொய்மேல் பொய் செய்வார்கள். நாம் மன்னிப்பையும் ஏற்கமாட்டோம். அவர்கள் சொல்வதையும் நம்பமாட்டோம். Frustration தான் மிஞ்சும். இன்னும் எத்தனை வருடப் படிப்பு என்று கணித்து அதற்கேற்ற செலவை நம்பத்தகுந்தவர் மூலமாக அவ்வப்போது உதவுவது நல்லது என்று தோன்றுகிறது. உங்கள் உள்மனது என்ன சொல்கிறதோ அதன்படி செல்லுங்கள். அடிபட்டிருப்பது நீங்கள்தான். அதன் வலி எனக்குக் கொஞ்சம்தான் தெரியும். உங்கள் சேவை தொடரட்டும்.

வாழ்த்துக்கள்
மீண்டும் சந்திப்போம்.

இப்படிக்கு,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்
Personal Queries: drcv.listens2u@gmail.com

© TamilOnline.com