SciArtsRUs - கலை அறிவியல் சங்கமம்
கலிஃபோர்னியாவிலுள்ள SciArtsRUs அறிவியல், இசை, நடனம் மற்றும் நிகழ்த்து கலைகள் மூலம் மக்களை ஒன்றுபடுத்துகிறது. அறிவியல் கலை இரண்டும் சேர்ந்தவர்கள்தான் நாம் என்பதை உணர்த்தும் வகையில் பெயரிடப்பட்டிருக்கும் SciArtsRUs அமைப்பை டாக்டர். ரஞ்சினி கௌஷிக் நிறுவியுள்ளார். இதுவொரு லாப நோக்கற்ற நிறுவனம். அறிவியல், கலை மற்றும் இசையை மேம்படுத்துவதையும், அனைத்துத் தரப்பினரிடமும் இம் மூன்றையும் கொண்டு சேர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டது இந் நிறுவனம்.

இதற்காக SciArtsRUs உலகெங்கிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக நியூ ஏஜ் சயின்டிஸ்ட்ஸ், கோவிட் காக்னிசன்ஸ் குளோபல் போட்டியை SciArtsRUs நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் செட்டிநாடு ஹரிஸ்ரீ வித்யாலயம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட உலங்கெங்கிலும் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர். ஹரிஸ்ரீ வித்யாலயம் பள்ளியின் முதல்வர் கௌரி சிவசங்கர், அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, சர்வதேச யோகா மற்றும் இசை தினம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் உலகெங்கிலுமிருந்து 45 கலைஞர்கள் பங்கேற்றனர்.

ரஞ்சனி கௌஷிக்



மாற்றுத்திறனாளிக் கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி
பெங்களூருவைச் சேர்ந்த Inclusion Beyond Abilities Trust என்கிற அமைப்புடன் இணைந்து Artablities 4 All என்ற ஒரு புதிய முயற்சியிலும் SciArtsRUs ஈடுபட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள மாற்றுத்திறனாளிக் கலைஞர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்த உதவும் வகையில் காட்சி மற்றும் நிகழ்த்துக் கலைகளுக்கான தளத்தை இதன்மூலம் வழங்குகிறது. இதன் ஒரு பகுதியாக ‘மார்கழி மாற்றம்’ (Margazhi Matram) என்கிற புதிய தொடர்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சென்னையைச் சேர்ந்த பார்வைக் குறைபாடுள்ள கலைஞர்களும் பங்கேற்றனர்.

மார்கழி இசை மேளா
டிசம்பர் மாதத்தில் மார்கழி இசைத் திருவிழாவின் ஒரு பகுதியாக SciArtsRUs மார்கழி இசை மேளாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இதற்காகச் சென்னையின் பிரபல கர்நாடக இசை நிறுவனமான கர்னாடிகா ஆர்கைவல் சென்டருடன் சமீபத்தில் இணைந்துள்ளது.

பண்பாட்டுக் கலவையிசை நிகழ்ச்சிகள்
இந்த வரிசையில் தற்போது SciArtsRUs கலவையிசை (Cross-culture events) நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கிறது. SciArtic Tunes முயற்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில் அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, இந்தோனேசியா எனப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபல கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இவர்கள் இந்திய நிகழ்த்து கலை மற்றும் உலக இசையில் முழுநேரம் ஈடுபட்டவர்கள்.

பல்வேறு பண்பாடுகளிடையே இருக்கும் வேற்றுமையைக் கொண்டாடவும் ஏற்றுக்கொள்ளவும் பண்பாட்டுக் கலைவையிசை நிகழ்ச்சிகள் வழிவகுக்கும்.

இந்தக் கலைஞர்களிடம் பேசியதில் அவர்களது பின்னணியைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அத்துடன் மாறுபட்ட பண்பாட்டை ஏற்றுக்கொண்டு அவற்றைத் தொழில்முறையாகக் கற்றுக்கொள்ளவும் இந்நிகழ்ச்சிகள் உதவும்.

இன்று கொரோனா தீநுண்மியை (வைரஸை) எதிர்த்து உலகமே போராடிக் கொண்டிருக்கும் சூழலில் பார்வையாளர்களிடையே உடன்பாடான சிந்தனைகளை ஊக்குவிக்க விரும்புகிறது SciArtsRUs.

இசை, நடனம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலம் அனைவரையும் ஒன்றுபடுத்தும் போக்கையும், வேற்றுமைகளையும் கொண்டாடவேண்டும் என்கிற வலுவான கருத்தையும் இசை, நடனம் மற்றும் நிகழ்த்து கலைகள் மூலம் மக்களிடையே பரப்புவதே கலவைப் பண்பாட்டு நிகழ்ச்சியின் நோக்கம்.

இந்த தொடர் நிகழ்ச்சிகளின் தொடக்க விழாவில் உலகெங்கிலும் உள்ள முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். கலிபோர்னியா சிமி பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த மேயர் கெய்த் மாஷ்பர்ன் விழாவின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

கர்நாடக இசை பயிற்சியாளர் மற்றும் வெஸ்லியன் பல்கலைக்கழக ஆய்வாளர் பால்ராஜ் பாலசுப்ரமணியன், இசைக்கலைஞர் மற்றும் இசையமைப்பாளர் ரான் வாஸர்மேன், இந்தோனேசிய திரைப்பட இசையமைப்பாளர் ஃப்ரான்கி ராடன், லண்டனைச் சேர்ந்த ஒசிபிசா முன்னணிப் பாடகர் மற்றும் கிட்டார் கலைஞர் கிரெக் கோஃபி பிரவுன், யூ.கே. மற்றும் யூ.சி.எல்.ஏ. எத்னோமியூசிகாலஜி பேராசிரியர் மற்றும் தாள வாத்தியக் கலைஞர் அபிமான் கவுஷல் ஆகியோர் விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

கிரண் - நிவி (சாயி சகோதரிகள்)



மக்களை ஒன்றிணைப்பதில் கலப்புப் பண்பாட்டு இசை நிகழ்ச்சிகளுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, கொரோனா பெருந்தொற்று பாதிப்பு முடிந்த பின்னர் சிமி வேலி ஆர்ட் சென்டரில் கலவைப் பண்பாட்டு இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுமாறு மேயர் மாஷ்பர்ன் SciArtsRUs நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கிரெக் கோஃபி பிரவுன், தான் வளர்ந்த விதம் குறித்தும், தனது இசையில் பல்வேறு பண்பாடுகளின் தாக்கங்கள் இருப்பது குறித்தும் விளக்கினார்.

உலகளாவிய பார்வையாளர்களுக்கு கர்நாடக இசையைக் கற்றுக்கொடுக்கும் தனது அனுபவம் குறித்து வெஸ்லியன் பல்கலைக்கழகப் பேராசிரியர் பாலசுப்ரமணியன் பேசினார். வெவ்வேறு கலாசாரப் பின்னணிகளைக் கொண்ட மாணவர்கள் பாடிய அற்புதமான கர்நாடக சங்கீதப் பாடலைப் பகிர்ந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சிக்கு பிரபல இசைக்கலைஞர் மற்றும் வீடியோ கேம்களுக்கும் டி.வி. நிகழ்ச்சிகளுக்கும் இசையமைக்கும் ரான் வாசர்மேன் முழு ஆதரவளித்துள்ளார். அதேபோல் பேராசிரியர் அபிமான் கவுஷல் வீடியோ மூலம் ஆதரவளித்துள்ளார். மேலும் இந்தோனேசிய இசையை ஃப்ரான்கி ராடன் அறிமுகம் செய்தார். இவர் பாலி பகுதியில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் SciArtsRUs பங்கேற்க வேண்டுமென அழைத்துள்ளார். ஃப்ரான்கி மற்றும் அனெல்லோ கேப்புவனோ ஆகியோரும் அவர்களின் இசையைப் பகிர்ந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் பிரபல கர்நாடக இசைக்கலைஞர்களான கிரண் மற்றும் நிவி சாய்சங்கர் (சாய் சகோதரிகள்) கர்நாடக இசை மீதான தங்களது ஆர்வம் குறித்தும் பிரபலமான மேற்கத்திய வீடியோக்கள் குறித்தும் சுவைபடப் பேசினர். இவர்கள் பாடிய பாடல், தற்போதைய இளந்தலைமுறையினர் கலவைப் பண்பாட்டு இசையைக் கற்றறிந்து நிபுணத்துவம் பெறவேண்டும் என்று ஊக்கம் தருவதாக இருந்தது.

இனிவரும் நாட்களில் சந்தூர் கலைஞர் டான் பிளான்சார்ட், இந்திய ஸ்லைட் கிட்டார் கலைஞர் டேவ் சிப்ரியானி, சிதார் கலைஞர் வில் மார்ஷ், சரோத் கலைஞர் ஸ்டீவ் ஓடா, செல்லோ கலைஞர் கிரிஸ் வோடெக், பல்வேறு இசைக் கருவிகளை இசைக்கும் கலைஞரான அனெல்லோ கேப்புவனோ, வீணைக் கலைஞர் யூகோ மடோபா, சிதார் கலைஞர் அமி மாசியோவ்ஸ்கி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com