நீலகண்ட பிரம்மச்சாரி (பகுதி-3)
வந்தார், இன்னுமொரு புரட்சிவீரர்
சென்னைக்குச் சென்ற நீலகண்டன் பாரதியாரைச் சந்தித்தார். தூத்துக்குடியில் நிகழ்ந்த சம்பவங்களை விவரித்தார். சிதம்பரம் பிள்ளை மற்றும் சிவம் கைதானது குறித்து ஏற்கனவே மிகுந்த வருத்தத்தில் இருந்த பாரதியார், அவர்களிடம் பிரிட்டிஷார் நடந்துகொள்ளும் விதம் அறிந்து மேலும் துயரப்பட்டார். சினம் கொண்டார். பிரிட்டிஷாரின் அடக்குமுறைகளை எதிர்த்து தீவிரமாக சுதேசமித்திரன், இந்தியா இதழ்களில் எழுதத் தலைப்பட்டார்.

இந்நிலையில் வங்காளத்தில் இருந்து வந்திருந்த இன்னொரு புரட்சிவீரர் நீலகண்டனைத் தேடிவந்தார். சந்நியாசி உடையில் மாறுவேடத்தில் இருந்த அவர், டாக்டர் எம்.சி. நஞ்சுண்டராவின் மயிலாப்பூர் இல்லத்தில் தங்கியிருந்தார். அவர் பெயர் தேவி பிரசாத் முகர்ஜி. நீலகண்டனிடம் சென்னை ராஜதானியில் நடந்து வரும் ரகசிய சங்கப் பணிகளைப்பற்றி விசாரித்தறிந்த அவர், அது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். சங்கப் பணிகளுக்காக எப்போது வேண்டுமானாலும் கல்கத்தாவில் உள்ள தங்கள் 'அபினவ் பாரத் சமிதி' இயக்கத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்து விடைபெற்றார் தேவி பிரசாத்.

இது நிகழ்ந்த சில வாரங்களுக்குப் பின் நீலகண்டனைச் சந்திக்கும் நோக்கத்தில் தென்காசி நண்பர் சங்கரகிருஷ்ணன் சென்னைக்கு வந்தார். பாரதியாரின் இல்லத்தில் அவர் தங்கியிருந்தார். பாரதியார் அப்போது நல்லதம்பி முதலித் தெருவில் வசித்துவந்தார். தினந்தோறும் காலை வேளையில் பாரதியை அங்கு சந்தித்து உரையாடுவது நீலகண்டனின் வழக்கம். அந்தப் பேச்சில் சங்கரகிருஷ்ணனும் இணைந்து கொண்டார். தேச விடுதலையே அவர்கள் பேச்சின் அடிநாதமாக இருந்தது.

நீலகண்டன், பிரம்மச்சாரி ஆனார்!
பாரதியின் வீட்டில் சந்தித்து உரையாடுவது, திருமலாச்சாரியார் வீட்டிற்குச் செல்வது, 'சுதேசமித்திரன்' அலுவலகம் செல்வது, 'இந்தியா' அலுவலகம் செல்வது, 'குட்வின் அண்ட் கோ' மருந்துக் கடையின் மாடியில் வசித்த டாக்டர் நஞ்சுண்டராவைச் சந்திக்கச் செல்வது என்று தொடர்ந்து தனது தேசவிடுதலை தொடர்பான பணிகளைச் செய்து கொண்டிருந்தார் நீலகண்டன். இந்தத் தொடர் நடவடிக்கைகளின் விளைவால் அவர் ரகசியப் போலீசாரின் கண்காணிப்புக்கும் உள்ளானார். அதனால் வரும் இடையூறுகளைத் தவிர்க்கும் பொருட்டு, அனைவரையும் நேரில் சந்திப்பதைத் தவிர்த்துக் கடிதத் தொடர்பு கொள்ள முடிவு செய்தார். அதற்காக அவர் தனக்குச் சூட்டிக்கொண்ட புனை பெயர் 'பிரம்மச்சாரி'. மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளைக்கு 'கோவிந்தன்' என்ற பெயர் சூட்டப்பட்டது. சங்கரகிருஷ்ணன், 'ஹரி' ஆனார். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புனைபெயர் சூட்டப்பட்டது. துப்பாக்கி, பணம் போன்றவற்றிற்கும் 'லட்டு', 'கல்கண்டு' போன்ற, மற்றவர்களால் எளிதில் அறிந்து கொள்ள இயலாத பெயர்களைப் புழங்கினர். கடிதம்மூலம் புரட்சி இயக்கத்தின் ரகசியச் செயல்பாடுகள் தொடர்ந்தன.

மீண்டும் திருநெல்வேலி...
திருநெல்வேலியில் ஓரளவுக்கு அமைதி திரும்பிய பின்னர், 1908ம் வருடம் மே மாதம் மீண்டும் அங்கு சென்றார் நீலகண்ட பிரம்மச்சாரி. ஆனாலும், அங்கு காவல்துறையினரின் கெடுபிடி குறையவில்லை. ரகசியப் போலீசார், ஊருக்குப் புதிதாக யார் யார் வருகிறார்கள் என்று உளவு பார்த்த வண்ணம் இருந்தனர். அதனால், வழக்குரைஞர் கணபதி பந்துலுவை, அவரை வழக்கு விஷயமாகச் சந்திக்க வந்திருக்கும் நபர் போன்ற பாவனையில், கையில் சில கோப்புகளுடன் சென்று சந்தித்தார் நீலகண்டன். பந்துலு, தன்னை நாடிவரும் கட்சிக்காரர்களுக்காகத் தன் வீட்டையொட்டிப் பல அறைகள் கொண்ட விடுதி போன்ற அமைப்பை ஏற்படுத்தி இருந்தார். அந்த அறை ஒன்றில் தங்கிக்கொண்ட நீலகண்டன், தனது புரட்சிப் பணிகளை ரகசியமாகத் தொடர்ந்தார்.

இந்நிலையில், சிறையிலிருக்கும் சிதம்பரம் பிள்ளை அனுப்பியதாகச் சொல்லி நபர் ஒருவர் வந்து நீலகண்டனைச் சந்தித்தார். சிதம்பரம் பிள்ளை, நீலகண்டனை தூத்துக்குடிக்குச் செல்லும்படியும், அங்கிருந்து ஆதனூர் என்ற கிராமத்திற்குத் தனது நபர் ஒருவர் வந்து அழைத்துச் செல்வார் என்றும், அந்த ஊரின் தலைவர் நீலகண்டனின் முயற்சிகளுக்கு உதவுவார் என்றும் தெரிவித்ததாகச் சொன்னார் வந்தவர்.

சிறையிலிருந்தாலும் கூட தன்னைச் சுற்றி நடக்கும் பல நிகழ்வுகளை சிதம்பரம் பிள்ளை அறிந்திருப்பதையும், அவருக்கிருந்த செல்வாக்கையும் கண்டு வியந்தார் நீலகண்டன். அதன்படி மறுநாள் புறப்பட்டு தூத்துக்குடி சென்றார். அங்கிருந்து ஆதனூர் கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பாஞ்சாலங்குறிச்சி ஜமீனைச் சேர்ந்தவரும், கம்பளத்தார் நாயக்கர்களின் தலைவருமான 'மாப்பிள்ளைச் சாமி' என்பவரைச் சந்தித்தார். மிகுந்த தேசப்பற்று கொண்ட மாப்பிள்ளைச் சாமி, தங்களது முன்னோரான வீரபாண்டிய கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட பிரிட்டிஷார்மீது கடுங்கோபம் கொண்டவராக இருந்தார்.



20,000 வீரர்கள்...
அவரிடம், தங்கள் 'அபிநவ பாரத சங்க'த்தின் ரகசியத் திட்டங்களை விரித்துரைத்தார் நீலகண்டன். அதனைக் கேட்டு மகிழ்ந்த மாப்பிள்ளைச் சாமி, .பிரிட்டிஷாரை இந்தியாவை விட்டுத் துரத்தத் தான் எல்லா விதத்திலும் உதவத் தயாராக இருப்பதாக வாக்களித்தார். ஆயுதங்கள் மட்டும் கிடைத்தால் தன்னால் 20,000 வீரர்களைத் தரமுடியும் என்றும் உறுதியளித்தார். அதனைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சியுற்றார் நீலகண்டன் என்றாலும் ஆயுதங்கள் எப்போது வரும் என்பது ஒரு சிக்கலாக இருந்தது. "நிச்சயம் ஆயுதங்கள் வரும். ஆனால் அது வரும்வரை காத்திருக்காமல் வேட்டைத் துப்பாக்கிகள் மூலம் நீங்கள் பயிற்சியைத் தொடங்குங்கள். ஜெர்மனியிலிருந்து ஆயுதங்கள் வந்ததும் அவற்றை வைத்தும் நாம் பயிற்சிகளைத் தொடர்வோம்" என்று நம்பிக்கையளித்தார் நீலகண்டன். மாப்பிள்ளைச் சாமி ஒப்புக்கொண்டார்.

வந்த காரியம் நல்ல முறையில் நிறைவேறிய மகிழ்ச்சியுடன், அதற்குக் காரணமாக இருந்த சிதம்பரம் பிள்ளைக்கு மனதார நன்றி கூறியவாறே மன நிறைவுடன் சென்னைக்குத் திரும்பினார் நீலகண்டன்.

துப்பாக்கி முனையில்...
புரட்சி வேலைகளில் நீலகண்டன் ஈடுபட்டு வந்தாலும், அதற்கான பொருளாதாரத் தேவைகளுக்கு அவர் நண்பர்களையும், சுதந்திர வேட்கை கொண்ட வசதி படைத்தவர்களையுமே சார்ந்திருக்க நேர்ந்தது. சமயங்களில் அவருக்கு உதவுவதாக வாக்களித்த பலர் உதவாமல் ஏமாற்றியதும் உண்டு. அதனால் பல பிரச்சனைகளை நீலகண்டன் சந்திக்க நேர்ந்ததும் உண்டு.

ஒரு சமயம் நீலகண்ட பிரம்மச்சாரிக்கு பணம் தருவதாக வாக்களித்திருந்தார் இந்தியா பத்திரிகையின் அதிபரான திருமலாச்சாரியார். ஆனால், அவர் வாக்களித்தபடி பணம் தராமல் நாட்களை கடத்திக் கொண்டிருந்தார். உல்லாசக் கேளிக்கைகளில் அவர் பணத்தைச் செலவிடுகிறார் என்பதை அறிய நேர்ந்ததும் மிகுந்த சினம் கொண்டார் நீலகண்டன். சீற்றத்துடன் அவரைக் காணப் புறப்பட்டார்.

நீலகண்டன் பணம் கேட்டு வருவார் என்பதையும், எப்படியாவது தன்னிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பார் என்பதையும் திருமலாச்சாரியார் அறிந்திருந்தார். ஆகவே அவரைத் தவிர்க்க எண்ணி, தனது நண்பரும் உறவினருமான காவல்துறை அதிகாரி ஒருவரைத் தனது வீட்டின் வாசலில் அமர வைத்திருந்தார். அவரைக் கண்டு தயங்கி நீலகண்டன் திரும்பிப் போய்விடுவார் என்பது ஆச்சாரியாரின் எண்ணமாக இருந்தது.

சினத்துடன் திருமலாச்சாரியைக் காணவந்த நீலகண்ட பிரம்மச்சாரி, காவல்துறை அதிகாரி ஒருவர் வாயிலில் அமர்ந்திருப்பதைக் கண்டார் என்றாலும், அச்சமோ, தயக்கமோ இன்றி, அவர் தன்னைத் தடுத்துப் பேசுமுன்பு விடுவிடுவென்று வீட்டினுள் சென்றார். திருமலாச்சாரியைக் கண்டு, தன் கைத்துப்பாக்கியை அவர் மட்டுமே அறியும்படிக் காட்டியவாறே, "கேளிக்கைகளுக்குச் செலவிட உங்களுக்குப் பணம் இருக்கிறது. ஆனால், தேசவிடுதலை உணர்வுடன் சேவை புரியக் காத்திருக்கும் வீரர்களுக்கு வாக்களித்திருந்தபடி பணத்தைத் தருவதற்கு உங்களுக்கு மனம் வரவில்லையா?" என்றார் சீற்றத்துடன்.

பதறிப்போன திருமலாச்சாரியார், தனது செயலை மன்னிக்கும்படிக் கூறி, உடனடியாகத் தன்னிடமிருந்த பணத்தைக் கொடுத்ததுடன், மீதிப்பணத்தை நிச்சயமாக அடுத்த வாரம் அளிப்பதாக வாக்களித்தார்.

நன்றிகூறி விடைபெற்றார் நீலகண்டன். வாயிலில் நடந்தது எதையும் அறியாத காவல்துறை அதிகாரி வெற்றிலை, பாக்கைக் குதப்பிக் கொண்டிருந்தார். அவருக்கும் புனிசிரிப்புடன் நன்றி கூறிவிட்டுச் சென்றார் நீலகண்டன்.

பிச்சை எடுத்தார் பிரம்மச்சாரி
நீலகண்டன் இவ்வாறாகப் பணம் பெற்றது சங்கப் பணிகளுக்காகவும், பயணச் செலவுகளுக்காகவும், ரகசிய துண்டுப் பிரசுரங்களை அச்சிடுவதற்காகவுமே அன்றித் தனக்காக அல்ல. அவர் அவற்றில் ஒரு பைசாகூடத் தனக்காகச் செலவழித்ததில்லை. பல இரவுகளில் வெறும் தண்ணீரைக் குடித்துவிட்டுப் பட்டினி கிடந்திருக்கிறார். தனது பொருட்களை விலைக்கு விற்றும் உண்டிருக்கிறார். ஒரு சமயம் கோடகநல்லூரில், பசி தாங்க முடியாததாலும், கையில் பணம் இல்லாததாலும், தன்னை யாரும் அடையாளம் காணாதிருக்கும் பொருட்டு, தலையில் முக்காடிட்டுக் கொண்டு, வீடுதோறும் சென்று பிச்சை எடுத்துச் சாப்பிட்டிருக்கிறார்! தேச விடுதலைக்காக இவ்வாறு பல கஷ்டங்களையும் அவமானங்களையும் விரும்பி ஏற்றவர் நீலகண்ட பிரம்மச்சாரி. "உன் தாயார் மற்றும் சகோதரிகளுடன் மிகுந்த பணக் கஷ்டத்தில் இருக்கிறேன்; குடும்பச் செலவுக்கு ஏதாவது பணம் அனுப்பு. மிக அவசரம்" என்று மிகவும் வயதான தந்தை எழுதிய கடிதத்திற்குக்கூட அவர் பதில் போடவில்லை. பணம் அனுப்பவுமில்லை. எப்போது அவர் 'புரட்சிவீரர்' அவதாரம் எடுத்தாரோ அப்போதே குடும்பம், பற்று, பாசம் ஆகியவற்றைத் துறந்த தீரராகி விட்டார்.

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்- செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்


என்ற நீதிநெறிவிளக்கப் பாடலின்படி அமைந்திருந்தது அவர் வாழ்க்கை.



சிதம்பரம் பிள்ளைக்கு ஆயுள் தண்டனை
நீலகண்டன் சென்னைக்குத் திரும்பிய இரண்டு மாதங்களுக்குப் பின், ஜூலை மாதம் இரண்டாம் வாரத்தில், சிதம்பரம் பிள்ளைக்கு இரட்டை ஆயுள் தண்டனை (40 ஆண்டுகள்) அளிக்கப்படுவதாகச் செய்தி கிடைத்தது. சுப்பிரமணிய சிவத்திற்கு பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்துத் தமிழ்நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. சென்னையில் நடந்த போராட்டத்தில் நீலகண்ட பிரம்மச்சாரி, சுரேந்திரநாத் ஆர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டங்கள் தொடர்ந்தன.

மேல்முறையீட்டுக்குப் பின் சிதம்பரம் பிள்ளைக்கு ஆறு ஆண்டுகள் நாடு கடத்தல் தண்டனை அளிக்கப்பட்டது. சிவத்திற்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை. தொடர்ந்து லண்டன் பிரிவியூ கவுன்சிலில் முறையிட்ட பின், சிதம்பரம் பிள்ளையின் மீதான நாடு கடத்தல் தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆறாண்டு கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

அடக்குமுறைச் சட்டங்களூம் கைதுகளும்
இந்நிலையில் சுதேசி இயக்கங்களை ஆதரித்தும், சிதம்பரம் பிள்ளை தண்டனை குறித்து கடுமையாகக் கண்டித்தும் சுதேசமித்திரன், இந்தியா போன்ற பல இதழ்களில் கட்டுரைகள் வெளியாகின. இந்தக் கட்டுரைகள் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை கொண்டிருப்பதாகக் கருதிய பிரிட்டிஷ் அரசு, அந்த இதழ்களை ஒடுக்க எண்ணியது. புதிது புதிதாகப் பல்வேறு சட்டங்களைக் கொண்டுவந்தது.

அதன்படி பத்திரிகைகள் அனைத்தும் பிரிட்டிஷாரின் தணிக்கைக்குப் பின்னரே வெளிவர வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டன. இது போன்ற பிரச்சனை ஒன்றின் காரணமாக, சுதேசமித்திரன் இதழின் ஆசிரியரான ஜி சுப்பிரமணிய ஐயர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே உடல் நலிவுற்று இருந்த அவர், இந்தக் கைதினால் மிகவும் மனம் தளர்ந்தார். உடல் மேலும் நலிவுற்றது. "அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகளை இனி எழுதுவதோ, வெளியிடுவதோ இல்லை" என்று பலவந்தமாக, மன்னிப்புக் கடிதம் பெற்றுக் கொண்ட பின்பே, அவரைச் சிறையில் இருந்து விடுவித்தது பிரிட்டிஷ் அரசு.

இந்த நிகழ்வு அறிந்து மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானார் நீலகண்டன். இதே பிரச்சனை பாரதியார் பணிபுரிந்து வந்த இந்தியா இதழுக்கும் ஏற்பட்டது. பத்திரிகையின் ஆசிரியராக இருந்த எம். சீனிவாசன் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான செய்திகளை, கட்டுரைகளைக் கொண்ட இதழை நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்டார். இந்தியா இதழிற்கு எம். சீனிவாசன் பெயரளவுக்குத்தான் ஆசிரியரே தவிர, அவர் கட்டுரை எதுவும் எழுதவில்லை. கட்டுரைகளை எழுதி வந்தது பாரதியார்தான். பிரிட்டிஷ் அடக்குமுறைக்கு எதிராகக் காரசாரமான கட்டுரைகளைப் பெயர் குறிப்பிடாமல் அவர் எழுதிவந்தார்.

தேச விடுதலை உணர்வூட்டும் அந்தக் கட்டுரைகளைக் கண்டு சினங்கொண்ட பிரிட்டிஷ் அரசு, பத்திரிக்கை ஆசிரியர் சீனிவாசனைக் கைது செய்தது. கடுங்காவல் தண்டனையும் விதித்தது. கட்டுரையை எழுதியது பாரதியார் என்பது பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குத் தெரியவந்தாலும் வெளிப்படையாக அவரது பெயர் இல்லாததால் சட்டப்படி பாரதியாரைக் கைது செய்ய இயலவில்லை. ஆனால், எப்படியாவது அவரை கைது செய்துவிடும் முனைப்பில் அரசு இருந்தது.

பாரதியார் புதுச்சேரி பயணம்
அதுபற்றிய ரகசியச்செய்தி சில காவல்துறை நண்பர்கள் மூலம் பாரதியாருக்குத் தெரியவந்தது. பாரதியார் பிரிட்டிஷ் இந்தியாவில் இருப்பது அவருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கருதிய பாரதியின் நண்பர்கள் அவரை பிரிட்டிஷ் அரசின் எல்லைக்கு அப்பாற்பட்ட புதுச்சேரிக்குச் சென்றுவிடும்படி ஆலோசனை கூறினர். பாரதி அதற்குச் சம்மதிக்கவில்லை. ஆனால், கிருஷ்ணசாமி ஐயர், நீலகண்ட பிரம்மச்சாரி, டாக்டர் நஞ்சுண்டராவ் உள்ளிட்டோர் பாரதியாருக்கு அதுபற்றி விளக்கமாக எடுத்துரைத்தனர். இறுதியில் பாரதியார் புதுவை செல்லச் சம்மதித்தார். சீனிவாசன் கைது செய்யப்பட்ட அன்று இரவே பாரதியார் புதுச்சேரிக்குப் புறப்பட்டுச் சென்றார். சென்னை எழும்பூரில் ரயில் ஏறிச் சென்றால் தெரிந்துவிடும் என்பதால் சைதாப்பேட்டையில் ரயிலேறினார். அவர் குடும்பம் அப்போது சென்னையில்தான் இருந்தது சில மாதங்களுக்குப் பிறகுதான் அவர்கள் புதுச்சேரி புறப்பட்டுச் சென்றனர்.

புதுவையில் 'இந்தியா'
பாரதியார் புதுவை சென்ற சில தினங்களுக்குப் பின் இந்தியா இதழின் அதிபர் திருமலாச்சாரியார் புதுவை புறப்பட்டுச் சென்றார். அங்கே அவரது சகோதரர் மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியார் அச்சு இயந்திரங்கள் விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வந்தார். புதுச்சேரி சென்ற திருமலாச்சாரி, இந்தியா இதழை புதுவையிலிருந்து நடத்த ஆலோசித்தார். அதேசமயம் சென்னையில் இந்தியா இதழைக் கவனிக்க யாரும் இல்லாத நிலை ஆனது. அதனால் சங்கரகிருஷ்ணன் மூலம் நீலகண்ட பிரம்மச்சாரிக்குத் தகவல் சொல்லப்பட்டது. நீலகண்ட பிரம்மச்சாரி தற்காலிக ஆசிரியர் பொறுப்பேற்று பத்திரிக்கையைச் சில வாரங்கள் நடத்தினார்.

அவ்வப்போது இந்தியா பத்திரிக்கை அலுவலகம் சென்று பாரதியாரிடம் உரையாடி வந்த நீலகண்ட பிரம்மச்சாரி, பத்திரிக்கை அச்சிடும் விஷயங்களிலும் நல்ல அனுபவம் பெற்றிருந்தார். எழுத்து வன்மையும் அவருக்கு இருந்தது. அதனால் 'இந்தியா' இதழை நிர்வகிப்பதில் அவருக்குப் பிரச்சனைகள் ஏதும் வரவில்லை. இந்தியா இதழை இரண்டு வாரம் பொறுப்பேற்று வெளியிட்ட நிலையில் புதுச்சேரியில் இருந்து அவருக்கு ஒரு செய்தி வந்தது. அதன்படி இந்தியா பத்திரிக்கையைப் புதுச்சேரியில் உள்ள ஒருவருக்கு விற்கும்படிப் பத்திரம் தயார் செய்யப்பட்டது. சில நாட்களில் இந்தியா பத்திரிக்கையின் அச்சு இயந்திரங்கள் உள்பட அனைத்தும் மூட்டை கட்டப்பட்டு புதுச்சேரி போய் சேர்ந்தன.

இவையனைத்தும் கடைசிவரை பிரிட்டிஷ் அரசின் கண்களுக்குப் புலப்படாதபடி மிக ரகசியமாகவே நிகழ்ந்தன. சில வாரங்களுக்குப் பின் புதுச்சேரியில் இருந்து பதிவு செய்யப்பட்ட இதழாக 'இந்தியா' இதழ் வெளிவர ஆரம்பித்த பின்புதான், இந்தியா பத்திரிக்கை தமிழ்நாட்டிலிருந்து புதுச்சேரி போய்விட்ட விஷயமே பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. திகைத்துப் போயினர்.

இந்த நிலையில் தானும் சென்னையிலிருந்து செயல்படுவதை விடப் புதுச்சேரிக்குப் போவதே சிறப்பு என்று கருதிய நீலகண்ட பிரம்மச்சாரி புதுச்சேரிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

(தொடரும்)

பா.சு. ரமணன்

© TamilOnline.com