ஆரம்பநிலை நிறுவன யுக்திகள்
முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து இதை வடிவமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்ட உத்தேசம்.

★★★★★


கேள்வி: நான் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து விற்பொருள் தயாரித்து, முதல் சில வாடிக்கையாளர்களையும் பெற்றுவிட்டேன். இந்நிலையில், ஒரு சூறாவளியோடு (tornado) ஒட்டிக்கொண்டால் வேகமாக வளர வாய்ப்புள்ளது என்று கேள்விப்பட்டேன். அப்படியென்றால் என்ன அர்த்தம்? சூறாவளி வணிகச் சந்தையில் களேபரம் விளைவிக்குமே, அத்தோடு ஒட்டினால் நாம் சுக்கு நூறாகிவிட மாட்டோமா? எப்படி வேகமாக வளர வாய்ப்புக் கிட்டும்? சூறாவளியில் நானே மாட்டிக்கொண்டது போலத் தலை சுற்றுகிறது. சற்று விளக்குங்களேன்!

கதிரவனின் பதில் (தொடர்ச்சி): சென்ற பகுதிகளில், நம் செயல்பாட்டுப் பரப்பில் சூறாவளி என்றால் வெகுவேகமாக வளரும் விற்பொருட்கள், நிறுவனங்கள் மற்றும் வணிகச்சந்தைகள் என்று அர்த்தம் என்பதைக் கண்டோம். மேலும், சூறாவளியைச் சார்ந்து செயல்பட்டதால் தாங்களும் வேகமாக வளர்ந்த உதாரணங்கள் சிலவற்றையும் பார்த்தோம். அவற்றில் இரண்டுவிதம் என்பதைக் கண்டோம். ஒன்று சூறாவளியைச் சார்ந்தே ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள். அதற்கு நெட்ஸ்கேலர் நிறுவனத்தை உதாரணம் என்றோம் அல்லவா?

மற்றொன்று சூறாவளியை உணர்ந்ததால் வணிகப்போக்கை மாற்றிக்கொண்ட நிறுவனங்கள். அந்த வகையில் மைக்ரோஸாஃப்ட், நெட்ஸ்கேப்பின் இணைய உலாவிக்குக் கிடைத்த வரவேற்பால் அதிர்ச்சியடைந்து ஆக்ரோஷத்துடன் செயல்பட ஆரம்பித்தது என்று விவரிக்க ஆரம்பித்தோம்.

அப்படி என்ன செய்தது மைக்ரோஸாஃப்ட்? தன் எம்.எஸ்.என். மின்வலைக்காக உருவாக்கிக் கொண்டிருந்த கரும்பறவை (blackbird), என்னும் தன் நிறுவனத்துக்கு மட்டுமே உரித்தான உலாவியைத் தூக்கி அப்படியே உடைப்பில் போட்டுவிட்டது! அந்தப் பணியில் ஈடுபட்டிருந்த பெரும்குழுவை ஒட்டு மொத்தமாக, மின்வலைத் துருவி (internet explorer) என்னும் இணையதள உலாவியை உருவாக்குவதற்கு ஆணையிட்டு வெகுவேகமாக அதை வெளியிட்டது.

அப்படி மாற்றியது மட்டுமல்ல, தனது உலாவியை இலவசமாக அனைவருக்கும் அளித்தது. மேலும், அதை விண்டோஸ் மேடையில் இறுக்கப் பிணைத்து பயனர்களுக்கு எளிதாக, ஒரு முயற்சியும் எடுத்துக்கொள்ளத் தேவையில்லாமலே கிடைக்குமாறு செய்தது. விளைவு?! நெட்ஸ்கேப் நிறுவனத்தின் வருமானம் படுத்துப்போய் அது தன்னைக் குறைந்த விலைக்கு விற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டது. மைக்ரோஸாஃப்ட் நிறுவனம் தன் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது. (பிறகு இத்தகைய நடத்தையே மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தை, அரசாங்க சோதனைக்கும் நடத்தையை மாற்றிக்கொள்ளும் நிபந்தனை ஆணைகளுக்கும் உள்ளாக்கிக்கொள்ளச் செய்தது வேறு விஷயம்!)

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? ஒரு மாபெரும் நிறுவனமான மைக்ரோஸாஃப்டே ஒரு சூறாவளி இணைய மேடையுடன் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. அதனால் சூறாவளி மேடைகளுக்கான பலமும் அவ்வாறு இணைந்து செயல்பட்டால் கிடைக்கும் வணிகரீதியான பலனும் மிகச் சக்தி வாய்ந்தவை என்று உணரமுடிகிறது, அல்லவா?

இப்போது, அவ்வாறு சார்ந்து செயல்படுவதற்கான சில வழிமுறைகளை விவரிப்போம். முதலாவதாக எத்தகைய சூறாவளி மேடை உங்கள் நிறுவனம் சார்ந்து செயல்படுவதற்கு ஏற்றது என்று நிர்ணயிக்க வேண்டும். அதற்கு முன்னால், எத்தகைய மேடைகள் உங்கள் நிறுவனத்துக்கு உடன்படாதவை என்பதை உணர்ந்து கொள்வது நல்லது! உங்கள் விற்பொருள் விண்டோஸ் மேடையில் மட்டுமே செயல்படக் கூடியதானால், ஆப்பிள் ஐஃபோன் சூறாவளி மேடை உங்கள் நிறுவனத்துக்குத் தக்கதாகாது அல்லவா? உங்கள் விற்பொருளை ஐஃபோனில் செயல்படுவதற்காக மாற்றமுடிந்தால் மட்டுமே அது சரியாகும். உங்கள் விற்பொருள் தகவல் மையங்களில் மட்டுமே செயல்படக் கூடிய சாதனங்களாக இருந்தால் மேகக் கணினியுடன் உடனே சார்ந்து செயல்பட முடியாது. மேகக் கணினிக்குத் தக்கபடி விற்பொருளை உருவாக்கினால்தான் அது முடியும். சில சாதனங்களில் மின்வில்லைகள் (electronic chips) அல்லது தனித்துவம் வாய்ந்த வன்பொருட்கள் (special purpose hardware) இருப்பதில்லை. மென்பொருட்களைச் சேவைக் கணினிகளில் நிறுவி, அவற்றைச் சாதனங்களாக விற்கிறார்கள். அத்தகைய விற்பொருட்களை எளிதாக மேகக்கணினிக்கு மாற்றமுடியும். தனித்துவம் இருந்தால் அது கடினமாகிறது.

அடுத்து, எந்தச் சூறாவளி மேடை வணிக ரீதியாக உங்கள் நிறுவனத்துக்கு மிக்க அனுகூலம் தரக்கூடியது என்பதை நிர்ணயிக்க வேண்டும். ஏற்கனவே நாம் பார்த்த தனியார் கணினி வலையைச் சார்ந்து வளர்ந்த நொவெல் நிறுவனம், இணைய மேடையைச் சார்ந்து செயல்பட்ட எக்ஸோடஸ், நெட்ஸ்கேலர் மற்றும் மைக்ரோஸாஃப்ட் போன்ற உதாரணங்கள் இதற்கு உரித்தாகும். மிக அதிக அனுகூலம் அளிக்குமானால் வேலை சற்றுக் கடினமாயிருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும்.

உதாரணமாக ஆப்பிள் தன் ஐபேட் சாதனத்தை வெளியிட்டதும் பங்குவர்த்தகம் செய்யும் பலரும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் அதைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். சீக்கிரம் அது ஒரு சூறாவளி மேடையாக வளர்ந்தது. அப்போது விண்டோஸ் கணினிகளில் மட்டுமே செயல்பட்ட மென்பொருட்களை எப்படி ஆப்பிள் ஐபேடில் பயன்படுத்துவது என்பது ஒரு பங்கு வர்த்தக நிறுவனங்களுக்குச் சவாலாக இருந்தது. ஒருவருக்கு சவால் என்பது இன்னொருவருக்கு வாய்ப்பு என்று கூறுகிறார்கள் அல்லவா? அது ஸிட்ரிக்ஸ் (citrix) நிறுவனத்துக்கு இந்த நிலை பெரும் வாய்ப்பாயிற்று!

ஸிட்ரிக்ஸ் நிறுவனம், தனியார் கணினிகளில் நிறுவப்பட்டு (installed), அதிலேயே இயங்கும் மைக்ரோஸாஃப்ட் வேர்ட், மற்றும் தனித்துவம் வாய்ந்த பங்குச்சந்தை பரிவர்த்தனைக்குப் பயன்படும் மென்பொருட்களை (applications) தகவல்மைய சேவைக் கணினிகளில் நிறுவி அவற்றின் திரைகளை மட்டும் பயனர்களின் கணினிகளில் காட்டி அவர்களின் சுட்டி (mouse) மற்றும் விசைப்பலகை (keyboard) சமிக்ஞைகளை, பயன்பாடுகளுக்கு அனுப்பும் வசதியை அளிக்கும் சேவை மென்பொருளை அளிக்கிறது. (அது தவிர அடியேன் பணிபுரிந்த நெட்ஸ்கேலர் நிறுவனத்தை வாங்கி மின்வலை சாதனங்களையும் அளிக்கிறது என்பது வேறு விஷயம்!)

ஆப்பிள் ஐபேட் பெருமளவு பயன்பட ஆரம்பிக்கவே, ஸிட்ரிக்ஸ் தனக்குக் கிடைத்த வாய்ப்பை லபக்கென்று பிடித்துக்கொண்டு அதிதீவிரமாகச் செயல்பட்டது! விண்டோஸ் கணினிகளிலும் திரைகாட்டும் மெல்கருவிகளில் (thin devices) மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட தன் திரைப் பயன்பாட்டை, மிக்க முயற்சியெடுத்து ஆப்பிள் ஐபேடிலும் பயன்படுவதாக மாற்றியது. அதற்காக, வழக்கமாக வெகுகாலம் எடுத்துக்கொள்ளக் கூடிய விற்பொருள் உருவாக்க வழிமுறையை எளிதுபடுத்தி, அதிவேகத்துடன் சில வாரங்களுக்குள் வணிகரீதி விற்பனைக்குக் கொண்டு வந்தது.

ஸிட்ரிக்ஸின் அதிதீவிர முயற்சி வீண்போகவில்லை! அந்நிறுவனத்தின் சேவை மென்பொருளை முன்பெல்லாம் தீண்டிக்கூடப் பார்க்காத பெரும் நிதித்துறை நிறுவனங்கள்

பெருமளவான பயனர்களுக்கான உரிமைகளை (licenses) வாங்கிக் குவிக்கவே, ஸிட்ரிக்ஸின் வருமானம் அபரிமிதமாக உயர்ந்தது!

அடுத்த பகுதியில், சூறாவளி மேடைகளோடு சார்ந்து வளர்வதற்கான மற்ற சில நுட்பங்களைப் பற்றியும் மேற்கொண்டு விவரிப்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com