ஹ்ரித்திக் ஜயகிஷ்
அவன் பாடுகிறான். அவர் கரம் உயர்த்திச் சிலாகிக்கிறார், அது அவர் பாடிய பாடலும் என்பதால் கூர்ந்து கவனிக்கிறார். நேரம் செல்லச்செல்ல இசையிலும் சிறுவனின் குரலிலும் மனமுருகி, கண் கலங்கிக் கண்ணீர் விடுகிறார். சிறுவன் பாடி முடித்ததும் அவனைக் கட்டியணைத்து, தலையில் கை வைத்து ஆசிர்வதிக்கிறார். "கடவுள் இல்லை என்கிறார்களே.. இதோ, இருக்கிறார் கடவுள். இல்லையென்றால், நிறைய சங்கதிகள் கொண்ட இந்தப் பாடலை இந்தச் சுண்டைக்காய் பையன் எப்படி இவ்வளவு பாவத்துடன் சிறப்பாகப் பாடியிருக்க முடியும்!" என்று வியக்கிறார். வியந்தவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன். வியக்கப்பட்டவர் ஹ்ரித்திக் ஜயகிஷ். சூப்பர் சிங்கர் - 6 நிகழ்ச்சியின் ஒரு காட்சி இது. பாடலைப் பார்க்க. எஸ்.பி.பி.யின் பாராட்டுரையைக் கேட்க



எஸ்.பி.பி. மட்டுமல்ல; சங்கர் மகாதேவன், சித்ரா, உன்னிகிருஷ்ணன் எனப் பலரும் பாராட்டிய ஹ்ரிதிக்தான் சூப்பர் சிங்கர் டைட்டிலை வென்றார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா என்ன? சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியின் பட்டம் ஜெயித்தது மட்டுமல்ல; இந்த ஆண்டு நடந்த ஃப்ளவர்ஸ் டி.வி. டாப் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாமிடம் பெற்றிருக்கிறார். சிறந்த பாடகருக்கான Studio One Star Icon Annual Award பெற்றிருக்கிறார்.

குருவாயூர் கோவிலில் ஹ்ரித்திக்



ஹ்ரித்திக், மார்ச் 18, 2008 அன்று கேரளாவின் கண்ணூரில் பிறந்தார். தாய்மொழி மலையாளம். தந்தை ஜெயகிஷ். தாய் ரம்யா. நான்கு வயது முதலே கர்நாடக இசை கற்றுவரும் ஹ்ரித்திக்கிற்கு இனிய குரல்வளம். சென்னைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பாடியிருக்கிறார். பள்ளி நிகழ்ச்சிகளில் பாடுவதும் வழக்கம். அப்படி ஒரு சமயம், பள்ளி ஆண்டு விழாவில் ஹ்ரித்திக் பாட, நிகழ்ச்சிக்கு வந்த சிறப்பு விருந்தினர் அம்மு ராமச்சந்திரன் இவரது குரலால் மிகவும் ஈர்க்கப்பட்டார். விஜய் டி.வி. நடத்தி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு ஆலோசனை சொன்னார். தொடர்ந்து அவர் ஊக்குவிக்கவே நிகழ்ச்சியில் குரல் தேர்வில் பங்கேற்றார், தேர்வானார். இசைப்பயணம் தொடர்ந்தது. இறுதிப் போட்டியில் நிகழ்ச்சியின் வெற்றியாளராகக் கோப்பையையும், 50 லட்சம் பெறுமானமுள்ள வீட்டையும் பரிசாக வென்றார் ஹ்ரித்திக் ஜயகிஷ்.

பி.வி, சிந்துவுடன் ஹ்ரித்திக்



சென்னை வேலம்மாள் பள்ளியில் ஏழாம் வகுப்புப் படிக்கும் ஹிரித்திக்கிற்கு மெலடி பாடல்கள் மிகவும் பிடிக்குமாம். மிருதங்கம் மற்றும் தபலா கற்கவும் ஆசை. மிகவும் பிடித்த பாடகர் எஸ்.பி.பி. எஸ்.பி.பி., ஹரிஹரன் இருவருமே தனக்கு இன்ஸ்பிரேஷன் என்கிறார். சித்ராவுடன் பாடியதை மிகவும் பெருமையாகக் கருதுகிறார். (பார்க்க) இளையராஜாவின் இசையில் பாட மிகவும் ஆசையோடு இருக்கிறார். டாக்டர் கே. கிருஷ்ணகுமாரிடம் கர்நாடக இசை பயின்று வரும் இவருக்கு, இசையை நன்கு கற்றுக்கொண்டு திரைப்படங்களில் பின்னணி பாட விருப்பம் உண்டு. துபாய், மதுரை, கோவை, சென்னை என்று பல இடங்களில் பாடியிருக்கிறார். குருவாயூர் தலத்தில் பாடியது மனநிறைவைத் தந்தது என்கிறார். படிப்பிலும் கெட்டிதான். அறிவியலும், ஆங்கிலமும் மிகவும் பிடிக்குமாம். ஐஸ்க்ரீம் சாப்பிடப் பிடிக்கும். சின்சான் கார்டூன் பார்க்கப் பிடிக்கும்.

சங்கர் மகாதேவனுடன் ஹ்ரித்திக்



ஹ்ரித்திக் பாடி மிகுந்த வரவேற்பைப் பெற்ற பாடல்கள் சில:
என்ன சொல்லப் போகிறாய்
காற்றோடு குழலின்
கண்ணம்மா
இதழில் கதை எழுதும்
அழைக்கிறான் மாதவன்
ஊருசனம் தூங்கிருச்சு

யூ ட்யூப் | ஃபேஸ்புக் பக்கம் | இன்ஸ்டாக்ராம்

கட்டியணைத்துக் கண்ணீர் சிந்தினார் எஸ்.பி.பி.



தற்போது கோவிட்-19 காரணமாக யூ-ட்யூப் லைவ் வழியே பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார் ஹ்ரித்திக். (சமீபத்திய நிகழ்வைக் காண)

தொடரட்டும் இந்தச் சாதனை இளைஞரின் வெற்றிப் பயணம்.

சிசுபாலன்

© TamilOnline.com