தென்றல் பேசுகிறது...
அதிபர் ட்ரம்ப் கொரோனா வைரஸ் பற்றி "rounding the turn" என்பதாகப் புதிய சொற்பிரயோகம் ஒன்றைச் செய்துவருகிறார். அது இப்போது திருப்புமுனையில் உள்ளது என்று அவர் சொல்லக் கருதியிருக்கலாம். நம்மைப் போலவே அவர் சொல்வதைப் புரிந்துகொள்ளாத வைரஸ் முன்னெப்போதையும் விட அதிவேகமாக, அபாயகரமாகப் பரவி வருகிறது. அதைத் தடுக்கச் சரியான எந்த யுக்தியோ திட்டமோ இந்த அரசுக்கு இப்போதும் இல்லை, எப்போதும் இருந்ததில்லை. உள்நாட்டு உற்பத்தியை உருப்படாமல் அடித்து, இறக்குமதிக்கான வரிகளைக் கன்னா பின்னாவென்று ஏற்றியதுடன், விவசாயமோ போயிங் விமானமோ எதிலும் தேவையானதைச் செய்யத் திறன்கொண்ட ஆள் பலமும் இல்லாமல் செய்து நாட்டை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறார் ட்ரம்ப். தவறான குடிவரவுக் கொள்கையால் நுகர்வோர் குறைந்தது ஒரு பக்கம் என்றால், உற்பத்திக் குறைவால் விலையேற்றம் மறுபக்கம் என்று சிறு வியாபாரி தொடங்கி எல்லா வணிகர்களும் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். நல்லவேளை, தேர்தல் வந்துவிட்டது. மக்கள் பெருமளவில் சீக்கிரமே வாக்களிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்கள் தெளிவான உறுதியான முடிவை யோசித்து எடுத்திருப்பார்கள் என்று நம்புவோம். வாக்கு என்கிற இருமுனைக் கத்தியைச் சரியாகப் பயன்படுத்தும் முறையில்தான் மக்களின் ஜனநாயகப் பக்குவம் தெரியவரும்.

★★★★★


அமெரிக்க ஐக்கிய நாடுகளின் துணையதிபர் என்னும் பெருமைமிக்க பீடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் கமலா ஹாரிஸ். நாம் இணைந்து செயல்பட்டால், அந்தப் பீடத்தில் முதல் பெண்மணியை, தாய் வழியில் தமிழ் நாட்டில் வேர்கொண்ட முதல் ஆசியப் பெண்மணியை, முதல் வெள்ளையரல்லாத பெண்மணியை அந்தப் பீடத்தில் அமர்த்த முடியும். வாருங்கள் அதற்கு முனைந்து செயல்படலாம்.

★★★★★


இந்த இதழோடு தென்றல் 20 ஆண்டுகளைப் பெருமையோடு நிறைவு செய்கிறது. எத்தனையோ மேடு பள்ளங்களைத் தாண்டி இங்கே வந்திருக்கிறோம். வலுவான உள்ளடக்கமே முதுகெலும்பாக இருக்கும் காரணத்தால் வாசகர்களும் விளம்பரதாரர்களும் ஒருபோதும் எம்மை ஆதரிக்கத் தயங்கியதில்லை. ஆனால், இப்போது அச்சிதழை வேறு வழியின்றி நிறுத்தியிருக்கிறோம். இந்தக் கடுமையான காலத்தில்தான் விளம்பரதாரர்களின் ஆதரவு மீண்டும் தேவைப்படுகிறது. வலையகத்தில் மட்டுமே ஒளிரும் தென்றலை அச்சிதழாக உங்கள் கைகளில் தவழ வைக்கும் மந்திரக்கோல் விளம்பரதாரர் கையில்தான் உள்ளது. நம்பிக்கையோடு கைகோக்க வாருங்கள். நாம் சாதிக்கலாம்.

★★★★★


மாறுபட்ட சிந்தனையோடு, படிக்கத் திகட்டாத படைப்புகளை வழங்கி வரும் இளைஞர் ஹரன் பிரசன்னாவின் நேர்காணல் இந்த இதழை அலங்கரிக்கிறது. நீலகண்ட பிரம்மச்சாரியின் சாகசம் நிறைந்த போராட்ட வாழ்க்கை இந்த இதழில் தொடர்கிறது. இசையுலகைக் கலக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் ஹ்ரித்திக் ஜயகிஷ் பற்றிய கட்டுரை மூக்கில் விரலை வைக்கச் செய்யும். இலக்கிய ஆர்வலர் எவரும் ஏதோவொரு செவ்விலக்கியத்தைப் புரிந்துகொள்ளப் புலியூர்க் கேசிகனின் உதவியை நாடியிருப்பர். அவரைப் பற்றியும் விரிவான கட்டுரை உள்ளது.

வாசகர்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் தீபாவளி, திருக்கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்!

தென்றல்
நவம்பர் 2020

© TamilOnline.com