திருப்தியற்றவன் காணாமற் போவான்
புலன்களைத் திருப்திப் படுத்துவதற்கான ஆசையை, உலகத்தில் கிடைத்ததையெல்லாம் சேர்ப்பதற்கான ஆசையை, செல்வம் குவிப்பதற்கான ஆசையைத் தடுத்திடுங்கள். ஆசைக்கு வரம்பு கட்டுங்கள். ரகுவின் சாம்ராஜ்யத்தில் ஒரு சீடன் இருந்தான். குருகுலக் கல்வி முடிந்ததும் அவன் குருவிடம், நீங்கள் எந்தத் தட்சிணையை ஏற்பீர்கள் எனக் கேட்டான். அவனது நன்றியுணர்வைத் தவிர வேறெந்தத் தட்சிணையும் வேண்டாம் என்றார் குரு. தான் கற்பித்தபடி ஒழுகித் தனக்குப் பெருமை சேர்ப்பதே போதும் என்றார். ஆனால் பணமோ பொருளோ எதுவானாலும் எத்தனை வேண்டுமென்று குரு கூறவேண்டுமெனச் சீடன் வற்புறுத்தினான்.

அவனை எப்படியாவது சமாளித்து விரட்ட நினைத்த குரு, பெரிய தொகை ஒன்றைக் கூறினார். "என்னிடமிருந்து நீ பதினாறு கலைகளைக் கற்றாய். எனவே நீ எனக்குப் பதினாறு லட்சம் நிஷ்காவைக் (பொற்காசுகளை) கொடு" என்று கேட்டார். சீடன் அந்தப் பணத்தைக் கொண்டுவரக் கிளம்பினான்.

அவன் ரகுச் சக்ரவர்த்தியிடம் சென்று, எதைக் கேட்டாலும் கொடுக்கிறேன் என்றொரு வாக்குறுதியைப் பெற்றான். பின்னர், பதினாறு லட்சம் தங்க நிஷ்காவைக் கேட்டு விண்ணப்பித்தான். அவ்வளவு பெரிய தொகைக்கு எங்கே போவதென்று ரகு திணறினார். சக்ரவர்த்தியாக இருந்தபோதிலும், அவர் மிகவும் சிக்கனமானவர் என்பதால் கைவசம் அத்தனை செல்வம் வைத்துக் கொள்ளவில்லை. ஆயினும் சொன்ன சொல்லைக் காப்பாற்றும் பொருட்டு அவர் செல்வத்துக்கு அதிபதியான குபேரனின் சாம்ராஜ்யத்தின் மீது படையெடுத்து, ஏராளமான தங்கத்தைக் கவர்ந்து வந்தார்.

"இவை எல்லாவற்றையும் எடுத்துச் செல். உனது குரு கேட்டதைக் கொடு, எஞ்சியதை நீ வைத்துக்கொள்" என்றார் ரகு. ஆனால் சீடனோ குருவுக்குக் கொடுக்கத் தேவையான தட்சிணைக்கு மேல் ஒரு பொற்காசைக்கூட எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டான். "இவற்றை நான் உனக்காகவே கொண்டு வந்தேன், எடுத்துக்கொள். எல்லாம் உனக்கே" என்றார் மன்னர். சற்றும் சபலத்துக்கு ஆட்படாத சீடன், உறுதியாக இருந்தான். அதுதான் மெய்யான தீரம்.

"அசந்துஷ்டஹ த்விஜோ நஷ்டஹ" (திருப்தியற்றவன் காணாமற்போவான்). தெய்வத்தின்மேல் நம்பிக்கை வைத்து, வருவதை ஏற்றுக்கொள். கடவுள் உன்னில், உன்னோடு இருக்கிறார். எதை எப்போது கொடுப்பது என்பது அவருக்கு நன்கு தெரியும். அவர் பிரேமையினால் நிரம்பியிருக்கிறார்.

நன்றி: 'சனாதன சாரதி', நவம்பர் 2019

பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா

© TamilOnline.com