தென்றல் பேசுகிறது...
"ஒரு செழித்து வளரும் பொருளாதாரத்தைக் கையளித்தோம். இவர் அதைப் பாழாக்கினார்" என்று விவாதத்தின் போது ஜோ பைடன் கூறியதைக் கேட்டிருப்பீர்கள். எத்தனை உண்மை! "அமெரிக்கா முதலில்" (America First) என்பது கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் உலக நாடுகள் தனித்தியங்க முடியாது என்கிற நிலைமை வந்துவிட்டது. எனவே உற்பத்தி, தொழில்நுட்பம், மனிதவளம் என்று பலவற்றிலும் கொள்வதும் கொடுப்பதுமே நியதியாகிவிட்டது. திடீரென்று இவற்றின் மென்னியைப் பிடித்தால் நாடுகளுக்குத் திணறல் எடுக்கின்றது. அமெரிக்காவுக்கும் அப்படித்தான் ஆகிவிட்டது. வளர்ச்சியைக் கருதாத அன்னிய வர்த்தகக் கொள்கை, விழி பிதுங்க வைக்கும் சுங்கவரி, அஞ்சி ஓடவைக்கும் குடிவரவுச் சித்தாந்தம் எல்லாமாகச் சேர்ந்து உற்பத்தித் துறையின் முதுகெலும்பை முறித்துவிட்டது. விளைவு, வேலை இழப்பு, சரசரவென்று ஏறும் விலைவாசி, நுகர்வோரிடையே அவநம்பிக்கை!

பிற உலகநாடுகள் தொழில்நுட்பம், உற்பத்தி, புத்தாக்கம், ஆராய்ச்சி என்று கவனம் செலுத்திக்கொண்டிருந்த சென்ற 20-30 ஆண்டுகளில், நாமோ இராக், வியட்நாம், ஆஃப்கனிஸ்தான் என்று போய்ப் போலிஸ் வேலை செய்து பணத்தையும், இளம் அமெரிக்கர்களின் உயிரையும் வீணாக்கிக் கொண்டிருந்தோம். அந்த இழப்புகளை ஈடுசெய்ய இன்னும் எத்தனை காலம் பிடிக்கும் என்பதை ஊகிக்கவும் அச்சமாக இருக்கிறது.

நல்லவேளையாக மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது. கையைப் பிசைந்துகொண்டு காத்திருக்க வேண்டியதில்லை மாற்றத்தைக் கொண்டுவருவதும், உண்மையிலேயே அமெரிக்காவை முன்னிலைக்குக் கொண்டுபோவதும் சாத்தியம். மாற்றத்துக்கு, வளர்ச்சிக்கு, உயர்வுக்கு வாக்களிப்போம். அந்தச் சக்தி நம் கையில்தான்.

★★★★★


பேரிடர்க் காலத்தில் மக்கள் தம் நாட்டின் அதிபரிடமிருந்து ஆறுதலை, விரைந்த நிவாரணச் செயல்பாடுகளை எதிர்பார்ப்பார்கள். ஆனால், இங்கேயோ அதிபரும் அவரது துணைவியாருமே கோவிட் பெருந்தொற்றுக்கு ஆளாகிவிட்டார்கள். மனிதாபிமான அடிப்படையிலும், நம் நாட்டின் இன்றைய தலைவர் என்கிற முறையில் டோனல்டு ட்ரம்ப் மற்றும் திருமதி ட்ரம்ப் விரைந்து குணமடைய நாம் பிரார்த்தனை செய்கிறோம். உலக அளவில் தொற்றுப் பரவல் நிற்கட்டும், மக்கள் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பட்டும்.

★★★★★


51 ஆண்டுகள், 1500 நாவல்கள், 2000 சிறுகதைகள்! ஏதோவொரு நூலகத்தைப் பற்றி நாம் பேசவில்லை; உலக அளவில் இவற்றை எழுதிச் சாதித்திருப்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர். அவர்தான் ராஜேஷ்குமார். பல்வேறு அறிவியல், சமூக, குற்றப் பின்னணிகளைக் களமாகக் கொண்டு சுவையான கதைகளைப் புனைவதில் வல்லவர். அவரோடு உங்கள் சார்பில் உரையாடினோம் இந்த இதழில். தேசபக்தர் நீலகண்ட பிரம்மச்சாரியின் வாழ்க்கையும் ஒரு த்ரில்லர்தான். இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் வீரமும் தியாகமும் கலந்த விறுவிறுப்பு அத்தியாயம் இவருடையது. நீண்ட அருமையான சிறுகதை இன்னும் பல அம்சங்களோடு வருகின்ற இந்த இதழை உங்களுக்குச் சமர்ப்பிக்கிறோம். தென்றலோடு நடைபோடுங்கள்.

வாசகர்களுக்கு நவராத்திரி, மிலாதுநபி வாழ்த்துகள்.

தென்றல்
அக்டோபர் 2020

© TamilOnline.com