மேத்தி பக்கோடா கடி
தேவையான பொருட்கள்
வெந்தயக்கீரை (மேத்தி) - 1 கட்டு
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 துண்டு
கடலை மாவு - 2 கிண்ணம்
கொத்துமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்க

கடி தயாரிக்க
கெட்டித்தயிர் - 2 கிண்ணம்
கடலைமாவு - 3 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் (தாளிக்க) - 3
இஞ்சி - 1 துண்டு
சீரகம் - 1 தேக்கரண்டி
ஓமம் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
பெருங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
நெய் அல்லது எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை
பச்சைமிளகாய், இஞ்சி இவற்றை மிக்சியில் விழுதாக அரைக்கவும். இரண்டு கிண்ணம் தயிரில் தண்ணீர் விட்டுக் கடைந்து மோராக்கி, உப்பு, மஞ்சள்பொடி போடவும். வாணலியில் நெய் விட்டு சீரகம், மிளகாய்வற்றல், வெந்தயம், பெருங்காயம் சிவக்க வறுத்துத் தாளித்து மோரில் போடவும். அதில் கறிவேப்பிலை போட்டு, அரைத்து வைத்த மிளகாய் இஞ்சி விழுதையும் போடவும்.

பக்கோடா செய்ய: கடலைமாவில் உப்பு, மேத்திக்கீரை (பொடியாய் நறுக்கியது), நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சித் துண்டுகள், கொத்துமல்லி எல்லாம் போட்டுப் பிசைந்துகொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் மாவை சிறிது சிறிதாக உருட்டிப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.

மோரை அடுப்பில் வைத்துக் கொதிக்கும்போது இறக்கிவைத்து, பக்கோடாக்களைப் போட்டு உபயோகிக்கலாம். சாப்பிடும்போது பக்கோடாவைக் குழம்பில் போடாமல் தனியாய் வைத்துக் கொண்டும் போட்டுச் சாப்பிடலாம். மொறுமொறுப்பாக இருக்கும்.

தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி

© TamilOnline.com