நித்யா ராமன்
திருமதி நித்யா ராமன் லாஸ் ஏஞ்சலஸ், கலிஃபோர்னியா மாவட்டம் 4-ன் பிரதிநிதியாக நகர்மன்ற உறுப்பினர் பதவிக்குக் கட்சி சார்பின்றிப் போட்டியிடுகிறார். கேரளாவின் திருச்சூரில் ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்த நித்யா அமெரிக்காவுக்குப் பெற்றோருடன் வந்திறங்கியபோது அவருக்கு வயது ஆறே மாதம்தான். பாஸ்டனின் புறநகர்ப் பகுதியில் பெரும்பாலும் வளர்ந்த அவர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். சில ஆண்டுகள் பணி அனுபவத்துக்குப் பின்னர், புகழ்பெற்ற மாசசூஸட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியிலிருந்து 'நகர்ப்புறத் திட்டமிடல்' (Urban Planning) துறையில் முதுகலைப் பட்டம் வாங்கினார். தன் பார்வை, நோக்கம், ஆர்வம், உந்துதல் இவற்றை அவர் நம்மோடு பகிர்கிறார். கேட்கலாம் வாருங்கள்....

சமத்துவமின்மையைச் சகிக்க முடியாது
என் பொதுவாழ்க்கை முழுவதிலுமே நான் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அநீதி குறித்த மிகப்பெரிய பிரச்சனைகளைத் தீர்ப்பதிலேயே செலவிட்டிருக்கிறேன். இதை இந்தியாவிலும் செய்திருக்கிறேன், அமெரிக்காவிலும் செய்திருக்கிறேன். டெல்லி மற்றும் சென்னையின் சேரிகளில் குடிநீர், கழிப்பறை, சேரிவாசிகளுக்கு நிலவுரிமை என்பவற்றுக்காகப் பல ஆண்டுகள் பாடுபட்டிருக்கிறேன். லாஸ் ஏஞ்சலஸில் வீடற்ற சாலையோர வாசிகளுக்காக உழைத்திருக்கிறேன். எங்கு ஆனாலுமே, அந்த மக்கள் ஒன்று சேர்ந்து மாற்றத்துக்காகப் போரிட்டால் நம்பவியலாதவை நடப்பதைப் பார்த்திருக்கிறேன். எல்லாக் குடிமக்களின் மேம்பாட்டுக்கும் வேறுபாடின்றி நிர்வாக அமைப்புகளைச் செயல்பட வைப்பது நம் நோக்கம்.

கணவர், குழந்தைகளுடன் நித்யா ராமன்



தேர்தலில் போட்டியிடத் தூண்டியது...
நான் வசிக்கும் வட்டாரத்தில் தன்னார்வலர்களே நடத்தும் லாபநோக்கற்ற அமைப்பொன்றைத் தொடங்க நான் உதவினேன். அதுவரை, அங்கிருந்த தெருவோர வாசிகளுக்கு நகர நிர்வாகத்தின் உதவி கிடைத்ததில்லை. நாங்கள் சேர்ந்து பாடுபட்டதில், அங்கிருந்த சர்ச் ஒன்று அனுமதித்த இடத்தில், குளியலறை வாகனம் ஒன்றைக் கொண்டுவந்தோம்; சூடான உணவு கொடுத்தோம்; வசிப்பிடங்கள் ஏற்பாடு செய்யவென அலுவலர் ஒருவரை நியமித்தோம். ஒரு சனிக்கிழமை நான் சேவை செய்துகொண்டிருந்த போது, "இது நகர்மன்றம் செய்யவேண்டிய வேலை அல்லவா? நாம் ஏன் இதைச் செய்கிறோம்!" என்ற எண்ணம் தோன்றியது. அப்போதுதான் நாமே நகர்மன்றத்துக்குப் போட்டியிடலாமே என்ற எண்ணமும் தோன்றியது.

நகர்மன்றமும் நானும்
பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் சிட்டி ஹாலில் பணியில் இருந்தேன். அப்போது, வீடற்றோர் பிரச்சனைகளை நகர்மன்றப் பணியாளர்கள் எப்படிப் பார்க்கின்றனர் என்பதை அறிய அவர்களோடு பேச்சுக் கொடுப்பேன். பின்னால் எனது வட்டாரத்தில் தன்னார்வப் பணி செய்தபோதும் நகர்மன்றத்தை அணுக வேண்டியிருந்தது. லாஸ் எஞ்சலஸில், தெருவோரக் குடிமக்களின் தேவைகள் என்றாலே ஒரு அலட்சியம், மந்தமான இயக்கம் இவற்றைத் திரும்பத் திரும்பப் பார்க்க முடிந்தது. உள்ளூர் அரசியல்வாதிகள் நீண்டகால அரசியல் வாய்ப்புகள் மீதே கண்ணாக இருந்தார்களே தவிர, நகரத்தின் பெரிய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளில் ஆர்வம் காட்டவில்லை.



நான் செய்தே ஆகவேண்டியது
வசிப்பிடம், வீடின்மை குறித்த விஷயங்களில் நகர்மன்றத்தின் செயல்பாட்டை மாற்றியமைக்க விரும்புகிறேன். லாஸ் ஏஞ்சலஸில் சாமான்ய மனிதனுக்கு எட்டும் வாடகையில் வீடு கிடைப்பதில்லை. 'இயல்பாகவே ஏற்படும்' சல்லிசான வசிப்பிடங்களில் அவர்களால் நேரடியாகக் கட்டிக்கொள்ள வசதி ஏற்படுத்தித் தரவேண்டும். அவ்விடங்கள்மீது தமது உரிமையை நிலைநாட்டிக்கொள்ள அவர்களுக்கு வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்யவேண்டும். எல்லா வட்டாரங்களிலும் 'வீடற்றோர் சேவைகள்' நன்கு கிடைக்கும்படி அதை மாற்றியமைக்க வேண்டும்.

என்னைச் செதுக்கியவர்கள்
பொறியியலாளரான என் அப்பாவைப் போல ஒரு கடும் உழைப்பாளியை நான் பார்த்ததில்லை. இப்போது அவர் தனது சொந்தக் கம்பெனியின் CEO. இந்தியாவில் வங்கிப் பணி செய்த என் தாயார் இங்கே தொழில்நுட்பத் துறையில் வேலை பார்க்கிறார். சுதந்திரச் சிந்தனையும் அன்பான கவனிப்பும் கொண்ட அவர், தன் கருத்துகளைத் தயங்காமல் சொல்லும் துணிச்சல் கொண்டவர். நாங்கள் எல்லோரும் பாசத்தோடு அருகிருக்க விரும்பும் என் தம்பியும் லாஸ் ஏஞ்சலஸில்தான் இருக்கிறார்.



சென்னையில் பெண்ணுரிமை இயக்கத்தைச் சேர்ந்த R. கீதா என்பவரைச் சந்தித்தேன். அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பிலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார். பல தியாகங்களுக்கு நடுவில் அவர் சமூக இயக்கங்களை முன்னெடுத்துச் செல்கிறார்.

மாலி லோவரி (Mollie Lowery) நமது மாநிலத்தில் வீடற்றவர் சேவையில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டவர். ஒருவரை ஒரு வீட்டில் குடியேற வைக்கமுடியுமானால் அதற்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போகத் தயார் என்பது அவரது கோட்பாடு. ஒப்பற்ற சமூக சேவகர்.

தாத்தா, பாட்டி, பெற்றோருடன் குட்டி நித்யா



நம்மை நோக்கியுள்ள சவால்...
எனது செயல்பாடுகளில் எல்லோரும் பங்கேற்க வேண்டும் - பரப்புரை செய்யலாம், நிதி உதவலாம், தொலைபேசி அழைப்பில் உதவலாம். தேர்தலுக்குப் பத்து வாரங்களே உள்ளன. உங்கள் உதவி எத்தனை சிறியதானாலும் பரவாயில்லை, அது எனக்குத் தேவை. இங்கே ஒரு மிகப்பெரிய அரசியல் எந்திரத்தை நாம் எதிர்கொள்கிறோம். நகர்மன்றத்தின் சரித்திரத்திலேயே மிகப்பெரிய பணபலம் கொண்ட ஒருவரை எதிர்த்து நிற்கிறோம். மக்கள் சக்தி என்ன சாதிக்க முடியும் என்பதை இந்த அரசியல் எந்திரத்துக்குக் காண்பிப்போம் வாருங்கள்.

உரையாடல்: வெங்கட்ராமன் சி.கே.
தமிழில்: மதுரபாரதி

© TamilOnline.com