பரிந்துரை செய்தால்தான் விருதுகள்
பத்மஸ்ரீ, தேசிய விருது ஆகியவற்றை நீங்கள் ஏன் இன்னும் வாங்கவில்லை என பலர் கேட்கிறார்கள். அதற்கு இதுவரை நான் பதில் சொன்னதில்லை. இங்கு சொல்கிறேன். இங்கு நடிப்பவர்கள் பரிந்துரை செய்தால்தான் அங்கு ஏற்றுக் கொள்வார்கள். இவர்கள் யாரும் பரிந்துரை செய்யாததால் எனக்கு விருது கிடைக்கவில்லை. ஆனால் இன்று ரசிகர்களால் எனக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது.

நடிகர் நாகேஷ், 2004ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுக் கொண்டு பேசியது...

*****


விஞ்ஞானிகள் இரவு பகலாகப் பாடுபட்டு இந்த வெற்றியைப் பெற்றுள்ளனர். இதை நான் நேரில் பார்த்தேன். இந்த வெற்றியால் நான் பெருமைப்படுகிறேன். நமது நாடும் பெருமைப்படுகிறது. 1980-ம் ஆண்டு ஜூலை மாதம் 40 கிலோ எடை உள்ள செயற்கைக் கோளை அனுப்பும் திறனைத்தான் நாம் பெற்று இருந்தோம். இப்போது 25 வருடங்களுக்குப் பிறகு நமது விஞ்ஞானிகளின் உழைப்பால் 1.6 டன் எடையுள்ள செயற்கைக் கோளைப் பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பும் திறனைப் பெற்றுள்ளோம். இதற்காக நமது விஞ்ஞானிகளுக்கு மனப் பூர்வமான வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், ஸ்ரீஹரிகோட்டாவில் புதிய ராக்கெட் தளத்தில் இருந்து செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டதை அடுத்து விஞ்ஞானிகளிடையே உரையாற்றியது...

*****


பா.ஜ.க. கூட்டணிக்குப் பொதுப்படையான அம்சங்களுக்கு மட்டுமே தெலுங்கு தேசம் ஆதரவு அளித்து வந்தது. பா.ஜ.க.வின் ஹிந்துத்வா போன்ற கொள்கைகளை எதிர்த்துக் குரல் கொடுத்து வருகிறது. மதச்சார்பின்மை, நல்லிணக்கம் ஆகிய வற்றைப் பாதுகாக்க தெலுகுதேசம் உறுதி பூண்டுள்ளது. அயோத்திப் பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன்.

குஜராத் கலவரம், பா.ஜ.க.வுக்கு அளித்து வந்த ஆதரவு ஆகியவற்றின் காரணமாக ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் சிறுபான்மையினரின் ஆதரவைத் தெலுங்கு தேசம் கட்சி இழக்க நேரிட்டது.

சந்திரபாபு நாயுடு, முன்னாள் ஆந்திர முதல்வர், பத்திரிக்கைப் பேட்டியில்...

*****


சண்முகம் அய்யாவின் குழுவில் பணியாற்றிய மூத்த மகன் எஸ்.எஸ். ராஜேந்திரனும் இங்கு இருக்கிறார். கடைக்குட்டியான நானும் இங்கு இருக்கிறேன். இது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம். சகாப்தத்தில் இடம்பெறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்து விட்டது. சண்முகம் அய்யாவின் குழுவில் இடம்பெறும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் மீது நான் அனுதாபம் அடைகிறேன்.

சிறுவயதில் என்னை ஆங்கிலவழிக் கல்வி பயில அனுப்பிவிட்டார்கள். சண்முகம் அய்யாவிடம்தான் நான் தமிழ் கற்றேன். பக்திமார்க்கம் கற்றதும் அவரிடம்தான். சண்முகம் அய்யா பெயரிலும் பாலச்சந்தர் பெயரிலும் நாடக அரங்கங்கள் அமைக்கப் பட வேண்டும். நாடகத்துறைக்கு சிறந்த மாநிலமாக தென்னகத்திலிலேயே தமிழகம் திகழ வேண்டும். இதற்கான முயற்சிகளில் நான் அதிவேகத்தில் ஈடுபடுவேன்.

கமல்ஹாசன், அவ்வை டி.கே. சண்முகம் அவர்களின் 98-வது பிறந்தநாள் விழாவில்...

*****


சமீப காலமாக கங்குலியின் பேட்டிங் மிகவும் மோசம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதனால் அவர் கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்துக்கே சென்றுவிட்டாரோ என்ற அச்சம் தெரிகிறது. என்றாலும் அவரது விஷயத்தில் தேர்வாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அத்துடன் அவரது எதிர்கால கிரிக்கெட் குறித்தும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஒருவேளை நான் தேர்வாளராக இருந்தால், நிச்சயமாக இன்னும் ஒரு வாய்ப்பு அவருக்குக் கொடுப்பேன். அவரது வாழ்வின் அனைத்து அம்சங்களையும் பார்க்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் கங்குலியின் பணி மகத்தானது. ஆதலால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து முடிவு எடுப்பதற்கு முன்பு தீவிரமாக ஆலோசிக்க வேண்டும். இந்தியாவுக்குக் கிடைத்துள்ள மிகச் சிறந்த வீரர்களில் கங்குலியும் ஒருவர்.

வாசிம் அக்ரம், பாகிஸ்தானிய வேகப்பந்து வீச்சாளர், பி.டி.ஜ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்...

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com