இனிப்பு நீரின் மர்மம்
அத்தியாயம் - 8
வகுப்பறையில் அருணுக்கு இருப்பே கொள்ளவில்லை. தலைமை ஆசிரியையிடம் பேசியதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான். அவர் மேலதிகாரிகளோடு தண்ணீர்பற்றிப் பேசினாரா, ஏதாவது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டாரா, என்று சிந்தித்துக்கொண்டே இருந்தான். அருணின் சஞ்சலத்தைப் பார்த்து மிஸ் டிம்பர் கூட ஓரிருமுறை அவனை வகுப்பில் கவனம் செலுத்துமாறு கண்டித்தார்.

மதிய இடைவேளையில் தலைமை ஆசிரியையைத் தேடினான். அவர் எங்கும் தென்படவில்லை. அவரிடம் நேரடியாகவே கேட்டுவிடலாம் என்று நினைத்தான். ஆனால் முடியவில்லை. சாரா அருணின் தவிப்பைப் பார்த்து, எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று ஆறுதல் கூறினாள்.

அருண் ஏமாற்றத்தோடு வீடு திரும்பினான். வீட்டில் அம்மாவிடம் தலைமை ஆசிரியையிடம் பேசியதைச் சொன்னான். அது கீதாவுக்குப் பெருமையாக இருந்தது.

மறுநாள் காலையில் அவன் இருப்புக் கொள்ளாமல் முந்தினநாள் போலவே சீக்கிரமாகப் பள்ளிக்குக் கிளம்பினான். பள்ளியில் சைக்கிளை நிறுத்திவிட்டு, மிஸஸ் மேப்பிளைத் தேடி மைதானத்திற்கு ஓடினான். அங்கே அவர் இருந்தார்.

"மிஸஸ் மேப்பிள், நீங்க ஃபோன் கால் பண்ணிணீங்களா? என்ன ஆச்சு?" என்று பதட்டத்தோடு கேட்டான்.

ஆனால் அவர் திடீரென்று ஏதோ அவசர காரியம் வந்ததுபோல், கையசைத்துவிட்டு வேகமாக நகர்ந்து விட்டார். அருணைக் கண்டும் காணததைப் போலப் போய்விட்டார்.

"அருண், அருண்!"

குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். கவலையோடு சாரா நின்றிருந்தாள். அவளும் அங்கு சற்று முன்னர் நடந்ததைக் கவனித்திருந்தாள்.

"கவலைப்படாதே அருண். அவங்க ஏதோ வேலையா போறாங்க போலிருக்கு" என்று சமாதானம் செய்தாள்.

"இல்லை சாரா, அவங்க என்கிட்ட பேசப் பிடிக்காமதான் வேகமா போனாங்க. அப்படி நான் என்ன பண்ணிட்டேன். ஒரு வார்த்தை என்கிட்ட பேசியிருக்கலாம் இல்லே?"

"இன்னும் பள்ளி மணி அடிக்க அரைமணி நேரம் இருக்கே. நம்ம ஏன் நேர்லயே போய்க் கேட்கக்கூடாது?" என்றாள் சாரா.

அருணுக்கு அதுவும் சரிதான் என்று பட்டது. "வா, நாம போய் நேடியாகவே கேட்ருவோம்" என்றான்.

நிமிஷத்தில் சாராவும் அருணும் பள்ளி அலுவலகத்தில் நுழைந்தார்கள். அங்கே நிர்வாக அதிகாரி இன்னும் வரவில்லை. நேரே தலைமை ஆசிரியையின் அறைக்குச் சென்றார்கள். அறையை நெருங்கும்போது, உள்ளே திருமதி மேப்பிள் ஃபோனில் சத்தமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார். சாராவும் அருணும் மெல்ல ஒட்டுக்கேட்டார்கள்.

"ஐயா, இது எங்க பள்ளிக்கூடம். எங்க மாணவர்கள். குழந்தைங்க சார். கொஞ்சம் நினைத்துப் பாருங்க. எனக்கு பொறுப்புன்னு ஒண்ணு இருக்கு சார். இப்ப இரண்டு மாணவர்களுக்கு சந்தேகம் வந்திருக்கு. நாளைக்கு, இன்னும் நிறைய பேருக்கு வரும். அப்புறம் கட்டுப்படுத்த முடியாம ஆயிடும். குழந்தைங்க ஏதும் உடம்பு சரியில்லாம போனா நீங்கதான் சார் பொறுப்பு. அப்புறம் அந்தப் பாவம் உங்களை சும்மா விடாது. நீங்க உங்க குழந்தைன்னா இப்படி சொல்லுவீங்களா? தயவுசெய்து தண்ணீரை சோதிச்சு பார்க்க ஏற்பாடு பண்ணுங்க."

அருணுக்கும் சாராவிற்கும் மேப்பிள் அம்மையார் இப்படிச் சத்தம்போட்டுப் பேசி பார்த்தேயில்லை. அவர் எப்போதும் கலகலவென இருப்பார். தாங்கள் சொன்ன தண்ணீர் விஷயம் ஏதோ பிரச்சனை ஆகிவிட்டது போலத் தோன்றியது.

"சார், நான் இதைப்பத்தி செய்தி நிருபர்கிட்ட சொல்லிடுவேன், நீங்க தகுந்த ஏற்பாடு பண்ணலேன்னா" மேப்பிள் அம்மையார் விட்டபாடில்லை.

அருண் சாராவை பயம் கலந்த பார்வை பார்த்தான். இருவரும் சத்தம் போடாமல் அங்கிருந்து வெளியே வந்தனர். "அருண், நீ சந்தேகப்பட்ட மாதிரியே இதுல ஏதோ மர்மம் இருக்குன்னு நினைக்கிறேன்."

"எனக்கும் அப்படித்தான் தோணுது சாரா. நம்ம ஏதனாச்சும் பண்ணனும்."

சாராவுக்கு பயமாக இருந்தது. தலைமை ஆசிரியையே ஒன்றும் செய்யமுடியாமல் தவிக்கும்போது, இவர்கள் இருவரால் பெரிதாக என்ன செய்துவிட இயலும்?

"வேண்டாம் அருண். விட்டுடு."

"நீ வந்தா வா. இல்லேன்னா நான் தனியா பாத்துக்கறேன்" அருண் எரிச்சலோடு சொன்னான். சாரா மௌனமாக இருந்தாள்.

"இதுக்கும் ஹோர்ஷியானா நிறுவனத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு. அவங்க மட்டுந்தான் நம்ம தலைமை ஆசிரியையைக்கூட தடுக்கமுடியும். அவ்வளவு செல்வாக்கு!" அருண் எரிச்சலோடு கூறினான்.

அருணுக்கு ஓர் ஐடியா தோன்றியது. நண்பன் சாம் போவதைப் பார்த்து, "சாம், நம்ம குடிநீர் ஃபவுன்டன்ல பழ ஜூஸ் வருதாமே" என்றான் அருண்.

"அப்படியா?" சாம் ஓடினான்.

அவன் ஒரு ஓட்ட வாய். சும்மா இருக்கமாட்டான். ஐந்தே நிமிடத்தில் அங்கே தண்ணீர் குடிக்கப் பெரும் வரிசை ஒன்று நின்றது.

"அருண், இதனால யாருக்காவது உடம்பு சரியில்லாம போச்சுன்னா?" சாரா பதட்டத்தோடு கேட்டாள்.

"கவலைப்படாதே. தண்ணீர் பிரச்சினை பெரிய அளவுல வெளிய வர இதுதான் வழி."

பள்ளக்கூட நிர்வாகி விரைந்து வந்து குடிநீர் ஃபவுன்டன் அருகே இருந்த மாணவர் கூட்டத்தைக் கலைத்தார். 'Closed for service' என்ற ஒரு டேப்பை அதைச் சுற்றி வைத்தார். அருணுக்கு, தான், சாரா, சாம் தவிர மற்ற யாரும் தண்ணீரை ருசி பார்க்க முடியாமல் போய்விட்டது, ஒரு தோல்விபோல இருந்தது.

அந்தத் தண்ணீர் பற்றிய தகவல் வெளிவந்துவிடக் கூடாது என்று யார் நினைத்தார்களோ, அவர்கள் அன்று ஜெயித்துவிட்டார்கள். அதை அப்படியே விட்டுவிட முடியாது. எப்படியும் இதை வெளியே தெரிவித்தாக வேண்டும் என்று அருண் தீர்மானித்தான்.

(தொடரும்)

ராஜேஷ்

© TamilOnline.com