ஸ்ரீ ரெட்டியபட்டி சுவாமிகள்
அலகிலா விளையாட்டுடைய இறைவனின் பெருமையை அளந்து கூறுவது கடினம். அதனால்தான் சேக்கிழார் பெருமான் 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்' என்று அவன் பெருமையைப் புகழ்ந்துரைக்கிறார். அத்தகைய இறைவன்மீது உண்மையான அன்பு பூண்டு தூயபக்தியுடன் வணங்குவது அடியவர்களின் கடமை. அந்த அடியவர்களை வழிநடத்தவும், அவர்களுக்கு இறைவனின் உண்மையான தத்துவங்களை உபதேசிக்கவுமே இறைவனின் ஆணைப்படி அவதாரபுருஷர்கள் தோன்றுகின்றனர்.

சித்தர், யோகி, ஞானி, முனிவர் எனப் பல வகைகளில் இவர்கள் தோன்றினாலும், அவர்களது ஒரே நோக்கம் மானுடத்தை உயர்த்தி, மாயையாகிய மனமயக்கத்தை மக்களிடமிருந்து நீக்கி, முக்தி நெறிக்கு உயர்த்துவதே. அந்த வகையில் தோன்றிய ஞானிகளுள் குறிப்பிடத்தகுந்தவர் ஸ்ரீ ரெட்டியபட்டி சுவாமிகள்.

அவதாரம்
முத்துக்குப் பெயர்போன தூத்துக்குடியில் உள்ள ஊர் நாகலாபுரம். அந்த ஊருக்கு அருகே இருக்கும் சிற்றூர் ரெட்டியபட்டி. அந்த ஊரில் வீரபத்திரப் பிள்ளை என்பவர் வாழ்ந்துவந்தார். விவசாயம் குலத்தொழில் என்றாலும், அவ்வூர் ஆலயப் பூசையையும் அவர் குடும்பமே கவனித்து வந்தது. அதனால் 'பூசைக்காரர்' என்றே அவர்கள் மரியாதையாக அழைக்கப்பட்டனர். பிள்ளையின் மனைவி ஆவுடையம்மாள் சிறந்த தெய்வபக்தி கொண்டவர். வறியவர்கள் வந்து இரந்தால் இல்லை என்று சொல்லாத வள்ளன்மை மிக்கவர். இத்தம்பதிகளின் இனிய இல்லற வாழ்க்கைக்குச் சாட்சியாக நல் மகவுகளும் வாய்த்திருந்தன.

ஒருநாள் ஆவுடையம்மாள் வித்தியாசமான கனவொன்றைக் கண்டார். வானில் ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு தோன்றியது. பின்னர் அது வெள்ளை யானையாகவும் அழகான இளைஞனாகவும் உருமாறியது. மெல்லக் கீழிறங்கிய அது ஆவுடையம்மாளின் வயிற்றில் புகுந்து மறைந்தது. அம்மையார் கருவுற்றார். செப்டம்பர் 16, 1856ல் ஓர் அழகான ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார். அதற்கு சுப்பிரமணியம் என்று பெயர் சூட்டினர். குழந்தை வளர்ந்தான். தாயுடன் தினந்தோறும் கோயிலுக்குச் செல்வதும், தந்தையுடன் வயலுக்குச் செல்வதும் அவனது வழக்கமானது. சக குழந்தைகளுடன் விளையாடாமல் ஏகாந்தத்தில் இருப்பதும், வீட்டின் பூஜையறைக்குள் அமர்ந்து கண்மூடி கைகூப்பித் தொழுது கொண்டிருப்பதும் அவனது வாடிக்கை. வளர்ந்ததும் அவ்வூர்த் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தனர். தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டான். பள்ளி நேரம் போக எஞ்சியதில் தந்தைக்கு உதவி செய்வான்.

மக்களுக்கு உதவி
சுப்பிரமணியம் வளர்ந்து இளைஞனானான். அது ஒரு கிராமம் என்பதால் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை மக்கள் வெளியூர்களில் இருந்து வாங்கிவருவர். அதனால் அலைச்சலும் கஷ்டமும் ஏற்பட்டது. வியாபாரிகளில் சிலர் விலையை அதிகமாக வைத்து விற்றனர். அது கண்டு பொறுக்காத சுப்பிரமணியம், தானே ஒரு வண்டியைப் பூட்டி, தூத்துக்குடிக்குச் சென்று, அங்கிருந்து மக்களுக்குத் தேவையான பொருட்களை நேரடியாகக் கொள்முதல் செய்தார். அப்படி வாங்கிவந்த பொருட்களைத் தன் ஊரில் லாபம் இல்லாமல், கொள்முதல் விலைக்கே விற்றார். அவருக்குத் தங்கள் மீதிருந்த அன்பைக் கண்டு மனம் நெகிழ்ந்தனர் மக்கள். அவரது தியாகத்தை, சேவை மனப்பான்மையைப் போற்றினர்.

பிற நேரங்களில் தனித்திருந்து தியானம் செய்வதும், சில சமயம் சிலம்பு, மல்யுத்தப் பயிற்சிகளில் ஈடுபடுவதும் சுப்பிரமணியத்தின் வழக்கமாக இருந்தது.



மதுரையில்...
சில வருடங்கள் ரெட்டியபட்டியில் வசித்த பின்னர் மதுரைக்குச் சென்றார் சுப்பிரமணியம். அங்கு ஒரு கடையில் பணியாளராகச் சேர்ந்தார். விரைவிலேயே தொழில் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தவர், அந்தக் கடையின் கணக்குப் பிள்ளையாக உயர்ந்தார்.

நாளடைவில் தொழில் நிமித்தமாக பம்பாய் உள்ளிட்ட வட இந்தியாவின் பல பகுதிகளுக்கும் செல்ல நேரிட்டது. அவ்வாறு சென்றபோது அங்கிருந்த புகழ்பெற்ற ஆலயங்களையும், சாதுக்களையும் தரிசிப்பார். புண்ணிய நதிகளுக்குச் சென்று நீராடுவார். யோகிகள், மகான்களின் ஆசிரமங்களுக்கும், ஜீவசமாதிகளுக்கும் சென்று தரிசிப்பார்.

மதுரையில் அவர் வசித்துவந்த காலத்தில் பிரம்மமுகூர்த்தம் என அழைக்கப்படும் விடியற்காலையில் எழுந்து கொள்வார். வைகை ஆற்றங்கரைக்குச் செல்வார். குளிர்ந்த நீரில் நீராடுவார். பின்னர் கரையிலேயே கண்மூடி அமர்ந்து வெகுநேரம் தியானிப்பார். பின் தனது கடமைகளுக்குத் திரும்புவார். இது அவரது அன்றாட வழக்கம்.

விநாயகர் அருள்
ஒருநாள்... அவ்வாறு விடியலில் வைகைக் கரையில் தியானம் செய்து கொண்டிருந்தார் அவர் கண் விழித்துப் பார்த்தபோது அருகே அழகான பிள்ளையார் சிலை ஒன்று இருந்தது கண்டு திகைத்தார். யாரேனும் கொண்டு வைத்திருப்பார்களோ என்று பார்த்தார். யாரும் அருகில் இல்லை என்பதையும், இறையருளால் அது தோன்றியிருக்கிறது என்பதையும் உணர்ந்தார். பின்னர் அவ்விநாயகரை அருகில் இருந்த மரத்தடியில் அமர்த்தி அன்றாடம் வழிபட்டார். நாளடைவில் 'பரிபூரண விநாயகர்' என்ற பெயரைச் சூட்டி, தனியாக ஆலயம் அமைத்து வழிபட்டார். மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து அந்தத் தான்தோன்றி விநாயகரை தரிசித்தனர்.

ரெட்டியபட்டி சுவாமிகள்
சுப்பிரமணியத்தின் புகழ் மெல்ல மெல்லப் பரவலாயிற்று. வேதம், உபநிஷத், பிரம்ம சூத்திரங்கள், தர்ம சாஸ்திரங்கள் என அனைத்தையும் ஓதாது உணர்ந்த ஞானியாக அவர் விளங்கினார். நாடி வருவோர்க்குத் தக்க ஆலோசனை கூறி, அவர்கள் பிரச்னைகளிலிருந்து விடுபட வழிகாட்டினார். ஆன்மீகத் தெளிவு பெறச் செய்தார். அதனால் பலரும் அவரைத் தங்கள் குருவாக ஏற்றனர். அவர் கையால் அளிக்கும் திருநீற்றை வாங்கிப் பூசிய பலரது நோய்கள் குணமாயின. பலர் மனத்தெளிவு பெற்றனர். பலருக்கு வாழ்க்கை உயர்ந்தது. செல்வவளம் சேர்ந்தது. பிரச்சனைகள் விலகின. அதனால் மக்கள் அவரை நாடி வந்து வழிபட ஆரம்பித்தனர். அவரை அன்போடு "ஸ்ரீ ரெட்டியபட்டி சுவாமிகள்" என்று அழைத்தனர். நாளடைவில் சுப்பிரமணிய சுவாமிகள் என்ற பெயர் நீங்கி, "ரெட்டியபட்டி சுவாமிகள்" என்ற பெயரே நிலைத்தது.

குற்றால தவம்
சிலகாலம் மதுரையில் வசித்த சுவாமிகள், ஆன்மஞானம் அடைய உத்தேசித்து, சித்த புருஷர்கள் வாழும் திருக்குற்றாலமலைக்குச் சென்றார். அங்குள்ள இயற்கைச் சூழலும், அமைதியும் அவரை வெகுவாகக் கவர்ந்தன. பல நாட்கள் ஊண், உறக்கமின்றி ஏகாந்த நிலையில் தவம் புரிந்தார். அந்நிலையில் அவருக்குப் பல சூட்சும தரிசனங்கள் கிட்டின. முற்பிறவி பற்றிய விஷயங்களும், நாட்டின் எதிர்கால உண்மைகளும் புலப்பட்டன. இப்பிறவியின் நோக்கம் என்ன என்பதும், தான் செய்யவேண்டிய பணி என்ன என்பதும் தெரியவந்தது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் குற்றாலமலையில், செண்பக அருவி அருகே தவம் மேற்கொண்டார். சித்தர்கள் பலரது ஆசிபெற்றுச் சித்த புருஷராக வெளியுலகிற்குத் திரும்பினார்.

கர்மாவை வெல்ல இயலுமா?
பஞ்சபூதங்களின் சேர்க்கையாலான இவ்வுடல் கர்மாக்களைக் கழிக்கவே இப்பூமியில் பிறப்பெடுக்கிறது. அந்தப் பஞ்சபூதங்களின் உதவியைக் கொண்டே அக்கர்மாவை நாம் வெல்லமுடியும் என்பதை சுவாமிகள் தன் முயற்சியால் கண்டுகொண்டார். குறிப்பாக, பஞ்சபூதங்களில் முதன்மையானதான நீரைக் கொண்டு பல வினைகளை நம்மால் களையமுடியும் என்பதைக் கண்டறிந்த அவர், தாம் கண்டறிந்தவை அனைவருக்கும் பயன்பெற வேண்டும் என எண்ணினார். எனவே அவற்றைத் தம்மை நாடி வருவோருக்கும் சீடர்களுக்கும் எடுத்துரைத்தார்.

"கர்மவினைகளை அனுபவிக்கவே மானுடப் பிறவி ஏற்படுகின்றது. ஆனால், அவற்றின் தாக்கத்தால் மனிதன் மேலும் மேலும் தனது கர்மாக்களைக் கூட்டிக்கொள்ள நேரிடுகிறது. ஆகவே சில நெறிமுறைகளைப் பின்பற்றி தூயவாழ்க்கை நடத்தினால் கர்மாக்கள் முற்றிலும் நீங்கிவிடுவதுடன், மீண்டும் அவை அணுகா. மறுபிறவியும் ஏற்படாது" என்பது சுவாமிகளின் கருத்து.

சுவாமிகளின் தத்துவங்களும் சிந்தனைகளும்
பிரபஞ்சத்தில் பூமி, நீர், ஆகாயம் என்ற மூன்று தத்துவங்களும் நெருப்பு, வாயு என்ற இரண்டு சக்திகளும் அடங்கியிருக்கின்றன. அந்த பூமியைக் காட்டுவதற்கு சிவலிங்க உருவமும், நீரைக் காட்டுவதற்கு கும்ப கலசமும், ஆகாயவெளியைக் காட்டுவதற்கு அருட்கொடியையும் இறைவன் அளித்திருப்பதாக ரெட்டியபட்டி சுவாமிகள் குறித்துள்ளார். அவரது கருத்துக்கள் பலவும் சிந்திக்க வைப்பவை.

"ஆன்மா வினைகளைக் கழிக்கவே பிறவி எடுக்கிறது. இன்ப வினைகளை மட்டும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும் அது, துன்பங்களை அனுபவிக்க அஞ்சிப் பல பரிகார முறைகளை நாடுகிறது. அதனால் அந்தக் கர்மாவானது தீராமல் அந்த உடலுடனேயே தங்கிவிடுகிறது. அதுவே பின்னர் பிறவிதோறும் தொடர்ந்து வந்து வருத்துகிறது" என்னும் சுவாமிகளின் கருத்து சிந்திக்கத்தக்கது.



ஜீவன்
எந்த உயிரும் இறுதியில் மானுடப்பிறவி எடுத்துத்தான் முக்தி நிலை அடைய வேண்டும். வினைகளையும், விதிகளையும் மானிட உடல் எடுத்துத்தான் கழிக்கவேண்டும். அதனால்தான் மானுடப் பிறவி முக்கியத்துவம் பெறுகிறது.

வினை
ஆன்மா உலகில் மானிடவுடல் எடுத்ததும் இன்பம், துன்பம் என வினைகள் சூழ்கின்றன. துன்ப வினைகளால் நோய் முதலியன ஏற்படுகின்றன. மருந்தினால் சில நோய்கள் நீங்கிவிடுகின்றன. சில தொடர்கின்றன. ஆனாலும் அந்தப் பாப வினைகள் முற்றிலும் கழிவதில்லை. அந்த வினைகளுடனே அது இறந்து, அவற்றை அனுபவிக்க மீண்டும் பிறவி எடுக்கிறது. இவ்வாறு பிறவிதோறும் இப்படியே தொடர்கின்றது. அதனால் பிறவிகளும் தொடர்கின்றன.

விதி
வாழ்க்கையில் துன்பங்கள் நேரும்போது அவற்றைத் தீர்த்துக்கொள்ளப் பலவகை பரிகாரங்களைச் செய்கிறோம். சில பரிகார முறைகளினால் துன்பங்கள் களையப்பட்டாலும் உண்மையில் அவையும் அந்த விதிப்பயனால்தான் ஏற்படுகிறதே அன்றி, பரிகாரத்தின் மகிமையால் அல்ல.

மேற்கூறியவை ரெட்டியபட்டி சித்தர் கூறிய தத்துவங்களாகும். இது போன்ற துன்பங்களைப் போக்குவதற்காகவே அவர் சில உபதேச நெறிமுறைகளை ஏற்படுத்தி அதற்குச் 'சட்டம்' என்று பெயரும் சூட்டினார்.

அருள் சட்டம்
சுவாமிகள் அறிவித்த சட்டங்களில் முதன்மையான பங்கு தண்ணீருக்கு உண்டு. நீர் பஞ்சபூதங்களில் முதன்மையானது. அந்த நீரையே சிவன் தன் சிரசில் புனித கங்கையாக ஏற்றிருப்பதாகப் புராணம் சொல்கிறது. விஷ்ணு சயனித்திருப்பது பாற்கடலில். நீராலாகிய அப்பாற்கடலைக் கடைந்தே அமிர்தம் எடுத்தனர். புனித நீரைக் கொண்டே கும்பாபிஷேகம் செய்யப்பட்டு ஆலயங்கள் புனிதப்படுத்தப்படுகின்றன மக்கள் தங்கள் வினைகளைக் களைய புண்ணிய நதிகளில் நீராடிப் பாவங்களைப் போக்குகின்றனர். அவ்வாறு தங்கள் தலை, உடல் என அனைத்தும் நீரில் மூழ்கி இருக்கும்போது அதன்மூலம் சில மாற்றங்கள் நிகழ்ந்து அவர்களது பாவங்கள் படிப்படியாகக் களையப்படுகின்றன. ஆகவேதான் சுவாமிகள் வினை போக்குதலில் தண்ணீருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

ரெட்டியபட்டி சுவாமிகள் அறிவித்த சட்டங்கள்:
தினமும் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்துகொள்ளல் வேண்டும்.
விடியற்காலை 3.45 முதல் 4.15க்குள் நீராடிவிட வேண்டும்.
வெயில், மழை, குளிர் என நாள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் தினம்தோறும் தலை முழுகி (சிரசு நனைய) நீராட வேண்டும்.
நீராடியபின் இறை நாமத்தை உச்சரித்தவாறே திருநீற்றை அணிய வேண்டும்.
நீராடுவது மட்டுமல்லாது குடிக்க, முகம், கை, கால் கழுவ என எந்தச் செயலுக்கும் காய்ச்சிய நீரைப் பயன்படுத்தக்கூடாது. அது தீங்கையே விளைவிக்கும்.
மிதமிஞ்சிய குளிர்ப் பிரதேசத்தில் வசிப்பவர்கள் சூரிய ஒளியின் மூலம் வெப்பமாகும் நீரைப் பயன்படுத்தலாம்.
மதுபானங்கள், அசைவ உணவு போன்ற தீய பழக்கங்கள் உள்ளவர்கள் அவற்றிலிருந்து முழுவதும் விடுபட்ட பிறகே இந்நெறியை ஏற்க வேண்டும்.
வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்துவந்தால் வினைகள் கழியும். விரதங்களை அவரவர்கள் பழக்கவழக்கத்துக்கேற்ப இருக்கலாம்.
ஆன்மா வசித்த உடலைப் போற்றவேண்டும். இறந்தபின் சமாதி செய்விக்க வேண்டும். எரித்தல் கூடாது.
யோகம், தியானம் போன்றவற்றினால் விளையக்கூடிய பயன்களை (சுவாமிகள் ஏற்படுத்திய) சட்ட வாழ்க்கையை ஒருவர் பின்பற்றுவதால் பெறமுடியும்.
சுவாமிகள் தமது வாழ்க்கையில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார். பலரது பாவங்களைப் போக்கியிருக்கிறார். தீராத வினைகளைத் தீர்த்திருக்கிறார். இவ்வாறு பற்பல அற்புதங்கள் புரிந்த அம்மகான், தாம் பிறந்து வாழ்ந்து வளர்ந்த ஊரான ரெட்டியபட்டியில், மார்கழி மாத அனுஷ நட்சத்திரத்தில், ஜனவரி 12, 1923 அன்று மகாசமாதி அடைந்தார். அப்போது அவருக்கு வயது 66.

சமாதி ஆலயம்
சுவாமிகளின் மறைவுக்குப் பின் சிறிய ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டது. பின்னர் பத்மஸ்ரீ கணபதி ஸ்தபதி அவர்களால் புதிதாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டு ஆலயம் விரிவாக்கப்பட்டது. புரட்டாசி மாதம் ரேவதி நட்சத்திரத்தன்று சுவாமிகளுக்கு ஜயந்தி விழாவும், மார்கழி அனுஷ நட்சத்திரத்தன்று குருபூஜை விழாவும் சிறப்பாக அவரது பக்தர்காளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றும் வேண்டுவோர்க்கு வேண்டும் வரந்தரும் அருள் நிலையமாக விளங்கி வருகிறது மகானின் சமாதி ஆலயம்.

சென்னை தியாகராய நகரில், புகழ்பெற்ற ரங்கநாதன் தெருவில் சுவாமிகளின் சீடர் மாம்பலம் சுவாமிகளால் ரெட்டியபட்டி சுவாமிகளுக்கு ஓர் ஆலயம் அமைக்கப்பட்டு சிறப்பாக வழிபாடு, பூஜைகள் நடந்து வருகின்றன

ரெட்டியபட்டி சுவாமிகளின் சமாதி அமைவிடம்
இவ்வாலயத்திற்கு மதுரை, அருப்புக்கோட்டை, கோவில்பட்டி ஆகிய ஊர்களிலிருந்து விளாத்திகுளம் செல்லும் பேருந்தில் சென்று, நாகலாபுரம் என்ற ஊரில் இறங்கிக்கொள்ள வேண்டும். அங்கிருந்து சிறிது தூரம் நடந்தால் ரெட்டியபட்டி வந்துவிடும்.

ஆலய முகவரி
ஸ்ரீ ரெட்டியபட்டி சுவாமிகள் தேவஸ்தானம்
ரெட்டியாபட்டி, நாகலாபுரம் அஞ்சல்
விளாத்திகுளம் வட்டம், தூத்துக்குடி மாவட்டம்


பா.சு.ரமணன்

© TamilOnline.com