பூட்டிய கதவு
பாறைகளினிடையே தண்ணீர் சலசலவென்ற கீதமிசைத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. ஸ்படிகம்போல் தெளிந்த தண்ணீரின் சஞ்சலப்ரவாகத்துக்கு அடியே வெள்ளை நிறக் கூழாங்கற்கள் நாட்டியமாடிக் கொண்டிருந்தன. அவற்றின் நாட்டியம் தண்ணீரின் கீதத்துக்கு லயம் தவறாமல் இருந்ததாக பலராமன் நினைத்தான். இந்த கீதத்திலும் இந்த நாட்டியத்திலும் அமானுஷ்யமான இன்பம் அவனுக்குத் தோன்றியது. ஏகாந்தம் அந்த இன்பத்தைப் பன்மடங்கு அதிகப்படுத்தியது.

நதியை அடுத்த அழகிய அமைதியான கிராமம். கரையோரமாய் நெருங்கி வளர்ந்திருந்த தென்னந் தோப்புகளுக்கப்பாலிருந்து அந்தச் சிறு கிராமம் கண்ணுக்குப் புலனாய்க் கொண்டிருந்தது. எங்கும் சூழ்ந்த பசுமையின் நடுவே பழமையான அந்த வீடுகளும் ஒரு புது மெருகு பெற்று விளங்கின. அந்த கிராமம் அவனுக்குப் புதிதல்ல; அந்த ஆறு அவனுக்குப் புதிதல்ல. தண்ணீரின் கீதமும், கூழாங்கற்களின் நாட்டியமும் அவனுக்குப் புதிதல்ல. எவ்வளவோ தடவை அந்த கிராமத்திற்கு வந்திருக்கிறான். ஆனாலும் இவை எல்லாவற்றிலும் புதுக்கருக்கழியாத ஓர் இளமை திகழ்ந்தது. எது மாறினாலும் அந்த இளமை மாறாதென்று நினைத்தான் பலராமன். எதிர்க்கரையில் தோப்பு கரைக்கப்பாலிருந்து இடையன் தன் மாடுகளைக் கூவியழைப்பது அவன் காதில் விழுந்தது.

தண்ணீர்த் துறையில் ஜலம் எடுத்துச் செல்லவந்த தாயொருத்தி குழந்தையைக் கூட வரும்படி அழைத்துக் கொண்டிருந்தாள். பண்ணையாள் ஒருவன் வயலிலிருந்து வேலை முடிந்து வீடு திரும்பும்போது பாடிய பாட்டு காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தது. அவ்வளவும் பழக்கமான குரல்கள், ஆனால் குரல்களுக்குரியவர் எவருக்காவது அவன் பழக்கமானவனாகத் தோன்றவில்லை. அது அவர்கள் தப்பல்ல, அந்த கிராமத்துக்கு அவன் எப்போதுமே புதியவன்தான்.

அத்தனை நாட்களுக்குப் பிறகு அவன் திடீரென்று ஏன் அந்த கிராமத்துக்கு வந்தானென்று அவனுக்கே தெரியாது. அவனை வாவென்று அழைத்து உபசரிப்பவர் யாரும் அந்த கிராமத்திலில்லை. கிராமத்துக்கு வெளியில் உள்ள சத்திரத்தில்தான் தங்கியிருந்தான். அப்படியிருந்தும் ஏன் வந்தான்? உணர்ச்சிகளுக்கு உற்பத்தி ஸ்தானம் கண்டுபிடிப்பது கஷ்டம். இரண்டு நாட்களுக்கு முன்வரை இங்கு வரவேண்டுமென்ற தீவிர உணர்ச்சி தன் மனதில் ஏற்படுமென்று பலராமனுக்கே தெரியாது. யாரோ தெருவோடு போன இருவர் "வருஷப்பிறப்பு அடுத்த வியாழக்கிழமை தானே?" என்று கேட்டுக் கொண்டு சென்றனர். அந்தக் கேள்வி அவன் ஹ்ருதயத்தின் எந்த ஸூக்ஷ்ம பாகத்தை ஸ்பர்சித்ததோ யார் கண்டார்? அன்றிரவே அவன் பட்டணத்திலிருந்து புறப்பட்டு இந்த கிராமத்தை நோக்கிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.

வந்து இரண்டு நாட்களாகின்றன. பித்துக் கொண்டவன்போல் அந்த வயல்களிலும் தோப்புக்களிலும் சுற்றிக் கொண்டிருந்தான். உட்காரத் தோன்றினால் அந்தப் பாறையில் வந்து உட்கார்ந்து நதியின் பாட்டையும் கூழாங்கற்களின் நாட்டியத்தையும் ரசித்துக்கொண்டிருந்தான். அவன் யார், எங்கு சுற்றுகிறான், எங்கு உட்காருகிறான் என்று கவனிப்பார் யாருமில்லை. வேளைக்குப் போனால் சத்திரத்தில் சாப்பாடு, இல்லாவிட்டால் உபவாசம். இரண்டு நாள் இப்படிக் கழிந்தது. இன்னும் எத்தனை நாள் கழியப் போகிறதோ? அல்லது, திரும்பிச் செல்லும் எண்ணமே மனத்தில் எழாதோ என்னவோ, யார் கண்டது?

பழகிய எத்தனையோ குரல்களைக் காதுகள் கேட்டன. பழகிய எத்தனையோ முகங்களைக் கண்கள் பார்த்தன. யாரிடமாவது பேச வேண்டுமென்று அவன் மனது துடித்தது. ஆனால் அதன் ஆவலைப் பின்னுக்கிழுத்த இந்த அச்சம் எங்கிருந்து வந்தது? எதைக் குறித்து இந்த அச்சம்? இதுவரை ஒருவரிடமும் பேச அவன் மனம் துணியவில்லை. நல்ல வேளை, சத்திரத்துக்காரர் புதியவர்.

அன்று சத்திரத்தில் புதியதொரு பரபரப்புக் காணப்பட்டது. வாசலில் பந்தல் போட்டு மாவிலைத் தோரணம் கட்டிக்கொண்டிருந்தார்கள். பலராமனுக்கு விவரித்துச் சொல்பவர் போல், சத்திரத்துக்காரர், "நாளைக்கு வருஷப்பிறப்பு இல்லையா? பஞ்சாங்கம் படித்துப் பானக பூஜை செய்யப்போகிறோம்" என்றார்.

அப்போது கிளம்பிவந்து இந்தப் பாறையில் உட்கார்ந்தவன் தான். இன்னமும் உட்கார்ந்து கொண்டிருந்தான்.

கரையோரமாயிருந்த இலுப்பை மரமொன்று பாறைக்குமேல் வந்து கவிந்திருந்தது. மரக்கிளை யொன்றில் இரு மைனாக்கள் தங்கள் பாஷையில் சல்லாபப் பேச்சு நடத்திக் கொண்டிருந்தன. அதைச் சகியாததுபோல் ஒரு காக்கை அடிக்கடி பறந்து வந்து அவற்றை பயமுறுத்திச் சென்று கொண்டிருந்தது. இதையெல்லாம் கவனித்தும் கவனிக்காதது போல் பலராமன் தன் சிந்தனைச் சுழலில் ஆழ்ந்திருந்தான்.

ஐந்து வருஷங்களுக்கு முன் நடந்த விஷயங்களைப் பற்றி அவன் மனம் எண்ணமிட்டுக் கொண்டிருந்தது. திருநெல்வேலிக் கலாசாலையில் அவன் படித்துக் கொண்டிருந்த காலம். கோடை விடுமுறையில் மாலைப்பொழுதைக் கழிப்பதற்காக இங்கு வந்து கொண்டிருந்தான். ஆற்றோரமாயிருந்த இந்த கிராமத்தின்மேல் அவன் மோகம் விழுந்துவிட்டது. மாலை ஸைகிளில் புறப்பட்டு வந்து ஸைகிளை இலுப்பை மரத்தில் சார்த்தி வைத்துவிட்டு இந்தப் பாறையின் மேல் உட்கார்ந்திருப்பது அவனது தினசரி வழக்கமாய் விட்டது, ஆரம்பத்தில் இயற்கையழகில் உள்ள ஈடுபாட்டினால் அங்கு வந்து உட்கார்ந்து கொண்டிருந்தான். சில நாட்களுக்குப் பிறகு வேறு காரணத்துக்காக அங்கு வந்து உட்கார ஆரம்பித்தான், எங்கிருந்தோ வந்து வனதேவதை போல் தோன்றிய அப்பெண் அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டாள்.

ஆம், அவளை முதல் முதல் பார்த்தபோது அவள் வனதேவதையோ என்று அவன் பிரமிக்கக் காரணம் இருந்தது. மாலையின் செவ்வொளி மங்கி சலனமற்ற சாம்பல் நிறம் எங்கும் குவியும் அந்தி நேரம், பறவைகளின் கலகலப்பும் மெள்ள மெள்ள அடங்கிக் கொண்டிருந்தது, த்ரயோதசிச் சந்திரன் கீழ்வானில் உதயமாகியிருந்தான். அப்போது அவன்முன் தோன்றினாள் அப்பெண்.

எப்போதும் போல் பலராமன் ஸைகிளில் ஏறி ஒற்றையடிப் பாதையில் ஒரு கஜம்கூடப் போயிருக்க மாட்டான், படாரென்று பூமி வெடித்து ஸைகிளும் அவனுமாக பூமிக்குள் போவது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. அதேசமயம் அந்த நதிக்கரையெங்கும் எதிரொலிக்கும் சிரிப்பொலி கேட்டது. மறுகணம் அவன்முன் அவள் நின்றுகொண்டிருந்தாள்.

"பாவம், டயர் வெடித்துவிட்டதா?" என்று கேட்டாள் அவள்.

ஸைகிளைக் கவனிக்காமல் அவளையே கவனித்துக் கொண்டிருந்த பலராமன் இப்போது ஸைகிளைக் கவனித்தான். நீளமான கருவேல முள் ஒன்று டயரில் ஆழமாகப் பதிந்திருந்தது.

"ஐயையோ, டயரில் முள் ஏறிவிட்டது போலிருக்கிறதே!" என்றாள் போலிப் பரிவுடன். மறு கணம் வாய்விட்டுச் சிரித்துவிட்டாள்.

அக்கம் பக்கத்தில் எங்கும் கருவேலமுள் கிடையாது. பலராமன் கோபத்துடன் அப்பெண்ணைப் பார்த்தான். "நீ செய்த வேலைதானே?" என்றான். ஆனால் அந்தக் கேள்வி கேட்கும்வரை கூட அவன் கோபம் நிலைத்திருக்கவில்லை. அவனும் அவளுடன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான்.

"ஆமாம், ஸைகிளில் முள் தைத்ததுகூடத் தெரியாமல் அந்தப் பாறையில் உட்கார்ந்து என்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?" என்றாள் அவள்.

முன்பின் அறியாத அந்தப் பெண்ணின் பேச்சில் நெடுநாள் பழகியது போன்ற உரிமை தொனிப்பது கண்டு பலராமன் பிரமித்துப்போய் நின்றான்.

"ஸைகிளைத் தள்ளிக்கொண்டா போகப் போகிறீர்கள்? என் வீட்டுக்கு வாருங்கள். அப்பாவை ரிப்பேர் செய்து தரச்சொல்கிறேன்" என்று கூறி அவன் பதிலை எதிர்பாராமல் அவன் கையிலிருந்த ஸைகிளைத் தள்ளிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள். பாதி வேறு வழி இல்லாமலும் பாதி ஆவலாய்த் தூண்டப்பட்டும் பலராமன் அவளைப் பின் தொடர்ந்தான்.

பத்மாவின் தந்தை ஏகாங்கி. பெண்ணைத் தவிர உலகில் அவருக்கு யாருமில்லை. மனைவியை இழந்த பிறகு ஆறுமாதமாக அந்தக் கிராமத்தில் பெண்ணுடன் தனிமை வாழ்க்கை நடத்தி வந்தார். உலக பந்தங்களிலிருந்து ஒதுங்கியிருப்பதற்கே அந்தக் கிராமத்தைத் தேர்ந்தெடுத்திருந்தார். ஆனால் உலக பந்தங்களிலிருந்து ஒதுங்கியிருப்பது அவ்வளவு எளிதல்ல என்று பலராமன் வந்த பிறகு அவருக்குத் தெரிந்தது. பத்மாவைத் தவிர யார்மேலும் ஏற்படாத பாசம் இப்போது பலராமன்மேல் ஏற்பட்டு விட்டது அவர் மனதில். அன்று முதல் பலராமன் கல்லூரியிலிருந்து திரும்பிவரும் நேரத்துக்கு தந்தையும் பெண்ணும் அந்த இலுப்பை மரத்தடிக்கு வந்து விடுவார்கள். இருட்டும்வரை மூவரும் அந்தப் பாறையின் மேல் உட்கார்ந்திருப்பார்கள்.

"எத்தனையோ நாள் மரத்தின் பின்னாலிருந்து நீங்கள் இங்கு அவ்வளவு மெய்மறந்து என்ன ரஸித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன். இப்போது தெரிகிறது" என்றாள் பத்மா ஒருநாள்.

"ஆனால் பத்மா, இப்போது தண்ணீரின் சலசலப்பைவிட உன் பேச்சையும் சிரிப்பையும் தான் ரஸித்துக் கொண்டிருக்கிறேன்"' என்று பலராமன பதில் கூறினான்.

அப்போது அவள் முகத்தில் ஏற்பட்ட பிரகாசம் இப்போதும் அவனுக்கு ஞாபகமிருந்தது. மாலையின் செவ்வொளி லேசாகப் படர்ந்து கலகலவென்ற நாதத்துடன் ஓடிக்கொண்டிருந்த தண்ணீர் இப்போது அன்றைய காட்சியை அப்படியே அவன் மனத்திரைக்குக் கொண்டு வந்தது.

அதைத் தொடர்ந்து பல காட்சிகள் ஒளிச்சித்திரங்கள் போல் அத்திரையில் தோன்றி மறைந்தன. இன்பமயமான அந்தக் காட்சிகள் எல்லாவற்றையும்விடத் துன்பம் நிறைந்த அந்தக் கடைசிக் காட்சிதான் அவன் மனதில் அகலாது உருப்பெற்றிருந்தது.

இதேபோல் வருஷப் பிறப்புக்கு முந்திய தினம் வழக்கம்போல் தந்தையும் பெண்ணும் நதிக்கரைக்கு வந்திருந்தார்கள். தினம்போல் ரஸமான பேச்சுக்களிடையே பொழுது இன்பமாய்க் கழிந்து கொண்டிருந்தது. திடீரென்று பத்மா, "நாளைக்கு எங்கள் வீட்டுக்கு வந்துவிடுங்கள். உங்களுக்கு விருந்து" என்றாள். "நாளைக்கு வருஷப்பிறப்பு இல்லையா?" என்றாள் தொடர்ந்து. இருட்டும் சமயம் அவர்களிடம் பலராமன் விடைபெற்றுக் கொண்டபோது, "நாளைக்கு மறக்காமல் வந்துவிடுங்கள். பத்து மணிக்கு உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்" என்று ஞாபகமூட்டவும் செய்தாள்.

மறுநாள் குறிப்பிட்ட நேரத்துக்கு பலராமன் உவகை துள்ளும் மனதுடன் அவர்கள் வீட்டை நெருங்கினான். பத்மாவின் அழைப்பில் தொனித்த ஆர்வத்தை நினைத்து நினைத்துப் பரவசமாகிக் கொண்டிருந்தான். வீட்டு வாசலுக்கு வந்ததும் அவன் உவகையனைத்தும் மறைந்து இதயமே சூனியமாய் விடும் போலாய் விட்டது. வீடுபூட்டிக் கிடந்தது. ஆம், அவர்களது பூட்டிய வீடே, அவன் கண்ட கடைசிக் காட்சி.

அவர்கள் பூர்வ விருத்தாந்தம் அவனுக்குத் தெரியாது. எங்கிருந்து வந்தார்கள், ஏன் வந்தார்கள் என்றும் அறியான். அவனது இதய வானில் மின்னல்போல் அவள் தோன்றினாள். மின்னல் போலவே மறைந்தும் விட்டாள். மங்கிய மாலையொளியில் அவளைப் பார்த்ததுதான் கடைசித் தடவை. புதுவருஷத்தைப் பற்றி அவன் காண ஆரம்பித்த கனவு ஆரம்பத்திலேயே சிதைந்துவிட்டது. அது மீண்டும் உருப்பெறும் என்று அவன் நம்பியதெல்லாம் நிராசையாகவே முடிந்தது. அந்த நிராசையின் சின்னமாக விளங்கிய அப்பூட்டிய கதவு விவரிக்க முடியாத புதிராய்விட்டது. அவன் எவ்வளவோ முயன்றும் தந்தையும் பெண்ணும் திடீரென்று எங்கு மறைந்தனர் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த நிலையிலிருந்தே தப்புவதற்காகவே பட்டணத்துக்கு ஓடிவிட்டான். ஆனால் இப்போது திடீரென்று இங்கு வரவேண்டுமென்ற எண்ணம் எப்படித் தோன்றியது?

மாலையொளி மங்கி எங்கும் கருமை படர ஆரம்பித்தது. பக்ஷிகளின் நாதங்கள் அடங்கிவிட்டன. தூரத்தேயிருந்து வந்து கொண்டிருந்த ஈனக்குரல்களும் அடங்கி விட்டன. தண்ணீரின் சலசலப்பு மட்டும் மிஞ்சியிருந்தது. அதை அவனால் சகிக்க முடியவில்லை. எழுந்து நடக்க ஆரம்பித்தான்.

அவன் கால் அவனைச் சத்திரத்துக்குக் கொண்டு செல்ல மறுத்தது. மாவிலைத் தோரணம் கட்டியிருந்த அந்தப் பந்தல் அவன் மனதில் சொல்லொணா வெறுப்பை உண்டாக்கியது. கிராமத்துக்குள் பிரவேசிக்காமலே இரண்டு நாட்களைக் கழித்த அவன் இப்போது தன்னையறியாமல் சத்திரத்தைத் தாண்டி கிராமத்தை நோக்கிச் சென்றான். எங்கு செல்கிறோம் என்று எண்ணிப் பார்ப்பதற்குள்ளேயே அவன் எல்லா வீட்டையும் தாண்டி தீராத புதிராயிருந்த அந்த வீட்டை நெருங்கிவிட்டான். ஆனால் இது என்ன! வீடு திறந்திருந்தது. நம்பிக்கையின் ரேகைபோல் உள்ளிருந்து விளக்கு வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. துடிக்கும் நெஞ்சுடன் பலராமன் உள்ளே எட்டிப் பார்த்தான், மறு கணம் ஸ்தம்பித்து நின்று விட்டான். விளக்கின் மங்கிய ஒளியில் அவன் கண்ணுக்குத் தென்பட்டவர் வேறு யாருமில்லை. பத்மாவின் தந்தையே!

கொஞ்ச நேரத்துக்கு உள்ளே செல்ல வேண்டுமென்ற தூண்டுதலே இல்லாமல் பலராமன் பெரியவரையே பார்த்துக் கொண்டு நின்றான். சாதாரணமாகவே வேதாந்தி போல் தோற்றமளித்த அவர் இப்போது இன்னும் அதிக முகக் கனிவுடன் காணப்பட்டார். அவர் முகத்தில் விரக்தியின் சாயையோடு சோகத்தின் சாயையும் படர்ந்திருந்தது. அறையில் நிரம்பியிருந்த மங்கிய ஒளி அதை இன்னும் அதிகப்படுத்திக் காட்டியது. விளக்கின் சிகையையே பார்த்துக் கொண்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் அவர். சட்டென்று பலராமன் அவர்முன் போய் நின்றான். அவர் திடுக்கிட்டுத் தலை நிமிர்ந்தார்.

"யாரது!" என்றார் திகைப்புடன். மறுகணம் "நீயா!" என்று கூவி முகத்தை மூடிக்கொண்டு விம்ம ஆரம்பித்து விட்டார்.

அவரது உணர்ச்சியின் வேகம் அடங்கும்வரை பலராமன் மௌனமாக அவரருகே உட்கார்ந்திருந்தான், அவருக்கு என்ன சமாதானம் கூறுவதென்று அவனுக்குத் தெரியவில்லை. அவருடைய துக்கமே இன்னதென்று தெரியாதபோது சமாதானம் எங்கிருந்து கூறுவது? திடீரென்று அவர், "பலராமன், நான் பாவி, நான் பாவி" என்று அலறினார்.

"எங்கு சென்று விட்டீர்கள்? என்ன நடந்தது?" என்றான் பலராமன் பதைப்புடன்.

"என்னுடன் வா" என்று கூறிப் பெரியவர் எழுந்து வெளியே நடந்தார். வாசலுக்கு வந்ததும் திறந்திருந்த கதவை மீண்டும் பூட்டிவிட்டுத் தெரு வழியே செல்ல ஆரம்பித்தார். துடிக்கும் நெஞ்சுடன் பலராமன் அவரைத் தொடர்ந்து சென்றான். ஆற்றங்கரையோரமாக அந்த இலுப்பை மரத்தடிக்கு வரும்வரை அவர் வாய் திறந்து பேசவில்லை. சத்திரத்து வாசல் பந்தலில் பெரிய விளக்குப் போட்டிருந்தது. ஜனங்கள் கூடி வளவளவென்று பேசிக் கொண்டிருந்தனர். அவர் ஒன்றையும் கவனிக்கவில்லை. எண்ணங்கள் பிடித்துத் தள்ளுவது போல் நிற்காமல் சென்று அந்த இலுப்பை மரத்தடிக்கு வந்ததும் தான் நின்றார்.

"பலராமன், அன்று உன்னை வரச் சொல்லிவிட்டு, போன இடம் தெரியாமல் போய்விட்டேனே, ஞாபகமிருக்கிறதா!" என்றார்.

"நான் இத்தனை நாளாக மறக்காத விஷயம் அதுதான்" என்றான் பலராமன்.

"எப்படி ஓடாமலிருக்க முடியும், சொல், பலராமன். மானத்துக்குத் தப்பி ஓடினேன். அவளுக்காக ஓடினேன். சதி வழக்கில் சம்பந்தப்பட்டு தண்டனை யடைந்தவன் பெண் என்ற அபவாதம் அவளுக்கு வராமலிருப்பதற்காக ஓடினேன்."

"உண்மையிலேயே நீங்கள் குற்றவாளியா? சாத்வீகமே உருவாயிருக்கிறீர்கள் ........."

"என் கஷ்டகாலம், பலராமா. வேறொன்றுமில்லை. குற்றமேதும் செய்யாமலேயே குற்றத்தில் மாட்டிக்கொண்டு விட்டேன். அதெல்லாம் பழங்கனவு. இப்போது நான் குற்றவாளியில்லை என்பது ருஜுவாய் விட்டது. ஆனால், அப்போது......? நெஞ்சுத் துணிவில்லாமல் ஓடினேன். போலீசார் நான் இருந்த இடத்தைப் புலன் விசாரித்துவிட்டனர். அதன் பிறகு நிலையில்லாமல் ஊரூராகத் திரிந்தேன். போகுமிடத்திற்கெல்லாம் அவளையும் இழுத்துச் சென்றேன். கடைசியில் போலீஸ் பிடியில் அகப்படத்தான் வேண்டியதாயிற்று. விசாரணை முடியும்வரை முகமறியாதவர் பராமரிப்பில் அனாதையாய் அவளை விட்டுச் சென்றேன்."

"என்னிடம் ஒரு வார்த்தை முன்னே சொல்லியிருந்தால்...." என்று ஆரம்பித்தான் பலராமன் உண்மை அனுதாபத்துடன்.

"கஷ்டகாலம் வரும்போது மதி எங்கோ மறைந்து விடுகிறது. இத்தனை நாளுக்குப் பிறகு, வழக்கிலிருந்து விடுதலை பெற்று வெளிவந்தேன். வந்ததும் வராததுமாக பத்மாவை அழைத்துக் கொண்டு இங்குதான் வந்தேன். இத்தனை நாளும் உன் நினைவு தான் அவளுக்கு. இங்கு வந்தாவது உன்னைக் காணலாம் என்று துடித்துக் கொண்டு வந்தாள்."

"வந்து எத்தனை நாளாயிற்று?" என்று இடைமறித்தான் பலராமன்.

"ஒரு வாரம் தானாகிறது."

"அப்படியானால் இப்போது பத்மா இங்கு தானிருக்கிறாளா?" என்றான் பலராமன் குதூகலத்துடன்,

பெரியவர் பதிலேதும் கூறவில்லை. திக்பிரமை பிடித்தவர் போல் உட்கார்ந்திருந்தார் சற்று நேரம். பின்பு மெதுவாகக் கூறினார். "அவள் ஏக்கத்தை நான் புரிந்து கொள்ளவில்லை. நிமிஷம் விடாமல் இங்கேயே அவள் உட்கார்ந்து கொண்டிருக்க ஆசைப்பட்டதன் அர்த்தத்தை அறிந்து கொள்ளவில்லை. இத்தனை நாள் ஏக்கத்தை இன்னும் தாங்க முடியவில்லை." இவ்வாறு கூறிக்கொண்டே வந்தார். "இங்கு வந்து எத்தனை நாளாகிறது?" என்று கேட்டார் திடீரென்று.

"இரண்டு நாள் தான் ஆகிறது."

"இரண்டு நாளா! இன்னும் ஒரு நாள் முன்பே ஏன் வரவில்லை?" என்று கர்ஜித்தார் அவர். "வந்திருந்தால், வந்திருந்தால்...... என் பத்மா உயிருடன் இருப்பாள். உயிருடன் இருந்திருப்பாள்" என்று கூறி முகத்தை மூடிக்கொண்டு விம்மினார்.

"பத்மா உயிருடன் இல்லையா?" என்று அலறினான் பலராமன்.

"ஏங்கி ஏங்கி ஏக்கம் தாளாமல் உயிரை மாய்த்துக் கொண்டாள். தாம்ரபர்ணியின் பிரவாகத்துக்குத் தன்னை அர்ப்பணம் செய்துகொண்டு விட்டாள்" என்றார் பெரியவர் விம்மலிடையே.

பிரமை பிடித்தவன்போல் நின்றான் பலராமன் சற்று நேரம். சட்டென்று, "ஒரு நாள், ஒரே நாள்!" என்று அலறிக் கொண்டே ஓடினான்.

"பலராமன், பலராமன்!" என்று கூவியழைத்துக் கொண்டே கிழவரும் அவன் பின் ஓடினார். நேரே வீட்டிற்கு ஓடி வந்த பலராமன் பூட்டியிருந்த அந்தக் கதவில் தலையை மோதிக் கொண்டு கீழே விழுந்தான்.

உமாசந்திரன்

© TamilOnline.com