உமாசந்திரன்
"மினுக்கும், தளுக்கும், குலுக்கும் அறியாத, அவருக்கு அவசியம் இராத பழைய இலக்கிய மரபைச் சேர்ந்தவர் உமாசந்திரன். அவருக்கு மத்தாப்பு போடத் தெரியாது. பட்டாசு வேலைகளை அறியார். ஆனாலும் அவருடைய படைப்புகள் முற்றிலும் புதுமை நிரம்பியவை" இப்படி மதிப்பிட்டிருப்பவர் எழுத்தாளர் மீ.ப. சோமசுந்தரம் (சோமு) மட்டுமல்ல, சி.சு. செல்லப்பா, ஜெயகாந்தன், மணியன், மாயாவி எனப் பலரது அன்புக்கும், மதிப்புக்கும் பாத்திரமானவர் உமாசந்திரன். 1914 ஆகஸ்ட் 14 அன்று ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில், பூர்ண கிருபேஸ்வர ஐயர் - உமா பார்வதி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் ராமச்சந்திரன். திருநெல்வேலியில் உள்ள முன்னீர்பள்ளம் இவர்களது பூர்வீக ஊர். அவ்வூர் ஆலயத்தில் உறையும் பூர்ண கிருபேஸ்வரர் இவர்கள் குடும்பத்தின் குலதெய்வம். அதனால், இறைவனின் நினைவாக, 'பூர்ணம்' என்பதை அடைமொழியாகக் கொண்டே குடும்பத்து ஆண்கள் யாவரும் அழைக்கப்பட்டனர். ராமச்சந்திரன் பூர்ணம் ராமச்சந்திரன் ஆனார். கலைத்துறையிலும், எழுத்து மற்றும் மொழிபெயர்ப்புத் துறையிலும் புகழ்பெற்ற பூர்ணம் விஸ்வநாதன், பூர்ணம் சோமசுந்தரம், பூர்ணம் பாலகிருஷ்ணன் மூவரும் இவரது சகோதரர்கள்.

பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தார். அக்காலம் சுதந்திரப் போராட்டம் தீவிரமாகப் பரவியிருந்த காலம். தந்தை பூர்ண கிருபேஸ்வரர் தென்காசியில் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். சுதந்திரப் போராட்டத்தின் தாக்கத்தால் அவ்வேலையை உதறிவிட்டு விடுதலைப் போரில் ஈடுபட்டார். பின் சட்டம் படித்து வழக்குரைஞராகப் பணியாற்றினார். தந்தை வழி சுதந்திர தாகம் ராமச்சந்திரன் உள்ளத்திலும் சுடர்விடத் தொடங்கியது. காந்தியக் கொள்கைகள் இவரை ஈர்த்தன. கதராடை அணியத் துவங்கியதுடன், கதர் விற்பனை, காந்தியக் கொள்கை விளக்கம், மக்களிடையே சுதந்திர உணர்வை ஏற்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட்டார். கிராமந்தோறும் சென்று விடுதலை உணர்ச்சியைத் தூண்டினார். பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டார். இண்டர்மீடியட் முடித்ததும் மேற்கொண்டு கற்க விரும்பினார். குடும்பச்சூழல் இடந் தரவில்லை. பணிக்குச் செல்ல வேண்டியதாயிற்று. கிடைத்த ஆசிரியர் பணியை ஏற்றுக்கொண்டார்.

வாசிப்பார்வம் கொண்டிருந்த ராமச்சந்திரன், தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் தேர்ந்தவர். ஓய்வு நேரத்தை வாசிப்பதில் செலவிட்டார். வாசிக்க வாசிக்க எழுத்தின் சூட்சுமம் பிடிபட்டது. முதல் சிறுகதை 'சொர்ணத்தேவன்' 1937ல் வெளியானது. தொடர்ந்து இதழ்களுக்கு எழுதினார். தாய்மீது கொண்ட அன்பால் தாயின் பெயருடன் தன் பெயரை இணைத்துக் கொண்டு 'உமாசந்திரன்' என்ற புனைபெயரில் எழுத ஆரம்பித்தார். இவரது எழுத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அஜந்தா, காதம்பரி, பாரிஜாதம், கல்கி, ஆனந்தவிகடன் எனப் பல இதழ்கள் இவரது சிறுகதைகளை வெளியிட்டன.



இக்காலக்கட்டத்தில் வானொலி நிலையத்தில் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. அதனை ஏற்றுக் கொண்டார். தில்லியில் சிலகாலம் பணியாற்றினார். பின்னர் திருச்சிக்கும் அடுத்துச் சென்னைக்கும் பணியிட மாற்றங்கள் ஆயின. கமலா அம்மையாருடன் திருமணமும் நிகழ்ந்தது. இந்த மாற்றங்கள் இவருக்கு வரமாக அமைந்தன. நிகழ்ச்சி அமைப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், வர்ணனையாளர், ஒருங்கிணைப்பாளர், தயாரிப்பாளர் என வானொலியில் பலதரப்பட்ட பணிகளை மேற்கொண்டார். அரசின் ஐந்தாண்டுத் திட்டங்கள் பற்றிய செய்திகளையும், விளக்கங்களையும் மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்கு வகித்தார். குறிப்பாக வானொலி நாடகங்களின் வளர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் வித்திட்டவர்களில் முக்கியமானவராக உமாசந்திரனைச் சொல்லலாம். 25க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள் இவர் படைத்துள்ளார் என்றாலும் 'உமாசந்திரன்' என்றாலே உடனே நினைவுக்கு வருவது 'முள்ளும் மலரும்' தொடர்கதைதான்.

வானொலியில் பணியாற்றிய காலத்தில் குந்தா அணைத்திட்டம் பற்றி ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உமாசந்திரன் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சென்று தங்கி, மலைவாழ் மக்களுடன் பழகி, அவர்கள் வாழ்க்கையை அவதானித்து, அவற்றோடு தனது கற்பனைத் திறனையும் சேர்த்து உருவாக்கிய படைப்பு 'முள்ளும் மலரும்.' இது, கல்கி வெள்ளிவிழா பரிசுத் திட்டத்தில் முதல் பரிசு 10000 ரூபாய் பெற்றது. தமிழ் இலக்கிய உலகில் அதுவரை எந்த நாவலுக்கும் இத்தனை பெரிய தொகை பரிசாக வழங்கப்பட்டதில்லை. ஆகஸ்ட் 7, 1966 அன்று கல்கி வெள்ளிவிழா இதழில் ஆரம்பித்த இந்தத் தொடர், 36 வாரங்கள் வெளியாகி ஏப்ரல் 9, 1967 இதழோடு நிறைவுற்றது. இப்படைப்பு உமாசந்திரனுக்கு நிலைத்த புகழைத் தேடிக்கொடுத்தது. காளியண்ணனும், வள்ளியும் அக்காலத்து வாசகர்களின் மறக்கமுடியாத பாத்திரங்களாகினர். இது பின்னர் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி, ஷோபா, சரத்பாபு நடிக்க இதே பெயரில் திரைப்படமாகவும் வெற்றிபெற்றது. பின்னர் ஹிந்தியிலும் தயாரிக்கப்பட்டு வெளியானது.

முள்ளும் மலரும் தொடர் உருவான விதம்பற்றிக் கீழ்க்கண்டவாறு நினைவுகூர்கிறார் உமாசந்திரனின் மகனான மேனாள் ஐ.பி.எஸ். அதிகாரி பூர்ணம் நட்ராஜ், "என் அப்பா 'உமாசந்திரன்' என்ற பெயரில் எழுதினார். அகில இந்திய வானொலியில் பணியாற்றினார். பேச்சிலும் எழுத்திலும் எப்போதும் கண்ணியத்தைப் பின்பற்றியவர். கட்டுப்பாடான எழுத்து என்பது அவர் எப்போதும் வலியுறுத்திய விஷயம். எழுத நினைத்தால் சமயங்களில் வீட்டில் அதற்கான சூழல் இருக்காது. அதற்காக விடியற்காலையிலேயே எழுந்து, வேலை நேரத்துக்கு முன்னதாகவே அலுவலகம் சென்று அங்கே அமர்ந்து எழுதுவார். எழுத்தை அவர் மிகுந்த அர்ப்பணிப்போடு, தவம்போலச் செய்வார். தான் செல்லும் இடங்களை, சந்திக்கும் நபர்களை, விஷயங்களைக் குறிப்பு எடுத்து வைப்பார். அது அவருக்கு எழுத மிக உதவியாக இருக்கும். இப்படி நிறைய 'நோட்ஸ்' என்னிடம் இருக்கிறது. அப்பா ஒருசமயம் சென்னை வானொலியில் ஐந்தாண்டுத் திட்ட விளம்பரத்துக்குப் பொறுப்பேற்று இருந்தார். அப்போது நீலகிரி மாவட்டத்தில் குந்தா அணைக்கட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு ஒரு மாதத்திற்கு மேல் தங்கியிருந்தார். விஞ்ச்சில் எல்லாம் சென்று பலரைச் சந்தித்து உரையாடினார். பேட்டி எடுத்தார். அப்போதுதான் 'முள்ளும் மலரும்' கதைக்கரு உருவானது. திரும்பி வந்ததும் அதை எழுதிக் கல்கிக்கு அனுப்பினார். கல்கி வெள்ளிவிழாப் போட்டியில் அந்த நாவல் முதல் பரிசு பெற்றது. மூதறிஞர் ராஜாஜி அந்தப் பரிசைக் கொடுத்தார்." (பார்க்க: தென்றல், மே 2013)

உமாசந்திரன் தன் படைப்புகளில் மனித மனதிற்கு நெருக்கமான கதாபாத்திரங்களை உருவாக்கி உலவவிடுவதில் தேர்ந்தவர். அவரது வாழ்க்கை அனுபவமும், கண்ட காட்சிகளும், வானொலிப் பணி காரணமாக மேற்கொண்ட சுற்றுப் பயணங்களும், அறிந்த விஷயங்களும் அதற்குக் காரணமாக அமைந்தன. கதைகளுக்குத் தேவையற்ற வளவளா வர்ணனைகள் ஏதுமில்லாமல் இயல்பாகக் கதைகளை நகர்த்திச் செல்வதில் வல்லவராக இருந்தார். பாத்திரங்களின் உணர்ச்சிகளைத் திறம்படப் படம்பிடித்துக் காட்டுவதாகட்டும், சமூக அவலங்களைக் கேள்விக்குள்ளாக்குவது ஆகட்டும், சமரசமேதுமில்லாமல் தனக்கென தனித்ததோர் முத்திரையைப் பதித்திருக்கிறார். அரசுகளின் மெத்தனப் போக்கு, அதிகாரிகளின் அக்கறையின்மை, ஊழியர்களின் அலட்சியம் போன்ற பல விஷயங்களைத் தனது கதைகளில் மனதில் தைக்கும்படிக் காட்சிப்படுத்தியுள்ளார்.

இவரது சிறுகதைகள் பலவும் மிகச் சிறப்பானவை. காயமுற்ற புறாவை ஒருவன் எடுத்து வளர்க்க அது அவன்மீது காட்டிய அன்பையும், நன்றியையும் ராணுவத்தின் பின்னணியில் உருக்கமாகக் காட்சிப்படுத்தியுள்ளார் 'மாடப்புறா' என்னும் சிறுகதையில்.

குழந்தையின் இறப்பால் வாடிய நண்பரின் குடும்பத்தினரைக் கண்டு வருந்திய ஒருவர், ஆறுதல் வார்த்தைகள் சொல்ல, அந்த அவரது ஆறுதல் வார்த்தைகளாலே நாளடைவில் அந்தத் துயரம் எப்படி மறைந்தது, குடும்பம் எப்படி மீண்டது, 'வாடிய மலர்' எப்படி மீண்டும் மலர்ந்து 'வாடா மலர்' ஆனது என்பதைச் சுட்டும் கதை 'வாடிய மலர்'. நட்பின் மகத்துவத்தைப் பேசும் 'பாலைவனத்தில் இரவு', எதிர்ப் படை முகாமைச் சேர்ந்த வீரராக இருந்தாலும், போரில் அடிபட்டுக் காயமுற்று இருப்பவருக்கு உதவப்போய் எதிரிகளால் தன் இன்னுயிரைத் துறக்கும் 'பாலைவன நிழலில்' என்று பல கதைகள் மிகச்சிறப்பானவை. உயிரோட்டம் மிக்கவை. 'பூட்டிய கதவு' போன்ற சில கதைகளும் அவற்றின் முடிவும் உள்ளத்தை உருக்குவன.



இந்தியிலும் சில சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான சிறுகதைகளை எழுதியிருக்கிறார் உமாசந்திரன். 'புகையும் பொறியும்', 'விண்ணாசை', 'திரும்பவில்லை' போன்றவை இவரது சிறுகதைத் தொகுப்புகள். கிட்டத்தட்ட 20 நாவல்களை எழுதியிருக்கிறார். 'வாழ்வுக்கு ஒரு தாரகை', 'ஒன்றிய உள்ளங்கள்', 'பாச வியூகம்', 'பொழுது புலர்ந்தது', 'காயகல்பம்', 'புகையும் பொறியும்', 'அன்புச்சுழல்', 'அன்புள்ள அஜிதா', 'ஆகாயம் பூமி', 'முள்ளும் மலரும்', 'பெண்ணுக்கு நீதி', 'வேர்ப்பலா', 'முழு நிலா', 'ஒன்றிய உள்ளங்கள்', 'திரும்ப வழியில்லை', 'சக்கரவியூகம்', 'பண்பின் சிகரம்', 'அனிச்சமலர்', 'இதய கீதம்' போன்றவை இவரது குறிப்பிடத் தகுந்த நாவல்களாகும். 'பொழுது புலர்ந்தது' பத்திரிகைகளில் தொடராக வெளியாகாமல் நேரடியாகப் புத்தகமாக வெளிவந்த சிறப்பை உடையது. 'காயகல்பம்', 'முழுநிலா', 'வாழ்வே வா' போன்றவை பெண்ணியச் சிந்தனைகளை மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல்கள். 'முழுநிலா' நாவலில், தனது தந்தைக்கு இரண்டாவது மனைவியாக அமையும் தனது சித்திமூலம் பிறக்கும் தனது தம்பியையே, தனது மகனாக வளர்க்கும் சூழல் அமைகிறது கதையின் நாயகி மஞ்சுளாவிற்கு. திருமணமாகிக் காதல் கணவனுடன் வசிக்கும் அவள், ஏன் அந்த நிலைக்குத் தள்ளப்பட்டாள், என்ன காரணம், அதனை அவள் எப்படி எதிர்கொள்கிறாள், அவள் கணவரின் மனநிலை என்ன என்பதையெல்லாம் சிறப்பான பாத்திரப் படைப்புகள் மூலம் வாசகர்களின் உள்ளத்தில் நிலைபெறும் நாவலாக்கியிருக்கிறார் உமாசந்திரன்.

குறுநாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள் என்று நிறைய எழுதியிருக்கிறார். 'வானொலியில் சங்கமித்த இதயங்கள்' என்பது இவரது கட்டுரைத் தொகுப்பு. 'விஷப்பரீட்சை', 'பரிகாரம்', 'கலாவின் கல்யாணம்', 'மன்னித்தாளா', 'உரிமைக்கு ஒருத்தி', 'குமாரி காவு' போன்றவை குறுநாவல்கள். உமாசந்திரன் நேபாளத்துக்குச் சென்றிருந்தபோது அங்கு கண்ட, கேட்ட விஷயங்களைத் தொகுத்து ஒரு நாவலாக எழுதினார். 'குமாரி காவு' என்னும் அந்நாவல் மாலைமதி இதழில் வெளியானது. அக்காலத்தில் வாசகர் கவனத்தை ஈர்த்த நாவல்களில் இதுவுமொன்றாகும். 'மனமாளிகை' இவரது குறிப்பிடத் தகுந்த நாடகங்களில் ஒன்று. 'காதம்பரி' போன்ற இதழ்களிலும் 'ஸஹதர்மிணி', 'பெற்றமனம்', 'அவன் வஞ்சம்' போன்ற பல நாடகங்களை எழுதியிருக்கிறார்.

உமாசந்திரன் பல தமிழ்த் திரைப்படங்களுக்குக் கதை ஆலோசகராகவும், வசனம் எழுதுபவராகவும் பங்களித்திருக்கிறார். 'தாய் உள்ளம்' படத்திற்கு எஸ்.டி. சுந்தரத்துடன் இணைந்து கதை-வசனம் எழுதியுள்ளார். 'மனம் போல் மாங்கல்யம்' படத்தின் கதை உமாசந்திரன் எழுதியது. 'கணவனே கண்கண்ட தெய்வம்' படத்திற்கும் கே.வி. சீனிவாசன், வி. சதாசிவப்ரம்மம் ஆகியோருடன் இணைந்து வசனம் எழுதியிருக்கிறார். 'மொகல் ஏ ஆஸம்' தமிழில் 'அக்பர்' என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியானபோது அதற்கு வசனம் எழுதினார் உமாசந்திரன். அண்ணா, காமராஜர் மறைந்தபோது இறுதி ஊர்வலங்களை மனமுருக நேர்முக வர்ணனை செய்தது இவரே! தமிழ், ஆங்கிலம், ஜெர்மன், சம்ஸ்கிருதம், ஹிந்தி எனப் பல மொழிகள் அறிந்த இவர், அகில இந்திய வானொலியில் 34 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

ஒழுக்கம், நேர்மை, எளிமை, அன்பு, இரக்கம் இவற்றையே தனது வாழ்நெறியாகக் கொண்டவர் உமாசந்திரன். தன் மகவுகளையும் அவ்வாறே வளர்த்தார். பூர்ணிமா, பாரதி என இரு மகள்களுடனும் நட்ராஜ், கிஷோர் என இரு மகன்களுடனும் நிறைவாழ்வு வாழ்ந்தவர், ஏப்ரல் 11, 1994 அன்று காலமானார்.

இவரது படைப்புகளை மீள்பிரசுரம் செய்து தற்கால வாசகர்களும் இவரை நன்கறியச் செய்வது அவசியம்.

அரவிந்த்

© TamilOnline.com