ஏடெல்வைஸ் என்றொரு பூ
அன்றைய சம்பாஷணை விண்வெளி, மின்வெளி, அம்பரம், ஆகாயம் என்று ஓடிக்கொண்டிருந்தது. உரையாடலை இதுபோன்ற கனமான வறட்டு விஷயங்களிலிருந்து சுவாரஸ்யமாக யாராவது திசை திருப்புவார்களா என்று நினைத்தபோது அந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் விநோதமான சொந்த அனுபவம் ஒன்றை விவரித்தார்.

"நாற்பது ஆண்டுகளுக்கு முன் நான் இந்தியாவில் ஒரு கல்லூரியில் வேலை செய்து கொண்டிருந்தபோது ஜெர்மனியில் ஒரு பிரபல ஆராய்ச்சி நிறுவனத்தின் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. சில ஆண்டுகளுக்கு முன்தான் என் திருமணமும் ஆகியிருந்தது. நிறுவனம் மனைவியை அழைத்துப்போக உதவித்தொகை அளித்தது. ஜெர்மனியின் ஒரு பெரிய நகரில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் என் ஆராய்ச்சிப்பணி துவங்கியது. என் மனைவி தமிழ்ப் பண்பாட்டை விடாமல் புடவை, நெற்றிப்பொட்டுடன் தான் எங்கும் போவாள் வருவாள்.

"ஆராய்ச்சி நிறுவனத்தி என்னைப்போல் உலகம் முழுவதிலிருந்து பல நாட்டுப் பேராசிரியர்கள் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார்கள். ஜெர்மானிய கலாசாரத்தைப் புரிந்துகொள்ளவும், அந்த நாடு, மக்கள் பற்றி நேராக அறியவும் நிறுவனம் இரண்டு வார காலத்திற்கு ஒரு பஸ் பயணம் ஏற்பாடு செய்வது வழக்கம். வேலையிலிருந்து சிறிது ஓய்வெடுக்க இது நல்ல சந்தர்ப்பம். மனைவியுடன் உல்லாசப் பயணமாகவும் அமைந்தது. இந்த பயணத்தில் தெற்கு ஜெர்மனியில் பெற்ற ஒரு அனுபவம்தான் புறவெளி தொடர்பானது.

"பயண காலத்தில் தினமும் பகல் நேரத்தில் பஸ்ஸில் போய் சில இடங்களைப் பார்ப்போம். இரவு ஒரு ஹோட்டல் அறையில் தங்க ஏற்பாடு. சில நாட்கள் அப்படித் தங்கும் ஊரில் மாலையில் ஒரு விருந்து அளிப்பார்கள். மது அருந்தி ஆண், பெண் ஜோடியாக மேற்கத்திய இசைக்கு நடனம் ஆடுவார்கள். பேராசிரியர்கள் பலரும் மனைவியருடன் வந்திருந்தார்கள். என்னுடன் வேலை செய்த ஃபின்லாந்துக்காரக் கணிதப் பேராசிரியரும் அவரது மனைவியும் எங்களுக்கு ஏற்கனவே பரிச்சயமானவர்கள். நாங்கள் சுத்தமான சைவ உணவு மற்றும் பத்தாம்பசலிப் பழக்கங்களை அவர்கள் நன்கு அறிந்திருந்தார். அவற்றை மிகவும் மதிப்பவர்களாகவும் அவர்கள் இருந்தது மிகவும் உதவியாக இருந்தது.

"ஒருநாள் மாலையில் நாங்கள் தெற்கு ஜெர்மனியில் ஒரு சிற்றூரில் தங்க ஏற்பாடாகி இருந்தது. அந்த ஊர் நகராட்சிக் கட்டடத்தில் (Rathaus) வரவேற்புக்கு அழைத்திருந்தார்கள். 'கெல்லர்' (Kellar) என்ற கட்டடத்தின் கீழ்த்தளத்தில் மாலை ஆறு மணிக்குக் குழுவுடன் ஆஜரானோம். இதைப்போன்ற தறுவாய்களில் அந்தக் காலகட்டத்தில் மது குடிப்பதும், புகைப்பதும்தான் பிரதானமாக நடைபெறும். நாங்கள் இருவரும் வேறு வழியில்லாமல் ஃபின்லாந்து தம்பதியருடன் ஒரே மேஜையில் உட்கார்ந்துகொண்டு ஆரஞ்சு ரசத்தைப் பருகிக்கொண்டிருந்தோம். ஜோடிகள் பலரும் இசைக்கேற்றவாறு மேடையில் நடனம் செய்வதும் திரும்பித் தத்தம் மேஜைக்கு வந்து சற்று இளைப்பாறுவதுமாக இருதார்கள்.

"எங்களுக்கு உதவவும், பரிமாறவும் உள்ளூர் மாணவ, மாணவிகளை அமர்த்தி இருந்தார்கள். இதில் சுமார் இருபது வயதான இளைஞன் ஒருவன் எங்கள் மேஜையைச் சுற்றி வந்து என் மனைவிக்குப் பரிமாறுவதும், கீழே தவறி விழுந்த கைக்குட்டையை எடுத்து கொடுப்பதுமாக மிகவும் உன்னிப்பாக இருந்தான். என் மனைவி புடவை உடுத்தி, நெற்றித் திலகத்துடன் இருந்தது ஏற்கனவே பலருடைய கவனத்தைக் கவர்ந்திருந்தது. அந்த இளைஞன் கண்கொட்டாது பார்த்துக்கொண்டிருந்தது என் மனைவிக்குச் சற்று வெட்கமாகவும், வெறுப்பாகவும் இருந்தது. இதைக் கவனித்த ஃபின்லாந்து பேராசிரியர் அவனைச் சற்று கோபமாகப் பார்த்தார்.

"பரஸ்பரம் திருமணமான தம்பதிகள்தான் சேர்ந்து நடனமாடலாம் என்பதும், வேறொரு பெண்ணுடன் நடனம் செய்ய ஆசைப்பட்டால் அந்தப் பெண்ணின் கணவரின் சம்மதம் பெறவேண்டும் என்ற வழிமுறை இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. திடீரென்று அந்த இளைஞன் என் கையைப் பிடித்து என் மனைவியுடன் நடனம் செய்ய அனுமதி கேட்டவுடன் எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. நல்ல வேளையாக என் நண்பர் அவனை மெதுவாக கையைப் பிடித்து அப்பால் அழைத்துப்போய் அவனிடம் ஏதோ கூறித் 'துரத்தினார்'. எனினும் அவன் எங்கள் அருகிலேயே வட்டமிட்டுக் கொண்டிருந்ததைப் பொறுக்கமுடியாமல் திண்டாடினோம். நல்ல வேளையாக, எங்கள் நண்பர்கள் ஏதோ சாக்குச் சொல்ல, நாங்கள் ஹோட்டலுக்குத் திரும்பினோம்.

"என் மனைவியிடம் இளைஞனின் ஈர்ப்புப்பற்றி என் மனதில் பல்வேறு எண்ணங்கள் அலைபாய்ந்தன. அதை வெறும் பால் உணர்வு என்று நினைக்க முடியவில்லை. புடவை உடுத்திப் பாரம்பரியமாகக் காட்சிதரும், சற்றே வயதில் அதிகமாக இருக்கும் ஒரு வெளிநாட்டுப் பெண்ணை முதன்முதலாகப் பார்த்தவுடன் என்ன நினைத்திருக்க முடியும்? அந்தச் சிறிய ஊரில் அந்த இளைஞனைக் கவரக்கூடிய பெண்களின் நடை, உடை, பாவனை எல்லாமே இதற்கு மிகவும் முரணாகத்தானே இருக்கமுடியும்! பல ஆயிரம் மைல் தூரத்தில், மிகவும் வித்தியாசமான பழக்க வழக்கங்களுடன் வளர்ந்து இதற்குமுன் பரிச்சயமே இல்லாத ஜீவன்கள் ஒரு நொடியில் ஈர்க்கப்படுவதை முற்பிறவியிலிருந்து தொடரும் வாசனை என்றுதான் விளக்கமுடியுமோ?. அன்றிரவு முழுவதும் ஏதோவொரு புரியக்கூடாத புறவெளியில் நான் உலா வருவது போலத் தோன்றியது.

"மறுநாள் காலை ஏழு மணிக்கே ஊரைவிட்டுக் கிளம்பவேண்டும். நாங்கள் பஸ்ஸில் உட்கார்ந்து கொண்டோம். திடீரென்று எங்கள் ஜன்னல் அருகில் அந்த இளைஞன் மூச்சுவாங்க ஓடிவந்து என் மனைவியிடம் நன்றாக 'சீல்' செய்த ஒரு கண்ணாடி பாட்டிலை கொடுத்துவிட்டு ஒரு புன்னகையுடன் 'மீண்டும் பார்க்கலாம்' என்ற பொருள்படும் Auf Wiedersehen என்று ஜெர்மன் மொழியில் கூறிக் கையை அசைத்ததும் பஸ் நகர்ந்தது. பாட்டிலுக்குள் ரோஜா போன்ற வெண்மையான ஒரு மலர் இருந்தது. அது ஏடெல்வைஸ் (edelweiss) என்னும் பூ. செங்குத்தான மலைச்சிகரத்தில் ஏறி, சிரமப்பட்டு பறிக்கவேண்டிய பூ அதுவென்று ஒரு ஜெர்மானிய நண்பர் விளக்கினார். ஆழ்ந்த அன்புக்கும், களங்கமின்மைக்கும் சின்னமாம். இந்தப் பூ பற்றி 'sound of music' படத்தில் வரும் பாடல் உங்களுக்கு நினைவிருக்கலாம்."

பேராசிரியர் தான் புளுகவில்லை என்பதை நிரூபிக்க அந்த பாட்டிலை எடுத்துக் காட்டினார். இந்தச் சம்பவத்தை எப்படி விளக்குவது என்று நாங்கள் யோசித்தோம். தமிழ் இலக்கியத்தில் தேர்ந்த ஒரு நண்பர் கூறியது பொருத்தமாக இருந்தது. 'அன்பே சிவம்' என்று திருமூலர் குறிப்பிடும் அந்தச் சிவத்தின் இருப்பிடத்தைத் தாயுமானவர் 'மேல் கங்குல் பகலற நின்ற எல்லையாக, கருத்திற்கு இசைந்த மோன உருவெளி' என்கிறார். விழிப்பு நிலையில், இந்த மனித உடம்பிலேயே சில தருணங்களில் அந்த வெளியில் சஞ்சாரம் செய்யமுடியும் என்று சித்தர்கள் பாடி இருக்கிறார்கள். பேராசிரியர் தன் மனைவியுடனும், ஜெர்மானிய இளஞனுடன் அந்த மோனவெளியில்தான் சில மணிநேரம் உலா வந்தாரோ!

அ. சந்திரசேகரன்,
கூப்பர்டினோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com