இனிப்பு நீரின் மர்மம்
அத்தியாயம் - 7

அடுத்த நாள் காலையில் சீக்கிரமாகவே அருண் எழுந்து காலைக்கடன்களை முடித்தான். அம்மா ஏதும் சொல்லாமலே எல்லா வேலைகளையும் செய்துமுடித்தான்.

"அருண் குட் மார்னிங். என்னப்பா இன்னிக்கு மழை வந்திடும் போலிருக்கு," என்று கீதா கிண்டல் அடித்தார்.

"அம்மா, அப்பா இன்னுமா வரலை?"

"அப்பாவுக்கு இன்னிக்கும் ஆஃபீஸ்லதான் உணவு, உறக்கம் எல்லாம். அப்படி என்னதான் வேலையோ!"

அருண் தானே சமையலறைக்குச் சென்று மைக்ரோவேவ் அடுப்பில் வென்னீர் கொதிக்கவைத்தான். அதில் ஓட்மீலைப் போட்டுச் சாப்பிட ஆரம்பித்தான். ஒரே ஆச்சரியமாக இருந்தது. பக்கரூ ஓடிவந்து அருணோடு கொஞ்சம் விளையாட நினைத்தது. அதைக்கூட அருண் கண்டுகொள்ளவில்லை.

கீதாவுக்குச் சற்று வருத்தமாகத்தான் இருந்தது. அருண் அன்று எதற்காக அப்படி விரைகிறான் என்று அவருக்குத் தெரியும். சீக்கிரம் பள்ளிக்கூடம் போனால்தான் அவனால் தலைமை ஆசிரியையிடம் தனியாகப் பேசமுடியும். தலைமை ஆசிரியை காலை நேரத்தில் பள்ளி மைதானத்தில் மாணவர்கள் விளையாடுவதைக் கண்காணித்துக் கொண்டிருப்பார்.

"அருண் கண்ணா, நேரம்தான் இருக்கே. பக்கரூகூட கொஞ்சநேரம் விளையாடேன் கண்ணா."

"இல்லை அம்மா, நான் காலைல திருமதி மேப்பிள்கிட்ட பேசலைன்னா, அவங்க ரொம்ப பிஸி ஆய்டுவாங்க. பிடிக்கிறதே ரொம்ப கஷ்டமாயிடும்."

அருணின் ஆர்வமும், தீர்க்கமும் பார்க்க கீதாவுக்குப் பெருமையாக இருந்தது. "அருண், எங்கே போயிட்டாங்க திருமதி பிரான்ச்? கொஞ்ச நாளா ஆளைக் காணலையே?"

"அவங்களா, மகப்பேறு விடுப்புல இருக்காங்க."

கீதா சற்றுகூட யோசிக்காமல், 'அடுத்ததா?" என்றார்.

"அம்மா, she joked that she is going to have her own basketball team."

"பேஸ்பால் டீம் ஆரம்பிச்சுடாம இருந்தா சேரி," என்று முணுமுணுத்தார். அது அருணின் காதில் நல்லவேளையாக விழவில்லை.

அருண் லிவிங் ரூமில் யாருடனோ கைகுலுக்கி, பேசுவதைப் போல ஒத்திகை செய்வதைப் பார்த்தார். அவருக்கு ஆர்வம் அதிகரித்தது. சற்று அருகே சென்று, ஒளிந்து நின்று கவனித்தார்.

"ஹலோ, மிஸஸ் மேப்பிள், நான் அருண். நான் மிஸ் டிம்பர் க்ளாஸ்ல மாணவன். உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்."

அருண் குரலைச் சரிப்படுத்திக் கொண்டு மீண்டும் அதையே சொல்லிப் பார்த்தான்.

இந்தமுறை தன்னை ஜேம்ஸ் பாண்ட் போல அறிமுகப்படுத்திக் கொண்டான். அவனுக்கு அது பிடித்திருந்தது. தன்னைத்தானே பெருமையாகத் தோளில் தட்டிக்கொண்டான். தன்னை யாரோ நோட்டம் விடுகிறார்கள் என்று தோன்றியது. சட்டென்று திரும்பினான். அம்மா கீதா புன்சிரிப்போடு பார்த்தார்.

"அம்மா, இதென்ன?" என்று அருண் வெட்கத்தோடு கேட்டான்.

"மகனே, The oscar goes to…" என்று முடிக்கு முன்னர் அருண் கராஜ் பக்கம் ஓடிவிட்டான்.

★★★★★


பள்ளிக்கூட வளாகத்தில் சைக்கிளை நிறுத்தியதும், வேகமாக போய் பிரார்த்தனை வரிசையில் தனது பைக்கட்டை வைத்துவிட்டு, மைதானத்தில் தலைமை ஆசிரியை தென்படுகிறாரா என்று பார்த்தான். அவன் ஆசைப்பட்டது போலவே அவர் குழந்தைகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தார். யாரோ சில பெற்றோர் அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.

அருண் திருமதி மேப்பிளை நோக்கி நடந்துசென்றான். என்னதான் வீட்டில் கம்பீரமாக ஒத்திகை பார்த்திருந்தாலும் தலைமை ஆசிரியை அருகே நெருங்குகையில் சற்றுத் தயக்கம் ஏற்பட்டது.

தூரத்தில் விளையாடிக்கொண்டிருந்த சாரா, அவனைப் பார்த்ததும் ஓடிவந்தாள்.

"என்ன அருண். ஸ்டெப் டான்ஸ் பழகுறியா? You put the left foot in, put the right foot out, and sing the hokey pokey!" அருணுக்கு சாரா அங்கு வந்தது தெம்பைக் கொடுத்தது. அவனது நடையிலிருந்த தயக்கம் திடீரென்று மாயமாய் மறைந்தது.

"என்ன அருண், நீரூற்றுப் பத்தி பேசப்போறியா?"

"ஆமாம்."

"இந்த தடவை எந்தமாதிரி சதிச்செயல் ஊகம்?" என்று நமட்டுச் சிரிப்போடு கேட்டாள்.

"வந்துதான் கேளேன்."

தலைமை ஆசிரியை அருகே நெருங்கினார்கள். அவர் சாராவையும் அருணையும் கவனித்தார்.

"என்ன என்ன இந்தப் பக்கம்? உங்ககூட விளையாட ஒரு ஆள் குறையுதா?" ஜோக் அடித்தார் அவர்.

"இல்லை..." என்று இழுத்தான் அருண்.

"அப்ப ஏதோ முக்கியமான விஷயம்ன்னு நினைக்கிறேன். இல்லேன்னா, நம்ம அருண் இங்க வருவானா?"

"அது வந்து, அது வந்து… நம்ம பள்ளிக்கூடத் தண்ணி அசட்டுத் தித்திப்பா இருக்கு. ஏதோ கலப்படம் ஆகியிருக்குமோன்னு தோணுது." அருண் படபடவென்று பேசினான்.

திருமதி மேப்பிள் சற்று யோசித்தார். அவருக்கு அருணைப் பற்றி நன்றாகவே தெரியும். “சரி வாங்க," என்று சாராவையும் அருணையும் அழைத்துக்கொண்டு நீரூற்றுக்குச் சென்று அதிலிருந்து தண்ணீர் குடித்தார். அவருக்கும் அருண் சொன்னது சரியாகவே தோன்றியது. மீண்டும் சிறிது குடித்துப் பார்த்தார். அப்போதும் அதே ருசிதான் பட்டது. கைக்குட்டையை எடுத்து வாயைத் துடைத்துக்கொண்டார்.

"அருண், சாரா. முதல்ல என்னிடம் சொன்னதுக்கு ரொம்ப நன்றி. நான் சில ஃபோன் கால்கள் செய்து, மேலதிகாரிங்ககிட்ட புகார் கொடுக்கறேன். எனக்கும் சந்தேகமாத்தான் இருக்கு."

கைக்கடிகாரத்தில் மணி பார்த்துக்கொண்டே அவசரமாக அங்கிருந்து தன் அலுவலகத்திற்கு விரைந்தார் மிஸஸ் மேப்பிள்.

(தொடரும்)

ராஜேஷ்

© TamilOnline.com