புட்டும் ஊறுகாயும்
கேழ்வரகுப் புட்டு

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 1 கிண்ணம்
நாட்டுச் சர்க்கரை - 1/2 கிண்ணம்
ஏலக்காய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
தண்ணீர் - சுமார் 3/4 கிண்ணம்
நெய் - 1 தேக்கரண்டி

செய்முறை:
தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கலக்கி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, புட்டுமாவு பதத்திற்குக் கிளறவேண்டும். மாவு ஈரப்பதமாக இருந்தால்தான் நன்றாக வேகும்.

சிறிய கட்டிகள் இருந்தால் பெரிய துவாரம் உள்ள சல்லடையில் மாவைக் கொட்டி, கையால் லேசாகத் தேய்த்து விட்டால் மாவு சீராக இருக்கும். பிறகு இட்டலிப் பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, இட்டலி வேகவைக்கும் தட்டில் துணிபோட்டு மாவைக் கொட்டி, 7 நிமிடம்வரை ஆவியில் வேகவைக்கவும். வேகவைத்த மாவில் சர்க்கரை, நெய், ஏலக்காய்ப் பொடி, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாகக் கிளறி, உருண்டைகளாகப் பிடிக்கவும். உருண்டைகளை மீண்டும் இட்டலித் தட்டில் வைத்து மிதமான சூட்டில் 3 நிமிடங்கள்வரை சூடாக்கவும். அப்போதுதான் உருண்டை உதிராமல் இறுக்கமாக இருக்கும்.

சிறுவர் முதல் பெரியவர்கள்வரை விரும்பிச் சாப்பிடும், உடல் நலத்திற்கேற்ற காலை உணவு இது.

மரகதம் அம்மா,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com