இனிப்பு நீரின் மர்மம்
அத்தியாயம் - 6

அருணுக்குத் தான் முன்னரே அறிந்த சூழ்நிலையில் இருப்பதுபோலத் தோன்றியது. அம்மா கீதா சீக்கிரமே வந்துவிட்டதால், அம்மாவிடம் எப்பொழுதும்போலக் கேள்வி கேட்கலாம் என்று எண்ணினான். அம்மா அவனது ஆர்வத்தை ஊக்குவிக்கிறார் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். அது பக்கரூவுக்காக அந்த மருந்துச் செடி விதைகளை நடுவதாக இருக்கட்டும், இல்லை நண்பன் ஃப்ராங்கிற்காக உதவியதாக இருக்கட்டும், அருணுக்குத் தெரியும் அம்மாவின் ஆதரவு, பரிவு, தைரியம் எல்லாமே. அம்மா என்றால் அவனுக்குக் கொஞ்சம் ஸ்பெஷல்தான்.

"என்ன கண்ணா, டல்லா இருக்க? அதுவும் மிஸ் லேக் திரும்பிப் போகும்போது ஏன் உர்ருன்னு இருந்த? அவங்க உனக்காக எவ்வளவு பரிஞ்சு போறாங்க!"

"ஒண்ணும் இல்லை, அம்மா."

"இல்லைப்பா, நீ ஏதோ சொல்லப் போய் அவங்களுக்கு மனசு ரொம்பப் புண்பட்டிருச்சுன்னு நினைக்கிறேன். அவங்க கண்கலங்கின மாதிரி இருந்தது."

அருண் ஒன்றும் சொல்லாமல் மேலே வானத்தை வெறித்துப் பார்த்தான். "அருண், அவங்கள எதுக்கப்பா கண்கலங்க வைச்சே?" கீதாவின் குரலில் கண்டிப்பு இருந்தது. அருணுக்குத் தெரியும் எந்த அளவுக்குத் தன் பெற்றோர்கள் மனிதநேயம் கொண்டவர்கள் என்று.

"என்மேல எந்த தப்பும் இல்லம்மா. அவங்கதான் ஏதோ உணர்ச்சி வசப்பட்டுட்டாங்க."

கீதா ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்குள் சென்றார். சிறிது நேரம் சென்றது. இரவு உணவு முடிந்தது. ரமேஷ், இரவில் அலுவலகத்திலேயே இருக்கப் போவதாகத் தகவல் கொடுத்துவிட்டார். அவருக்குச் சில நாட்களாகவே வேலை மிகவும் அதிகம்.

அருணே வந்து தன்னிடம் பேசாத வரைக்கும் அவனிடம் ஒன்றும் பேசப்போவதில்லை என்று கீதா தீர்மானித்திருந்தார். இரவு படுக்கப்போகும் நேரம் வந்தது. எப்போதும்போல அருணை படுக்கவைக்க கீதா போகவில்லை. தன் அறையில் கதவை மூடிக்கொண்டு ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். அருண் என்ன செய்கிறான் என்று அவர் கேட்கவில்லை. கவலைப்படவும் இல்லை.

"அம்மா…" அருணின் அறையிலிருந்து அழைப்புக் கேட்டது. கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம் என்று சும்மா இருந்தார். மீண்டும் கூப்பிட்டான்.

இந்தமுறை சும்மா இருக்கமுடியவில்லை. கீதா எழுந்து போய் அருண் அறைவாசலில் நின்றார். அம்மாவின் உருவத்தை இருட்டில் பார்த்ததும் அருண் பேச ஆரம்பித்தான்.

"அம்மா, அவங்க என்னை இன்னிக்கு கேலி பண்ணினாங்க."

"யாரு?"

"மிஸ் லேக். என்னை ஒரு சின்னக் குழந்தைன்னு நினைச்ச மாதிரி இருந்தது."

"அப்படியா? என்ன சொன்னாங்க? என்ன நடந்தது."

"அவங்களுக்கு கொஞ்சங்கூட தில்லே இல்லை. ஒரு உண்மை என்னன்னு கண்டுபிடிக்கற தைரியம் இல்லை." அருண் இப்படிச் சொன்னவுடன் கீதாவுக்குச் சுருக்கென்றது. பட்டென்று அறையின் விளக்கைப் போட்டார்.

"அவங்களப்பத்தி என்னமோ நினைச்சிருந்தேன். அவங்ககிட்ட ஒரு சின்னப் புலனாய்வுக்கு உதவி கேட்டேன். அவ்வளவுதான் அம்மா."

அருணின் குரலில் வருத்தம் தெரிந்தது. அவனது கண்களின் ஒரத்தில் நீர் கசிந்தது. ஒரு ராணுவ வீரன் தனது படைத்தளபதி சண்டை போடாமலேயே சரணாகதி ஆனதுபோல் அவன் பேசினான்.

கீதா மெதுவாக அவனருகில் இருந்த நாற்காலில் அமர்ந்தார். என்ன தோன்றியதோ தெரியவில்லை, எழுந்து போய் விளக்கை அணைத்துவிட்டு வந்து உட்கார்ந்தார்.

"அம்மா, இன்னிக்கு பள்ளிக்கூடத்தில குடிநீர் ரொம்ப திகட்டுற மாதிரி இருந்திச்சு. அதையே மிஸ் லேக்கும் சொன்னாங்க. அதைப்பத்திப் புகார் செய்யலாமான்னு கேட்டப்ப, அவங்க மாட்டேன்னு நழுவிட்டாங்க."

"அப்புறம்?"

"நான் ஏதோ சொல்ல, அவங்க கோவப்பட்டு என்னைத் திட்ட, நான் பதிலுக்கு, தைரியமே இல்லை உங்களுக்குன்னு சொல்ல..."

கீதாவுக்குப் புரிந்துவிட்டது அன்றைய தினத்தின் மகாபாரதம் என்னவென்று.

"நீ என்ன நினைக்கிற? எதனால அவங்க அப்படித் தயங்கினாங்க?"

அம்மாவின் கேள்விகள் அவனை யோசனையில் ஆழ்த்தியது. யாரைப்பற்றியும் சட்டென்று முடிவு எடுக்கக்கூடாது என்று அவனுக்குப் பலமுறை பெற்றோர்கள் அறிவுரை சொல்லிருக்கிறார்கள். எல்லோரையும் ஒரே தராசில் எடை போடக்கூடாது என்பது அவனுக்குத் தெரியும்.

"அம்மா, எனக்கு என்னமோ எங்க பள்ளிக்கூடத்துக்கு வர தண்ணில ஏதோ கலந்திருக்குன்னு நினைக்கிறேன். மிஸ் லேக் கிட்ட நான் இதுவும் ஹோர்ஷியானா நிறுவனத்தோட வேலையோன்னு சந்தேகப்பட்டபோது, அவங்க மிரண்டுட்டாங்க."

"அருண், எனக்கே ஹோர்ஷியானான்னா கலக்கம்தான். மிஸ் லேக் மிரண்டதுல என்ன ஆச்சரியம்? அது சரி, இதுக்கும் ஹோர்ஷியானாவுக்கும் என்ன சம்பந்தம், மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்ட மாதிரி?"

"எனக்கு என்னமோ தெரியல அம்மா. நம்ம ஊருல என்ன கோளாறு நடந்தாலும் அதுக்கு ஹோர்ஷியானாதான் காரணம்னு தோணுது."

அருண் இப்படிச் சொல்கிறானே என்று அவருக்குத் திகில் ஆனது.

"அது சரி, மிஸ் லேக் என்ன சொன்னாங்க?"

"யாரோ தெரியாம ஒரு வண்டி சர்க்கரையக் கொட்டிருப்பாங்கன்னு சொன்னாங்க. எனக்கு அவங்க என் புத்திசாலித்தனத்தை மட்டம் தட்டின மாதிரி இருந்தது. அதான் நானும் கோவப்பட்டுட்டேன்."

கீதா உள்ளூரச் சிரித்துக் கொண்டார். மிஸ் லேக் அருணை திசை திருப்ப அப்படிச் செய்திருக்கக்கூடும். இந்த எர்த்தாம்டன் ஊரில் எல்லோருக்கும் ஹோர்ஷியானா என்றால், அதுவும், அதன் அதிபர் டேவிட் ராப்ளே என்றால் பயம்தான். கீதாகூட அங்க வேலை செய்வதால் சற்றே கமுக்கமாகத்தான் இருப்பார்.

"அருண், முதலில் தீர விசாரி. எல்லா உண்மையையும் முதலில் கண்டுபிடித்து ஒரு பட்டியல் போடு. தலைமை ஆசிரியரிடம் இதுபற்றிப் பேசு. அவரிடம் நிதானமாக உனது கருத்தைக் கூறு. எடுத்த உடனேயே புகார் சொன்னா யாருக்கும் பிடிக்காது."

அம்மாவின் அணுகுமுறை அவனுக்குப் பிடித்தது. கண்ணால் காண்பதும் பொய். காதல் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்.

"அம்மா, என் நண்பர்கள் யாருக்குமே எதுவும் வித்தியாசமா தோணலையே? அதான் புரியல."

கீதா தனது தோள்களைக் குலுக்கினார்.

"சரி அம்மா, நீங்க சொன்ன மாதிரியே நான் அடிமேல் அடி எடுத்து வைத்துப் போகிறேன்."

கீதா அருணுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, அவன் போர்வையைச் சரி செய்துவிட்டு நகர்ந்தார். வெளியே போகுமுன், "அருண், பாரேன். உண்மையிலேயே யாராவது ஒரு வண்டி நிறையச் சர்க்கரையக் கொட்டியிருக்கப் போறாங்க" என்றார்.

(தொடரும்)

ராஜேஷ்

© TamilOnline.com