வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம்
தமிழ்நாட்டில் வேலூர் கோட்டைக்குள் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. வேலூர் நகரிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் 136 ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் கட்டப்பட்டுள்ளது.

இறைவன் நாமம் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர், உத்சவர், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர். இறைவி நாமம் அகிலாண்டேஸ்வரி. தலத்தின் புராதனப் பெயர் வேலங்காடு. தலவிருட்சம் வன்னிமரம். தீர்த்தம் : கங்கா, பாலாறு. கங்காநதி கிணறு வடிவில் அமைந்துள்ளது. சிவாகம முறையில் பூஜை நடைபெறுகிறது.

இக்கோயில் 1500 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்தது, குளத்தின் நடுவில் கட்டப்பட்டுள்ளது. சுற்றி அகழி வேலியாகச் சூழ்ந்துள்ளது. அகழியின் சுற்றளவு 8000 அடி. இதன் தோற்றம் கோவிலைச் சுற்றிப் பூமாலையைப்போல் காணப்படுகிறது. இதிலிருப்பது தானே ஊறிய நீராகும்.

கறையான் அமைத்த பாம்புப் புற்று இருந்த இடத்தில் ஜலகண்டேஸ்வரர் சன்னிதி அமைந்துள்ளது. மலையின் கீழ்மட்டத்தில் மழைத்தண்ணீர் குளம்போல் நிறைந்திருந்தது. அதன் கீழே சிவலிங்கம் இருந்தது. அந்தச் சமயம் வேலூர் கோட்டையை ஆண்டுவந்த சின்ன பொம்மி நாயக்கன் என்ற விஜயநகர மன்னன் கனவில் தோன்றிய சிவன், அவ்விடத்தில் கோயில் கட்டும்படிக் கூற, மன்னன் பாம்புப்புற்றை அழித்துக் கோவிலை 1550ஆம் ஆண்டு கட்டினான். இங்கு காசியிலிருப்பது போலக் காலபைரவர் உற்சவராகக் காட்சி தருகிறார்.

கோயிலில் உள்ள கண்கவர் ஓவியம், சிற்பங்கள், சிறந்த கல்தூண்கள், மண்டபங்கள் யாவும் அக்காலக் கட்டடக் கலையின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. கோயிலின் கல்யாண மண்டபத்தில், இருமுகங் கொண்ட யானை, காளைமாடு சிற்பங்கள் உள்ளன. கோயிலில் விஷ்ணு மகாலக்ஷ்மியுடனும், பிரம்மா சரஸ்வதியுடனும் காட்சியளிக்கின்றனர். வலம்புரி விநாயகர் தெற்குநோக்கி அமர்ந்திருக்கிறார். முருகன் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார்.

நுழைவாயில் ராஜகோபுரம் தெற்குநோக்கி அமைந்திருப்பது விசேஷம். நுழைந்ததும் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். இங்கு பிரார்த்தனை செய்ய அவரது அருளினால் விவாகங்கள் நடைபெறுகின்றன, வேலை கிடைக்கிறது. அதிகார நந்தியின் பலி பீடத்தில் ஏற்றாத மண் விளக்குகள் வைக்கப்படுகின்றன. பக்தர்கள் தங்கள் கையை வைத்து வணங்குகின்றனர். பல்லி உடலில் விழுந்து தொந்தரவு ஏற்பட்டவர்கள் கோவிலில் உள்ள தங்க, வெள்ளி பல்லிகளை வணங்குகின்றனர்.அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு எதிரில் நவசக்தி விளக்குகள் வைக்கப்படுகின்றன. ஜோதி நடுவிலும் அதைச் சுற்றி எட்டுச் சுற்றிலும் தீபம் வைக்கப்படுகிறது. பெரிய விளக்கு 27 அங்குலம் 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் விதத்தில் அமைந்திருப்பதால் நட்சத்திர தீபம் எனக் கூறப்படுகின்றது. சுவாமி சன்னதி மேற்கூரை முழுவதும் ருத்திராட்சப் பந்தல் உள்ளது. இது நேபாள மன்னரால் கொடுக்கப்பட்டது.

இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் 1981ல் நடைபெற்றது. மற்றக் கோவில்களைப் போல் அல்லாமல் இதற்குப் படி இறங்கி உள்ளே செல்லவேண்டும். ஏழுநிலைக் கோபுரம், வலப்புறம் குளம், இடப்புறம் கல்யாண மண்டபம் உள்ளன. பத்துநாள் சித்ரா பௌர்ணமி, பங்குனி மாதம் பிரம்மோத்சவம் ஆகிய விழாக்கள் விமரிசையாக நடைபெறுகின்றன. ஆறாம் திருநாள் அறுபத்துமூவர் திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. சூரசம்ஹாரம், ஆடிப்பூரம், விநாயக சதுர்த்தி, நவராத்திரி போன்றவையும் சிறப்பாகக் கொண்டாப்படுகின்றன.

பக்தர்கள் விபத்துகளால் ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்க, கண் திருஷ்டி நீங்க, கல்யாணம் நடைபெற, தீர்க்காயுள் பெற இங்கே பிரார்த்திக்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் சிவன், அம்பாளுக்கு வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். ஆலயம் காலை 6.30 மணிமுதல் பகல் 1.00 வரையிலும், மாலை 5.00 மணிமுதல் 8.30 வரையிலும் திறந்திருக்கும்.

சீதாதுரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா
படங்கள்: நன்றி - vellore.nic.in

© TamilOnline.com