அஸ்திரங்களைப் பார்க்க யுத்தம் வரை பொறுத்திரு
நிவாதகவசர்கள் யுத்தத்தில் அர்ஜுனன் பயன்படுத்திய அஸ்திரங்கள் என்று பார்த்தால் இந்திரனுடைய வஜ்ராயுதம் அவற்றில் முக்கியமானது. ஒரே வீச்சில் முப்பதுகோடிக்கும் மேற்பட்ட அசுரர்களைக் கொன்று குவித்த அஸ்திரம் இது. இந்திரன், கர்ணனுடைய கவச குண்டலங்களுக்கு மாற்றாகத் தந்திருந்த சக்தியாயுதத்தைக் காட்டிலும் பலநூறு மடங்கு ஆற்றல் வாய்ந்தது இது. பதினான்காம் நாள் இரவு யுத்தத்தில் கர்ணன், இந்திரனுடைய சக்தியாயுதத்தைக் கடோத்கசன் மீது வீணடித்திருக்காவிட்டால், அர்ஜுனனுக்கும்-ஏன் கண்ணனுக்குமேகூட-பேரழிவு காத்திருந்தது என்று பலர் சொல்வார்கள். ஒருவேளை கர்ணன் அவ்வாறு சக்தியாயுதத்தைக் கடோத்கசன்மீது வீணடிக்காமலே இருந்திருந்தால்கூட அர்ஜுனன்வசம் அதை எதிர்கொள்ள, அதைக்காட்டிலும் மிகப்பலமடங்கு ஆற்றல் வாய்ந்த வஜ்ராயுதம் இருந்தது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். அதற்கும்மேல், இந்திரன் கர்ணனுக்கு சக்தியாயுதத்தைக் கொடுக்கையில், "மிகப்பெரிய சக்தி ஒன்று அர்ஜுனனைக் காக்கிறது" என்று சொல்லியபடியே கொடுக்கிறான். கிருஷ்ணனே அந்தச் சக்தி என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

அர்ஜுனனிடத்தில் இருந்த-அவன் கடைசிவரையில் பயன்படுத்தாத ஓர் அஸ்திரம் உண்டென்றால், அது பாசுபதம். "திரிபுரத்தை அழிக்க இதைத்தான் பயன்படுத்தினேன்" என்று சொல்லி சிவபெருமான் அவனுக்குப் பாசுபதத்தைத் தந்தார். (ஆனால் சிவன் எந்த அஸ்திரத்தையும் பயன்படுத்தாமல் சிரித்தே புரமெரித்தார் என்றும் ஒரு வரலாறு உண்டு). இதற்கு ரெளத்திராஸ்திரம் என்றும் ஒரு பெயர் உண்டு. இதில் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், பாசுபதமும் ரெளத்திராஸ்திரமும் ஒன்றே என்பது, அர்ஜுனன் சிவபெருமான் தனக்குப் பாசுபதம் தந்ததை தர்மபுத்திரருக்குச் சொல்லும்போது அவன் வாய்மொழியாக வெளிப்படுகிறது. அர்ஜுனன் தர்மபுத்திரருக்குச் சொல்கிறான்: "பிரபுவான அந்தப் பரமசிவன், 'பாண்டவ! என்னுடையதான ரெளத்ராஸ்திரமானது உன்னை அடையப் போகிறது' என்று சொல்லிப் பிரியத்துடன் பாசுபதாஸ்திரத்தை எனக்குக் கொடுத்தார்" என்றான். (வனபர்வம், நிவாதகவச யுத்த பர்வம், அத். 168, பக். 616)

இங்கே ஒருமுறை பெற்றாலும், பதினான்காம் நாள் யுத்தத்தில் ஜயத்ரதனைக் கொல்வதற்காக கிருஷ்ணன், அர்ஜுனனுடைய கனவில் அவனை மகாதேவரிடத்தில் அழைத்துச் சென்று மீண்டும் ஒருமுறை பாசுபதத்தைப் பெற்றுத் தந்தான் என்று ஜயத்ரதவதத்தின் சமயத்தில் வரும். அப்படி வாங்கி வந்திருந்தாலும் அர்ஜுனன் ஒரு சாதாரண அம்பால்தான் ஜயத்ரதனைக் கொன்றான். பாசுபதத்தைப் பயன்படுத்தவில்லை. ஆனால், அர்ஜுனன் இந்தப் பாசுபதத்தைப் பயன்படுத்திய சந்தர்ப்பம் ஒன்று உண்டு. அது வியாச பாரதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான கும்பகோணம் பதிப்பில் சொல்லப்படுகிறது. நிவாதகவசர்களை அழித்தபின் தேவலோகம் திரும்பிய அர்ஜுனனை, இந்திரன் ஹிரண்யபுரம் என்ற பௌலோமர்களுடைய பறக்கும் நகரத்தை அழித்துவரச் சொன்னான். அதன்படி இந்திரனுடைய சாரதி மாதலி தேர் ஓட்ட ஹிரண்யபுரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அர்ஜுனன், ஹிரண்யபுரத்தை அழிக்கப் பாசுபதம் ஒன்றே சரியானது என்று தேர்ந்ததைக் கும்பகோணம் பதிப்பு சொல்கிறது. "பிறகு நான் தேவதேவரும் அவ்யக்த மூர்த்தியும் மகாத்மாவுமான ருத்திரரை நமஸ்கரித்துப் பரிசுத்தனாகவும் வணங்கினவனாகவுமிருந்து, 'பூதங்களுக்கு மங்களம்' என்று சொல்லி, ரெளத்திரமென்று பிரசித்தி பெற்றதும் எல்லாச் சத்ருக்களையும் நாசம் பண்ணுவதும் திவ்யமானதும் எல்லா உலகத்தாராலும் நமஸ்கரிக்கப்பட்டதுமான பாசுபதா மஹாஸ்திரத்தைப் பூட்டினேன்" என்றான். (வனபர்வம், நிவாதகவசயுத்த பர்வம், அத்.175, பக். 639).

இப்படித் தமிழ் மொழிபெயர்ப்பில் ஐயத்துக்கிடமில்லாமல் ரெளத்திராஸ்திரம்தான் பாசுபதாஸ்திரம் என்று பலமுறை சொல்லப்பட்டிருந்தாலும், கிஸாரி மோகன் கங்கூலி, பிபேக் தேப்ராய் ஆகியோரின் ஆங்கில மொழிபெயர்ப்பில் 'ரெளத்திராஸ்திரம்' என்ற பெயர் மட்டும்தான் பயன்படுத்தப்படுகிறது. 'பாசுபதம்' என்ற பெயர் தவிர்க்கப்படுகிறது. கர்ணனுடைய கடைசிப் போரின் கடைசி நிமிடத்தில்-கும்பகோணம் பதிப்பில்-கர்ணன் அர்ஜுனன்மீது ஒரு ரெளத்திராஸ்திரத்தைப் பிரயோகித்தான் என்று சொல்லப்படுகிறது. ஆக கர்ணனிடத்தில் ரெளத்திராஸ்திரம் இருந்திருக்கிறது. (அவன் பாசுபதம் பெற்றதாய் எங்கும் குறிப்பில்லை.) ஆகவே இவையிரண்டும் வேறுவேறு அஸ்திரங்கள் என்று கருதவும் இடமிருக்கிறது. இது ஒருபுறமிருக்க, கர்ணன் அர்ஜுனன்மீது ரெளத்திராஸ்திரத்தை எய்தான் என்று கும்பகோணம் பதிப்பில் மட்டும்தான் இருக்கிறது. இரண்டு ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும் 'கர்ணன் ரெளத்திராஸ்திரம் எய்தது' பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. இந்தச் சிக்கல்களை உரிய இடத்தில் விரிப்போம்.

இப்படி அர்ஜுனன் சொல்லிக்கொண்டு வரும்போது, அவனுடைய அசாத்திய வில்லாற்றலுக்கு உரம் சேர்க்கும் விதமாகப் பேராற்றல் வாய்ந்த பல திவ்யாஸ்திரங்களும் அவனிடத்தில் வந்து சேர்ந்திருப்பது பாக்கியமே என்று மகிழ்ந்தார். "உன்னுடைய பாக்கியத்தால்தான் நீ அம்மையப்பனாகிய சிவபெருமானையும் உமாதேவியையும் ஒருசேரக் கண்டாய்; சிவபெருமானை தொந்த யுத்தத்தால் மகிழ்வித்தாய். பல்வேறு பட்டணங்களின் வரிசையாக அமைந்திருக்கும் இந்த பூதேவியை நீ வென்று எனக்குக் கொடுத்துவிட்டாய் என்றே மகிழ்கின்றேன்" என்றெல்லாம் சொன்ன அவர், தொடர்ந்து, "பாரத! எந்தத் திவ்யாஸ்திரங்களால் வல்லவர்களான நிவாதகவசர்கள் கொல்லப்பட்டார்களோ அந்த திவ்யாஸ்திரங்களை நான் பார்க்கவும் விரும்புகிறேன்" என்று சொன்னார். (வனபர்வம், நிவாதகவசயுத்த பர்வம், அத். 176, பக். 644)

அர்ஜுனன் "அவற்றை நாளைக்குக் காட்டுகிறேன்" என்று விடையளித்தான். எந்த திவ்யாஸ்திரமாக இருந்தாலும், உயிருக்கே ஆபத்து என்ற சூழலிலும், மற்ற ஆயுதங்களால் எதிர்கொள்ளமுடியாது என்ற நெருக்கடியிலும் மட்டும்தான் இவற்றைப் பிரயோகிக்க வேண்டும். மனிதர்கள் மீதும், அற்ப சக்தி உடையவர்கள் மீதும் இவற்றைப் பயன்படுத்தக் கூடாது' என்றெல்லாம் பலவிதமான வாக்குகளை வாங்கிக்கொண்டுதான் அதைத் தருவார்கள். துரோணரேகூட, அர்ஜுனனுக்கு பிரமாஸ்திரத்தையும் அதைக்காட்டிலும் உயர்ந்ததும், அவர் மகன் அஸ்வத்தாமனுக்கே முழுமையாகக் கற்றுத் தராததுமான பிரம்மசிரஸ் என்ற அஸ்திரத்தையும், மற்ற திவ்யாஸ்திரங்களையும் தரும்போதெல்லாம், ஒவ்வொருமுறையும் இந்த வாக்குறுதியை வாங்கிக்கொண்ட பிறகே தந்ததை ஆதி பர்வத்தில் பல சமயங்களில் பார்க்கிறோம்.

'இவற்றை யார்மீதும் பயன்படுத்தப் போவதில்லையே. வெறுமனே செய்முறையைத்தானே காட்டப்போகிறோம்' என்று நினைத்தோ என்னவோ அர்ஜுனன் யுதிஷ்டிரருக்கு மறுநாள் காட்டுவதாய் வாக்களித்தான். மறுநாள் விடிந்ததும் தர்மபுத்திரருடைய ஆணையை ஏற்று, கவசத்தை அணிந்து, தேவதத்தம் என்னும் தன்னுடைய சங்கை எடுத்துக்கொண்டு, காண்டீவத்தைத் தரித்தவனாகவும், பூமியையே ரதமாகக் கொண்டவனாகவும் அந்த திவ்யாஸ்திரங்களை தர்மருக்கும் மற்ற பாண்டவர்களுக்கும் காட்டத் தொடங்கினான். அப்போது பெருத்த இயற்கை உற்பாதங்கள் உண்டாகின. காற்று வீசவில்லை; சூரியன் பிரகாசிக்கவில்லை; பூமிக்குள்ளிருந்த பிராணிகள் துன்பமுற்று மேலே எழுந்துவந்து அர்ஜுனனைச் சூழ்ந்துகொண்டன. கடல் ஒலிக்கவில்லை. அனைத்து உயிர்களுக்கும் அச்சவுணர்வு ஏற்பட்டது.

அந்தச் சமயத்தில் இந்திரன் நாரதரை ஏவி, அர்ஜுனனைத் தடுக்கும்படிச் சொல்லியனுப்பினான். அங்கே தோன்றிய நாரதர் "என்ன காரணங்கொண்டும் திவ்யாஸ்திரங்களைத் தேவையில்லாமல் பிரயோகிக்கக்கூடாது. எந்த இலக்கையும் குறிவைத்து எய்யாவிட்டாலும் இவற்றின் ஆற்றல் உலகுக்குப் பெருங்கேட்டை விளைவிக்கும். ஒருவிதமான ஆபத்தும் நேராமல் இவற்றைப் பயன்படுத்தவே கூடாது. தேவையில்லாமல் பயன்படுத்தப்படும்போது இவை மூவுலகங்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தும்" என்றெல்லாம் சொல்லி அர்ஜுனனைத் தடுத்து நிறுத்தினார். பிறகு தர்மபுத்திரரை நோக்கி, "அஜாத சத்துருவே! அர்ஜுனனால் பகைவர்களைக் கொல்வதற்காகப் பிரயோகிக்கப்படுகின்ற அந்த அஸ்திரங்களை யுத்தத்தில் நீயும் பார்ப்பாய்" என்று சொல்லிச் சமாதானப்படுத்தி நாரதர் மறைந்தார்.

நிவாதகவச யுத்தத்தைத் தொடர்ந்து ஆஜகர பர்வம் வருகிறது. இதைப் பற்றி 'வரமாகிப்போன சாபம்' என்ற தலைப்பில் சொல்லியிருந்தோம். பாண்டவர்களுக்குச் சுமார் 45-46 தலைமுறைகள் முந்தியவனான நகுஷன், அகஸ்தியருடைய தலையில் உதைத்து, அவருடைய சாபத்தைப் பெற்று பாம்பாக பூமியில் கிடக்கிறான். பாண்டவர்கள் அந்த இடத்தைக் கடக்கும்போது-தனியாக அகப்பட்டுக்கொள்ளும்-பீமனைப் பற்றிக் கொள்கிறான். பிறகு தர்மபுத்திரன் அவனைத் தேடிக்கொண்டு வந்து, மலைப்பாம்பாகக் கிடக்கின்ற நகுஷன் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் விடைசொல்லி பீமனை விடுவிக்கிறான்.

ஆஜகர பர்வத்தின் தொடக்கத்தில், பாண்டவர் வனவாசம் தொடங்கி இதுவரையில் எவ்வளவு காலம் கழிந்திருக்கிறது என்பதற்கான குறிப்பு வருகிறது. "பாண்டவர்கள் அந்தக் கந்தமாதனத்தில் அர்ஜுனனோடு சேர்ந்து நான்கு வருஷகாலம் ஒருதினம்போல ஸுகமாக வஸித்தார்கள். வனங்களில் வஸிக்கின்ற பாண்டவர்களுக்கு முந்தின ஆறுவர்ஷங்களும் பிந்தின நான்குவர்ஷங்களுமாகச் சேர்ந்து பத்து வர்ஷங்களும் மங்களகரமாகச் சென்றன".

பாண்டவ வனவாசத்தின் பெரும்பகுதி கழிந்தது. பதினொன்றாம் ஆண்டும் தொடங்கியது. அங்கே துரியோதனனுக்குப் பாண்டவர்களைச் சீண்டிப் பார்க்கவேண்டும் என்ற விருப்பம் வலுத்துக்கொண்டிருந்தது. இடையில் நடந்த சில சம்பவங்களுக்குப் பிறகு கௌரவர்கள், பாண்டவர்கள் தங்கியிருக்கும் இடத்துக்கருகில் வந்து கூடாரம் அமைக்கப் போகிறார்கள். சிக்கல்கள் தொடங்குகின்றன. ஒவ்வொரு சம்பவமாகப் பார்ப்போம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com